நம் சமூகத்தைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிற அல்லது வழிநடத்துகிற தவறான முறைமைகளை அழித்தொழிக்கிற போது ‘பேய்’ என்னும் மூடநம்பிக்கை வழக்கொழியத் தொடங்கும். பேய் என்னும் கட்டுக்கதையை அழித்தொழிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளில் சிலவற்றைக் குறித்துப் பார்க்கலாம்.
வெளிப்படையாகவே பெண்களை அடிப்பதையும் துன்புறுத்துவதையும் இயல்பான வாழ்வியல் என்று கருதுகிற சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க உளவியலைக் கொண்ட சாதிவெறியர்கள் சாதியப் பாகுபாடுகளையும் படிநிலைகளையும் அழியாமல் பார்த்துக்கொள்வதற்காகத் தங்கள் சாதிப் பெண்களை ஆணவப்படுகொலை செய்வதையும் எந்தவிதக் குற்றவுணர்வுகளுக்கும் உட்படுத்தாமல் தங்களது சாதிய வாழ்வியலின் பெருமிதமாகக் கருதி வருகின்றனர்.
பெண்களை மாண்புடன் நடத்த மறுக்கின்ற இதுபோன்ற சாதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். அதில் பாதிக்கப்பட்டு உடல் மற்றும் உளவியல் ரீதியாக நோய்வாய்ப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக அந்தப் பெண்களின் உடல்களுக்குள் ஆணவக்கொலையுண்ட பெண்களின் ஆவிகள் பழிதீர்க்கும் பொருட்டு புகுந்துள்ளதெனக் கருதி போயோட்டுவதையும் வழக்கமாக்கியுள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட பெண்கள் பேயோட்டியும் குணமடையாமல் மரணித்தால் ஆணவப்படுகொலையுண்ட பெண்களின் ஆவி ஆக்ரோஷமாக இருப்பதாகக் கருதி கொலைக்குற்றவாளிகளும் ஊராரும் இணைந்து ஆணவக்கொலையுண்ட பெண்களுக்குச் சிலையெடுத்தோ கோயிலெடுத்தோ பூசை செய்வது, ஆடு அல்லது கோழிகளைப் பலியிடுவது, விழா எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் சில சாதிகளின் வழக்கத்தில் இருந்துள்ளது.
ஆணவக்கொலையுண்டவர்களைச் சாமியாக்கி வழிபடுகின்ற வழக்காற்றியல்களைப் பார்க்கும் போது நாட்டார் வழக்காற்றியலில் உள்ள சாமிகளை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் வைத்து அவற்றின் வழிபாட்டு முறைமைகளிலும் கட்டமைப்பிலும் ஜனநாயகத் தன்மை இருப்பதாகக் கொண்டாடும் அறிஞர்களின் கருத்தாக்கங்கள் அனைத்தும் பொய்த்துவிடுகின்றன. ஆகம தெய்வங்கள் மதத்தின் பிடியில் இருப்பது போல் நாட்டார் தெய்வங்களும் சாதியின் பிடியிலேயே இருக்கின்றன.
பேய் என்னும் மூடநம்பிக்கையை ஒழிக்க முதலில் சமூகத்தைப் பிடித்துள்ள சாதியத்தை அழித்தொழிக்க வேண்டும். சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் எந்த அளவிற்கு இந்து மதம் வெறுக்கின்றதோ அதே அளவிற்குப் பெண் விடுதலையையும் பாலின சமத்துவத்தையும் சாதியம் வெறுத்து வருகிறது.
எவ்விதக் குற்றவுணர்வுகளுமின்றி ஆணவக்கொலை செய்வது; கொலையுண்ட பெண்களின் ஆவி நோய்வாய்ப்பட்ட பெண்களின் உடலில் புகுந்துவிட்டாதாகக் கருதுவது; பெண்களுக்கு உளவியல் ரீதியான நோய்கள் ஏற்படும்படியான வன்முறை நிறைந்த குடும்பக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது போன்ற சாதிய வாழ்வியலை அழித்தொழிப்பதன் மூலமும் பேய் என்னும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப்பள்ளி வைக்க முடியும்.
பேய் பிடித்துள்ளதாகச் சொல்லி நோய்வாய்ப்பட்ட பெண்களை செருப்பாலும் துடைப்பத்தாலும் அடித்து துன்புறுத்துவது போன்ற குற்ற வடிவங்கள் தடை செய்யப்பட வேண்டும். பேய் ஓட்டுதல் எனும் மூடநம்பிக்கையை மக்களின் உளவியலில் இருந்து அகற்றத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பேய் ஓட்டும் வழக்கத்தின் புகழிடமாகத் திகழ்கின்ற கிராமங்களில் உள்ள ஒவ்வோர் ஆரம்ப சுகாதார மையங்களிலும் நிபுணத்துவமும் பாலின சமத்துவப் பார்வையும் கொண்ட உளவியலாளர்களை நியமித்து உளவியல் நலம் சார்ந்த புரிதலை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.
மனநல மருத்துவர்களுக்குப் பாலின சமத்துவப் பார்வையும் புரிதலும் விசாலமாக இருக்க வேண்டும். உளவியல் ரீதியான பிரச்னைகளிலிருந்து விடுபட மனநல மருத்துவரிடம் செல்லும் பெண்களை மனநல மருத்துவர்கள் அணுகும் விதமே பல இடங்களில் தவறாக இருக்கிறது. காதல் முறிவால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண்ணிடத்தில், “படிக்கிற வயதில் காதல் கேட்குதா? பெத்தவங்க செய்ய வேண்டிய காலத்தில் செய்து வைப்பாங்களே எதுக்கு அவசரப்பட்ட? காதல்னா எந்த அளவுக்கு உறவு போச்சு?’ என்ற வகையிலான கேள்விகளைக் கேட்கும் மனநல மருத்துவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
பொதுவாக நம் சமூகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வெளியானது ஆண்களுக்கு இருப்பதைப் போன்று சுதந்திரத் தன்மையுடன் பெண்களுக்கு இருப்பதில்லை. இந்நிலையில் மனநல மருத்துவர்களிடம் தங்களது உளவியல் சிக்கல்களுக்கான காரணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துவதற்கான சூழலும் நம்பகத் தன்மையோடு இல்லாதிருப்பது, பெண்களைப் பேய் ஓட்டுபவனின் பிடியில் சிக்கவைக்கவே வழிவகை செய்யும்.
மனநல மருத்துவர்கள் ‘பெண்ணொடுக்கம்’ என்ற பாரம்பரிய மரபிலிருந்து வெளியேறி, ‘பாலின சமத்துவம்’ என்ற அறிவியல் பாதையில் பகுத்தறிந்து பயணித்து மக்களின் உளவியல் நலத்தைப் பேண வழிவகை செய்ய வேண்டும்.
சாதிய மற்றும் பாலினப் பாகுபாட்டுக் கட்டமைப்பைக் கொண்ட வாழ்வியலை மாற்றிக்கொள்வதற்கெல்லாம் மேலாக, பேய் என்னும் மூடநம்பிக்கையை அழித்தொழிக்க பெண்கள் தங்களது உடல் மற்றும் உளவியல் நலம் பற்றி அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது பற்றியும் உடல் ஆரோக்கியம் பற்றியும் பெண்கள் அக்கறை கொள்ள வேண்டும். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் பெண்கள் உடலைச் சீராக வைத்துக்கொள்ளும் பொருட்டு உடற்பயிற்சிகளை வழக்கமாக்கிக்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
உளவியல் நலத்தைச் சீர்குலைக்கிற உறவுகளிலிருந்து விடுபடுவதை இயல்பானதாகப் பெண்கள் கருத வேண்டும். “சொந்தக்காரன் தப்பா பேசுவான், ஊர்க்காரன் தப்பா நினைப்பான்” என்னும் கலாச்சார நச்சுகளை விடவும் உளவியல் நலம் முக்கியம் என்பதில் பெண்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
உடல் மற்றும் உளவியல் நலத்திற்குப் பிறகுதான் குடும்பமும் சமூகமும் என்ற குறைந்தபட்ச தன்னலத்தைப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தபட்ச சுயநலம்கூட இல்லாமல் சுயத்தைப் பேணவும் முடியாது; மீட்டெடுக்கவும் முடியாது. சுயநலத்தோடு உடல் நலத்தைப் பேணுகையில்தான் பெண்களால் சுயத்தோடு உளவியலை நிர்வகிக்க முடியும்.
நாற்பதைக் கடந்த பெண்கள் உடல் நலத்தைப் பேணுவதில் கூடுதல் கவனமெடுத்துக் கொள்ள வேண்டும். சிறு அறிகுறி தென்படினும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உழைப்புக்கேற்ற ஓய்வைப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். உடலை வருத்தாத, உளவியலைப் பாதிக்காத வாழ்க்கை முறையைப் பெண்கள் தங்களுக்குப் பிடித்த வண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும் தேவையற்றதை ஒதுக்கவும் தெரிந்த பெண்கள் நிறைந்த சமூகமாக நம் சமூகம் வளர்கிற போது பேய் என்னும் கட்டுக்கதைகள் தாமாகவே வழக்கொழிந்துவிடும்.
படைப்பாளர்:
கல்பனா
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
arumai