சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கருத்தடை குறித்து வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். அரசு விளம்பரங்களில் முக்கோணச் சின்னம் போட்டு, ‘நாம் இருவர், நமக்கு மூவர்’ என்று எழுதினார்கள். அதன் பிறகு, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்றார்கள். பிறகு, ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இப்போதோ மக்கள் தொகை மிதமிஞ்சிச் சென்று கொண்டே இருப்பதால், ‘நாமே இருவர், நமக்கேன் இன்னொருவர்’ என்கிற நிலைக்கு நாடு சென்று கொண்டு இருக்கிறது. கர்ப்பத்தடை என்ற ஒன்று இல்லாத காரணத்தால் நம் முன்னோர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினர். அவர்களுக்கு முறையான கல்வி, உணவு, அடிப்படையான அத்தியாவசியத் தேவைகள் என்று எதையும் சரிவர அளிக்க அன்றைய வாழ்க்கைச் சூழலில் வழியில்லை. மூத்த குழந்தைகள் கல்வி கற்க வழியின்றி, வசதியின்றி இளைய குழந்தைகளை வளர்க்கப் பணிக்கப்பட்டனர்.

என் தாயார் குடும்பத்தில் அவரோடு சேர்ந்து மொத்தம் ஆறு குழந்தைகள். பெற்றோருக்கும் சேர்த்து அவர்தான் உணவு தயாரிக்க வேண்டும். இரண்டு மூத்த அக்காள்கள், பெற்றோர் எல்லோரும் வேலைக்குச் செல்வதால் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சமைக்க வேண்டுமாம். ஆறு மணிக்கு அவர்கள் வேலைக்குக் கிளம்பிய பின்னர் இரண்டு தம்பிகளைக் குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமாம். மூன்றாவது தம்பி கைக்குழந்தையாதலால் நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். பின்னர் வீட்டு வேலைகள், இரவுச் சமையல் என்று அவரது படிக்கும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கையிலேயே அவர் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி விட்டுக் கரண்டியைக் கையில் கொடுத்து விட்டது கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம். இதனால்தான் இன்றைய தலைமுறையினர் இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இன்னமும் என் அம்மா புத்தகம் படிப்பதில் தணியாத ஆர்வம் கொண்டவர். புரியாத வார்த்தைகளுக்கு விளக்கமும் கேட்டுக் கொள்வார். சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைகளைப் படிப்பார்.

கருத்தடை என்பது கருவுறுதலைப் பாதிக்காத வண்ணம் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்க செய்யப்படுவது. கருத்தடை என்றாலே அதைப் பெண்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆண்கள் பயன்படுத்தக் கூடாது. அது பாவச்செயல் என்கிற பழமைவாதக் கருத்து முன்பு இருந்தது. பண்டைக் காலத்தில் கருத்தடை ஏற்படுத்த அறிவியலுக்குப் புறம்பான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. கொல்லர் பட்டறையில் இருக்கும் கந்தகக் கழிவு கலந்த நீரைப் பெண்கள் அருந்தினர். இதனால் கருத்தடை மட்டுமன்றி கோமா நிலை, மரணம் என்று பாதிப்புகளும் ஏற்பட்டன. பாதரசத்தில் வறுத்த தவளைக் குஞ்சுகளைச் சாப்பிட்டதால் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டன. கோக்கோ கோலாவை உபயோகித்துக் கருத்தடைக்கு முயற்சித்தனர். இன்னும் சில வழிமுறைகளைக் கேள்விப்பட்ட போது அது பயங்கரமாக இருந்தது.

அதன் பின்னர் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.  அவை கருத்தடைக்கு உபயோகமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெண்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆணுறை என்கிற எளிய வழிமுறை இருந்தாலும் நிறைய ஆண்கள் இதனைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளவில்லை. காரணம் இதனால் இயற்கையான இன்பம் தடைபடும் என்கிற மூடநம்பிக்கைதான். எல்லாக் கருத்தடை முறைகளும் பெண்ணைக் குறிவைத்தே ஏற்படுத்தப்பட்டன. பெண்களுடைய வலியும் வேதனையும் ஆண்களுக்குப் புரியவில்லை. தெரிந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்தவர்கள்தான் அதிகம். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் பெண்களுக்கு மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகான முறையான ஓய்வு அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அதனால் உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. அப்புறம் ‘வாசக்டமி’ என்கிற ஆண்கள் கருத்தடை முறை அறிமுகம் செய்யப்பட்டு பெண்களின் பாரம் சற்றே குறைந்தது. ஆனாலும் கருத்தடை செய்து கொள்ள ஆண்கள் இன்னும் முன்வருவதில்லை. 

எனக்குத் தெரிந்த ஒரு பெண் தொடர்ந்து கருத்தரித்துக் கொண்டே இருந்தார். ஐந்தாவது கர்ப்பம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யும் போது அங்கிருந்த செவிலியர் அவரை எச்சரித்தார். நான்கு பெண் குழந்தைகள் இருந்ததால் ஐந்தாவதாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்றுதான் அந்தப் பெண் கவலைப் பட்டாரேயொழிய, தன்னுடைய உடல்நிலை மற்றும் வீட்டின் பொருளாதார நிலை குறித்து அவர் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது கணவர் கூலி வேலைக்குச் செல்பவர். இத்தனை குழந்தைகளைப் பெற்று வளர்த்தும்  பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர். ஆனாலும் ஓர் ‘ஆண் வாரிசு’ வேண்டும் என்கிற பிற்போக்குத்தனமான கருத்தால் இத்தனை குழந்தைகளைப் பெற்றார்கள். ஆனால் அந்தக் குழந்தையும் பெண்ணாகவே பிறந்தது. அதன் பிறகும் கருத்தடை செய்து கொள்ள மாட்டேன் என்று அந்தப் பெண் பிடிவாதம் பிடித்தார். ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அவரைக் கடிந்து கொண்டு எப்படியோ போராடி கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வைத்தார். அப்போதும் அந்தப் பெண்ணுக்குத்தான் கருத்தடை செய்யப்பட்டது. அவரது கணவர் இந்த விஷயத்தில் பட்டும் படாமலும் இருந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணைப் பார்த்த போது, மிகவும் பலவீனமாக, உடல் தளர்ந்து போய் இருந்தார். அத்தனை பிரசவங்கள் அவரது இளமை, வலிமை எல்லாவற்றையும் உறிஞ்சியிருந்தது.

குழந்தைகளை போஷாக்காக வளர்க்க முடியாமல், நல்ல கல்வி தர இயலாமல், சத்துள்ள உணவு வகைகள் கொடுக்க இயலாமல் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்தபோது அவருக்கு விழிப்புணர்வு இல்லாதது குறித்து வேதனையாக இருந்தது. காதல் சின்னமான தாஜ்மகாலுக்குப் பின்னாலும் இந்தக் கருத்தடை விழிப்புணர்வு இல்லாத சோகக் கதைதானே இருக்கிறது? மும்தாஜை மிகவும் நேசித்த ஷாஜகான் அவரைத் தொடர்ந்து கர்ப்பமாக்கியதால் தனது பதினான்காவது பிரசவத்தில் ரத்தப் போக்கின் காரணமாக மும்தாஜ் இறந்தார். 

உலகம் முழுவதும் கருத்தடை குறித்தும், கருக்கலைப்பு குறித்தும் பல்வேறு விதமான சட்டங்கள் இருக்கின்றன. அயர்லாந்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை கருக்கலைப்பு சட்ட விரோதமான ஒன்றாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா கருவுற்றிருந்த நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் அவருக்குக் கருக்கலைப்பு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அந்த நாட்டில் அது சட்டவிரோதமாகக் கருதப்பட்டதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் சவிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அயர்லாந்தின் சட்ட விதிகள் சற்றுத் தளர்த்தப்பட்டு, தாயின் உயிருக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது அல்ல என்கிற ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு விலையாக ஓர் உயிரைப் பறிகொடுத்தது மிகவும் வருந்தத்தக்க விஷயம். மதங்களின் அடிப்படையிலும் கருத்தடை பெண்ணுக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நடைபாதை மற்றும் குடிசைப் பகுதிகளில் கருத்தடை முறை என்னும் முழுமையாகப் பின்பற்றப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம். ஆண் வாரிசு வேண்டுமென்ற ஆசை, கருத்தடை சாதனைகளைப் பயன்படுத்த கணவர்கள் ஒத்துழைக்காமல் போவது, குடும்பத்தினரின் ஆதரவின்மை போன்ற பல காரணங்களால் அந்தப் பகுதிகளில் கருத்தடை என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இன்னும் இருக்கிறது.

பக்குவமற்ற பதின் பருவத்தினருக்குக் கருத்தடை முறைகள் குறித்துக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவர்களாகவே தெரிந்து கொள்ள முயற்சித்தால் அது தவறான வழியிலும் போய் முடியக்கூடிய அபாயமும் உண்டு. அதனால் பள்ளிப் பருவத்திலேயே தேவையற்ற கர்ப்பம் குறித்தும், அதைத் தவிர்ப்பது குறித்தும் பாலியல் கல்வி மூலமாகச் சொல்லித் தருவது இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதனால் கலாச்சாரம், பண்பாடு போன்ற எதுவும் பாதிக்கப்படாது என்பதுதான் உண்மை. ஒழுங்கற்ற மாதவிடாய், உடல்பருமன், மன அழுத்தம், மன உளைச்சல், பாலியல் தொற்று நோய்கள், மாறிவரும் வாழ்க்கை முறை போன்றவற்றால் கருத்தரிப்பது குறித்து இன்றைய தலைமுறையினரிடையே ஏற்படும் குழப்பங்களுக்குத் தெளிவான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் அளிக்க வேண்டும். கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 26ஆம் தேதி உலகக் கருத்தடை தினமாகக் (World Contraception Day) கடைபிடிக்கப்படுகிறது. நவீன கருத்தடை முறைகள் பற்றி இளைய தலைமுறையினரும் குடும்பத்தினரும் அறிந்து கொள்ளவும்,  பாலியல் நோய்கள் பரவாமல் தடுக்கவும், குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவைத் தம்பதியர் எடுக்கவும் 2007 ஆம் ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திட்டமிடாத கர்ப்பங்களைத் தவிர்க்கவும், தேவையற்ற கர்ப்பத்தினால் தாய்மார்களின் இறப்பைத் தடுக்கவும் இது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கருத்தடை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அலட்சியத்தாலும் வறுமையில் உள்ளவர்கள்தான் அதிகக் குழந்தைகள் பெற்றெடுக்கின்றனர். அப்படிப் பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தத் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 65,000 கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுபவை. பதிவு செய்யப்படாத கருக்கலைப்புகள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. திட்டமிடப்படாத கர்ப்பத்தினால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. முறையான கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினால் இது தவிர்க்கப்படுமல்லவா?. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளும், பிரசவ நேர இறப்புகளும் இதனால் தடுக்கப்படும். சில பாதுகாப்பான கருத்தடை முறைகள் ஆணுறை, மாத்திரைகள், கருத்தடைக்கான ஊசி, கருத்தடை வளையம், காப்பர்-டி, டியூபெக்டமி, வாசெக்டமி போன்றவை. நிரந்தரக் கருத்தடையோ அல்லது தற்காலிகக் கருத்தடையோ எந்த முறையைப் பின்பற்றினாலும் மருத்துவர் ஆலோசனை மிகவும் முக்கியமானது. ஒருவருக்குப் பொருந்தும் முறை இன்னொருவருக்குப் பொருந்தாமல் போகலாம். அதனால் முறையான மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.     

பெண்களை விட ஆண்களுக்கான கருத்தடை முறைகள் மிக எளிமையானவை. ஆனாலும் இந்த விஷயத்திலும் பெண்களே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கர்ப்பம் என்பது முழுக்கப் பெண்கள் சம்பந்தமான விஷயம் என்றுதான் பொதுப் புத்தியில் இருக்கிறது. பிரசவத்துக்குப் பின்னான மருத்துவ ஆலோசனைகள், அடுத்த குழந்தைப் பிறப்பு பற்றிய செய்திகள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆண்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு நிச்சயம் தேவை. மனித மனங்களில் இருக்கும் பாலின பேதம் முழுக்க நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் இது சாத்தியம். பெண்ணுடல் பெண்ணுக்கு மட்டுமே சொந்தம். அதன் மீது வேறு யாரும் உரிமை கொண்டாட இயலாது. கர்ப்பம் மூலமாக ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைப் பெண்கள் மட்டுமே அதிகம் எதிர்கொள்வதால் கர்ப்பம் மற்றும் கருத்தடை குறித்து முடிவெடுக்க வேண்டியது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட பெண்தான் என்பதைப் பெண்கள் முதலில் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.