சுயத்தை இழங்கும்படி காலம்காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தின் அதிகார மட்டத்தில் இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் விருப்பங்களுக்கும் கட்டளைகளுக்கும் பணிந்தே தங்களது உணர்வுகளைக் கட்டமைக்கவும் வெளிப்படுத்தவும் முடியும் என்ற நிலை நமது சமூகத்தில் நிலைத்திருந்த காரணத்தால் நோய்வாய்ப்படும் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்குமென்று குடும்ப ஆண்கள் கருதி பேயோட்ட அழைத்துச் சென்றால், பெண்கள் தங்களைப் பேயாகவே வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆகவே இங்கு பெண்களைப் பேய் பிடித்துக்கொண்டது என்று சொல்வதைவிடவும் பெண்கள் பேய்களைப் பிடித்துக்கொண்டனர் (பேய்களின் குணம் என வர்ணிக்கப்படுபவற்றை வெளிப்படுத்துவது) என்பதே பொருத்தமாக இருக்கும்.

பெண்மை என்பது மென்மை, அமைதி மற்றும் பலவீனத்தின் இருப்பிடம் என்று பாரம்பரியமாக வழிநடத்தப்பட்ட பெண்கள் உளவியல் அல்லது உடலியல் ரீதியாக நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் காசுக்கு ஆசைப்பட்டுப் பேயோட்டுகிறவன் கூறுவதை நம்பி, குடும்பத்தினர் பேயோட்ட ஆயத்தமாகும் நேரத்திலிருந்து தங்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளதை அறியாமலும் நோயின் வலிகளைப் பொருட்படுத்தாமலும் பேய்களின் குணம் எனக் கற்பிக்கப்பட்டுள்ளவற்றைப் பெண்கள் பின்பற்றுகின்றனர்.

பேய்களின் தன்மைகளைப் பிடித்துக்கொள்கின்ற பெண்கள் வழக்கமான அலங்கரிப்புகளைப் புறக்கணிப்பது, குரலை உயர்த்தி கத்துவது, தாக்குவது, சில நேரத்தில் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு ஆர்ப்பரிப்பது, கொண்டாட்டமாகச் சிரிப்பது, ஓவென்று அழுவது, கதறுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவதை எதிர்கொண்டவர்களுக்கு இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது பேய்தான் அந்தப் பெண்களைப் பிடித்திருக்கும். கொடூரமான இத்தகு செயல்களைச் செய்வது பெண்களின் இயல்பல்ல; குறிப்பாக மிகவும் மென்மையான, குரல் உயர்த்திப் பேசக்கூடத் தெரியாத பெண்கள் இது போன்று நடந்துகொள்வதற்குப் பேய் பிடிப்பதுதான் காரணம் போன்ற எண்ணங்களும் சந்தேகமும் எழ வாய்ப்புண்டு; இங்குதான் நாம் கூடுதல் நிதானத்துடன் பகுத்தாராய வேண்டியுள்ளது.

‘பலவீனமானவர்கள்’ என்று சொல்லிச் சொல்லியே சமூகம், பெண்களின் ஆற்றலையும் வலிமையையும் பயன்படுத்திக்கொள்ள விடாமல், அவர்களைத் தேக்கி வைத்துள்ளது. மாதவிடாய் உதிரத்தைக் கண்டு மயங்கி விழுமளவு பெண்களை இதுபோன்ற கற்பிதங்களே அச்சுறுத்தி வைத்திருக்கின்றன.

பெண்கள் பலவீனமானவர்; ஆண்களே பலமானவர்கள். பலவீனமான பெண்கள் தந்தை, கணவன், மகன் போன்ற ஆண்களிடம் அடைக்கலம் அடைவதே பாதுகாப்பானது போன்ற தவறான கற்பிதங்களையே சமூகம் இயற்கையெனக் கருதி வந்துள்ளது. பலமானவர்கள் என்று புனையப்பட்ட ஆண்கள் எப்படிப் பலவீனமான பெண்களிடமிருந்து உருவாக முடியும்? போன்ற சந்தேகங்களை எழுப்பாத சிந்தனையற்ற கூட்டமாக நமது சமூகம் இயங்கி வந்துள்ளது.

பெண்களின் கருவணுவும் ஆண்களின் விந்தணுவும் இணைந்துதான் குழந்தை உருவாகும் என்ற அடிப்படையையும் அறியாத சமூகம் பெண்ணை ஒரு நிலமாகவும் அது குழந்தைகளை வளர்த்துத் தரும் வெற்று இயந்திரமாகவும் ஆண்களின் விந்தணுக்களே விதையாகவும் அந்த விதைகளே குழந்தைகளை உருவாக்குகின்றன என்ற மூடநம்பிக்கையில் கருத்தியல்களைக் கட்டமைத்திருக்கிறது.

பெண் பலமற்றவள்; அவளுடைய கடமை கணவனது தேவைகளைப் பூர்த்தி செய்து கிடப்பதே. குழந்தைகளைப் பெற்றுத் தருகையிலோ அல்லது கணவனுக்கு இன்னல் நேர்கையிலோ வேண்டுமானால் பெண்கள் தங்களின் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போலான கற்பிதங்களைத்தான் நமது இலக்கியங்களும் காவியங்களும் கற்பித்து மக்களை வழிநடத்தியுள்ளன என்பதற்கு உதாரணமாகக் கண்ணகியின் கதை அமைகிறது.

கற்புக்கரசியாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிற கண்ணகியின் பாத்திரத்தை

தெய்வம்தொழாஅள்கொழுநன்தொழுதெழுவாள்

பெய்யெனப்பெய்யும்மழை

என்னும் குறளை மெய்ப்பிக்கும் வகையில் இளங்கோவடிகள் படைத்திருப்பார். தன் கணவனாகிய கோவலன் திருமண ஒப்பந்தத்தை மதிக்காது வேறு பெண்ணுடன் உறவுகொள்ளும் பொழுது கோபம் கொள்ளாமல், தனக்கு துரோகம் செய்த கோவலன் திரும்பி வரவேண்டுமென சுயத்தை இழந்து கண்ணீர் வடிக்கும் கண்ணகி எப்படிப் பாண்டிய மன்னனின் தவறான நீதியினால் கோவலன் கொலையுண்ட பொழுது மட்டும் கோபம் கொண்டு மதுரையை எரித்திருக்க முடியுமென்ற கேள்விக்கான பதிலை நாம் ஆராய்ந்திடவே முடியாத அளவிற்கு முற்போக்கு, பிற்போக்கு எனக் கருத்தியல் வேறுபாடுகளின்றி அனைவரிடமும் சிலப்பதிகாரம் புனிதத் தன்மை அடைந்துவிட்டது.

கண்ணகியின் கற்புத்திறத்தைப் பறைசாற்றுவதற்காகவே சிலப்பதிகாரம் இலக்கிய வெளியில் மிகைப்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண குடிமக்களை கதைமாந்தர்களாகக் கொண்ட காப்பியம் என்று பள்ளிப் பருவந்தொட்டே கற்பிக்கப்படுகிறது. ஆனால், கோவலனும் கண்ணகியும் வணிகம் செய்யும் செல்வந்தர்களின் குழந்தைகளாக வளர்ந்தவர்கள்.

களவு வாழ்க்கை என்று வழங்கப்பட்டு வந்த பெண்ணும் ஆணும் காதலுற்று ஊரார் அறியாவண்ணம் கூடி மகிழ்ந்து இன்பம் துய்த்த பின் ஊரறிய காதலை வெளிப்படுத்தி இல்லற வாழ்வைப் பின்பற்றும் நெறியைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்பு என்ற பொருண்மையை ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்றவாறு பெண்களின் ஒழுக்கத்தை மட்டும் குறிப்பிடும் பொருண்மையாகச் சுருக்கியதில் சிலப்பதிகாரத்திற்கும் பங்கு உண்டு.

பெண்களுடைய ஆற்றலையும் வலிமையையும் போராட்டக் குணத்தையும் அவர்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள விடாமல் சமூகம் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட விதத்தினைச் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் படைப்புகள் வழி அறிந்துகொள்ளலாம்.

தன் உளவியலைப் பற்றியும் உடலைப் பற்றியும் அறிந்து கொள்ளவும் விழிப்புணர்வடையவும் வாய்ப்பளிக்காத சமூகத்தில் வளரும் பெண்கள் அழுத்தம் நிறைந்த சூழல்களைச் சந்திக்க நேர்கையில் எளிதில் உடைந்து விடுகின்றனர். பிரசவத்தின் போது பெண்களின் வலிமை வெளிப்படுவதைத் தாய்மையின் தன்மையென வலுக்கட்டாயமாகப் பெண்களிடத்தில் திணிக்கிற சமூகம் மற்ற நேரத்தில் பெண்களைப் பொட்டிப் பாம்பாகவே அடக்கியாளப் பார்க்கிறது.

குறிப்பாகப் பிரசவத்தின் போது பல்வேறு காரணங்களினால் சோர்ந்து போய் துணிவிழக்கும் பெண்களைக் கூறுகெட்டவள், பெண்ணாகப் பிறந்தால் வலிகளைத் தாங்கதான் வேண்டும், இந்த வலிகளைக்கூடத் தாங்கிக்கொள்ள வலிமையில்லாதவள் எப்படி ஒரு நல்ல பெண்ணாகவும் தாயாகவும் இருக்க முடியுமென்று வசைபாடும் குடும்பத்திற்கு அஞ்சியே பல பெண்கள் மயக்கத்தைக்கூட மறந்து கத்துகின்றனர்.

பெண்களின் உறுப்புகளில் எல்லாம் கற்பைத் திணித்து அச்சுறுத்தும் சமூகத்தில் வளர்ந்த பெண்கள், பிரசவத்திற்கு முன்பான பெண்ணுறுப்பு சோதனை நேரத்தில் பெண் மருத்துவராகவே இருந்தாலும் மருத்துவர் முன்பு காலை விரிக்கக்கூடத் தயங்கி நடுக்கமடையும் நிலை என்பது பெண்கள் மீது பன்னெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ள அச்சுறுத்தல்களின் அதிர்வுகளை எடுத்துக்காட்டுகின்றன.

அமைதி, மென்மை, கற்பு என்றெல்லாம் அடக்கியாளப்பட்ட பெண்கள் பேய் பிடித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுதலையடைகின்றனர். அதுவரையிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருந்த கோபங்களையும் கொண்டாட்டங்களையும் ஆற்றலையும் பேயினூடனாக வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.

குடும்ப வன்முறையை வழக்கமாகக் கொண்ட கணவன்மார்களை அடிக்க கையோங்கப் பழகுகின்றனர். தன்னைப் பலவாறு துன்புறுத்திய மனிதர்களை கதிகலங்கச் செய்யும் செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்கின்றனர். நான்கு சுவர்களுக்குள் எப்பொழுதும் நடுங்கிக்கிடந்த உடல் பார்ப்பவர்களை எல்லாம் நடுங்கச் செய்கின்ற தொணியினை நடத்தையாக்கிக்கொள்கிறது.

குடும்பத்தினருக்குப் பரிமாறிய பின் மீந்திருப்பவற்றை உண்டே காலத்தை ஓட்டிய பெண்களின் நாக்குகள் பேய் பிடித்துவிட்டாதாகச் சொல்லப்பட்டதும் கறிவகைகளையும் சூடான உணவுகளையும் சுவைத்துச் சுவைத்துப் பசியாற்றிக் கொள்கின்றன.

திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காகத் தினம்தினம் பாலியல் வன்முறை செய்யும் கணவனை ஒதுக்கி வைக்க தங்களைப் பிடித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்ட பேய்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

பெண்களின் உளவியல் அல்லது உடலியல் நோய்களுக்கு மருத்துவம் பார்க்காமல் போயோட்டிக்கொண்டிருந்த குடும்பங்களில் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு முதன்மையளித்து உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்வதால் குறிப்பிட்ட நோய்களுக்குள்ளான பெண்களில் சிலர் நல்வாய்ப்பாக குணமடைந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பெண்கள் பேயோட்டுகின்ற பொழுது பேயோட்டுபவனின் அடிகளாலும் சித்ரவதைகளாலும் உடலில் ஏற்படுகின்ற வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கொடுமையான சூழலில் உயிரிழக்கின்றனர்.

ஒருபுறம் தன் நோயைப் புரிந்துகொள்ளாமல் பேயோட்டி சித்ரவதை செய்துகொண்டு, மறுபுறம் நோயால் துன்பப்படும் உடலுக்கு ஓய்வைக் கொடுக்காமல் சமைப்பது, துவைப்பது போன்ற அன்றாடப் பணிகளைச் செய்ய வற்புறுத்தும் குடும்பங்களில் சிக்கித்தவித்த பெண்களுக்குப் பேயோட்டுகின்ற நேரத்தில் உயிர்போவது என்பதும் அந்தப் பெண்களின் வேண்டுதலாகவே இருந்திருக்கும். மரணம்தான் அவர்களை இதுபோன்ற கொடுமைகளிலிருந்து விடுவிக்குமென நம்பியிருப்பார்கள்; மரணத்தை வேண்டியிருப்பார்கள். ஆனால், நாம் அவர்களது மரணங்களை கொலைகளாகவே கருத வேண்டும்.

பேய்களைப் பிடித்துக்கொள்ளும் பெண்களுக்குச் சாதகங்கள் சில நன்மைகளை ஏற்படுத்தினாலும் பாதகங்களே மிகுதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பெண்களின் ஆற்றலையும் வலிமையையும் யாருடைய அனுமதியும் இன்றி அவர்களது சுய தேவைகளுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் தகுந்தவாறு பயன்படுத்திக்கொள்ளும் நிலை பெண்களிடத்தில் பரவலடைகின்ற பொழுது பெண்கள் தங்களின் சுயத்தை மீட்டு, தங்களுக்குண்டாகும் நோய்களைச் சரிவரப் புரிந்துகொண்டு, மருத்துவத்தில் விழிப்புணர்வடைந்து, தங்களுக்குத் தேவை மருத்துவ சிகிச்சையா, அல்லது போயோட்டுவதா என்பதில் தெளிவடைந்து மருத்துவ சிகிச்சையைத் தேர்ந்தெடுத்து நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும் நெறியில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

பேய் என்னும் மூடநம்பிக்கையை ஒழிக்க பாலினச் சமத்துவம் ஒன்றே தீர்வாக இருக்கும். பாலினப் பாகுபாடு உள்ளவரை மருத்துவ சிகிச்சைகளைவிட குடும்பங்கள் பரிந்துரைக்கும் பேயோட்டும் செயலே தீர்வாக இருக்குமென்று எண்ணி தங்களுக்குப் பேய் பிடித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு, பேய்களின் தன்மைகள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளவற்றைப் பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவற்றையெல்லாம் தடுத்தொழிப்பதற்கான தீர்வுகளை அடுத்து பார்க்கலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.