பல வருடங்களாக தெரிந்த ஒரு குடும்பத்தை கடைசியாகப் பார்த்த பொழுது, முன்பைவிட கணவனும் மனைவியும் மிக நெருக்கமாக இருந்தார்கள். காலம் செல்லச் செல்ல, நெஞ்சாங்கூட்டுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை நிறுத்திக் கொண்டாலும், காதல், மற்றவரின் மேல் காட்டும் பரிவின் மூலம் வெளிப்பட்டுவிடுகிறது.

இன்னும் சில வருடங்களில் நாங்களும் அவர்களைப்போல நெருக்கமாகிவிடுவோம் என்றெண்ணிய தருணத்தில், அவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். நம்ப மிகக் கடினமாக இருந்தது.

ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பைப்போல இப்போதில்லை. விவாகரத்து என்பது கொஞ்சம் இயல்பாகிக் கொண்டு வருகிறது. காரண காரியங்களை அலசுவதைக் காட்டிலும், சேர்ந்து வாழ விரும்பாத இருவரோ அல்லது ஒருவரோ, அந்த பந்தத்தில் இருந்து வெளியில் வருவதுதான் ஒரே தீர்வாக இருக்கும்.

இருவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டைக் களைந்து, மீண்டும் திருமண உறவைத் தொடர வைக்கும் வாய்ப்பு ‘கவுன்சலிங்’ மூலம் கொடுக்கப்படுகிறது.

இதை விடுத்து ஒரு தம்பதி தங்கள் திருமண வாழ்வைத் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை, அவர்கள் இருவரைத் தாண்டி தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் இருக்க முடியாது. குழந்தைகள் உள்பட.

சில தினங்களுக்கு முன்னர், விவாகரத்து பெற்ற ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒரு பொது நிகழ்ச்சியின் பொழுது கண்களால் பேசிக் கொண்ட காணொளியை பகிர்ந்து பலரும் ‘இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு எப்படி இருவரும் பிரிந்தார்கள்?’ என்று வருத்தப்பட்டிருந்தார்கள். இது என்ன மாதிரியான மனநிலை? விவாகரத்து பெற்றால், ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்காமல் இருப்பது, நேரில் பார்த்தால் ஒன்று முகத்தை திருப்பிக் கொண்டு போவது இல்லையென்றால் சண்டை இடுவது, தேவையில்லாமல் பேசிக் கொள்வதைத் தவிர்ப்பது… இதுவல்ல விவாகரத்து!

எதோ ஒரு காரணத்தினால் நீ நினைக்கும்படி என்னாலோ, நான் நினைத்தபடி உன்னாலோ வாழ முடியவில்லை. மகிழ்ச்சியற்ற இந்த வாழ்க்கைக்கு பதிலாக இருவரும் பிரிந்து தனிததனியான வாழ்க்கையை அமைத்து கொள்வோம்; உன் மேல எனக்கு எந்த கோபமோ, வருத்தமோ இல்லை. இதுநாள் வரையில் உன்னுடன் வாழ்ந்த என் வாழ்க்கையை நான் மதிக்கிறேன் என்பதாகத் தானே நல்ல உறவு இருக்க முடியும்?

அந்த விதத்தில், நட்புடன் விவாகரத்து பெற்ற இருவர், பொதுவெளியில் சிநேகிதமாகவோ அல்லது கொஞ்சம் எஞ்சி இருக்கும் காதலாலோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதைக் கண்டு, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம் என்று கருத்து கூற நாம் யார்?

பிரபலங்கள் மட்டுமில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் யார் விவாகரத்து பெற்றாலும், நமக்கு உடனேயே காரணம் தெரிந்து விட வேண்டும்! அதிலும் மிக முக்கியம், யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை நாம்தான் முடிவெடுப்போம்.

அப்பா என்றால் ஊருக்கே பிடிக்கும். அம்மா தான் சொல்லுவார் ‘உங்க அப்பாகூட ஒரு நாள் வாழ்த்து பாத்துட்டு அப்புறம் சொல்லட்டும்’ என்று. இது தான் பல வீடுகளிலும் உள்ள எதார்த்தம்.

விவாகரத்து என்று வந்துவிட்டால், யார் மேல் தப்பு அதிகமாக இருந்தாலும், அவர்கள் இருவருக்குமே அது வலி – ‘trauma’ தான். நெருங்கிய உறவினர்களில் இரண்டு விவாகரத்துகள் நடந்துள்ளன. அதில் பாதிக்கபட்ட இருவரும் அது குறித்துப் பேசும்போதெல்லாம், அவர்கள் அடைந்த வேதனையைப் பகிர்ந்து கொள்வர். அதைப் பற்றி எப்போது நினைத்தாலும், அது மனஉளைச்சலைக் கொடுக்கிறது என்றார்கள். இருவருமே ஆண்கள்தான். விவாகரத்து ஆகி பல ஆண்டுகள் ஆகியும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

உறவு பற்றிய ஆலோசனை பற்றி ஒருவர் நம்மிடம் கேட்கும்பொழுது, நம்மால் இயன்ற உதவி புரியலாம். அதன் பிறகு அவரும் அவரின் இணையரும் எடுக்கும் முடிவை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Photo by Marek Studzinski on Unsplash

இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு, இவற்றை எல்லாம்விட வேறு ஒரு பெரிய இடர் இருக்கிறது. விவகாரத்திற்கு ஆகும் செலவுகள். வக்கீலுக்குக் கொடுக்கும் கட்டணத்திற்காகவே தனியாக சம்பாதிக்க வேண்டும். அதுவரை நீங்கள் இருவரும் சேர்த்து வைத்த காசின் பெரும் பகுதி அவருக்குச் செல்லும். இதற்கு அஞ்சியே, வெளிநாடு வாழ் தம்பதிகள், முறையான விவாகரத்து பெறாமலே தனித் தனியாக வாழ்கிறார்கள். ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு, பேசாமல் இருப்பவர்களும் உண்டு.

திருமணம் எவ்வளவு இனிமையானதோ, அதற்கு சற்றும் குறையாமல் மன அழுத்தத்தை தரக்கூடியது விவாகரத்து. அப்படி ஒரு கடினமான நிலையில் இருக்கும் தம்பதிகளில் யார் பக்கம் தப்பு, யார் பக்கம் நியாயம் என்பதை வெளியில் இருந்து பார்ப்பவர்களாகிய நாம் தீர்ப்பிடாமல், கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது. அது அவரவர் குடும்பப் பிரச்னை. சமூகப் பிரச்னை அல்ல.

திருமணங்களைப் போல விவகாரத்துகளும், இருவர் சம்மந்தப்பட்ட முடிவாக மட்டுமே இருக்கட்டும்.

தொடரும்…

படைப்பாளர்

சுமதி விஜயகுமார்

பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா