Perimenopause
வயது நாற்பது. பெரும்பாலும் ஆன்லைனில்தான் செஷன்ஸ் இருக்கும். அவருக்கு மெனோபாஸ் அறிகுறி ஏதுமில்லை. அதற்கான வயதும் இல்லை என்பதால் அதைப் பற்றி ஏதும் யோசிக்கவே இல்லை. அதே நேரம் இவர்கள் எல்லோருக்குமே ஒரு சிக்கல் இருக்கும். தன்னால் முடியவில்லை என்று தெரியும். எதனால் என்று தெரியாது. அதே நேரம் நிம்மதியாகவே இருக்க முடியாது. அது ஏன், எதற்கு என்று புரியாமல் பல்வேறு மருத்துவர்களைப் பார்ப்பார்கள். ஆனால், ஒன்று மாதா மாதம் ஏற்படும் மாதவிடாய் சுழற்சிக்கு முன் பயங்கரக் குழப்பம் இருக்கும். எதேச்சையாக, ‘மெனோபாஸ் குழுவில் இருங்கள். அதற்கான சிக்கல்கள் இருப்பினும் சரியாகும்’ என்றேன். அவர் நம்பிக்கை இல்லாமல்தான் இணைந்தார். அதிக சோர்வு, களைப்பு எப்போதும் அவரிடம் இருந்தது. பிறகு சிக்கல்கள் எதையாவது சொல்வார். இரு வாரங்களில் நல்ல முன்னேற்றம். கவுன்சிலிங்கும் உணவுப் பழக்கமும் மட்டுமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.
யாருக்கு எப்போது பெரிமெனோபாஸ் அறிகுறி ஏற்படும் என்று சொல்ல முடியாது. அது மெனோபாஸுக்கு முன் நிலை என்பதை அறிவது கடினம். இருப்பினும் நாற்பதுக்குப் பின் இது போன்ற அறிகுறி வரும்போதே விழித்துக்கொண்டு, ‘இதுவாகவும் இருக்கலாம்’ என ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டால் போதும்.
முன்பே சொன்னதுபோல பெரிமெனோபாஸ் என்பது மெனோபாஸ் ஆரம்பிக்கும் முன்பே ஏற்படுவது. மாற்றங்கள் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் காலம்.
மாதவிடாயில் சிறிதளவு சிக்கல்களோ, ஒழுங்கின்மையோ ஏற்படலாம். இது மாதவிடாய் முடியும் வரை நீடிக்கும்.
பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் நேரத்தில் தங்கள் மாதவிடாய் ஒழுங்கின்மைக்காக மருத்துவத்தை நாடுவது உலகெங்கும் நடக்கிறது. இது சகஜமான ஒன்றுதான்.
ஆரம்ப காலத்தில் நாட்களில் ஒழுங்கின்மை ஆரம்பிக்கும். சிலருக்கு உதிரப்போக்கு ஒரு வாரம் மேல்கூட இருக்கும். அல்லது அடிக்கடி மாதவிடாய் ஏற்படும்.
சிலருக்கோ ஒரு மாதம் ஏற்படும். சில மாதங்கள் வராது. அல்லது இஷ்டப்படி மாதவிடாய் இருக்கும். அதாவது மாதவிடாய், வாரம் அல்லது மாதம், இல்லாமல் போவது என எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
அதே நேரம் இப்படிதான் நடக்கும் என்பதில்லை. இயற்கை ஒவ்வொரு பெண்ணையும் தனித்தன்மையுடன் படைத்துள்ளது. எனவே, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்குப் பல வருடங்கள் பெரிமெனோபாஸ் மாற்றங்கள் நடக்கும்.
சிலருக்கோ எந்த மாற்றமும் இன்றி கடந்துவிடும். இந்த நேரத்தில் ஹார்மோனல் மாற்றங்கள் நடந்தாலும், நம் மாதவிடாயின் தன்மை மட்டுமே பெரிமெனோபாஸ் என முடிவுக்கு வர கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஹார்மோனல் மாற்றங்கள்
மெனோபாஸின் ஆரம்ப கட்டத்தில் முதல் மாற்றமாக இருப்பது இன்ஹிபின் ஹார்மோன் அளவுகள் குறைவது. இதற்கும் FSH அளவுகள் கூடுவதற்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
மெனோபாஸுக்கு முன்பு FSH அளவுகள் கூடும். எஸ்டிரடால் அளவுகளும் குறைய ஆரம்பிக்கும். AMH எனும் ஹார்மோன் (இது ஓவரி நீர்க்குமிழிகளின் ஹார்மோனல் மார்க்கர்) குறைய ஆரம்பிக்கும். FSH, ஈஸ்ட்ரோஜன், இன்ஹிபின் ஆகியவற்றைவிட இந்த ஹார்மோனை வைத்தே நம் மெனோபாஸ் காலத்தை ஓரளவுக்குக் கணக்கிட முடியும். இனம், எடை, அமைப்பைப் பொருத்தெல்லாம் இந்த ஹார்மோன் அமைப்பு மாறாது.
அடுத்து டெஸ்ட்ரோன் என்ற ஆண் ஹார்மோன்கள் குறைய ஆரம்பிக்கும். அட்ரினல் ஆன்ட்ரோஜனும் குறைய ஆரம்பிக்கும்.
சரி, இந்த ஹார்மோன் சிக்கல்கள் ஒருபுறம் இருக்கட்டும். உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
உலகெங்கும் மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு பருமன் நோய், இதய நோய், மெட்டபாலிக் சிக்கல்கள், புற்றுநோய்கள்கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
முன்பே சொன்னதுபோல மெனோபாஸ் மூளையில்தான் ஆரம்பிக்கிறது. ஹைபோதலமிக் பிட்யூட்டரி- ஓவரியன் ஆக்சிஸ் என்று ஓவரிக்கும் மூளைக்குமான தொடர்பைச் சொல்வோம். அதில் ஏற்படும் மாற்றங்கள் பெரிமெனோபாஸ் காலத்தில் தொடங்கம்.
இது 2 வருடங்கள் முதல் பத்து வருடங்கள் வரை இருக்கலாம்.
முதலில்…
உணர்வு, உடல் அறிகுறிகள், மாதவிடாய் ஒழுங்கின்மை
கடைசிக் கட்டம்…
மெனோபாஸ் ஆரம்பம்
இப்படித்தா ன்பெரிமெனொபாஸில் நடக்கும்.
முக்கியமாக… மாதவிடாய்க்கு முன்பு சில அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு அதிக உதிரப்போக்கு, குறைவான உதிரப்போக்கு, ஸ்பாட் எனப்படும் உதிரச் சொட்டுகள், திடீரென வியர்த்தல், முக்கியமாக இரவில் வியர்த்து நனைந்து எழுந்துகொள்வது. சில நேரம் ஹார்ட் ரேட், பல்ஸ் ரேட் அதிமாவது. தலை சூடாகுதல், மூச்சடைப்பது போல் உணர்தல், செக்ஸில் ஆர்வம் குறைதல், உடல் பருமன், சரும வறட்சி, HDL கொலஸ்ட்ரால் குறைதல், திரை கிளிசரிடிஸ் மாறுதல், சிலருக்கு யூரினரி அல்லது வெஜைனல் இன்ஃபக்ஷன் தொடர்ந்து ஏற்படுதல். பிக்மெண்டேஷன் எனப்படும் தோலில் நிறம் மாறுதல், கருப்பை வாய் வறட்சி, சோர்வு, உடல் வலி, தலை வலி, சிறுநீர் போகும் அவசரம் /அழுத்தம்.
மனதுக்கு ஏற்படும் சிக்கல்கள்
முக்கியமாக தூக்கமின்மை
மனச் சோர்வு, மன அழுத்தம், மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்ஸ்), உடனடியாகக் கோபப்படுதல், கவலை (ஆங்சைட்டி)
ஆஸ்ட்ரியோ பொராசிஸ், கால்சியம் சத்துக் குறைபாடு பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். ஆஸ்டியோபொரசிஸ் மெனோபாஸ் முடிந்தபின் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்றாலும், அதற்கான வாய்ப்பு முன்பே தொடங்கிவிடுகிறது. பெரிமெனோபாஸ் நேரத்தில் இந்த விழிப்புணர்வு மிக அவசியம்.
ஆஸ்டியோபொராஸிஸ் என்பது எலும்புச் சத்துக் குறைந்து எலும்பு முறிவு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள ஓர் உடல் பிரச்னை.
இதை முன்பே அறிந்தால் ஓரளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். பெரிமெனோபாஸ் எனப்படும் முற்பகுதியில் கவனமாக இருப்பின் இந்த எலும்புச் சத்து இழப்பை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
எப்படி எலும்பு வலிமை குறைகிறது?
மார்பகப் புற்றுநோய் அளவுக்கு இடுப்பு எலும்பு முறிவும் சிக்கலான நோய்தான். உடனடியாகக் கவனிக்காவிடில் பெரும் சிக்கல்களில் கொண்டுவிடும். இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு ஆஸ்டியோபோராசிஸ் என்கிறது ஓர் அறிவியல் ஆய்விதழ்.
மெனோபாஸின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்பது கால்சியம் மெட்டபாலிசம் மற்றும் ஆஸ்டியோஜெனிசில் பங்கு வகிக்கிறது.
மெனோபாஸ் நேரத்தில் கால்சியம் மெட்டபாலிசம் சரிசமமின்மையால் 2-5% வரை எலும்புச் சத்து இழப்பு (bone loss) ஏற்படுகிறது.
இந்தியாவில் 50 வயதுக்கு மேல் பெண்களில் 42.5% பேருக்கும் ஆண்களில் 24.6% பேருக்கும் ஆஸ்டியோபொராஸிஸ் ஏற்படுகிறது.
ஆண்களுக்கு வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம் பெண்களைவிட மிகக் குறைவு. பெண்களுக்கு மெனோபாஸ் ஒரு முக்கிய காரணி.
மேற்குலக நாடுகளைவிட இந்தியாவில் இடுப்பு, கழுத்து, தோள்பட்டை எலும்புகளில் BMD (போன் மினரல் டென்சிட்டி) எனப்படும் எலும்புத் தாது அடர்த்தி மிகக் குறைவு என அந்த அறிவியல் ஆய்விதழ் சொல்கிறது. இது சமூக நோயாக மாறிவருவதையும் அது சுட்டுகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியப் பெண்கள் விட்டமின் டி பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ அறியாமல் இருப்பது, சத்தான உணவுகள் பற்றிய விழிப்புணர்வும் மிகக் குறைவு.
அதே நேரம் குழந்தை பிறப்புக்கும் எலும்புச் சத்துக் குறைப்பாட்டுக்கும் தொடர்பில்லை. ஆனால், மெனோபாஸ் மாதவிடாய்க்கும் எலும்புத் தாதுக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளதாக ஓர் ஆராய்ச்சி சொல்கிறது.
இது மட்டுமல்ல… உடல் பருமனுக்கும் ஆஸ்டியோபொராசிஸுக்கும் நெருக்கம் உள்ளது. குறைந்த ஏஸ்டிரடால் சுரப்புக்கும் இதற்கும் உள்ள தொடர்பும் தெள்ளத் தெளிவாகியுள்ளது. பின் FSH அளவு நீண்ட மெனோபாஸ் பீரியடில் நடக்கும்போது அதுவும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாகிறது. இதில் மிகச் சிலரே எலும்பு முறிவு அளவுக்குச் செல்கின்றனர். அதே நேரம் அதன் ஆபத்துக்கு மிக அருகில் இருப்பது உண்மை.
இது பற்றிப் பின்னர் பார்ப்போம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன உணவுகள் எடுக்க வேண்டும்? வெறும் சப்ளிமெண்ட்ஸ் மட்டுமே போதாமல், சூரிய ஒளியும் ஏன் தேவை?
(தொடரும்)
படைப்பாளர்:
கிர்த்திகா தரன்
இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.
Thanks for this topic. I have been struggling for almost 4 years – and people around pointed fingers on late child birth, weakness, “your patience and tolerance level to be checked”, finally after a severe post covid anxiety therapy, I came to know this term Perimenopause. I have every other symptom listed as of now, and started with the change in gut flora. Thanks to the author.