சீதா கல்யாண வைபோகமே!
லக்ஷ்மி கல்யாண வைபோகமே!
கெளரி கல்யாண வைபோகமே!
சீதா, லக்ஷ்மி, கெளரி எனச் சம்பிரதாயத்துக்குச் சம்பிரதாயம் பெயர்கள் வேறுபாடும். ஆனால் இந்தப் பாடல் ஒலிக்காத தமிழ்ப் பார்ப்பன திருமணங்கள் கிடையாது.
மீனாட்சி திருக்கல்யாணம், ராதா கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், சீதா கல்யாணம், எனக் கோயில்களில் நடக்கும் தெய்வத் திருமணங்கள் எல்லாமே பெண் தெய்வங்களின் பெயராலேயே வழங்கப்படுகின்றன! ஏன் ராம கல்யாணம், கிருஷ்ணக் கல்யாணம், என ஆண் கடவுளர் பெயரால் போற்றப்படுவதில்லை? அப்படியென்றால் கல்யாணக் கொண்டாட்டங்கள் எல்லாமே பெண்களைச் சார்ந்தது மட்டும்தானா?
மத்தளம்கொட்ட வாிசங்கம்நின்றூத !
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ் !
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து,என்னைக் !
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||
திருமாலை மணமுடிக்கக் கனவுகண்ட நாச்சியாரின் திருமொழிப் பாடல் இது.
பிறப்பு முதலே, இப்படிப் பெண்களைத் திருமணத்திற்காகவே தயார்செய்வதும், அவர்களைக் கல்யாணக் கனவு காணவைப்பதும் நமது குடும்ப அமைப்பைப் பத்திரமாகப் பாதுகாக்கும் ஒரு (கு)யுக்திதான் அல்லவா?
மந்திரக் கோடியுடுத்தி மணமாலை சூட்டி, மத்தளம் கொட்டி, காளையொருவன் கைப்பற்றி, உற்றார் உறவினர் ஒன்று கூடிக் களித்து, ஓரிரு நாட்களோடு முடிந்துபோகும் ஒரு கொண்டாட்டம் மட்டுமா திருமணம் என்பது?
திருமண உறவில் பெண்கள் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் வாழ்ந்துவிட முடியும் எனக் காலம்காலமாக நம்பவைக்கப்பட்டிருப்பதன் சான்றுதான் இந்தக் கொண்டாட்டங்கள். அப்பொழுதுதானே சுலபமாக அவர்களை இந்த உறவுக்குள் கொண்டுவந்து, நிரந்தரமாகத் தக்கவைக்க முடியும்? திருமணம் செய்துகொண்ட பெண்களில் நூறு சதவிகிதத்தினரும் மகிழ்ச்சியாக வாழும் அளவுக்குத் திருமணத்திற்குப் பிறகான நமது குடும்ப வாழ்க்கை என்பது, மாங்குயில் கூவும் பூஞ்சோலைகளாகத்தான் இருந்தனவா அல்லது இருக்கின்றனவா?
ஒரு காலத்தில், இதைப் பற்றிய புரிதல்கள் உண்டாவதற்கு முன்னமே, அவர்களது விருப்பத்தைப் பற்றிய கவலை சற்றும் இல்லாமலேயே, பெண்களுக்குத் திருமணம் நடந்தது. இன்று, பெண்களுக்குத் திருமண வாழ்க்கை குறித்த கனவுகளுடன் கூட, நம் குடும்ப அமைப்பின் மேல் உள்ள பயமும் சேர்ந்துகொண்டு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று நாம் எங்காவது வெளிப்படையாகப் பேசுகிறோமா?
இந்த பொண்ணுங்களே இப்படித்தான், இவர்களைப் படிக்க வைத்தது தவறு, இவர்களைச் சம்பாதிக்க அனுமதிப்பது தவறு, சிறு வயதிலேயே திருமணம் செய்து அனுப்பினால் இப்படியெல்லாம் நடக்குமா? என ஜாதி வெறிபிடித்த கலாசாரப் பாதுகாவலர்கள், காலாவதியாகிப் போன பழமைவாத சித்தாந்தத்தை மறுபடியும் கையிலெடுக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், பார்ப்பன சமூகத்தில் திருமணத்திற்குப் பெண்கள் கிடைக்காமல் அதிகளவு ஆண்கள் தவிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. கடந்த இரு தசாப்தங்களாகத் திருமணச் சந்தையில் பெண்கள் கை ஓங்கியிருப்பதையும், ஆண்கள் அவதிப்படுவதையும், ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அடக்கி வாசிப்பதையும் பார்க்க விநோதமாகத்தான் இருக்கிறது.
கடந்த காலங்களில் ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஆடிய ஆட்டம் எப்படி எப்படியெல்லாம் இருந்தது என்பதை நினைவு படுத்திப் பார்த்தால், இப்படிப் பட்ட மாற்றம், உண்மையில் சிறு ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. ஆனால், இந்தச் சாதீயச் சமூகம் இதற்கான முழுப் பழியையும் பெண்கள் மீதும், பெண்களைப் பெற்றவர்கள் மீதும் சுமத்துகிறது.
பார்ப்பனப் பெண்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக வேற்று ஜாதி ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு ஓடிப் போவதுதான் இதற்குக் காரணம் என்கிற ஒரு கருத்துப் பரவலாக இருக்கிறது. நாடகக் காதலை நம்பி ஏமாந்து போகும் அளவுக்கு இளம் தலைமுறைப் பெண்கள் மழுங்கிப் போயிருப்பதாக, ஒரு கற்பிதத்தைச் சமூக ஊடகங்கள் மூலம் கதை கட்டிவிட்டு மக்களை நம்ப வைக்கிறார்கள்.
காதல் திருமணங்களை முன்னின்று நடத்தும் பெற்றவர்களையும் பழிக்கிறார்கள். அதிகளவில் மக்கள் கூடியிருக்கும் ஜாதிச் சங்க கூட்டத்தில், பதின் வயது பிள்ளைகளை நிறுத்திவைத்து, ‘வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளமாட்டோம்’ எனச் சத்தியப் பிரமாணம் செய்ய வைப்பது போன்ற காணொளியைப் பார்த்திருப்போம்.
உள்ளே என்ன நடக்கிறது என்பது, இப்படிப் பட்ட கலாச்சாரப் பாதுகாவலர்களுக்குப் புரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. கால மாறுதல்களை ஏற்றுக்கொள்ள முடியாத பதற்றத்தை, பயத்தை இப்படியெல்லாம் தணித்துக் கொள்கிறார்கள், அவ்வளவுதான். நம் முந்தைய தலைமுறை பெண்கள் பட்ட பாடுதான் இன்றைய இளம் தலைமுறை பெண்களின் இத்தகைய மாற்றத்துக்கான முக்கியக் காரணம். இரண்டுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள, கொஞ்சம் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டாகிறது.
மனுதர்மம் படி ஆண், பெண் திருமண வயது பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். மனு காலத்துக்கு முன்பிருந்தே எட்டுவகைத் திருமணங்கள் நடைமுறையில் இருந்தன. அதை மனுவும் உறுதிப்படுத்துகிறது.
பிராம்மம், தெய்வம், ஆர்ஷம், பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், ராட்சசம், அதமமான பைசாசம் என்று திருமணங்கள் எட்டு விதமானவை, (மனு – 3 : 21)
பிராம்மணனுக்கு முதல் ஆறு திருமண வகைகளும் சாஸ்திர சம்மதமானவை (மனு – 3 : 23)
நீங்கள் இருவரும் சேர்ந்து தருமத்தைக் கடைப்பிடியுங்கள் என்று கூறி, பெற்றோர் வரவை பூஜித்து, தம் பெண்ணைக் கொடுப்பது பிராஜாபத்ய விவாகம் எனப்படும். (மனு – 3 : 30)
‘Arranged marriage’ என்கிற பெயரில், இதுதான் இன்றுவரை வழக்கத்தில் உள்ளது.
பெண்ணின் பெற்றோருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, பெண்ணை தன் விருப்பப்படி மணப்பது ஆசுர விவாகம் எனப்படும் (மனு – 3 : 31)
ஆண்களின் வசதிக்காக, இதைப் பின்பற்றுவதில்லை.
ஆண் பெண் இருவரும் விரும்பி இணைவது கந்தர்வ விவாகம் எனப்படும். இது காமச் சம்பவமாகவும், மைதுனத்துக்கு ஏற்பட்டதாகவும் இருக்கிறது. (மனு – 3 : 32)
உண்மையில் இதுதான் ஆண் பெண் இருவருடைய விருப்பத்துடன் இயற்கையாக அமையும் காதல் திருமணம் / பகுத்தறிவுத் திருமணம் என்பது. ஆனால், பெண்களின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தவும், சாதீயக் கலப்பு ஏற்பட்டுவிடும் என்கிற பதற்றத்திலும் இதைக் கொச்சைப்படுத்துகிறது மனு. மற்றபடி எல்லாத் திருமணப் பந்தமும், சந்ததிகளை ஏற்படுத்தும் மைதுனத்தில்தான் தொடங்குகிறது.
மற்றபடி, தொடர்ந்து… எந்த மாதிரியான திருமணத்தில் எந்தெந்த மாதிரியான புத்திரர்கள் பிறப்பார்கள் என மனு சொல்லியிருக்கும் அனைத்துமே அறிவியலுக்குப் புறம்பானவை.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த பார்ப்பனப் பெண்களின் நிலைபற்றி அறிந்துகொள்ள, அந்தப் புத்தகம் எனக்குப் பெரும் உதவியாக இருந்தது.
அதிலிருந்து முக்கியமான சில பகுதிகளை, சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்.
- பெண்களே தனக்கான இணையை சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுத்து மணமுடிக்கும் வழக்கம் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
- அவர் வாழ்ந்த 1870-80களில், பெரும் எண்ணிக்கையில் பெண் குழந்தைகள் தொட்டிலில் இருக்கும்போது திருமணத்தில் கையளிக்கப் பட்டனர், அக்குழந்தையின் பெற்றோரோ, பொறுப்பாளரோ இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என பண்டித ரமாபாய் குறிப்பிடுகிறார்.
- மனு சொன்னதற்கு புறம்பாக பத்து பன்னிரண்டு வயதிலேயே ஆண்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்தனர்.
- ஏழைக் குடும்பமாக இருப்பின், உயர் சாதியைச் சார்ந்த குடும்பமாக இருந்தாலும் திருமணத்தை எளிதில் செய்துவைக்க இயலாமல் போனது. குறிப்பாகப் பெண் தேடி வரும் வரன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்திருக்கிறது.
- திருமணத்தின் போது ஆண் பெண் இரு பாலரும் தங்களுக்கு இணையர்களைத் தேர்வுசெய்யும்போது, அவர்களது சுய விருப்பு வெறுப்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
- ஒரே சாதியினருக்குள்ளேயே கல்வி அறிவு அழகு கௌரவம் ஆகியவற்றை விட மேன்மையானதாகச் செல்வம் கருதப்படுகிறது.
- வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ‘திருமணம்’ எனும் சொல்லாடல் ஒரு மாற்ற இயலாத திருமண ஒப்பந்தம் என்பதைத் தவிர வேறொன்றையும் குறிக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
- 9 அல்லது 10 வயதுக் குழந்தை மருமகள்கள், மாமியார்கள் பயிற்றுவிக்கும் வேலைகளை நாள் முழுவதும் செய்தனர். பதிலுக்கு ஒரு சிறு பாராட்டு கூட கிடைக்காமல் மனம் வெதும்பினர். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட திட்டு வாங்குவது ஒரு விதிமுறையாகவே கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது.
- வசைச் சொற்களால் திட்டுவது, அடிப்பது போன்றவற்றை மாமியார்கள் மட்டும் செய்யாமல் தனது மகனைத் தூண்டி விட்டு இத்தகைய செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கின்றனர். நானே பலமுறை மிருகத்தனமான இளம் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை வெட்கமில்லாமல் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தங்கள் மனைவிகள் மேல் இயற்கையான அன்பை வளர்த்துக் கொள்வது கிடையாது என்கிறார் பண்டித ரமாபாய்.
- கிழக்கு இந்தியாவில் வசிக்கும் பார்ப்பனர்கள் ஏழைகளாக இருந்தால்கூட, பலதாரமணம் என்னும் வழக்கத்தை நூற்றாண்டுக் காலமாகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்வது, சீர் வரிசைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது, திருமணமான இளம் மனைவியைக் கைவிட்டுவிடுவது, வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டு மறுபடியும் மணம் செய்து கொண்ட எவரையும் பெயருக்குக்கூட எட்டிப் பார்க்காமல் இருப்பது எனப் பத்து, பதினொன்று, இருபது அல்லது நூற்று ஐம்பது பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொண்டு பின்பு அதையே வியாபாரம் ஆக்கிவிடுவர். இப்பேர்ப்பட்ட சிறப்புகள் வாய்ந்த ஒரு பார்ப்பனர் தன்னுடைய பல மனைவியர் குறித்துக் கவலைப்படத் தேவையிருக்காது. ஏனெனில், பெண்ணின் பெற்றோர் அவள் திருமணமான கன்னியாகக் கடைசி வரை தங்களுடன் வாழ்வதற்குத் தயாராக இருக்கும் வரை அவர்கள் கூடவே தங்கியிருப்பதற்கு அனுமதிக்கின்றனர். இம்மாதிரியான திருமணங்களில், தந்தைக்குத் தன் தகுதியை மீறி பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமுமில்லை. மகளுக்கு எனத் தனித்த ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயமுமில்லை. சமையல் செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்கு அவள் உதவியாக இருக்கிறாள். மேலும், ஒரு நிலையிலிருந்து பார்க்கும்போது மகளுக்குத் திருமணம் செய்து முடித்து விட்டோம் என்ற மனநிறைவு தந்தைக்கு இருக்கும். ஒருவேளை மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாத பட்சத்தில் எதிர்கொள்ள வேண்டிய சமுதாய இழிநிலையிலிருந்தும், ஏளனங்களிலிருந்தும் தப்பித்து விட்டோம் என்ற மனநிறைவும் தந்தைக்கு ஏற்படுகிறது.
இந்தச் சில வரிகளே நம்மை கொதிப்படையச் செய்கிறது என்றால், அந்த முழுப் புத்தகத்தையும் வாசித்துப் பார்த்தால், பெண்கள் எப்படிப்பட்ட இழி வாழ்கை வாழ்ந்தார்கள் என்பது புரியும்.
***
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட பலதார மணம் தமிழ் பார்ப்பனர்களில் கூட வெகு சகஜமாக நடந்தேறியதை நாம் அறிந்திருப்போம். கிழப்பருவம் எய்திய பிறகும் கூட, முதல் தாரம் உயிருடன் இருக்கும்போதே, இரண்டாம் மூன்றாம் திருமணங்கள் செய்துகொண்டவர்கள் ஏராளம் இருந்தனர்.
இதே, பெண்களைக் கைம்பெண்ணாக்கி எந்தளவுக்கு அநீதி இழைத்தனர் என்பதை இந்தத் தொடரின் ‘வீணாப் போனவ’ அத்தியாயத்தைப் படித்தால் தெரிந்திருக்கும்.
வரிசையாகப் பெண் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, மகள் பூப்படைந்த பிறகும் திருமணம் செய்ய வசதியில்லாத ஏழைத் தகப்பன்கள், தன்னை விட மூத்த, இன்னும் சொல்லபோனால் தன்னுடைய தகப்பனின் வயதிலிருக்கும் ஆண்களுக்குக் கூட, கொஞ்சம் கூட கூசாமல், தங்கள் இளம்பெண்களைத் இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களது கல்நெஞ்சத்தை என்னவென்று சொல்ல!
கொஞ்சம் கூட மறுப்பே சொல்ல இடமில்லாமல், இந்தப் பாதகத்தைப் பெண்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அவர்களுடைய புத்தி எந்தளவுக்கு மழுங்கடிக்கப் பட்டிருக்க வேண்டும்? இந்தத் தலைமுறை வரை, பெரும்பான்மையாக பெண்கள், வெளி உலக தொடர்பே இல்லாமல் அக்கிரகாரங்களுகுள் வைத்து வளர்க்கப்பட்டவர்கள். குடும்பத்தை தாண்டி வேறு சிந்திக்காதவர்கள்.
எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, மூத்த தாரம் பெற்ற பிள்ளைகளின் பொறுப்புகளையும் சுமந்த பெண்கள் பலர். மூத்த தாரத்து பிள்ளைகளை சிலர் சித்தியை விட வயதில் மூத்தவர்களாக இருந்த கதையெல்லாம் உண்டு. சித்தி கொடுமையைப் பற்றி அதிகம் கேள்விபட்டிருப்போம், சித்திக்கு நடந்த கொடுமைகளையும் உதாசீனங்களையும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோமா!
இவற்றுடன் கூட பஞ்சகாலத்து பசி பட்டினி அனைத்தையும் சகித்துக் கொண்டு, குடும்பமே கதி என்று தங்கள் முழு உடல் உழைப்பையும் குடும்பத்துக்காக கொட்டிய பெண்கள் அந்த காலகட்டத்தில் ஏராளம். அடுத்து வந்த காலங்களில், நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டு, இலவசக் கல்வி கிடைக்கப் பெற்று ஆசிரியர்களாக, மற்ற அரசாங்க பணிகளில் இருப்பவர்களாக பெண்கள் சற்றே உயர்ந்தார்கள்.
ஆனாலும், கல்வி வேலை வாய்ப்பு பற்றிய நன்மைகளை புரிந்துகொண்ட யோசிக்கத் தொடங்கும் சந்தர்ப்பத்தில், அரையும் குறையுமாகக் கிடைத்த கல்வியும் பாதியில் நிறுத்தப் பட்டு, பொருள் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், கொஞ்சமும் பொருத்தமற்ற மணமகனுடன் திருமணம் எனும் கட்டாயத்துக்குள் தள்ளப்பட்ட அடுத்து வந்த தலைமுறைப் பெண்கள் சந்தித்த அவலங்களும் மன உளைச்சல்களும் ஏராளம். இந்தத் தலைமுறையினரை, அக்கிரகரங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் வசிக்கத் தொடங்கியவர்கள் எனலாம். ஆனாலும் குடும்ப அமைப்பு கொடுக்கும் அழுத்தம் குறைந்ததா என்று கேட்டால் இல்லைதான்!
திருமணத்தை முடிவு செய்யும் முதல் காரணியாகப் பணம் இருக்கும்போது, அந்தத் தடையை உடைத்து, கல்வியிலும் பொருளாதார நிலையிலும் முன்னேறி நிற்கும் இந்தத் தலைமுறை பெண்களுக்குப் பின்னால் இருப்பவர்களும், இந்த அம்மாக்களே!
அவர்களுடைய ஏமாற்றம், துயரம், போராட்டம் அனைத்தையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
- உள்ளிருந்து ஒரு குரல்