பள்ளிகளில் பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது?
முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும்.