தந்தைகள் இல்லாத ஒரு சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்; திருமணம் இல்லாது, விவாகரத்து இல்லாது ஒரு சமூகம். பாட்டியின் தலைமையில் அவளுடைய மகன்களும் மகள்களும் அவரது மகள்வழி பேரன், பேத்திகளுடன் தாய்வழி ரத்தத்தைப் பின்பற்றி வாழும் ஒரு சமூகம். சிலருக்கு அதிர்ச்சியாகவும் பலருக்குப் பேரானந்தமாகவும் இருக்கலாம்.

இந்த முற்போக்கான, பெண்ணிய உலகம் இமயமலையின் தூரக் கிழக்கு அடிவாரத்தில், தென்மேற்கு சீனாவின் யுனானில் உள்ள பசுமையான பள்ளத்தாக்கில் உள்ளது. திபெத்திய பௌத்தர்களின் ஒரு பழங்காலப் பழங்குடி சமூகம் மோசுவோ.

சீனாவில் எஞ்சியிருக்கும் தாய்வழிச் சமூகமாக 40,000 மக்கள்தொகையைக் கொண்டது மோசுவோ பழங்குடி சமூகம். பரம்பரைத் தாயிடமிருந்து மகளுக்குச் செல்கிறது. அவர்கள் வியக்கத்தக்க வகையில் நவீன முறையில் வாழ்கின்றனர். பெண்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மோசுவோ பெண்ணைத் தங்கள் சமூகத்தின் மையத்தில் வைப்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மோசுவோ குழந்தைகள் தங்கள் தாய்மார்களுக்கு மட்டுமே ‘சொந்தமானவர்கள்.’ அவர்களின் உயிரியல் தந்தைகள் அவர்களுடைய தாய்வழி குடும்ப வீட்டில் வாழ்கின்றனர். இளம் மோசுவோ குழந்தைகள், அவர்களின் தாய்மார்கள், பாட்டி, அத்தைகள் மற்றும் மாமாக்களால் வளர்க்கப்படுகிறார்கள்.

“குழந்தைகள் திருமணத்திலிருந்துதானே பிறக்க வேண்டும் என்று உறுதியாக நம்புபவர்களுக்கு மோசுவோ பழங்குடி ஒரு விதிவிலக்கு. அவர்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கருத்து. அவர்களின் சமூகம் தந்தைக்குக் கவனம் செலுத்துவதில்லை. குடும்பக் கொள்கைகள், மோசுவோ பழங்குடியின் இந்த நம்பிக்கை திருமணம், பெற்றோர், குடும்ப வாழ்க்கை பற்றிய உலகின் மிகவும் நம்பிக்கைகளில் சிலவற்றிற்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது.

ஆண்களும் பெண்களும் ‘நடை திருமணம்’ என்று அழைக்கப்படும் ஒரு சம்பிரதாயத்தில் ஈடுபடுகிறார்கள். திருமணம் ஒரு குறிக்கோளாக அற்ற நிலையில், ஆண்களும் பெண்களும் ஓர் உறவு என்னும் சிறையில் அடைப்பட்டுக்கொள்ளாமல், காதல் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதுதான் ‘நடை திருமணம்.’ இந்த ‘நடை திருமணத்தில்’ ஓர் ஆணும் பெண்ணும் பகலில் அந்தந்தக் குடும்பங்களின் கூரையின் கீழ் வாழ்கின்றனர். இருப்பினும், ஆண்கள் இரவில் பெண் வீட்டினரின் அனுமதியுடன் சென்று தங்குவது வழக்கம். எனவே, அவர்கள் உண்மையில் ஒரே வீட்டில் வசிப்பதில்லை, அனுமதி வழங்கப்படும் போது அவர்கள் ஒருவரை இன்னொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு தந்தை தனது குழந்தைகளுக்குப் பரிசுகள் கொண்டு வரலாம். இது தாயின் குடும்பத்தில் அவருக்கு அந்தஸ்தை அளிக்கிறதே தவிர, அவரைக் குடும்பத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிடுவதில்லை.

இந்தக் கலாச்சாரத்தில் ஆண்கள் அதிகாரப் பதவிகளை வகிக்க முடியும். பொதுவாக இறுதிச் சடங்குகள் நடத்துவது, விலங்குகளை வேட்டையாடுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட அனைத்துத் தலைமைப் பதவிகளிலும் அரசியலிலும்கூடப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆண்கள் தங்களுடைய சகோதரிகள், பெண் உறவினர்களின் குழந்தைகளை வளர்ப்பதற்கும் வீடுகளைக் கட்டுவதற்கும் கால்நடைகள் மற்றும் மீன்பிடிக்கும் பொறுப்பில் இருப்பதற்கும் உதவுகிறார்கள்.

சீன மொழியில் ‘ஆமி’ என்பதற்கு மூத்த பெண் என்று பொருள். அவரே வீட்டின் தலைவர். அவள் கூரையின் கீழ் வாழும் அனைவரின் தலைவிதியையும் அவரே தீர்மானிக்கிறார். ஆமி தனது கடமைகளை அடுத்த தலைமுறைக்குத் தர விரும்பினால், அவர் வீட்டின் பெண் வாரிசுக்கு வீட்டுச் சேமிப்பிற்கான சாவியையும் சொத்து உரிமைகளையும் கொடுக்கிறார்.

“திருமண உரிமம் ஏன் உங்களைக் கைவிலங்கு பூட்ட வேண்டும்?” என்கிற கருத்தை ஆமோதிப்பவர்கள் மோசுவோ பழங்குடியினர். மற்ற பல பாரம்பரிய சமூகங்களுடன் ஒப்பிடும்போது மோசுவோ திருமணங்கள் தனித்துவமானது. ஏனென்றால், பெண் வருமானத்திற்காக ஆணைச் சார்ந்திருக்காததால், உறவுகள் அவற்றின் இயல்பான போக்கை இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

மோசுவோ பெண் எப்போது வேண்டுமானாலும் பாலியல் துணைகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், ஒரே ஒரு பாலியல் துணையுடன்தான் பெண்கள் உறவு கொள்கிறார்கள். பொதுவாக இந்த நடை திருமணங்கள் நீண்ட கால உறவாகவே இருக்கிறது .

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

மோசுவோ கலாச்சாரம் பெண்களின் உயர்நிலையை வடிவமைத்துள்ளது, அதே நேரத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து இணக்கமாக வாழும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கியுள்ளது. குடும்பத்தில் பெண்களின் நிலை ஆதிக்கம் செலுத்தும் பாத்திரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் தனித்தன்மை வாய்ந்த தாய்வழி குணம் குடும்பத்தில் நிறைந்த ஒற்றுமையைச் செயல்படுத்த உதவுகிறது. பெண்கள் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும், பல்வேறு விவகாரங்களில் நியாயமான முறையில் ஈடுபடவேண்டும்.

பாரம்பரிய விவசாய சமுதாயத்தில் பிறந்த பெண்கள், முக்கிய வீட்டுப் பொருளாதார வருமானத்தின் ஆதாரமான விவசாய உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்.

சமூகம் ஆண்களையும் பெண்களையும் மதிக்கிறது. ஆண் உறுப்பினர்கள், குறிப்பாக ஆண் தொழிலாளர்கள், பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிப்பாளர்கள். மோசுவோ குடும்பத்தில் உள்ள அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவு, ஒரு வகை.

பரஸ்பர கவனிப்பு, ஒற்றுமை, நல்லிணக்கம், உழைப்பு வியக்கத்தக்கது. காலத்தின் மாற்றங்கள், சமூகத்தின் வளர்ச்சி, அரசியல் அமைப்பின் தலையீடு, புதிய சித்தாந்தம், கல்வியின் முன்னேற்ற நிலை ஆகியவற்றால் மோசுவோ மக்களின் பாரம்பரியக் கலாச்சாரம் படிப்படியாக மங்கிக்கொண்டு வருகிறது.

‘நடை திருமண’ முறையும் தாய்வழி குடும்பமும் அழிந்து கொண்டிருக்கின்றன. நவீனத் திருமண முறை கலாச்சாரமும் தனிக் குடும்பங்களாகவும் மாறத் தொடங்கியிருக்கின்றன.

மோசுவோ பழங்குடி பலதரப்பட்ட மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஓர் அழகான கலாச்சாரத்தைக் கொண்ட இனக்குழு. மோசுவோ கலாச்சாரம் இப்போது எப்படி மாறி இருந்தாலும் சமூக பழக்கவழக்கத்தின் சக்தி மற்றும் தாய்வழிக் குடும்ப உணர்வு இன்னும் மோசுவோ சமூகத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று அழைக்கப்படுவதில் எந்த ஐயமுமில்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.