அன்று வருண் காலை முதலே படு உற்சாகமாக இருந்தான். அது சனிக்கிழமை. மாமனாரும் மாமியாரும் ஊரிலிருந்து வந்து நான்கு நாட்கள் ஆகின்றன. முந்தைய நாள் இரவு சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிலா பிரியாணி வாங்கி வந்திருந்தாள். சாப்பிட்டு, சீக்கிரம் தூங்கி புத்துணர்ச்சியுடன் எழுந்து, ஆப்பம் சுட்டுக் கொடுத்து, எல்லாரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டி விட்டார்கள். போதாதா வருணுக்கு?


நிலா வழக்கம் போல் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டாள். மதிய உணவுக்கு மேல் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று மாமா விரும்பினார். அதிலும் வருணுக்கு ஏக உற்சாகம்தான். எப்போதும் மாமாவுக்கும் நிலாவின் தம்பிக்கும் வருணே போய் எல்லாம் வாங்கி வந்துவிடுவான். அக்கா சீர் செய்ய வேண்டிய செலவோ வேலையோ எதையுமே நிலாவுக்கு வைக்க மாட்டான். அதில் உள்ளூர நிலாவுக்குப் பெருமைதான்.

இன்றும் அப்படி மாமா மெச்சும் மருமகனாக ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக வருண் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு என்று இயந்திரகதியில் சுழன்றவனுக்கு மாமா வந்த பின்பு கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டது. ஆண்களாக ஊர் சுற்றலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தான்.

அத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு ஹாலில் நடுநாயகமாக டிவி முன்பு ஈசி சேரில் வீற்றிருந்தார். அவரை எப்போதும் அங்குதான் பார்க்கலாம். சரி, இவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். மாமாவுடன் மனம் திறந்து கொஞ்சம் ஆண்கள் உரிமை பற்றிப் பேசலாம் என்று ஆர்வத்துடன் கிளம்பினான். டைட்டான மெல்லிய டிஷர்ட் அணிந்தால் மாமா புருவம் உயர்த்துவார் என்பதால், திருமணத்தின்போது அவர்கள் எடுத்துக் கொடுத்த கட்டம் போட்ட, காலர் வைத்த சட்டையையே அணிந்துகொண்டான்.

மொட்டை மாடியில் காலையில் துவைத்துக் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து அவசர அவசரமாக மடித்து வைத்தான். அத்தை வீட்டில் இருக்கும்போது எப்போதும் போல சோபாவில் போட்டு விட்டுச் செல்ல முடியாது. அது மரியாதையாக இருக்காது. மாலை நேரமாகி விடுமே, டீ போட்டு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டுச் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அத்தை எழுந்து சென்று புதிய குர்தாவும் பைஜாமாவும் அணிந்து நிற்பதைக் கவனித்தான்.

“வருண், கிளம்பலாமா?” என்று மாமாவும் இயல்பாக வந்து அத்தையின் அருகில், ஓரடி பின்னே நின்றுகொண்டு கேட்டார்.
ஆண்கள் இருவரும் தனியே ஷாப்பிங் போகப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வருணுக்கு அத்தை வந்து நிற்பது செம ஷாக்.
“அத்தை, நீங்களும் வரீங்களா?” எதையும் மனதில் வைக்கத் தெரியாத வருண் டக்கென்று கேட்டே விட்டான்.

அவனை அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு, “இதென்ன கேள்வி? நம்ம ரெண்டு பேரையும் எப்படித் தனியா அனுப்புவாரு?” என்று சிரித்தார் மாமா.

“போச்சு! அத்தை உடனிருந்தால் மாமா வருணிடம் தனியாக அதிகம் பேச மாட்டார். அடக்க ஒடுக்கமாக வருவார். அதைவிட எரிச்சல், சுதந்திரமாக ஷாப்பிங் செய்ய மாட்டார். எதை வாங்க வேண்டுமானாலும் அத்தையிடம் என்னங்க, இது நல்லார்க்கா பாருங்க என்று கேட்பார். அத்தை லேசாக முகம் சுருக்கினால் போதும் அதை அப்படியே வைத்துவிடுவார். நிலா இருந்தாலாவது பிரச்னை இல்லை. நிலாவின் மீது கோபம் கோபமாக வந்தது. அவள் தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவளது அப்பா, அம்மாவுடன்தான் ஆடுபோல உடன் செல்ல வேண்டும். தலைவலிக்குது வீட்டிலயே இருக்கேன் என்று சொல்லிவிடுவதை எல்லாம் இனிமேல் நினைத்தும் பார்க்க முடியாது.’

அத்தை வாசலில் போய் நின்று தொண்டையைச் செருமினார். நேரமாகி விட்டதென்று பரபரத்து அவர் பின்பு ஓடினார் மாமா.
Boys day out என்கிற ஆசை நிராசையாகிவிட, பெருமூச்சு விட்டுக்கொண்டே வீட்டைப் பூட்டப் போனான் வருண். காலியான வீடே வருணை ஆசையோடு அழைப்பதைப் போல் இருந்தது.

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.