சமீபத்தில் பேசு பொருளாகி இருக்கிறது இந்து அறநிலையத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் அறிவிப்பு. ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்தும்தான் வர வேண்டும் என்று
அறிவிப்பு வைத்திருக்கிறார்கள்.
சேலை, வேட்டி, துப்பட்டா போட்டால்தான் பண்பாடு காக்கப்படுமா? அப்படிப் போடாவிட்டால் அது கலாச்சாரத்துக்குப் பேரழிவாகி விடுமா? வெளிநாட்டினர் வந்தால் வெளியிலேயே நிறுத்தி விடுவார்களா? அவர்கள் நம் நாட்டுச் சிற்பங்களைப் பார்க்க வேண்டும் என்று வரும்போது, உள்ளே வரக் கூடாது என்று சொல்லிவிடுவார்களா? அப்போது விருந்தினர்களை உபசரிக்கும் இந்தக் கலாச்சாரம் எங்கே போய் ஒளிந்து கொள்ளும்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாத ஆண் மனங்கள் பதறிப் போகின்றன. உடனே அவிழ்த்துப் போட்டுவிட்டு வரப் போகிறீர்களா என்று ஓர் அரைகுறைப் பதிவு அழுது புலம்புகிறது. அவிழ்த்துப் போட்டு வரக் கோரவில்லை. இதுதான் போட வேண்டும் என்று உத்தரவிடக் கூடாது. அதிகாரமாக வலியுறுத்தக் கூடாது. அவரவருக்கு சௌகரியமான ஆடை உடுத்துவதால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. கோயிலுக்கு வருபவர்கள் இறை சிந்தனையோடே இருக்க வேண்டியதுதானே? ஏன் அடுத்தவர்களை நோக்க வேண்டும்?. திரும்பத் திரும்ப கலாச்சாரம் என்று பெண்ணையே வதைக்கிறார்கள். ஆண்கள் அவர்கள் சௌகரியத்துக்கு ஆடை அணிந்து கொள்ளலாம். ஆனால். பெண்கள் மட்டும் முப்பொழுதும் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் இவர்களுக்குத் தின்ற சோறு செரிக்காது.
திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா... அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.
ஒரு நண்பர் சொன்னார், “ஐம்பது சதவீதத்தை எட்டியதும் ஆண்களைவிட மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இனி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று. ஐம்பது சதவீதம் எப்போது வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் ஐம்பது சதவீதத்தைப் பெண்களுக்குக் கொடுக்க இவர்கள் யார் என்பதுதான் என் கேள்வி. பெண்களின் உரிமையில் ஆண்கள் தலையிடாமல் இருப்பதுதான் இருவருக்குமே நல்லது. ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வருவது நல்லதுதான். ஆனால், பெண்கள் இவர்கள் அளவுக்குத் தரமிறங்கி நடக்க மாட்டார்கள். நிறையப் பெண்களுக்குத் தன் விருப்பப்படி ஆடை அணிய ஆசை இருக்கும். என்றாலும் ஆண்களின் கண்ணோட்டத்தை எண்ணியும்,, அவர்களைக் கேள்வி கேட்காமல் ஆட்டு மந்தைக் கூட்டமாகப் பின்தொடரும் சில பெண்களின் வாய்க்குப் பயந்தும் அதை உள்ளுக்குள் புதைத்துவிட்டு இத்தகைய பழமைவாதம் பேசுபவர்களுக்கு ஒப்புக்கு ஜால்ரா தட்டுகிறார்கள்.
புடவை கட்டுவது தான் நாகரீகம் என்று யார் இவர்களுக்கு உச்சந்தலையில் ஆணி அடித்துச் சொன்னது என்று விளங்கவே இல்லை. பாரம்பரியத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஆண்களுக்கு இல்லையா? அவர்கள் ஏன் பழைய காலம் மாதிரி உச்சிக் குடுமி வைத்துக் கொண்டு, கோவணம் கட்டிக் கொண்டு பண்பாட்டைக் காப்பாற்றக் கூடாது?
உலகத்திலேயே கவர்ச்சியான உடை புடவை. இன்றைய பெண்களுக்கு வேலைப்பளு, விளையாட்டு, பயணங்கள் என்று அணியவும் பராமரிக்கவும் வசதியற்ற ஆடை அது. ஆண்களுக்கு பேண்ட்டை அனுமதிக்கும் போது பெண்களும் அணிந்து வந்தால் என்ன தவறு? அது ஏன் எல்லாப் பண்பாடுகளோட குவி மையமாகப் பெண்ணுடலையே வைக்கிறீங்க?
பெண்கள் கண்ணியமாக ஆடை அணிய வேண்டும் என்று கூவுகின்றவர்களிடம் ஒன்று கேட்கிறேன். ஆண்களின் பார்வையில், கண்ணோட்டத்தில் கண்ணியம் இருந்தால் எப்படிப் பெண்கள் அணியும் ஆடை அவர்களுக்குத் தவறாகத் தோன்றும்?. பெண்ணியம் என்பது அரைகுறை ஆடை அணிவதைப் பற்றிப் பேசுவதல்ல. ஒருவரது ஆடைச் சுதந்திரத்தில் சம்பந்தமில்லாதவர்கள் மூக்கை நுழைக்கக் கூடாதென்பதுதான். அரைகுறைப் புரிதல் யாருக்குமே கூடாது. சேலை அணிந்த வயதான பெண்ணும் சின்னஞ் சிறு குழந்தையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் புண்ணிய தேசமய்யா இது!
.
காலம் காலமாகப் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக ஒரு முட்டாள்தனமான செயலை நாமும் அப்படியே பின் தொடரக் கூடாது. உலகத்தில் எத்தனையோ விஷயங்களை நாம் மாற்றிக்கொண்டோம். பழைய காலத்தில் இருப்பது போலவே இப்போதும் இருக்கிறோமா? இல்லைதானே?. அப்படி என்றால் சில விஷயங்களைக் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக்கொண்டால்தான் என்ன தவறு? ஒரு குட்டி கதை சொல்வார்கள்.. ஒரு சாமியார் தன் ஆசிரமத்தில் தினமும் மாலை வேளையில் சீடர்களுக்கு உபதேசம் செய்வது வழக்கம். அப்போது ஆசிரமத்தில் இருக்கும் பூனை அங்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது.அதனால் சாமியார் அதனை உபன்யாசம் தொடங்குவதற்கு முன்பு அருகில் இருக்கும் ஒரு சிறிய தூணில் கட்டிப் போட்டுவிட்டு உபன்யாசத்தைத் தொடங்குவார். இது தினப்படி வழக்கமாகிப் போனது. அந்தச் சாமியார் இறந்து அடுத்தடுத் சாமியார்கள் வந்த போது கூட உபன்யாசம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பூனையைத் தூணில் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு அதன் பின் தொடங்குவது என்பது ஒரு மரபாகிவிட்டது.ஏன்? எதற்கு? என்று காரணம் எதுவும் தெரியாமல் பல ஆண்டுகளாக அந்த வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்களாம்.
நாகரீகமான ஆடை அணிவது என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். நாகரீகம் என்பதற்கான அளவீடுகள் என்ன? எதுதான் நாகரீகம்?. அது ஆளுக்காள் மாறுபடும். ஒருவருக்கு நாகரீகமாகத் தோன்றுவது இன்னொருக்கு அநாகரீகமாகத்தான் இருக்கும். ஒவ்வொருவர் கண்ணோட்டத்திற்கும் ஏற்ப மற்றொருவர் செயல்பட்டுக்கொண்டு இருந்தால், அது சரிப்பட்டு வராது. இந்த உண்மையை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அடுத்தவரையே நோட்டமிட்டு வாழ்க்கையை வீணே கழிக்காது இல்லாதவர்களுக்குக் கொஞ்சம் உதவிகள் செய்யுங்கள். பெண்களின் ஆடைகளைப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதையும் தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.