வெப்பக் காற்று வீசினாலும் பேருந்து பயணத்தில் ஜன்னல் ஓரம் வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். ஏதோ ஒரு நினைவு பச்சை நிறத்தைப் பார்த்தாலும், மழை வரும் போது மேகத்தைப் பார்த்தாலும், வேறு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றும்.

நம் கவலைகளை மறந்து மனம் பூரிப்பாக இருக்கும். யாருக்குத் தான் பிடிக்காது ஜன்னல் ஓர இருக்கை? அப்படி அடித்துப் பிடித்து ஒரு வழியாக பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையைப் பிடித்துவிட்டேன். பேருந்து மெதுவாக உருண்டு கொண்டிருந்த வேளையில், யாரோ ஒருவர் ஓடி வந்து பேருந்தை நிறுத்த, ஒரு மூதாட்டி ஏறி உள்ளே வந்தார். அவரைப் பின் தொடர்ந்து அந்த நபரும் பேருந்தில் ஏறினார்.

யார் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டமாக இருந்தது பேருந்து…

“இந்தா பாட்டி முன்னாடி போ… கீழ விழுந்துடாத”, என்று நடத்துநர் கூற, எல்லோரும் சற்று முன்பாக நகர்ந்தார்கள். பாட்டியை ஏற்றிவிட்ட அந்த நபரும் என் இருக்கைக்கு அருகாமையில் வந்து நின்றார். ஓரக்கண்ணால் பார்த்தேன். மிகவும் உயரமான காவலர் போல இருந்தது அவருடைய தோற்றம்.

மறுபடியும் ஒரு குரல். “தெற்குவாடி எல்லாம் இறங்குங்க…” நடத்துநர் மறுபடியும் கூவினார். சில பெண்களும் குழந்தைகளும் அந்த நிறுத்தத்தில் இறங்கினார்கள். கூட்டம் கொஞ்சம் குறைந்தது. இறுக்கம் சற்றே தளர்ந்து, காற்று வரத் தொடங்கியது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள், இறங்கியவர்களுடைய இருக்கைகளில் வேகமாக ஓடிச்சென்று அமர்ந்து கொண்டார்கள்.

அந்த நபர் மட்டும் இருக்கையில் அமரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. நான் மீண்டும் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பது போல் தோன்றியது. வாட்டசாட்டமாக அழகிய சிரிப்புடன், வசீகர பார்வையுடன்… அவர் பின்னே போய்விடலாம் போன்ற கண்கள் வேறு…

திடீரென மனதில் ஒரு பயம். ஏன் என்னை மட்டும் பார்க்கிறார்? இவர் யார்? எந்த ஊர்? இவர் பெயர் என்ன? என சரமாரியாகக் கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. திடீரென்று எங்கோ அழைப்பு மணி ஒலி கேட்பதுபோல் தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவருக்குத்தான் அலைபேசி அழைப்பு வந்தது. என்னைப் பார்ப்பதை நிறுத்தியிருந்தார்.

அலைபேசியில் அவருடன் பேசுவது யாராக இருக்கக்கூடும்? எனக்குள் என்னென்னவோ சிந்தனைகள். நீண்ட நேரமாக பேசிக் கொண்டே இருந்தார். நான் அவரைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். பயணிகள் மாறி மாறி ஏறவும் இறங்கவும் தொடங்கினார்கள். இப்போது அவரும் படிக்கட்டில் சென்று நின்று கொண்டார். ஆனாலும் என்னை பார்ப்பதை நிறுத்தவில்லை. மறுபடியும் என்னை பார்த்துக் கொண்டே நின்றார். இறங்கப் போகிறாரோ என்று பயந்து அவரை கடைக்கண்களினால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் இறங்கவில்லை! இறங்கும் படிக்கட்டுகளுக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு என்னைப் பார்த்தார். எனக்கு வெட்கம் வந்துவிட்டது. ஜன்னல் பக்கம் பார்த்து நானும் சிரித்துக் கொண்டேன். இந்த பயணம் எவ்வளவு நேரம் நீடிக்கும் என எனக்குத் தெரியவில்லை.

மனதுக்குள் இப்போது இருக்கும் மெல்லிய மகிழ்ச்சி அவர் படிக்கட்டுகளை விட்டு இறங்கி விட்டால் இருக்குமா என்று தெரியவில்லை. அப்படி இறங்கிப் போனால் என்னவாகும் என்னுடைய நிலைமை என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினேன்.

ஏன் இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்? எனக்கு என்னவாயிற்று? புரியவில்லை. மிகவும் புழுக்கமாக இருந்தது. ஓடும் பேருந்தில் எனக்கு ஏன் இப்படி வியர்க்கிறது? உள்ளங்கைகள் வியர்வையில் பிசுபிசுத்தன. மூச்சு விட முடியாமல் திணறினேன்.

சட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தேன். சுற்றிலும் கும்மிருட்டு. மின்சார வெட்டுபோல… பக்கத்தில் கிடந்த அலைபேசி, மணி 12 என்று காட்டியது. புழுக்கம் கூடிப் போனது. என் பயணம் தொடர்ந்தது.

படைப்பாளர்

அ. இனிதா பிரகாசி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் தோழர் அ. இனிதா பிரகாசி. BA (Economics), DCA, (MBA) பயின்றுள்ளார். ஹெர் ஸ்டோரிஸ் மூலம் எழுதத் தொடங்கியிருக்கிறார்.