டைட்டானிக் கப்பலின் ஹீரோயின் என்று நாம் இன்று வரை ரோஸைத் தானே நம்பிக்கொண்டு இருக்கிறோம்? ஆனால் டைட்டானிக்கின் உண்மைக் கதாநாயகி ‘மாலி’ பிரவுன் என்ற மார்கரெட் டோபின்.

அப்படி என்ன செய்தார் ‘மாலி’ என்ற மார்கரெட்? டைட்டானிக்கிலிருந்து லைஃப் போட்கள் மூலம் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது அரைகுறையாக அவை நிரம்பியிருந்ததைக் கண்டித்து குரல் எழுப்பினார். லைஃப் போட் மீண்டும் மூழ்கிக்கொண்டிருக்கும் டைட்டானிக்குச் சென்று முழு கொள்ளளவுக்கு ஆள்களை ஏற்றிக்கொண்டு கிளம்பவேண்டும் என்று சண்டையிட்டார்.

மார்கரெட் பிரவுன், wikipedia

கடைசியாக, “போட்டை திருப்புகிறாயா? அல்லது உன்னை கடலில் தூக்கி வீசட்டுமா?”, என்று தன் முழு 5 அடி 10 அங்குல உயரத்துக்கும் உடல் நிமிர்த்தி படகின் கேப்டன் ராபர்ட் ஹிட்சென்சை அவர் கேட்க, லைஃப் போட் டைட்டானிக்குக்கு திரும்பி இன்னும் பலரை மீட்டது! கார்பேத்தியா கப்பல் டைட்டானிக்கிலிருந்து மீண்டவர்களை அமெரிக்காவில் இறக்கிவிடும் வரை- தப்பியவர்கள் ஒவ்வொருவருக்கும் யாராவது பொறுப்பானவர்கள் வந்து அழைத்துச் செல்லும் வரை, கார்பேத்தியாவிலேயே சில வாரங்கள் தங்கி உதவினார் மாலி!

கார்பேத்தியா கப்பலின் கேப்டன் மற்றும் மார்கரெட், தங்களுக்கு பிரஞ்சு அரசு வழங்கிய லீஜன் ஆஃப் ஆனர் விருதுடன்

மாலியின் கதை மிக சுவாரசியமானது. மிசிசிபி ஆற்றை ஒட்டிய மிசோரி பகுதியில், மிக எளிய ஐரிஷ் குடியானவர்கள் குடும்பத்தில் பிறந்தார். 18 வயதில் வெள்ளிச் சுரங்கம் ஒன்றில் வேலை செய்த ஜே ஜே பிரவுன் என்ற தொழிலாளியை மணந்தார். பெண்களுக்கு வாக்குரிமை கோரும் அமெரிக்க ‘சஃப்ரகேட்’ போராட்டத்தில் கலந்துகொண்டார். பெண்களுக்கு சம ஊதியம் கேட்டு நடந்த போராட்டங்களில் பங்கேற்றார். இந்த சூழலில் கணவர் பணியாற்றிய வெள்ளிச் சுரங்கம் நொடித்துப் போக, கைவிடப்பட்ட தங்கச் சுரங்கம் ஒன்றைக் கண்டு அதன் பங்குகளில் முதலீடு செய்தார் பிரவுன்.

வணிகம் பெருவெற்றியடைய, அந்தப் பகுதியின் திடீர் பெரும் செல்வந்தர்களானது பிரவுன் குடும்பம். ஆனால் மாலியை மிசோரி பணக்கார வகுப்பு பணியாள் என்றே கடைசி வரை ஒதுக்கி வைத்திருந்தது. எதற்கும் சளைக்காத மாலி, மருத்துவமனை, பள்ளி, தேவாலயம் என சமூகத் தேவைக்கான கட்டிடங்களைக் கட்ட நிதி திரட்டினார்; பென் லிண்ட்சேயுடன் இணைந்து அமெரிக்காவின் முதல் ஜுவனைல் நீதிமன்றத்தை தோற்றுவித்தார். இந்த சூழலில் தான் எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு டைட்டானிக் கப்பலில் அமெரிக்கா திரும்ப பயணச்சீட்டு எடுத்தார்.

டைட்டானிக் மூழ்கியபின் அதில் பயணம் செய்து உயிர் தப்பிய எளிய மூன்றாம் வகுப்பு டிக்கெட் பயணிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்தார். கார்பேத்தியா கப்பல் நியூயார்க் நகரை வந்தடையும் முன்பே டைட்டானிக் ‘சர்வைவர் ஃபண்ட்’ ஒன்றை ஏற்படுத்தி 10000 டாலர் நிதியும் அவர்களுக்காகத் திரட்டிவிட்டார். தொடர்ச்சியாக இறக்கும் வரை டைட்டானிக் பயணிகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்துவந்தார். 1912ம் ஆண்டு டைட்டானிக் மூழ்கியது பற்றிய நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று சாட்சியம் அளிக்க மாலி விரும்ப, ‘பெண்களுக்கு சாட்சி அளிக்க அனுமதியில்லை’ என்று நீதிமன்றம் மறுத்தது. சளைக்காத மாலி, தன் அனுபவத்தை அமெரிக்காவின் முக்கிய செய்தித் தாள்களுக்கு எழுதித்தள்ளினார்!

அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன்பே செனட் உறுப்பினராகத் தேர்தல் பணியைத் தொடங்கினார். முதலாம் உலகப்போர் தொடங்க, செனட் உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தார். நடிப்பில் பெரும் ஆர்வம் கொண்ட மார்கரெட், நான்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், இலக்கியம் மேல் பேரார்வம் கொண்டவர். 1932ம் ஆண்டு பிரெஞ்சு அரசு இவரது துணிவைப் பாராட்டி பிரெஞ்சு லீஜன் ஆஃப் ஆனர் விருது வழங்கியது. 1933ம் ஆண்டு மார்கரெட் என்ற மாலி இறந்தார்.

அதே 1930களில் ‘The unsinkable Molly Brown’ என்ற வானொலி நாடகம் இவரது கதையை ஒட்டி எழுதப்பட்டு ஒலிபரப்பானது, ஹாலிவுட் படமும் ஆனது. பிராட்வே மியூசிக்கலாக இன்றும் மாலி பிரவுன் உயிர்ப்புடன் இருக்கிறார். ஆனால் இந்த ‘மாலி’ புனைபெயர் அவருக்கு அமெரிக்க சினிமா தந்தது. மார்கரெட் பிரவுன் டைட்டானிக்கின் கதாநாயகியாக, துணிவுடன் லைஃப் போட் படகு எண் 6ல் பலரைக் காத்த கலங்கரை விளக்கமாக இன்றும் அறியப்படுகிறார்!


– நிவேதிதா லூயிஸ்,

எழுத்தாளர், பெண்ணிய மற்றும் சமூக வரலாற்றாளர்.