துணிக்கடைக்கு நாங்கள் செல்லும் வழக்கம் கிடையாது. மூன்றாம் ஆண்டு மட்டும் அம்மாவிடம் அனுமதி வாங்கி நெல்லை ஜங்ஷனில் உள்ள ராகம் துணிக் கடையில் ராகம் சாரீஸ் என்று பெயர் பெற்ற பார்டரில் மட்டும் சிறு சிறு பூ போட்ட, அதே டிசைனில் ஜாக்கெட் கொண்ட சேலை வாங்கினேன். அப்போதுதான் ஜாக்கெட் சேலையுடன் கிடைக்கும் கலாச்சாரம் உருவானது.
சிலர், ஷிபான், ஜார்ஜெட் போன்ற சேலைகள் எடுத்திருந்தார்கள். மௌனமான நேரம் பாடலில் ஜெயப்பிரதா இதே போலச் சேலை உடுத்தி இருப்பார். அந்தச் சேலையில் சற்றே பெரிய பார்டர் வைத்திருந்தது.
எல்லோரும் கூட்டமாக அமர்ந்து சேலைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். சத்தம் கீழே ஓரத்திலிருந்த வார்டன் அறை வரை கேட்டு சிஸ்டர் வந்துவிட்டார்கள். எல்லோரும் பயந்துவிட்டோம். ஏனென்றால் அடுத்தவர் அறையில் இருப்பதே தவறு. ஆனால் சிஸ்டர் பெரிய அளவில் திட்டவில்லை. எதற்கு இவ்வளவு சத்தம்? அவரவர் அறைக்குப் போங்க என்று மட்டும் கூறினார்கள்.
அப்போதுதான் செயற்கை இழைகள் அறிமுகம் ஆகி இருந்தன. அதனால் பாலியஸ்டர், நைலான், சைனா சில்க், உல்லி உல்லி, டிஸ்கோ, ஜார்ஜெட், ஷிபான் போன்ற விதவிதமான சேலைகள் கிடைக்கப்பெற்றன. அதற்கு முன் பருத்தியால் ஆன வாயில், ஃபுல் வாயில், டெரிவாயில் சேலைகள்தான். வாயில் சுத்தமான காட்டன் என்பதால் கஞ்சி போட வேண்டி இருக்கும். புல்வாயில், டெரிவாயில் கஞ்சி போட வேண்டாம். ஆனால் விலை சற்று அதிகமாக இருக்கும். எங்களுக்கு ஆய்வுக்கூடத்தில் உடுத்த வசதியாக இருக்கும் என்று அம்மா டெரிவாயில்தான் பெரிதும் எடுத்துத் தருவார்கள்.
தற்போது விதவிதமான துணிமணிகள் தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்கிறோம். இந்த செயற்கை இழைகள் தயாரிக்கவும்,சாயம் ஏற்றவும் பூமியை நம் தலைமுறை நாசம் செய்வதைப் பார்க்கும்போது செயற்கை இழைகளைக் கண்டுபிடித்திருக்கவே வேண்டாமோ என்று கூடத் தோன்றுகிறது.
சுற்றுலா
அவ்வப்போது இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பாபநாசம் சென்றோம். வழியில் திருச்செந்தூர் சென்றோம். அன்றுதான் முதன் முதலாக ஓர் இந்துக் கோவிலுக்குள் சென்றேன்.
இதற்கு முன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரைப் போகிற போக்கில் பார்த்திருக்கிறேன். அப்போது கோவிலில் இப்படி எல்லாம் கூட்டம் இல்லை. சன்னிதியின் முன் வரிசையாக நிற்பதற்குக் கம்பிகள் கிடையாது. நாங்கள் செல்லும்போது பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த நாதஸ்வர மேள மங்கள ஒலியுடன் பலவித நறுமணங்களும் சேர்ந்து மனதுக்கு ஒரு வித அமைதி கிடைத்தது.
திருச்செந்தூரில் சாப்பிட்டோம். பேருந்தில் ஒரு மூன்றாம் ஆண்டு அக்கா, ‘கூடையில கருவாடு’ பாடலை அருமையாகப் பாடினார்கள். ‘பொழுதோடு கோழி கூவுற வேள’ என்பதைக் கூட அதே மாதிரி பாடினார்கள். தின்பண்டங்கள் பரிமாறிக் கொண்டோம்.
பாபநாசம் அருவியில் நன்றாகக் குளித்தோம். சிலர் பயந்து போய் ஓரமாக நின்று குளித்தார்கள். அப்படியே வெயிலில் நின்று ஆடைகளை உலர்த்திக் கொண்டோம்.
இரவு திருநெல்வேலி ஜங்ஷன் சென்ட்ரல் கபேயில் சிற்றுண்டி உண்டோம். நாங்கள் மும்பை செல்லும்போதும் வரும்போதும் வழக்கமாக அங்குதான் சாப்பிடுவோம் என்பது நினைவில் வந்தது.
கல்விச் சுற்றுலாக்கள்
ஸ்பிக் (SPIC), டேக் (TAC ) தாரங்கதாரா கெமிக்கல்ஸ், தெர்மல் (அப்போது ஒரே ஒரு யூனிட்தான்) போன்றவை ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் என்ற அளவில் பார்வையிட்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை பார்வையிடத்தான் கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. கல்லூரி நாள்களை இதற்காக ஒதுக்க மாட்டார்கள்.
ஒரு சமயம் எங்கள் விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவிகளை மட்டும் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பலைப் பார்க்கக் கூட்டிச் சென்றார்கள். வார்டன் சிஸ்டரும், கைடு மாதிரி ஒருவரும், கூட வந்திருந்தனர். பேருந்தை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு கடலுக்குள் போட்டிருக்கும் சாலையில் நடந்து சென்ற போது இரண்டு பக்கமும் கடலும், கடல் காற்றும் அப்பப்பா! இனிய அனுபவமாக இருந்தது.
வெளிநாட்டுக் கப்பல்கள் இரண்டு கரையில் நின்றிருந்தன. அவை யூரியா ஏற்றிச் செல்ல இருப்பதாகவும், அதன் எடை போன்ற விபரங்களும் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கப்பல் கடலுக்குள் சற்று தொலைவில் நின்றிருந்தது. கப்பலில் ஏற நூல் ஏணி போடப்பட்டிருந்தது. அலையில் அது ஆடிக்கொண்டே இருந்தது. எல்லோரும் பயந்து போய் மெதுவாக ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் வரிசையில் எனக்கு முன்னால் சென்றவர்கள் ஏறட்டும் என்று கொஞ்ச நேரம் விட்டுவிட்டு விரைவாக ஏறிச் சென்று விட்டேன். எல்லோரும் ரொம்பத் துணிவாக இருக்கிறாய் என்றார்கள்.
உண்மையில் மடமடவென்று ஏறும் போதுதான் பயம் இருக்காது. அதனால்தான் இடைவெளி விட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
எங்களுடன் வந்தவர் கப்பலை இயக்கும் கருவிகள், சாமான்கள் வைத்திருக்கும் அறை, வேலை ஆள்கள் தங்கியிருக்கும் அறை என்று அனைத்தையும் சுற்றிக் காட்டினார். ஆடிக்கொண்டே இருக்கும் கப்பல் மீது நின்று கொண்டு இருப்பது சிரமமாகவும், திரில்லிங்காகவும் இருந்தது. விடுதிக்கு வந்தபின் ஒரு மாணவியை வார்டன் சிஸ்டர் ரொம்ப திட்டினார்கள். அப்போதுதான் எங்களுக்குத் தெரியும் கூட வந்தவர், கப்பலில் உள்ள ஒருவரிடம் மது பாட்டிலை வாங்கி அந்த மாணவியிடம் கொடுத்திருக்கிறார் என்று. அவரை சோதனை செய்தால் மாட்டிக் கொள்வார் என்று அந்த மாணவியிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மதுவிலக்கு அமலில் இருந்தது. அதிலும் வெளிநாட்டு மது வேறு. அந்த மாணவி ரொம்ப அப்பாவி. அவள் விபரம் புரியாமல் வாங்கி வைத்திருக்கிறாள்.
இப்படி கல்லூரியில் அனுமதி வாங்கிச் சென்றால்தான் துறைமுகம் பார்க்க முடியும். இவ்வாறு கூட்டிச்சென்ற விடுதி நிர்வாகத்திற்கு நன்றி.
சென்னைப் பயணம்
பொதுவாக எல்லாத் துறை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவிகளும் கல்விச் சுற்றுலா செல்வார்கள். நாங்கள் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பார்வையிடச் செல்வோம். தாவரவியல் என்றால் ஊட்டி,கொடைக்கானல் செல்வர். காமர்ஸ் என்றால் ஏதாவது இண்டஸ்ட்ரியல் விசிட் செல்வார்கள். அல்லாமல் எக்ஸ்கர்ஷன் (Excursion) செல்வதும் உண்டு.
நாங்கள் 1982 பிப்ரவரியில் சென்னைக்கு (அப்போது மெட்ராஸ்) மூன்று நாட்கள் கல்விச் சுற்றுலா சென்றோம். சென்னை ஐஐடி.( IIT)., மற்றும் மணலி குரூட் ஆயில் ரிபைனரி (Crude oil refinery) செல்வதாக ஏற்பாடு. இதுதான் இந்தியாவின் முதல் குரூட் ஆயில் ரிபைனரி.
எங்கள் வகுப்பு தோழியின் தந்தை ரயில்வேயில் வேலை பார்த்தார். அவர் எங்களுக்கு என்று ஒரு கோச் புக் செய்து தந்தார். சென்னையில் St. Marys College, Tuticorin, 3rd year Chemistry என்று எழுதிய துணி பேனர் எங்கள் கோச்சில் கட்டி இருப்பதைப் பிளாட்பார்மில் வைத்து பார்த்த போது பெருமையாக இருந்தது. (தூத்துக்குடியில் வைத்துப் பார்த்த போது அப்படி இல்லை.) வரும்போதும் அதே கோச்சில்தான் வந்தோம்.
பேராசிரியைகள் எல்லாம் அரட்டை அடித்துக் கொண்டு நாங்கள் கொடுக்கும் தின்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களுடையதையும் பகிர்ந்து கொண்டு ரொம்ப ஜாலியாக இருந்தார்கள். அவர்களின் இன்னொரு பக்கம் அப்போதுதான் தெரிந்தது. எங்களை அக்கறையோடு கவனித்துக் கொண்டார்கள். ‘எல்லோரும் சாப்பிட்டீர்களா’ என்று விசாரிப்பார்கள். உடல் நலனின் அக்கறை செலுத்துவார்கள். ‘தேவி ஸ்ரீதேவி உன்னைத் தேடி வருகின்றேன்’ என்ற தமிழ்ப் பாடலை ஒரு பேராசிரியரும் அதன் மலையாள வடிவமான ‘தேவி ஸ்ரீதேவி நின்னை தேடி வருதூ ஞான்’ என்ற மலையாளப் பாடலை இன்னொரு பேராசிரியரும் அவ்வளவு அருமையாகப் பாடினார்கள். அது மறக்கவே முடியாது.
காலையில் மெட்ராஸ் போய்ச் சேர்ந்ததும் எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே வசந்த பவனில் சாப்பிட்டோம். யாரோ தயிர் வடை சாப்பிட்டதை அப்போதுதான் பார்த்தேன். தயிரில் வடையா அது எப்படி இருக்குமோ என்று அந்த ரசனையைக் குறைவாக எடை போட்டேன். தற்போது உளுந்து வடை போடும்போதெல்லாம் தயிர்வடை செய்கிறேன். அங்கேதான் ‘வசந்தபவனில் திருடியது’ என்று டம்ளரில் எழுதி இருப்பதைப் பார்த்து மனது சங்கடப்பட்டது. அப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை அதிகம். திருடப்பட்டதால் தானே அப்படி எழுதியிருப்பார்கள்.
திருமணத்திற்குப் பின் என் கணவர் தொழில் தொடர்பாக சென்னை செல்லும்போது நானும் பிள்ளைகளும் அவ்வப்போது உடன் செல்வோம். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் ஏறி காலை எழும்பூரில் இறங்குவோம். அப்போது பலமுறை வசந்த பவனில் காலைச் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறோம். தற்போது பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் வழக்கமாகத் தங்கும் பாண்டியன் லாட்ஜில் இலவச காலை உணவு Complementary Breakfast (எதுவும் இலவசம் கிடையாது. அந்தத் தொகையை வேறு ஏதாவது ஒன்றில் சேர்த்து விடுவார்கள்; அவ்வளவு தான்) என்பதால் வசந்த பவன் செல்ல வாய்ப்பு கிட்டவில்லை.
சுற்றுலாவில் ஒரு நாள் ஹோட்டல் உட்லன்ட்ஸில் (wood land) சாப்பிட்டோம். சுற்றிலும் மரங்கள், கார்கள் என அந்தச் சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. அது டிரைவ் இன் ஹோட்டல் -அதாவது காரில் அமர்ந்தபடியே சாப்பிடலாம். கார் கதவுகளில் ஸ்டாண்ட் ஒன்றை பொருத்தி விடுவார்கள். அதில் நாம் ஆர்டர் செய்த உணவுகளைக் கொண்டு வைப்பார்கள். நாம் எடுத்துச் சாப்பிட வேண்டியது தான். இது 1962 -ல் கார் பார்க்கிங்கிற்கு என்று தொடங்கப்பட்டது. பின்னர் உணவகம் என்று டெவலப் ஆகி 2008-ல் ஏதோ பிரச்சனையால் நீதிமன்றம் மூடச் சொல்லி விட்டது.
ஒரு பேராசிரியரின் கணவர் மெட்ராஸில் வேலை பார்த்தார். எனவே அவர் மூலம் ஊரைச் சுற்றிப் பார்க்க இரண்டு வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன (எங்கள் வேன் ஓட்டுநர் தங்கைக்கு ஏதோ பிரச்சினை என்று கூற நாங்கள் கொஞ்சம் ரூபாய் கலெக்ட் பண்ணிக் கொடுத்து உதவினோம்). அவர் ஐஐடி -யைச் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.
ஒரு நாள் முழுவதும் ஐஐடி-யைச் சுற்றிப் பார்த்தோம். ஐஐடி வளாகமும், வேதியியல் ஆய்வுக் கூடமும் ரொம்ப பிரம்மாண்டமாக இருந்தன. பிரமிப்பாகவும் இருந்தது. 1982 -ல் பிரமிப்பாக இருந்தது வியப்பு இல்லை அல்லவா? நாங்கள் தியரியில் படித்த பல பொருள்கள், கருவிகள் அங்கு பிராக்டிக்கலாக இருந்தன. கரும்பலகையும் இப்போது இருப்பது போல் பச்சை நிறத்தில் மாடர்னாக இருந்தது. அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களின் ஆராய்ச்சிகளை விவரித்த போது ஏதோ அவர்கள் இன்னொரு உலகத்திலிருந்து வந்த அறிவு ஜீவிகள் போலத் தோன்றினார்கள். வராண்டாக்களில் குளிர் நீர் யூனிட் வைத்திருந்தார்கள். அப்போதுதான் முதல் தடவையாக நாங்கள் குளிர்ந்த நீரைக் குடித்தோம். அப்போது குடிக்கச் சற்று சிரமமாக இருந்தது. ரொம்பக் குளிராக இருந்தது.
மறுநாள் மணலி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சென்றபோது அன்று தொழிலாளர் வேலை நிறுத்தம். எனவே எதுவும் பார்க்க முடியாமல் திரும்பி வந்தோம்.
மறுநாள் ஞாயிறு என்பதால் அன்றும் பார்க்க முடியாது. மெரினா கடற்கரை, அஷ்டலஷ்மி கோயில் சென்றோம். பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவிலைப் பெரிதாக அப்போது கட்டிக் கொண்டிருந்தார்கள். லயோலா கல்லூரியின் கோவில் திருப்பலியில் பங்கேற்ற பிறகு, சாந்தோம் கோவிலைச் சுற்றிப் பார்த்தோம்.
தீவுத்திடலில் பொருட்காட்சி (Trade fair) நடந்து கொண்டிருந்தது. தீவுத்திடல் என்பது கூவம் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு. முக்கோண வடிவில், இருபுறமும் கூவம் ஆறு ,ஒரு புறம் கடல். இதில் ட்ரேட் ஃபேர் நடப்பதால் ஃபேர் ஐலேண்ட் Fair island என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது எல்லா பெரிய ஊர்களிலும் சிறிய அளவில் பொருட்காட்சி நடக்கிறது. ஆனால் அப்போது சென்னை வர்த்தக பொருட்காட்சி மட்டும்தான். எல்லா வித பொருள்கள், ஜெயன்ட் வீல், டெல்லி அப்பளம், மசாலா பூரி, காலிபிஃளவர் பஜ்ஜி எல்லாம் ஒட்டுமொத்தமாகக் காணலாம். டெல்லி அப்பளம் அப்போதுதான் முதன்முதலாகச் சாப்பிட்டோம். ஜெயன்ட் வீல்லில் அமர அனுமதிக்கவில்லை. அரசாங்க அரங்குகள் எல்லாமே நல்ல தகவல்களை, நிறையத் தந்தன. அப்போது பிளாஸ்டிக் பொருள்கள் ரொம்பவும் பிரபலம். நான் ரோஸ் வண்ணத்தில் ஒரு மூடி போட்ட தூக்குவாளி வாங்கி வந்தேன். அதில் என் அம்மா அவர்கள் காலம் (2008) வரை (26ஆண்டுகள்) கோதுமை மாவு போட்டு வைத்திருந்தார்கள்.
தூய வெண்மை நிறத்தில் பல வண்ணங்களில் பார்டர் போட்ட ஜார்ஜெட் சேலைகள் அப்போது அங்கே வந்திருந்தன (இடைக்காலத்தில் வெள்ளையில் பலவித பார்டர் போட்ட பட்டுச்சேலைகள் வந்திருந்ததே, அதேபோல). நாங்கள் மூவர் இணைந்து சாணப்பச்சை நிற பார்டர் போட்ட சேலை எடுத்தோம். சிலர் சைனா சில்க் எடுத்தார்கள். அது கொச கொசவென்று டிசைன் போட்டுப் பளபளப்பாக இருக்கும். பெரும்பாலும் பிரவுன் நிறமாக இருக்கும். கிளிப், ஜடை மாட்டி, மாலைகள், கீ செயின் போன்றவை எங்களுக்கும், வீட்டினருக்கும் ,தோழிகளுக்கும் வாங்கிக் கொண்டோம். கூவம் நாற்றம் அடித்துக்கொண்டே இருந்தது. எப்படித்தான் இதில் வாழ்கிறார்களோ என்று தோன்றியது.
திரும்பி வரும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. செலவு போக மீதி ரூபாயைப் பைசா சுத்தமாகத் திருப்பித் தந்தார்கள். எப்போதுமே அப்படித்தான். சரியான கணக்கு அவர்களிடம் இருக்கும்
தற்போது எத்தனையோ இடங்களுக்குச் சுற்றுலா சென்று விட்டேன். ஆனாலும் இதே மாதிரி எங்கும் என்ஜாய் பண்ணியது இல்லை. எந்தவித பொறுப்பும் இல்லாமல் சந்தோஷம் மட்டுமே அனுபவித்தது அப்போதுதான்.
வர்த்தகக் கண்காட்சியில் எடுத்த சேலை
இந்த மகிழ்வான நிகழ்வோடு எனது கல்லூரிப் பயணத்தை முடித்துக் கொள்கிறேன். என்னோடு பயணித்த தோழிகள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியில் படிக்க வைத்த என் அருமைப் பெற்றோருக்கும் நன்றி நன்றி. இவ்வளவு அனுபவங்களைப் பெற்றுத் தந்த கல்லூரி நிர்வாகத்திற்கும், அருமையான பேராசிரியர்களுக்கும், அன்பான தோழிகளுக்கும் வெறும் நன்றி என்று கூறினால் போதாது கோடாநு கோடி நன்றிகள். எனது நன்றியைக் கூறிட வேறு சொற்கள் என்னிடம் இல்லை.
புனித மரியன்னை கல்லூரி வாழ்க!
முற்றும்.
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.





சுற்றுலாவில் கிடைத்த சுகமான பிரமிப்பு களை இதமாக தந்திருக்கிறார். பதினாறு அத்தியாயங்களிலும் விறுவிறுப்பாக சலிப்பு தட்டாமல் அவருடன்பயணம் செய்ததை தற்காலிகமாக முடிக்கிறார் என்றாலும் ஏக்கத்தை தருகிறது. அந்த ஏக்கத்தை தீர்க்க விரைவில் புதிய தொடருடன் வருவார் என்பது ஆறுதலைத் தருகிறது. தொடரட்டும் அவர் எழுத்து பணி.
சுறுசுறுப்பாக விரு விருப்பாக, சுகமான அனுபவங்களை புளி போட்டு விளக்கியது போல அழகாக மெருகூட்டி அருமையான கதை போல் வந்து கொண்டிருந்த தொடர் முடிந்து விட்டதே என்ற ஆதங்கம். தொடரட்டும் இளங்கொடி அம்மையாரின் எழுத்துப்பணி. வாழ்க, வளர்க.
Really it’s very beautiful journey of college life..hats off👏👏👏
நன்றி
சாரி பத்தி வர்ணித்தது ரொம்ப அருமையாக இருந்தது. கப்பல் அனுபவம் மீண்டும் கப்பலில் பார்வையிட சென்றது போல் உள்ளது. அந்த நாட்கள் மீண்டும் வராது அன்பு தோழியே. வாழ்க வளமுடன்.