ஓவியம்: சித்ரா ரங்கராஜன்

பாலைவனத்தின் நடுவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஓர் அழகு போட்டி நடைபெறுகிறது. பழைய பேட்டரி அமிலம், கருகிய எலும்புகளினால் உருவாக்கப்பட்ட கண் மை, உதட்டுச் சாயத்தைத் தயாரிக்கிறார்கள். அதனைக் கண்களிலும் உதடுகளிலும் இட்டுக் கொள்கிறார்கள். ஒப்பனைக்குத் தேவைப்படும் ஆரஞ்சு முகப் பொடிக்காக 1400 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, மலையிலிருந்து அதைக் கொண்டு வருகிறார்கள். சுண்ணாம்பு, கற்கள், சிவப்பு மண், விலங்குகளின் எலும்புகளை அரைத்து அற்புதமான முகத்தூள் ஒன்றைத் தயாரித்து, தங்கள் முகத்திற்கு ஒப்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதற்கு ஒரு நாள் முழுவதும் எடுத்துக் கொள்கிறார்கள். கூரிய மூக்கு, வெண்மையான பற்கள், பளபளப்பான கண்கள் கவர்ச்சிகரமாகக் காட்டும் என்பதற்காக அழகான ஒப்பனை நடைபெறுகிறது. சிலர் தங்களுடைய வெள்ளைப் பற்கள் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக, கறுப்பு பேட்டரி ரசாயனங்களை உதடுகளுக்குப் பூசுகிறார்கள். நீண்ட நெற்றி அழகை கூடுதலாக்கும் என்பதற்காக முன்தலையிலிலுள்ள முடிகளை எடுத்டுவிடுகிறார்கள். பிரகாசமான வண்ண மணிகள், இறகுகளாலான ஓர் ஆடம்பரமான உடையை அணிகிறார்கள். மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி பொருட்கள், கண்ணாடிகளால் தங்கள் ஆடைகளை அலங்கரிக்கிறார்கள். அழகு போட்டி நடைபெறும் முன் புளித்த மரப்பட்டையிலிருந்து உருவாக்கிய தேநீரைக் குடிக்கிறார்கள். பரவசத்துடன் அழகு போட்டி ஆரம்பிக்கிறது. அனைவரும் வரிசையாக நின்றுகொண்டு வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் நடனமாடுகிறார்கள். இவ்வாறு ஆடுபவர்கள் மத்திய ஆப்பிரிக்காவின் வோடபே பழங்குடியை சேர்ந்த இளம் ஆண்கள். தங்கள் மனங்கவர் ஆண்மகனைத் தங்களுக்கு இணையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் வோடபே பழங்குடியின் திருமணமான, திருமணமாகாத பெண்கள்.

சஹாராவின் வறண்ட பகுதிக்கு மழை கொண்டு வரும் வளத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜெர்வோல் திருவிழாவில், வோடாபே ஆண் நாடோடிகள் ஒரு துணையை ஈர்க்கும் முயற்சியில் திணறும் வெயிலில் மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். இதற்காகத் தங்களை அழகு படுத்திக்கொள்ள பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.

வோடபே பெண்கள் எந்தவித ஒப்பனையும் இல்லாமல் தங்கள் தோற்றத்தில் பெருமை கொள்கிறார்கள். பெண்களின் முகத்தில் பச்சை குத்திக்கொள்வது அவர்களுடைய வலிமை, வீரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. நைஜரில் வோடாபே பெண்கள் இண்டிகோ சாயமிடப்பட்ட துணியை உடையாக அணிகிறார்கள். மருதாணியைக் கைகளில் வைத்துக் கொள்கிறார்கள்.

நாடோடி வோடபே பழங்குடியினர், மத்திய ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளாகப் புலம்பெயர்ந்து வந்த ஃபுலானி மக்களின் துணைக்குழுக்களைச் சேர்ந்தவர்கள். வடக்கு கேமரூனில் இருந்து சாட், நைஜர், நைஜீரியா வரை சஹேல் பாலைவனம் வழியாகத் தங்கள் கால்நடைகளை மேய்கின்றனர். வோடபே பழங்குடி, இந்தப் பகுதியில் உள்ள கடைசி நாடோடி பழங்குடி. ஒரு லட்சம் வோடாபே மக்கள் எஞ்சியிருக்கலாம். பல தசாப்தங்கள் வறட்சியால் அவர்களின் மந்தைகள் குறைந்துவிட்டன. மேலும் அவர்களின் பாரம்பரிய மேய்ச்சல் பாதைகள் விவசாய நிலங்களாகப் பயிரிடப்பட்டு, சிறிய, குறுகலான பகுதிகளாகியிருக்கின்றன.

தங்களுடைய வீடுகள், பாய்கள், உடைகள், சமையல் பாத்திரங்கள், குழந்தைகள், புதிதாகப் பிறந்த விலங்குகள், பெரிய சுரைக்குடுக்வை என அனைத்தையும் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்ல தயாராக வேண்டும். பொருட்களைக் கழுதையின் அல்லது எருதின் முதுகில் ஏற்றுவார்கள் பெண்கள்.

ஒரு வோடபேவின் உடைமைகள் அனைத்தும் ஒரு கழுதையின் முதுகில் அடங்கிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை அடைந்த பிறகு, கழுதைகள் அவிழ்த்துவிடப்பட்டு, பெண்கள் முகாம் அமைக்க ஆரம்பிப்பார்கள். இரண்டு அலமாரிகளில் மேல் அலமாரியில் விலைமதிப்பற்ற சுரைக்குடுவைகள் அடுக்கப்படுகின்றன. இரண்டாவது அலமாரியானது தரையில் இருந்தால் சேதமடையும் பொருட்களை வைக்கப் பயன்படுகிறது. குழந்தைகள் தூங்கும் இடமாகவும் உள்ளது.

குடும்பத்திற்கு உணவளிப்பதில் பெண்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்கள். பசும்பால் கறக்கிறார்கள், பால் அவர்களின் முக்கிய உணவு. வெண்ணெய், தயிர் ஆகியவை புதிய பாலில் இருந்து மணிக்கணக்காக கடைவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. சந்தையில் பால் பண்டமாற்று செய்வதன் மூலம் அவர்கள் பெறும் தினை, முக்கிய உணவுகளில் ஒன்று. முகாமிற்குத் தண்ணீர் கொண்டுவரும் பொறுப்பு பெண்கள், சிறுமிகளுடையது.

வோடபே பழங்குடி மக்கள் ஒரு சிறப்பு மிக்க நாடோடிகள், அவர்கள் பன்னிரண்டு வயது வரை தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட மாட்டார்கள். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குறுகிய மழைக்காலம் அனைத்து வோடபே வம்சாவளி குழுக்களையும் அவர்களின் சடங்கு கலாச்சார நடனங்களான யாக்கே, வோர்சோ, ஜெர்வோல் ஆகியவற்றிற்காக ஒன்றிணைக்கிறது. ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்திருப்பதைக் காண முடிகின்றது. வோடபே பழங்குடி மக்கள் பெரும்பாலும் இஸ்லாமியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

முதலில் பிறந்த குழந்தைகள் தாத்தா, பாட்டியால் பராமரிக்கப்படுகிறார்கள். வோடபே மக்கள் அற்புதமான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை ஈர்க்கும். மக்களின் கலாச்சாரம் விசித்திரமாக இருந்தாலும், அவர்கள் இன்னும் அற்புதமான வாழ்க்கையைக் கொண்டுள்ளனர்.

ஒரு மணப்பெண் தன் கணவனுக்கு கர்ப்பமான பிறகு, அவளை அந்த நிலையில் பார்க்க கணவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவள் தன் தாயிடம் சென்று ‘பூஃபிடோ’ என்று அழைக்கப்படும் குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கணவன்-மனைவி இடையேயான ஒவ்வொரு வகையான தொடர்பும் தடைசெய்யப்பட்டுள்ளது. கணவனுக்குத் தன் மனைவி வீட்டிற்குச் செல்வதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அவரது தாய் பத்திரமாகப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே அணுக முடியும்.

வோடபே மக்களிடம் அழகு உயர்வாகக் கருதப்படுவதால், ஒரு பெண் தன் கணவனாக இல்லாத பல பெண்களுடன் தூங்குவது சாத்தியமாக்குகிறது. ஒரு பெண் அழகற்ற ஆணுடன் திருமணம் செய்து கொண்டால், அவளது கணவன் அவளுக்கு அழகான ஆணுடன் உறங்கும் உரிமையை அளித்து சிறந்த தோற்றமுடைய குழந்தைகளைப் பெறுகிறான்.

வோடபே ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும், தான் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்கிற அதிகார பொறுப்பு பெண்களிடமே உள்ளது என்பது ஆறுதல் அளிக்கிறது. இங்கே ஆண்கள் போட்டியிடும் பங்கேற்பாளர்கள், பெண்கள் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள்!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.