முழுமையாக ஆவி நிறைந்த குக்கர் எப்போது வேண்டுமானாலும் விசிலடித்து விடும் என்கிற நிலையில் இருப்பது போல் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் தங்கள் ஆத்திரத்தை அடக்கியபடி இருந்தார்கள்.
அவர்களைச் சுற்றிலும் விடலை போட்ட தேங்காய் தெறித்துச் சிதறுவது போல் சில கம்பார்ட்மென்ட்டில் உள்ள மக்கள் அங்கும் இங்கும் பதற்றமாக ஓடவும், மீதிப் பேர் என்ன நிகழ்கிறது என்று புரியாமல் உறக்கம் கலைந்து அலைபாய்ந்து திரிந்து கொண்டிருப்பதையும் பார்த்த சிவாவின் கோபம் உச்சத்தைத் தொட்டது.
எது நடக்கக் கூடாது என்று இந்தக் குழுவை நம்பி விவாதிக்க நள்ளிரவில் கூடியிருந்தார்களோ, அதிலே ஒரு கறுப்பு ஆடு சுற்றும் முற்றும் ஒரே தள்ளு முள்ளும் கூச்சலும் குழப்பமாகவும் இருந்தது. அவனையும் மீறிக் கொண்டு வார்த்தைகள் வந்தன,
“என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு பாத்தீங்களா? உங்களால என்ன நடக்குது இப்போன்னு நல்லா பாருங்க” என்று ஆத்திரத்துடன் கைகளை விரித்துக் காட்டியவனைப் பார்த்து , அதுவரை உடனிருந்தவர்கள் கேள்வி கேட்ட போது தயக்கத்துடன் பதில் சொல்லாமல் மௌனம் காத்தவன், இப்போது பொங்கினான். கையை அவன் நேர் நிறுத்துமாறு நீட்டி, “அவங்க கேக்கலாம் சார். நீங்க கேக்கக் கூடாது. நீங்க மட்டுமில்ல ரயில்வேல உள்ள யாருக்கும் என்ன கேக்ககுற ரைட்ஸ் கிடையாது.
நீங்க யாரும் வந்து பாசஞ்சர் யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லல. அவங்க திட்டுன திட்டயும் வாங்கல. சோ ப்ளீஸ், நீங்க பேசாதீங்க” என்று சொன்ன போது அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையில் அனைவரும் அமைதியானார்கள்.
சூர்யா முகத்தைப் பார்த்தால், ‘சொன்னேன்ல’ என்கிற பாவனை அதில் இருக்கும் என்று நினைத்து ஸ்டேஷன் கேட் வாசலில் முன்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான். எல்லோர் பார்வையும் அந்தத் திசையில் சென்றது.
அதைப் பார்த்த சுரேஷுக்கு உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி மேலோங்கியது. அவன் வேண்டும் என்று அதைச் செய்யவில்லை.
அவர்கள் குழு எப்படிக் கொஞ்சம் பேரை மட்டும் வெளியே அழைத்துச் செல்வது என்று விவாதித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவன் அக்கா மகன் அவனைத் தேடிக் கொண்டு வந்திருந்தான்.
அவனைக் கொண்டு பெட்டியில் விட்டுவிட்டு வரச் சென்றவனுக்கு இது குறித்து எதுவும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த தன் சொந்த பந்தங்களைப் பார்த்த போது மனம் கேட்கவில்லை.
அவர்களை மெல்ல எழுப்பி விஷயத்தைச் சொல்லி, தான் சொல்லும் வரை யாரும் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டுதான் திரும்பி வந்தான். ஆனால் இவர்கள் கூடியிருந்ததைத் தவறாக எண்ணிக் கொண்டு அவர்கள் உடனடியாகப் பின்னே வந்திருக்கலாம் என்று தோன்றியது.
வந்தவர்களைக் கண்டு மேலும் சிலர் பின்தொடர்ந்து வந்து என்று ஒரு பெருங்கூட்டமே வந்துவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
ஆம்,தவறு அவன் மீதுதான். ஆனால் நிலைமை இப்போது கைமீறிச் சென்று கொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் எல்லோரும் விழித்துக் கொண்டிருந்த போது அபி மட்டும் சிவாவைத் தனியாக அழைத்துச் சென்று ஏதோ சொல்லிவிட்டு வந்தாள்.
அதைக் கேட்டவன் முகம் முதலில் குழப்பத்தில் இருந்தாலும், பின் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து அவள் நேர் தலையசைத்து விட்டுச் செயல்படத் தொடங்கினான்.
பின், யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த சக ஸ்லீப்பர் செயல்களைப் பார்த்து ஓர் உற்சாகப் புன்னகையுடன் வந்தவள், “எப்படி இந்த விஷயத்தை செய்யப் போறோம்னு குழம்பிட்டு இருந்த நமக்கு , சுரேஷ் தோழர் மூலமா ஒரு வழி கிடச்சிருக்கு. நம்ம இத எதிர்பார்க்கலதான். ஆனா நடக்குற எதுதான் நம்ம நினச்ச மாதிரி நடக்குது?” என்று தயக்கமாக விழித்த சுரேஷை நோக்கி அவள் வீசிய கனிவான புன்னகையில் அதுவரை யார் கண்களையும் பார்க்கத் தயங்கியவன்கூட அவளை நன்றியுடன் பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவனாக எதிர்பாராத விதமாக தன்னால் நிகழ்ந்த குழப்பத்துக்கு எல்லோரிடமும் மன்னிப்பு கூறிவிட்டு ,
“சொல்லுங்க சிஸ்ட்டர், இத சரி பண்ணுறதுக்கு நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க. என்னால முடியுதோ முடியலயோ கண்டிப்பா செய்றேன்.”
“என்ன புரோ நீங்க மட்டும் ஹீரோ ஆகிறாலாம்னு பாக்குறீங்களா ? அதுலாம் முடியாது. நாங்கல்லாம் அப்புறம் எதுக்கு இருக்கோம்?” என்றான் சூரியா.
பதற்றமாக என்ன செய்ய என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றவர்களை முடிந்த வரை அமைதி கொள்ளச் செய்து நிலமையை எடுத்துக் கூறி, வயதானவர்களையும் குழந்தைகள் வைத்திருப்பவர்களையும் முதலில் இறங்க உதவினார்கள்.
அவர்கள் இருந்த பெட்டியில் அந்தக் கரை வேட்டி மனிதர் மற்றும் ஒன்றிரண்டு குடும்பங்கள் தவிர்த்து யாரும் இறங்காமல்தான் இருந்தனர். அபிக்குத் தெரிந்த எல்லோரும் அவள் வருவாள் என்கிற நம்பிக்கையில் காத்திருந்ததாகத் தெரிந்தது.
உடனே சென்று முதலில் இசக்கியையும் அவள் குழந்தையையும், மயிலாடுதுறையில் இறங்க வேண்டிய அந்த அம்மாவின் குடும்பத்தையும் அழைத்துச் செல்ல மற்றவர்கள் உதவியை நாடினாள்.
ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் இசக்கியும் அவள் குழந்தையும் பொறுத்திருந்து அவர்கள் எல்லோருடனே சேர்ந்து வருவதாகக் கூறிவிட்டாள்.
முதல் கட்டமாக முன்னூறு பேர் வெளியே காத்திருந்த வண்டிகளில் கிளம்பி விட்டார்கள் என்று தெரிந்த அபியும், அந்த வண்டிகள் திரும்பி வந்ததும் முதலில் அவர்களை அழைத்துச் சென்றுவிட முடிவு செய்து ஈவ்லினிடமும் அயிஷாவிடமும் அவர்களைக் கீழே இறக்கும் பொறுப்பையும் தன் பைகளையும் விட்டுவிட்டு, மற்றவர்களையும் இறங்குமாறு பணித்துவிட்டு, அடுத்த பெட்டிகளுக்குத் தகவல் சொல்ல விரைந்தாள் .
சில பெட்டிகள் தாண்டி தேர்டு ஏசியில் கிட்டதட்ட எல்லோரும் இறங்கியிருக்க, ஒரு வயதான அம்மா மட்டும் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தவாறு அந்தச் சூழலிலும் ஒருவித அமைதியுடன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அவரைக் கீழே இறங்க வைக்க முயற்சி செய்தவளிடம், “எம் புள்ள வந்துரட்டும்மா. நான் அவன் கூடவே போயிக்கிறேன். அவனும் உங்களாட்டம் எல்லாத்துக்கும் உதவி பண்ணதான் போயிருக்கான்” என்று பெருமையுடன் சொன்னவர், வாஞ்சையுடன் அவள் முகத்தையே ஏதோ நன்கு பரிச்சயமானவர்களைப் பார்ப்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல மனமில்லாதவள், அவர் மகன் வந்து விடட்டும் என்று அவருடன் காத்துக் கொண்டிருந்தாள்.
“நீ வேணா கிளம்பேன்மா. நான் இருந்துக்குறேன். இங்க யாரு வரப் போறா?”
அவனை இதற்கு முன்பு எங்கோ பார்த்ததாகத் தோன்றிய உணர்வின் காரணம் என்ன என்று மட்டும் புரியாமல் இருந்தது.
அவர்கள் சென்னை என்பதால் எங்காவது எதேச்சையாக பார்த்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவன் பெட்டி நோக்கிப் பதற்றமாக ஓடிவந்து கொண்டிருந்தான். அம்மா தனியாக இருப்பதால் அப்படி ஓடி வந்திருப்பான் என்று நினைத்தாள். ஆனால் பின்னால் கேட்ட அறிவிப்பும் பிளாட்பாரத்தில் அதிகரித்திருந்த கூச்சலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தான் சிவாவிடம் சொல்லச் சொன்னது அது இல்லையே என்று உணர்ந்து, இருவரும் ஒருவரை இன்னொருவர் பார்த்துப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.
அவன் அம்மாவின் முகத்தில் படர்ந்த குறுநகையை இருவரும் கவனிக்கவில்லை. ஒலிப்பெருக்கியின் சிவாவின் குரல், “மீண்டும் அறிவிக்கிறோம். தயவுசெய்து எல்லோரும் தங்கள் கம்பார்ட்மொன்ட்டிற்குச் சென்று அமரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.”
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.