இந்தத் தலைப்பை பார்த்ததும், “நானென்பது நீ் அல்லவா தேவ தேவா “ என்று நீங்கள் பாடத் தொடங்கினால் அது உங்கள் பிழை அல்ல. நானென்பது எது என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. குறிப்பாக நம் பெண்களுக்கு நான் என்பது மகளா, சகோதரியா, காதலியா, மனைவியா, மருமகளா, தாயா என்ற குழப்பமே இன்னும் தீரவில்லை. இதில் நான் யார் என்பது கூடுதல் குழப்பம். ஆனாலும் தன்னை அறிதல் ஒரு முடிவில்லாத, சுவாரசியமான, பெரு மகிழ்ச்சியை நோக்கிய தேடல். நம்மை நாமே தேடும் ஓர் அழகான தேடல்.

நான் ஏன் என்னை அறிய வேண்டும். இதுவரை அறியாமல் வாழ்ந்ததில் என்ன கெட்டு விட்டதென நீங்கள் நினைத்தால், கொஞ்சம் இந்த வரிகளைக் கேளுங்கள்.

“உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்…
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்”

உயர்வதோ தாழ்வதோ நம் கையில் இல்லை, ஆனால் எந்த நிலையிலும் நாம் நம்பிக்கையோடு நிமிர்ந்து இருத்தல் ஓர் அலாதியான உணர்வு. அதற்குத் தன்னையறிதல் துணை நிற்கும்.

நான் சந்திக்கும் பல பெண்களுக்குத் தனக்கென்ன வேண்டுமென யோசித்தால் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், கணவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும், குடும்பத்தில் செல்வம் செழிக்க வேண்டும் என்றவாறுதான் தோன்றும். இதெல்லாம் வேண்டும்தான், ஆனால் இதைத் தாண்டி வாழ்வில் ஒன்றுமில்லை என்கிற நிலையில் இது அத்தனையும் நிறைவேறினாலும் வாழ்வில் சலிப்பும் வெறுமையும்தான் மிஞ்சும். ஏனென்றால் நாம் உள்ளிருந்து மகிழ்ச்சியாக வாழவில்லை.

நமக்கெது மகிழ்ச்சி, எது துன்பம், எதனால் தூண்டப்படுகிறோம், எது திருப்தி, எது பலம், எது பலவீனம்… இப்படி நம்மைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நமக்குத் தெரியும் போதுதான் நம்மை நாம் முழுதாக அறிகிறோம்.

நான் என்பது, எனது பெயரோ படிப்போ என் செல்வ நிலையோ என் இனமோ நான் பிறந்த குடும்பமோ அல்ல. இதை அனைத்தும் களைந்த பின் எஞ்சி நிற்கும் என் எண்ணங்கள், செயல்பாடுகள், ஒவ்வொரு விஷயத்திலும் என் பார்வை, என் நம்பிக்கை, எனது பயம், தயக்கம் இன்னும் பல.

தோழிகளே, இது என் கணவருக்குப் பிடிக்கும் அதனால் எனக்கும் பிடிக்கும், எங்கள் குடும்பத்தின் நம்பிக்கை இது அதனால் நானும் நம்புகிறேன் என்றல்ல. உங்களைச் சுற்றி உள்ள அனைவரும் எப்படி இருந்தாலும், அது அவர்கள் உரிமை. ஆனால், உங்களின் வடிவமைப்பை (design) கண்டறிவது உங்களின் கடமை. அதை உரக்கச் சொல்வதும், அதன்படி வாழ்வதும் உங்களின் உரிமை.

ஒருநாள் காலையில் நாம் திட்டமிட்ட வேலை அனைத்தையும் முடித்தால், அட அதில் பாதி வேலைகள் செவ்வனே செய்தால்கூட அது தரும் உற்சாகம் அலாதிதான். அப்படி இருக்க நாம் நம் லட்சியங்களை வடிவமைத்து, அதில் படிப்படியாக முன்னேறும் போது வரும் உற்சாகம், சந்தோஷத்தை கற்பனை செய்து பாருங்கள். அந்த மகிழ்ச்சியின் மலர்ச்சியில் நீங்கள் ஒளிர்வதை கற்பனை செய்யுங்கள். அப்போது புரியும் உங்களை ஏன் அறிய வேண்டும் என்று!

எவ்வளவு சிறிய இயந்திரம் வாங்கினாலும் அதனுடன் ஒரு கையேடு வரும். அந்த இயந்திரத்தை எப்படிப் பாதுகாப்பது, பழுதடைந்தால் எப்படிச் சரி செய்வது என அனைத்து தகவல்களும் இருக்கும். நாமும் அப்படி ஒரு கையேடுடன் பிறந்திருந்தால் நமது உடல், மனக் கோளாறுகளைச் சரி செய்து கொள்ள உதவும். ஆனால், அந்தக் கையேட்டை நாம்தான் உருவாக்க வேண்டும். உருவாக்குவது மட்டுமல்லாமல் அதை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனெனில், நாம் இயந்திரம் அல்ல, நம் அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும், நமது பார்வை, விருப்பம் அனைத்தும் மாறுதலுக்குரியது. அப்போது கையேடும் மேம்படுத்த வேண்டியது.

அந்தக் கையேடுதான் உங்களை நீங்கள் அறிதல்.

உங்களை அறிதல் என்றால்?

உடல்

மனம்

எண்ணங்கள்

செயல்கள்

திறமைகள்

பலம், பலவீனம்

விருப்பு, வெறுப்புகள்

அனைத்தையும் ஆராய்வது, ஒவ்வொரு நிகழ்விலும் நம் உடலும் மனமும் நமக்கு எண்ணற்ற செய்திகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதை அமைதியாக ஆராய்ந்து, அந்தச் செய்திகளை உள்வாங்கும் போதுதான் நாம் யார் என்பது புரியத் தொடங்கும்.

சரி, நான் யாரென்ற ஆராய்ச்சியில் ஓரளவு என்னைத் தெரிந்துகொண்டேன், இதனால் என்ன நன்மை?

பாட்டி வடை சுட்ட கதை கேட்டு இருப்போம். நரி காகத்தைப் பாடச் சொன்ன போது காகம் தன்னை அறிந்திருந்தால் என் குரல் அப்படி ஒன்றும் இனிமை இல்லையே என நரியின் நோக்கத்தை ஆராய்ந்திருக்கும், ஏமாந்திருக்காது.

இது போலதான் என்னை எனக்குத் தெரியும் போது மற்றவரின் வஞ்சகப் புகழ்ச்சியில் மயங்குவதும், என்னை யாரோ ஒருவர் தேவையில்லாமல் இகழும் போதும் சினம் கொள்வதும் நடக்காது. எப்போதும் சமநிலையான மனம் சாத்தியம். மனம் அமைதியாக இருந்தால் இவ்வுலகில் எதுவும் சாத்தியம்.

உங்களது பலம், பலவீனம் புரிந்தால் பலவீனத்தைச் சரி செய்யவோ, மாற்ற இயலாதெனில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவோ இயலும். சிலர் பலவீனத்தைப் பலமாக மாற்றுவதும் உண்டு.

நமது கட்டுபாட்டில் உள்ள ஒன்றை மேம்படுத்த முயலுவதும், கட்டுபாட்டில் இல்லாத காரணிகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுய நேசிப்பின் அடிப்படை.

தன்னை உணர உணர, மற்றவர்களின் பாராட்டோ, விமர்சனமோ, கிண்டல், கேலியோ, நடத்தும் விதமோ, உறவுச்சிக்கலோ, குழப்பமான முடிவெடுக்கும் தருணங்களோ நம்மைப் பாதிப்பதில்லை.

வெற்றியில் தலைக்கனம் வருவதில்லை, தலை நிமிர்ந்து மட்டுமே இருக்கும். தோல்வியில் துவளுவதில்லை, எங்கே தவறென்று யோசிக்கும் தெளிவிருக்கும். முடிவில் தெளிவிருக்கும், ஏனெனில் நமக்கென்ன வேண்டுமென நமக்குத் தெரியும். இத்தனை அள்ளிக் கொடுக்கும் தன்னை அறிதலை இன்றே தொடங்குவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.