தேனி, உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சமணர் தளம். எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்திருந்தாலும், ஏனோ அதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை.

‘உள்ளே பார்க்க அனுமதியில்லை’, ‘பெண்களெல்லாம் அங்கே தனியே போகக்கூடாது, போகவும் முடியாது’ என வழக்கமான பல்வேறு உருட்டுகள் வேறு. இந்தமுறை தங்கை வீட்டிற்கு சின்னமனூர் சென்றிருந்த போது, தங்கை கணவரிடம் முறையிட, “அதுக்கென்ன போனாப்போச்சு!” என்றவர், மாலைக்குள், ஒன்றிரண்டு அலைபேசி அழைப்புகளின் மூலம் அங்கு செல்வதற்கான பாதை, திறந்திருக்கும் நேரம், அங்கு பணிபுரியும் தொல்லியல்துறை அலுவலரின் அலைபேசி எண் வரை வாங்கிவிட, மாலையில் கிளம்பிவிட்டோம், வழக்கம்போல பெரும்படையுடன்.

சின்னமனூரிலிருந்து பாளையம் செல்லும் வழியெங்கும் சாலைக்கு இருபுறமும் ஆறும் பசுமையுமாக கண்களுக்கு விருந்துதான். சனிக்கிழமை மாலை நேரத்து(!) கிறங்கிய கண்களுடன் சாலையில் நின்றிருந்த ஒருவரிடம் “அண்ணே… சமணர் மலை எங்க இருக்கு?” என்று கேட்க, முறைத்தார். “பாறையில் சிற்பங்கள்… எல்லாம் இருக்குமே” என விவரித்த பிறகு, “ஓ.. கருப்பசாமி கோவிலா..? அப்படிக் கேட்க வேண்டியதுதான? என்னமோ ஒண்ணுந்தெரியாத வெளிநாட்டுக்காரவுக(!) மாதிரி கேட்டுக்கிட்டுருக்க?” என உரிமையுடன் கோபித்தவாறு வழி சொன்னார்.

நன்றி சொல்லி, அவர் காட்டிய பாதையில் திரும்பியவுடன், குடியிருப்புப்பகுதி தென்பட்டது. குடியிருப்புப் பகுதியின் முடிவில் முத்துக்கருப்பணசாமி கோவில், அதனருகே ஊர்ச்சாவடி… ஹாயாக காற்று வாங்கிக்கொண்டு நம்மை வியப்பாய்ப் பார்க்கும் ஆண்கள். சாவடிகள் எப்போதும் ஆண்களின் கைவசம்தான்!

கருப்பணசாமி கோயிலையொட்டி, வழிகாட்டிப் பலகையொன்று தெரிய, அதன் வழியே நடக்கிறோம். நடந்து செல்லும் வழியெங்கும் கருவேல மரங்கள் நிறைந்து குப்பைகளும் மதுபுட்டிகளுமாக நிறைந்து கிடக்கிறது. இரண்டு நிமிட நடையில், கோவிலுக்குப் பின்னால் ஒரு குன்று தெரிந்தது. அதுதான் திருக்குணகிரி மலை. ‘இது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பகுதி’ என்ற பலகையைக் கடந்து சென்றால், கிழக்குப் பகுதியில் மலையை ஒட்டியவாறு ஒரு கல்மண்டபம் காணப்படுகிறது. முன்னால் சிறிது தூரத்திற்கு சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது.

முன் கூட்டியே தகவல் சொல்லி விட்டதால், புன்னகையுடன் வரவேற்கிறார், தொல்லியல்துறை அலுவலர் (MTS – Multi Tasking Staff) ஆரூத்ரா. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர், SSC தேர்வு எழுதி, மிகச் சமீபத்தில்தான் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழும் மலையாளமும் கலந்த அழகிய மொழியில் சமணர் தொல்லியல் தடம் பற்றிக் கதைக்கிறார். அவர் பணியேற்றபின் வரும் முதல் பார்வையாளர்கள் நாங்கள்தான் என்பதால், நாங்கள் சுற்றிப்பார்ப்பதை ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மொட்டை மலை, சமணர் மலை, கருப்பணசாமி மலை என பல்வேறு பெயர்கள் இருந்தாலும், இம்மலைக்கு அருகில் முத்துக் கருப்பணசாமி கோவில் இருப்பதால், கருப்பசாமி மலை என்பதே மக்களிடத்தில் பேச்சுவழக்காகி விட்டது. சமணர் படுகை, சமணர் பள்ளி என்பதெல்லாம் இங்குள்ள சாமானிய மக்களுக்கு அந்நியமான சொற்களாக இருக்கின்றன.

ஆறு தூண்களுடன் கூடிய கல் மண்டபம் பார்க்கும்போதே கவர்ந்திழுக்கிறது. இயற்கைச் சீற்றங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இந்தக் கல்மண்டபம் பின்னாளில் கட்டப்பட்டிருக்க வேண்டும். மேற்புறம் நீளமான கற்களே கூரைகளாக. மலைப்பாறையில் இரண்டு வரிசைகளாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவ நாதர், 24வது தீர்த்தங்கரரான மகாவீரர், பார்சுவநாதர் சிலைக்கு மேலே ஐந்து தலை நாகம், அருகில் சாமரம் வீசும் பெண்கள், சில சிற்பங்களின் கீழே வட்டெழுத்துகளில் ஏதோ வாசகங்கள். தாய்மொழி புரியாத தற்குறியாக அந்த எழுத்துகளைத் தடவிப்பார்த்து, ‘இதுதான் வட்டெழுத்து’ என உடன் வந்தவர்களுக்கு அறிவிக்கிறேன். இந்தச் சிற்பங்கள் அனைத்தும் பொ.ஆ. 8, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டிருக்கின்றன.

கல் மண்டபத்திற்கு வெளியே பரவிக்கிடக்கும் பாறைகளில், கூரைக்குக் கால் நட பயன்படுத்தப்பட்ட குழிகள் இருப்பதைப் பார்க்கிறோம். தற்போது அவையெல்லாம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குடி நீருக்காக பாறைக்கு அடியில் ஒரு சுனையை உருவாக்கி இருக்கிறார்கள் சமணத்துறவிகள். முதுமை, தீராத பழி, தீராத நோய் இது போன்ற காரணங்களுக்காக உண்ணாநோன்பிருந்த சமணத் துறவிகள், பெரும்பாலும் இப்படி ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதிகளில் இறுதி நாள்களைக் கழித்து, உயிர் துறந்துள்ளனர்.

தாங்கள் இறுதிக் காலத்தைக் கழித்த இடத்திற்குக் கீழேயே குடிநீர் வசதி இருக்கிறது. இன்றைய நிலத்தடி நீர்த்தொட்டியைப் போல… இது எங்கிருந்து சுரக்கிறது என்பது இன்றும் புரியாத புதிர்தானாம். சுனைக்குள் இறங்குவதற்கு கற்களாலான படிக்கட்டுகள். இறங்கினால் மலைக்கு அடியில் குகை போல் செல்வதாகவும். மலையைக்கடந்து பல மைல்களுக்கு அந்த குகை செல்வதாகவும் வாய்வழிக் கதை ஓடுகிறது.

“இந்தச் சுனையில் நீர் வற்றவும் வற்றாது, நிரம்பி வெளியே வரவும் வராது” என்கிறார் ஆரூத்ராவுடன் வந்த உள்ளூர்வாசி ஒருவர். சமீபகாலம் வரை உள்ளூர் மக்கள் அந்த நீரை, குடிநீராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த தொல்லியல் தடத்தைச் சுற்றி வேலியிட்டு, மக்கள் இதை பயன்படுத்தக்கூடாது என அறிவித்தபின் தற்போது, மக்கள் பயன்படுத்தாத நிலையில் குப்பைகளும் பிளாஸ்டிக் பாட்டில்களுமாக சுனை நீர் நிறைந்து கிடக்கிறது.

சமண சமயம் இந்தியாவில் பொ.ஆ.மு. 6 -ம் நூற்றாண்டில் இன்றைய பீகார் மாநிலத்தில் தோன்றியது. பொ.ஆ.மு. 3 மற்றும் 2-ம் நூற்றாண்டுகளில் சமணத் துறவிகளால் இம்மதம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பரவத் தொடங்கினாலும், 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் காலத்தில்தான் நாடெங்கும் செழித்து வளர்ந்தது. சோழ, பாண்டிய நாடுகளில் பல சமணத் துறவிகள் தங்கி, சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தனர். பக்தி இயக்க காலத்திற்குப் பின் தமிழ்நாட்டில் மீண்டும் சமணம் பொ.ஆ. 9,10-ம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கியது. பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் சமணர்கள் செல்வாக்கு அதிகரித்தது.

சமண சமய எழுச்சிக்குக் காரணமான அச்சணந்தி உள்ளிட்ட சமணத் துறவிகள், குறண்டி, திருக்காட்டுப்பள்ளி, குப்பல் நத்தம், உத்தமபாளையம், பழனி, ஐவர் மலை போன்ற மலைகளில் சமணக் குடைவரைகளைத் தோற்றுவித்தனர். மக்கள் வசிக்கும் இடங்களை விட்டு சற்று ஒதுங்கி மலைப் பாறைகளில் உள்ள குகைகளைத் தேர்ந்தெடுத்து, அங்கே உண்ணாநோன்பு நோற்றவர்கள், அவ்விடங்களிலெல்லாம் புடைப்புச் சிற்பங்களையும் வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களையும் கல்வெட்டுகளாகப் பொறித்து வைத்துள்ளனர்.

மீண்டும் புடைப்புச் சிற்பங்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து ஒவ்வொரு சிற்பமாக கவனிக்கிறேன; தடவிப்பார்க்கிறேன்; எவர் கைபட்டு இந்தச் சிற்பங்கள் எழும்பியிருக்கும்? துறவிகளின் எண்ணத்தை அப்படியே உள்வாங்கி சிற்பமாக்கியவர்கள் யார்? அவர்களும் இந்த வெட்ட வெளியில் தங்கியிருப்பார்களா? எத்தனை துறவிகள் இந்த அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து தியானித்திருப்பார்கள்? ஆசிரிய மனதிற்குள் கேள்விகள் பல எழுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒலித்த சிற்பிகளின் உளிச்சத்தமும் சமணத் துறவிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் கண்முன் நிழலாடுகின்றன. பலநூறு ஆண்டுகளுக்கு முன் அமர்ந்து தியானித்த முனிவர்களின் மூச்சுத்துடிப்பும் உளிச்சத்தமும் காதிற்குள் ஒலிக்கின்றன.

முக்குடையின் கீழ் இருபுறமும் வெண் சாமரம் வீசும் இயக்கிகளுடன் கூடிய மகாவீரரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. 8 பார்சுவநாதர் சிற்பங்கள், 11 மகாவீரர் சிற்பங்கள் என மொத்தம் 19 சிற்பங்கள், 8 வட்டெழுத்துக் கல்வெட்டுகள், அணையா விளக்குத்தூண், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், வற்றாத சுனை என வரலாற்றுப் பொக்கிஷம் ஒன்று நம் கண்முன்னே, கடந்த காலத்தின் சாட்சிகளாக நிற்கின்றன. அந்த பாறைச்செதுக்கல்கள் வெறும் எழுத்துக்களல்ல, உயிரோட்டமுள்ள காலத்தின் சுவடுகளாகத் தெரிகின்றன.

மதுரை மாவட்டத்தில் மதுரைக்கு அடுத்ததாக உத்தமபாளையத்தில் மட்டும்தான் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட சமணப்பள்ளியைக் காண முடிகிறது. பொ.ஆ. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் சடையன் மாறன் ஆயிரம் பொற்காசுகளை இந்த சமணப்பள்ளிக்கு வழங்கிய தகவல் வரலாற்றில் இருக்கிறது.

“ஸ்ரீதிருக்குணகிரித் தேவர்க்குத் திருவிளக்கு

க்கு அனந்தவீர அடிகள் அட்டின காசுபதிநொ

ன்று இக்காசு பொலி கொண்டு முட்

டாமைச் செலுத்து வாராநோர் இப்பள்ளியுடைஅ

டிகள் அறம் வேண்டுவாரிது பிழையாமைச் செய்க” – (S.IIxiv No.128)

இங்கு பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பெரிய கல்வெட்டின் மூலம் இப்பள்ளியின் இறைவர்க்கு திருக்குணகிரி தேவர் என்ற பெயர் உள்ளதை அறிய முடிகிறது. அனந்த வீர அடிகள் என்பவரால் பதினோரு காசுகள் கொடையளிக்கப்பட்டு அணையா விளக்கு எரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வறத்தை நடத்த வேண்டுமென்னும் வேண்டுகோளுடன் இக்கல்வெட்டு நிறைவடைகிறது. வட்டெழுத்தில் உள்ள இக்கல்வெட்டு 9, 10 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மற்றொரு திரு உருவத்தின் கீழே உள்ள கல்வெட்டு ‘ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி’ என்கிற சொற்றொடரைக் கொண்டுள்ளது. இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் பல சமணத் தளங்களில் கண்ட ‘அச்சணந்தி’ என்பவர் இங்கும் வந்து தனது பங்களிப்பாக இத்திரு உருவத்தை செய்து கொடுத்துள்ளார் என்பதனை அறிய முடிகிறது.

ஸ்ரீ அஸ்டோபவசி கனகவீரர் மாணாக்கர்

அரிட்ட நேமிப் பெரியார் செய்வித்த திருமேனி

என்ற கல்வெட்டின் மூலம் எட்டு நாட்கள் உண்ணாமல் நோன்பு நோற்கும் துறவி கனகவீரர் என்பவரையும் அவரது மாணாக்கரின் பெயர் அரிட்டநேமி என்பதையும் அறிய முடிகிறது. இந்த அரிட்டநேமி என்ற பெயரின் காரணமாகவே மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மலைக்கும் ஊருக்கும் அரிட்டாபட்டி என்று வந்திருக்க வேண்டும்

சமணம் தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியபின் இதுபோன்ற சமணப் பள்ளிகளுக்கான வேலை குறைந்து போனது. சைவ மதத்திற்கான அரச ஆதரவு அதிகரித்ததால், சமணமதம் படிப்படியாகச் சுருங்கிப்போய்விட, பல இடங்களில் சமணர்கள் தங்கள் மடங்களை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். பொ.ஆ. 8,9 -ம் நூற்றாண்டுகளில் சமண – சைவ மதப்போர் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில், சமணர்கள் 8000 பேர் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டதாக சைவ சமய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சமணமதம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது என்பதைக் குறிப்பதற்காக ‘கழுமரக்கொலை’ என்று உருவகப்படுத்தியிருக்கலாம். 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நடந்த இஸ்லாமியப் படையெடுப்புகளினாலும், அரபு, ஏமன் பகுதியிலிருந்து வந்த வர்த்தகர்களின் காரணமாகவும் இஸ்லாம் வேகமாகப் பரவத் தொடங்கியது. பெரு வணிகர்களின் மதமாக அதுவரை இருந்த சமணம், இந்தப் படையெடுப்புகளால் ஏற்பட்ட மாற்றங்களினால் அழிந்துபோனது என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

நின்றசீர் நெடுமாறன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டார். அவரது அதிதீவிர சைவமத செயல்பாடுகளுக்குப் பயந்து, சமணர்கள் பலரும் இஸ்லாமுக்கு மாறியதுதான் இன்றைய தேனி மாவட்டத்தில், குறிப்பாக உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லிம்கள் இருப்பதற்கான காரணம் என சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். தமிழ்ப் பேராசிரியர் ரா.பி. சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடையே சமணச் சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இங்குள்ள சில சமூகங்கள், குறிப்பாக லப்பை, மரக்காயர், ராவுத்தர் போன்றவர்கள் முன்னாள் சமணப்பின்புலம் கொண்டவர்கள் என்ற ஆய்வுகளும் உள்ளன. தமிழ் முஸ்லிம் சமூகங்களில் உள்ள திருமணச் சடங்குகள், உணவு மரபுகள், அலங்காரப் பேச்சு வழக்குகள் போன்றவை பழைய சமண மரபுகளோடு ஒத்திருப்பதாகச் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணத்தளத்தின் மதிப்பு அறியப்படாமல் ஒதுங்கிக்கிடக்கிறது. இன்றைய தமிழ் எழுத்துகள் உருவாவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து வடிவில் கல்வெட்டுகள் உள்ள ஒரு காரணத்திற்காவது இந்தத்தளம் இன்னும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமணர் மரபின் நெறிகளான – உயிர்க்கொல்லாமை, துறவு, சுய கட்டுப்பாடு போன்றவற்றைக் கடைபிடித்து ஒரு மக்கள் சமுதாயம் வாழ்ந்த இடத்தைச் சுற்றி இன்று மதுப்புட்டிகளும் நெகிழிப் பைகளும் ஏராளமாய், தாராளமாய். மாலை நேரங்களில் இங்குள்ள மலைப்பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இத்தளத்தின் வரலாற்றுப் பெருமைகள் ஏதும் இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்ல, தேனி மாவட்ட மக்களுக்கே பெரிதாய்த் தெரியவில்லை.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை இங்கு அழைத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யலாம். ஏனெனில், ‘தமது வரலாற்றையும் தரவுகளையும் காக்கத் தவறிய சமூகம் தனது அடையாளத்தையே இழந்துவிடும்’ என்பது வரலாறு நமக்குக் கற்றுத்தந்துள்ள பாடம்.

வரலாறும் ஆன்மீகமும் சங்கமித்திருந்த புனிதத்தலத்தை பார்வையிட்ட நிறைவுடன் கிளம்புகிறோம். தேனியின் தென்மேற்குப் பருவக்காற்று பாறைகளில் செதுக்கிய எழுத்துகளை மெல்லத்தொட்டு நம்மிடம் வந்து சேரும்போது அந்தக்காற்றில், அங்கு வாழ்ந்து மறைந்த சமண முனிவர்களின் சுவாசம் கலந்திருக்கிறது போன்ற உணர்வு.

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.