அம்முராகவ்
விடை தெரியாத கேள்விகளால் நிரம்பிய இவ்வுலகில் இன்னும் கேட்டுத் தீராத கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஒரு கேள்விக்குப் பதிலாக, இன்னொரு கேள்வியே முன்வந்து நிற்கிறது. கேள்விக்கான விடை தெரிந்தாலும் அதை எல்லோராலும் பொதுவெளியில் சொல்லிவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அதிகாரத்தின் மீதும் நிறுவனமாகிப் போன நம் மதமுறைமைகள் மீதும் ஓராயிரம் கேள்விகள் தொடர்புடைய நபர்களால் கேட்கவும் முடியும், பொதுவெளியில் போட்டுடைக்கவும் முடியும். அப்படித்தான் இந்நூலாசிரியர் மாஜிதா உடை அரசியலை இப்புதினத்தின் முதன்மை விஷயமாக எடுத்துக்கொண்டு ஒரு விவாத புள்ளியைச் சமூகத்தின் முன்பாக முன்வைக்கிறார் பர்தா நாவலின் வாயிலாக.
பெண்களின் உடை பற்றிய காலகாலமான பேச்சுகள் பல வடிவங்களைக் கொண்டது. ஆடை மறுக்கப்பட்ட சமூகத்தின் கடந்தகால வரலாறுகளுக்கும் மானிட சமூக அமைப்பில் நிறைய செய்திகள் உண்டு என்பதையும் பார்க்கலாம்.
மூன்று தலைமுறைப் பெண்களின் உடை பற்றிய உரிமைக் குரலைப் பதிவு செய்திருக்கிறது இப்புதினம்.
இலங்கையின் இஸ்லாமிய கிராமம் ஒன்றில் தொடங்கும் கதை, கொழும்பு பல்கலைக்கழகம், லண்டன் எனப் பயணித்து அந்தக் கிராமத்திலேயே முடிகிறது.
ஹயாத்து லெப்பை, பீவி தம்பதி எந்த நேரமும் எலியும் பூனையுமாகச் சண்டையிட்டுக் கொண்டு, திடீரென நாம் ஆச்சரியப்படும்படியாக காதலித்துக் கொண்டுமிருந்த நம் பெற்றோரைக் கண்முன் நிறுத்துகின்றனர். அடித்துக்கொண்டாலும் அவர்களின் அன்யோன்யம் எதார்த்த குடும்ப அழகியல். மகள் சுரையாவிற்கு டயானா கட் செய்து ரசிக்கும், ராட்டினத்தில் சுற்றும் மகளின் மகிழ்ச்சியை கேமரா கொண்டு படம்பிடிக்கும், பள்ளிக்கு சைக்கிளில் அழைத்துச் செல்லும்போதெல்லாம் கதைகள் கூறும் தந்தை ஹயாத்து லெப்பை. அதே மகள் பதின்பருவத்தில் பர்தா அணிய மறுத்து, என் உம்மா பர்தா அணியவில்லை, உம்மம்மா அணியவில்லை நான் மட்டும் ஏன் பர்தா அணிய வேண்டும் என எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது நடந்துகொள்ளும் விதம்… ஆண் மைய சமூக அமைப்பில் தங்கள் சாதி, மத, பண்பாட்டுக் கெளரவத்தை பெண்பிள்ளைகளை வைத்தே காப்பாற்ற முடியுமென நினைக்கும் அனைத்து அப்பன்களையும் பிரதிபலிக்கிற பாத்திரமாக உருவெடுக்கிறார். ‘அப்பா செல்லமாக இருக்கும் மகள்கள் எட்டு வயதிற்கு மேல் வளரவே கூடாது.’
2000இல் நான் பள்ளியில் படிக்கும்போதும், அதற்குப்பின் கல்லூரியில் படிக்கும்போதும் சரி என்னுடன் படித்த இஸ்லாமிய தோழிகள் யாரும் பர்தா அணிந்திருக்கவில்லை. சுடிதாரின் ஷாலைக்கூட தலையில் அணிந்து பார்த்ததில்லை. ஆனால், அந்தத் தோழிகள் அனைவருமே தற்போது பர்தா அணிகிறார்கள்.
விருப்பப்பட்டு சிலர், வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்திற்காக சிலர். ஆனாலும் இதைப் பற்றி பேசவோ எழுதவோ எனக்குத் தகுதியில்லை, நான் சார்ந்த சமூகத்தில் சாஸ்திரங்கள் என்ற பெயரில் ஆயிரம் பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் நிறைந்திருக்கும்போது.
விவாதத்திற்குரிய இந்த விஷயத்தைப் பற்றிப் பேச மாற்று மதத்தினர் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட மதத்தின் ஆண்கள் உட்பட அனைவருமே அருகதையற்றவர்கள். தங்களுக்கு அந்த ஆடை அவசியமானதா, அவசியமற்றதா என்பதை அதை அணியும் பெண்கள்தாம் பேச வேண்டும், எழுத வேண்டும்.
இச்சூழலில் சரியான நபரிடமிருந்து, சரியான நேரத்தில் வந்திருக்கும் இந்நூல் காலத்திற்கு மிக அவசியமான ஒன்றாக பார்க்கலாம். இதனடிப்படையிலேயே இந்த நாவல் நம்மோடு பல அடுக்கு உரையாடலைச் செய்கிறது. இந்த உரையாடலை நம்மோடு காலமும் நன்கு அவதானிக்கிறது. ஓர் அவதானம் சமூகத்தின் பல அடுக்கு நிலைகளில் விவாதங்களை ஏற்படுத்துவது நல்ல விஷயமாகவே தோன்றுகிறது.
ஆமினா டீச்சரின் இயக்கமும் வாழ்வும் இந்தப் புதினத்தில் மனதுக்கு மிக விருப்பமான அத்தியாயமாக இருந்தது. அவரைப் பற்றிய வர்ணனையும் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது.
//ஆமினா டீச்சர் என்றால் ஸ்கூலில் எல்லோருக்குமே பயம். ஆறடி உயரமும் கம்பீரமான தோற்றமும் உடையவர். அவர் இரு கைகளையும் வீசி நடக்கும்போது பறவையின் சிறகுகள் மாதிரி விரியும். ஆமினா டீச்சர் சேலை அணிந்து வருவதைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பிவிடும். சேலையின் முன்மடிப்புகளைச் சீராக மடித்திருப்பார். அவர் நடந்துவருகையில் ஜப்பான் விசிறி போல சேலை மடிப்புகள் விரியும்.//
போலவே சுரையாவின் பயணப்பெட்டியைப் பற்றிய வர்ணனையை, ஒரு புன்சிரிப்போடு வாசித்தேன்.
//ஆடைகள் சீராக மடிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு நெருக்கமாக இருப்பதுபோல் அடுக்கப்பட்டிருந்தன… எல்லாவற்றையும் தாண்டி பெட்டியின் வலதுபக்கமாக ஓரத்தில் இரண்டு கருப்பு நிற பர்தாக்கள் அந்நியமாக விலகியிருந்தன.//
தன் மீது வற்புறுத்தி திணிக்கப்பட்டதை வர்ணனையில்கூட அழகாகச் சுட்டுகிறார். இவ்வளவு அழகான எழுத்து வாய்த்திருக்கும்போது புதினத்தைக் குறைந்த பக்கங்களில் முடித்து விட்டீர்களே மாஜிதா.
பள்ளியின் அனைத்து ஆசிரியைகளையும் பர்தா போடவில்லையா… என அரற்றிக் கொண்டு திரியும் ஹயாத்து லெப்பைக்கு, ஆளுமை நிறைந்த ஆமினா டீச்சர் கொடுக்கும் பதில், “உங்கட பெண்டாட்டிய முதலில் பர்தா போடச் சொல்லுங்க.”
பீவியிடம் இதைக் கூறியதும், தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் அவர் பேசி நகர்வதும், இந்த இரு பெண்களின் மீதும் அதிகாரம் செலுத்த முடியாத ஆணாதிக்கம் அங்கு செய்வதறியாது அழுகிறது.
விருப்பமில்லாமல் பர்தா அணிய மாட்டேன் எனும் சுரையா, விருப்பமில்லாவிட்டாலும் ஊரோடு ஒத்துப் போகவேண்டும் எனும் ஆபிதா, விரும்பியே அணிகிறேன் எனும் பர்ஹானா. இந்த மூன்று விதமான பெண்களுக்கிடையேயான உரையாடலும் சுரையாவுடனான ஆட்டோ ஓட்டுநரின் உரையாடலும் மிக முக்கியமானதும், நீண்ட விவாதத்திற்குரியதும் ஆகும்.
எல்லாரையும் போல் பர்தா அணிந்து விட்டால் பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க மாட்டார்கள், பெண்கள் வெளியில் வருவதற்கு எந்தத் தடையுமில்லை, அதுவே பாதுகாப்பு, எந்தப் பிரச்னையும் வராது என்பது உண்மையென்றால்… உள்நாட்டுப் போரில் கணவனை இழந்த மரியம் சுயதொழில் செய்து சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்த அதே பர்தாதான், லண்டனில் அதனை விரும்பி அணியும் பர்ஹானா மீதான நிறவெறித் தாக்குதலுக்கு காரணமாகிறதே, அது ஏன்? இந்த நிலத்தில் இதை அணியலாம், இந்த நிலத்தில் இதை அணியக் கூடாது என்ற சட்டங்களை இயற்றுபவர்கள் யார்?
குலதெய்வ, காவல்தெய்வ வழிபாட்டை வாழ்வியலாகக் கொண்ட தமிழ் கலாசாரத்தில் சனாதனத்தை நுழைத்து, சதி போன்ற பெண்ணுக்கெதிரான சாஸ்திரங்களைப் படைத்த இந்து மத அடிப்படைவாதிகளைப் போலவே, அனைத்து மதங்களிலும் பெண்களுக்கெதிரான அடிப்படைவாதிகள் நிறைந்திருக்கிறார்கள்.
தமிழர்களின் தொன்மையான பழக்கவழக்கங்களை கொண்டிருந்த இலங்கை இஸ்லாமியர்களிடம், மெளலவிகளின் வாயிலாக ஈரானின் குரலும், அரபிக் கல்லூரிகளின் வாயிலாக சவூதியின் குரலும் நுழைந்தபின் அவர்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம், சுரையாவின் வாழ்வனுபவமாக இப்புதினத்தில் மலர்ந்திருக்கிறது.
மதச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மத்தியில், அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண்ணின் மீது மதவாதிகளுக்கு முதலில் பயம் வருகிறது, அனைத்துப் பெண்களும் இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் நாம் பிழைக்க முடியாதே என்று.
நாவல் பேசும் அரசியல் மிகக் காத்திரமானது. எனவே உடை பற்றிய உரையாடல் வரும் இடங்களிலெல்லாம் நெருப்பைப் போன்ற எழுத்து. அதனால்தான் இது திசையெங்கும் பற்றிப் படர்கிறது. உலகெங்கிலும் ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மரபில் இந்த உடையின் முக்கியத்துவம் பற்றியும், பொதுப் பார்வையில் நிகழும் விமர்சனம் பற்றியும் நாம் இன்னும் ஒரு கூட்டு உரையாடலை நிகழ்த்தும் அத்தியாவசியத்தை மாஜிதாவின் பர்தா நமக்கு ஒரு கலைவடிவாக இந்நூல் தந்திருக்கிறது.
துணிச்சலான இந்த எழுத்திற்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும் மாஜிதா.
நூல் – பர்தா
நூலாசிரியர் -மாஜிதா
பதிப்பகம் -எதிர்வெளியீடு
படைப்பாளர்:
அம்முராகவ். கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர். அச்சு மற்றும் இணைய இதழ்களில் சிறுகதை, கட்டுரை, நேர்காணல்கள் என எழுதி வருகிறார். ஆதிலா, ஒளவையின் கள் குடுவை என இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.