“ஹல்ல்ல்லோ டியர், ஹேய்ய்ய்ய் வேக் அப் யா”, உலுக்கிய உலுக்கலில் பதறியடித்து விழித்துப் பார்த்தேன். “அய்யோ…ப்ளைட் ஹைஜாக்கா…ரிப்பேரா…கடலுக்குள்ள விழப்போகுதா…. மாரியாத்தா..நீச்சல் வேற தெரியாதே” கண்ணைக்கசக்கி ஜன்னல் வழியே பயத்தோடு பார்த்தேன். விமானம் சலனமில்லாமல் மேகக் கூட்டங்களில் மிதந்து கொண்டிருந்தது. என்னை உலுக்கி, தூக்கத்தை கெடுத்த பிரகஸ்பதி பக்கத்தில் ‘ஈ..’ யென இளித்துக் பொண்டிருக்க, கையில் விஸ்கியோ , பிராண்டியோ..! தூக்கம் கலைந்த எரிச்சலில், “வாட்”??? என சீண்டி விடப்பட்ட நம்பியார் போல நான் அவரை முறைக்க……நம்ம லோக்கல் பாடிலாங்குவேஜைப் பார்த்து பயந்து போய், “ஸாரி,ஸாரி, டியர் கேர்ல்” ( கேர்லா….? ஞே…) என்றார்.

நிமிர்ந்து உட்கார்ந்தேன். டில்லியிலிருந்து நியூயார்க் 17 மணி நேரப் பயணம் என்ற நினைப்பே, காஞ்சனா 3 படத்தை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு திகிலடித்தது. அதுவரை இந்தம்மாவின் , ‘புதிதாய் சரக்கடிக்கும் தமிழ் பட ஹீரோயின்’ டைப் புலம்பலை சகித்துக் கொள்ள வேண்டுமே. நேபாளி, நடிகை மனீஷாகொய்ராலாவின் அஸிஸ்டென்ட் , அவரது நியூயார்க் வீட்டை கவனித்துக்கொள்கிறார், தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், நேபாள் போய்விட்டு திரும்பி கொண்டிருக்கிறார்- விமானம் கிளம்பிய உடனே அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்திலும் , எனக்குத் தெரிந்த இந்தியிலுமாய் நாங்கள் ‘அளவளாவி’ புரிந்து கொண்டது.

‘வாக்கப் பட்டு வந்தவ தான் விருசம்பழம்னா வயித்தில பொறந்ததும் வாழப் பழமாயிருக்கே’ னு சத்தியராஜ் புலம்புவதைப்போல நமக்கு வாய்ச்ச பிளைட் தான் நடுநிசி நாய் போல அர்த்த ராத்திரில கிளம்பிச்சுன்னா, பக்கத்தில வந்து உக்கார்ந்ததும் இப்படி குடிகாரன் பேட்டையிலிருந்து கிளம்பி வந்திருக்கேன்னு மனசுக்குள்ள புலம்பிகிட்டேன். இந்தம்மா மாதிரி குடிச்சு பழக்கமில்லையே, குடுத்த காசுக்கு பிளைட்டையாவது சுத்திப் பார்ப்போம்னு, ஏர் இந்தியாவின் AI 001 பெரிய விமானத்தின் நீள, அகலங்களை பெரிய்ய்ய ரியல் எஸ்டேட் ஓனர் போல இரண்டுமுறை அளந்தாச்சு. நம்ம 23ம் புலிகேசி நடையைப் பார்த்து மயங்குன(?) ஏர் ஹோஸ்டஸின் ஹேர் ஸ்டைலை வியந்து, அவசரத்துக்கு தேவைப்படும்னு சிநேகிதம் பிடித்தாயிற்று.

Photo by Osman Yunus Bekcan on Unsplash

பின் சீட்டில் அழும் கைக்குழந்தையை சமாளித்துக் கொண்டிருந்த கேரளப் பெண்ணுடன் கொறச்சு சம்சாரித்துவிட்டு, பஞ்சாபிக் குழந்தையின் குட்டி டர்பனை தடவிப் பார்த்து கிஸ் கொடுத்து விட்டு வந்து குட்டித்தூக்கம் போட்டால் , பக்கத்து சீட் அம்மணி சலம்பல் கூடியிருந்தது. நான் கண்ண லேசாத்திறந்து பார்க்கவும் , ‘ என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே’ னு மறுபடியும் அந்தம்மா எல்லா கோட்டையும் அழிச்சிட்டு கோடு போட ஆரம்பிக்க, கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன்.

பொதுவாக பயணங்களில், தெரியாதவர்களிடம் , எங்கூட்டுகதை, உங்கூட்டு கதைனு நொய் நொய்னு பொரணி பேசாமல், மனிதர்களை சைட் அடிக்க மட்டுமே பிடிக்கிறது. நடுத்தர வயதுப் பெண்மணி. நேபாளிய பெண்களுக்கேயுரிய அழகு. “ம்ம்ம்ம் நடிகையே வந்திருந்தால் ஒரு செல்பி எடுத்து Fb ல போட்ருக்கலாம்” மனசு அல்பமாய் யோசித்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்க்கிறா மாதிரி இல்லாட்டியும் , கொஞ்சம் பராக்கு பார்த்துகிட்டே, தனியாக பயணம் செய்வது பிடித்திருக்கிறது.

குடும்பத்துடன் பயணிப்பது சுகமெனில், தனித்து பயணிப்பது பெருஞ்சுகம். எந்த பொறுப்புமின்றி, கிடைத்ததை உண்டு, நினைத்ததை உடுத்தி ஏகாந்தமாய் , பயணத்தை அனுபவிக்க, அப்பப்போ ஹாயா ஒரு தனிப் பயணமும் அவசியம். ஏழு எருமை வயசிலும் ஒரே தெருவில், நாலு வீடு தள்ளியிருக்கும் சித்தி வீட்டுக்குப் போகக் கூட, 2 வயது பாப்பா, தம்பியெல்லாம் எனக்குத் துணையாய் அனுப்பப்பட்ட நாட்கள் நினைவுக்கு வந்து பல்லிடுக்கில் மாட்டிய சிக்கன் பீசாக நெருடியது. “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?”, சிரித்துக் கொண்டேன்.

மீண்டும் கண்களை மூட, டார்டாய்ஸ் சுருள் சுற்றியது. மதுரை மாவட்டத்தில் உள்ளது M. கல்லுப்பட்டி என்ற தக்கினியூண்டு கிராமம். உடனே பாரதிராஜா படத்தில் சேற்றில் வெள்ளை டிரெஸ் போட்டு தேவதைகள் ஆடும் கிராமமெல்லாம் நீங்கள் கற்பனை பண்ணினால் கம்பெனி பொறுப்பாகாது. வேண்டுமானால் என்னை மயிலாக நினைத்துக் கொண்டு தொடரலாம். கதையை(!)

cinemachat

அப்பா திடீரென இறந்ததால், அம்மா வீட்டுக்குள்ளேயே வாசம். ஆனாலும், மகளை தைரியமா வளர்க்கணும்கிறதுக்காக, இந்த 7 வயசு பச்சப் புள்ளய (இதை நீங்க நம்பித்தான் ஆகணும், ஆமா) வீட்டுக்கு முன்னால் இருந்த நூலகத்துக்குள்ள பிடிச்சு தள்ளி விட்ட அம்மாதான் எனக்கான வரம் . ‘மா’…..’ம்மா’…..’அம்மா’… என சரஸ்வதி சபதம் சிவாஜி போல, எழுத்துக்கூட்டி படித்து, பின் மெல்ல மெல்ல அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் வாசித்து, ராணி, குமுதம், கல்கண்டு மேய்ந்து, ராஜேஷ்குமார், சுபா , தமிழ்வாணன் பக்கம் போய், லட்சுமி, சிவசங்கரியை லேசா எட்டிப் பார்த்திட்டு …..ரமணிச் சந்திரனில் கொஞ்ச காலம் கிறங்கி….கல்கியில் மூழ்கி , லெப்ட் எடுத்து பாலகுமாரனில் மனசெல்லாம் ஹாவென பரபரத்து அவர் ஆன்மீகம் பக்கம் டர்ன் எடுக்க, தொடர முடியாமல் ஜெயகாந்தன், கி. ரா. புதுமைப் பித்தன் என சுற்றிக்கொண்டிருக்கும் போதே சுஜாதாவில் ஆழ்ந்து…அவரது கதையை விட கட்டுரைகள் ஈர்க்க, எஸ். ராமகிருஷ்ணனை வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கட்டுரையாளராக அவதாரமெடுத்து புத்தகமும் வெளியிட்டாச்சு.

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம். அந்த நூலகர் அதைவிட தங்கமான மனுசன். குமுதம், கல்கண்டு இதயம் பேசுகிறதுனு வர்ற அத்தனை வாரப்பத்திரிக்கையும் வீட்டுக்கே கொடுத்தனுப்பி, ஒரே நாளில் எத்தனை முறை போனாலும் சளைக்காம புக் மாத்திக் கொடுக்கிற மவராசன்.

அதற்குப்பின் ‘தந்தண தந்தண தந்தண’ னு இளையராஜா மியூசிக்கோட வலம் வந்த கனவுக் காலம். பள்ளிப் பருவத்திற்கும் , திருமணத்திற்கும் இடைப் பட்ட பேஜாரான காலம். தேனியில் ஆசிரியப் பயிற்சி முடித்து பதினேழு வயதிலேயே ஆசிரியை. சூப்பர் மேன் போல..ச்சேச்சே சூப்பர் வுமன் போல காலையும் , மாலையும் டியூசன், பகல் முழுக்க தனியார் பள்ளியில் ‘ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா’ன்னு ஹி…ஹி…ஹிந்தி ஆசிரியை என ஒரு நாளில் பதினான்கு மணிநேரம் சந்தோசமாய் உழைப்பு.

‘காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்புற பழக்கமில்ல’ என குடும்பப் பஞ்சாயத்தில் முஷ்டி மடக்கி பெருசுகள் முடிவெடுத்ததால், டிகிரி எல்லாம் அஞ்சல் வழியில்தான். அதுவும், ஆன் கண்டிஷன் பெயில் போல – ”படிச்ச மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்கக் கூடாது” – நாட்டாமைகள் போட்ட டீலுக்கு ‘சரிங்க எஜமான்’ னு கையக் கட்டி ஓகே சொல்லியாச்சு. நான்கு டிகிரியும் சில பல கோர்ஸ், பரதம், டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் , தையல், கராத்தே என கலந்து கட்டி, ஒரு இலக்கில்லாமல் தோணுறத எல்லாம் படிக்கறதப் பார்த்து, “லூசாப்பா நீ”? னு குடும்பமே மிரண்டது.

ஏன்னா.. அப்போ, ஒரு பொண்ணு ப்ளஸ் டூ முடிச்சிட்டா போதும், ஸ்கெட்ச் போட்டு தூக்கி, அவளை சோ கால்டு குடும்பப் பெண்ணாக உருமாற்றுவதற்கான எல்லா ட்ரெயினிங்கையும், அட்வைஸ் என்ற பெயரில் இம்சையையும், மொத்த குடும்பமும், சுற்றமும், நட்பும், நண்டு சிண்டெல்லாமும் கொடுக்கத் துவங்கும்.

“அடுத்த வீட்டுக்கு போற புள்ள இவ்வளவு நேரம் தூங்கலாமா? அடுத்த வீட்டுக்கு போற புள்ள நல்லா சமைக்க கத்துக்க வேணாமா? அடுத்த வீட்டுக்கு போற புள்ள பெரியவங்கள எதுத்து பேசலாமா?”, அடுத்த வீட்டுக்கு போற புள்ள உயிரோடு இருக்கலாமாங்குற கேள்வியைத் தவிர எல்லாக் கேள்வியும் அறிவுரையை தாங்கி நிற்கும். “வெறுப்பேத்தறீங்க மை லார்ட், அடுத்த வீட்டுக்கு போற புள்ளய நீங்க ஏய்யா வளர்த்தீங்க, பொறந்ததும் அடுத்த வீட்டில் போய் போட்டு வந்திருக்கலாமேன்னு” கேட்கத் தோணும். அந்த மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்காமல் கன்ட்ரோல் பண்ணிக்கணும்.

ரோட்டில் போற ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு அப்பத்தா கூட, “அடுத்த வீட்டுக்கு போற புள்ள, நீ எப்படி இருக்கனும்னா “…..என ஆரம்பிக்கும் போதே ‘எங்கே நிம்மதி, …எங்கே நிம்மதி’ சிவாஜி போல ஓடத்தோன்றும். அந்த சமூக, வரலாற்று, பூகோளச் சூழலில், நான் என்ன படிச்சாலும் ஓக்கே சொல்ற அம்மாவும், நான் என்ன செய்தாலும் சரியா இருக்கும்னு நம்பின தம்பியும் தான் எனக்கான ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் எல்லாம். தம்பி ஏழு வயசு சின்னவன் றதால, நம்ம என்ன சொன்னாலும் ‘சரிங்க்க்கா…சரிங்க்க்கா’ எனச் சொல்லுமளவுக்கு சின்ன வயசிலேயே மிரட்டி, ரிகார்டடு வாய்ஸ் போட வைச்சாச்சி! இன்னமும் கூட ‘ சரிங்க்க்கா’ தான்.

என் தோழிகளெல்லாம் குடும்பப் பெண் டெம்ப்ளேட்டுக்கு படிப்படியாய் மாறிக்கொண்டிருக்க, நானோ நாள் முழுக்க உழைப்பு, ஓய்வு நேரத்தில் டைப் ரைட்டிங் ஹை ஸ்பீட், சமஸ்கிருதம், சிலம்பம் என வேறு உலகத்தில் பிஸியாய் இருந்தேன். எதுக்கு சமஸ்கிருதம் படிக்க ஆசை வந்துச்சின்னு யோசிச்சா, அன்டர்வேரு பாக்கெட்டுக்குள்ள கைவிட்டு பெப்பே காட்டுற வடிவேலு தான் கண் முன்னாடி தெரியிறாப்ல!

“சமையலறையா..? அது எங்கயோ ஆண்டிபட்டி, உசிலம்பட்டி பக்கத்தில இருக்கு” னு தான் ரொம்பநாள் இந்த அப்பாவி நினைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பவே பெண்ணியம், ஆணாதிக்கம்னு பேச…..odd man out போல விநோதமான பார்வைகள். ஆணாதிக்கம்னு ஆரம்பிச்சாலே , ‘சாமி ஐஸ் குத்திங்’ என்கிற அளவிற்கு மிரட்டல். “விதண்டாவாதமா பேசினா வீட்டுக்கு ஆகாது” னு எதுகை மோனையோட வசனம் வேற . ஆனாலும் , பேசி, எழுதி, உள்ளூர் பத்திரிக்கையில் பெயர் பார்த்து புளங்காகிதம் அடைஞ்சாச்சு. பெரிய பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுறது உண்டு. ‘மாமியாரை கவர்வது எப்படி’ன்ற போட்டிக்கு, அப்ப கல்யாணமே ஆகாத நான் ‘முதல் மரியாதை’ வடிவுக்கரசியையே கரெக்ட் பண்ணும் அளவுக்கு கட்டுரை எழுதி, (குடும்ப) ‘குத்து விளக்கு’ பரிசு வாங்கி….அட ‘தந்தண தந்தண தந்தண’…..

conversations over chai

ஆனால் திடீர்னு ஒருநாள் , கடவுள் அடிச்சான் பாருங்க ஒரு மேரேஜ் இன்விடேஷன….ஒரு சித்திரை மாத கத்திரி வெயிலில் “ சித்திரையில் செல்லக் கல்யாணம்” னு ஊர்கூடி ஐஸ் வைக்க, பிறகென்ன “மல்லிகையில் ஒரு மாலை… தங்க ஜரிகையில் ஒரு சேலை, தொடக்கம் மாஆஆஆங்கல்யம் தந்துனானேனா” தான். உலக வழக்கத்தை விடாமல், தேனிலவு ( இரண்டு நாத்தனார் குடும்பங்களுடன் !!!) விருந்து, மசக்கை, வளைகாப்பு, பேறுகாலம் அப்டின்னு வாழ்க்கை போச்சு.

1996 ல் கலைஞர் முதல்வரானவுடன் வீடு தேடி வந்தது அரசுவேலை. மாறுதல் கிடைக்காம ஆறு வருசம் தேனிக்கும் சாத்தூருக்கும் நான் வாங்கின டிக்கெட்டுல தான் தமிழ்நாடு போக்குவரத்து துறையே அப்போ இலாபத்துல இயங்கிச்சு. பெண்ணியமாவது புண்ணாக்காவது, எல்லாத்தையும் லாக்கர்ல வைச்சி பூட்டி, சாவிய பத்திரமா கடல்லயே போட்டாச்சு. ஆனாலும் படிப்பதும், வாசிப்பதும் மட்டும் ‘விடாது கருப்பாய் ‘ ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக மாறுதல் வாங்கி சாத்தூர் வர மிகத் தற்செயலாக…..மிக மிகத் தற்செயலாக, ‘முஜே ஹிந்தி மாலும் ஹை’ என்ற ஒரே அற்ப காரணத்திற்காக பெல்ஜியத்திலுள்ள ‘உலக கல்வி அமைப்பு’ மதுரையில் நடத்திய தேசிய அளவிலான பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது……வாரே..வாவ்….
Second innings தொடங்கியது…….

கட்டுரையாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!