மீண்டும் அடுக்களை டூ ஐநா- 1

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா…. எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா……திரையில் ராமராஜன் சிலுக்கு சட்டை , பட்டு வேட்டியில் கௌதமியிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார். அலுப்புடன் சுத்திமுத்தி ஒரு லுக்கு விட்டேன். ஏர் இந்தியா001 ஏனோ பிரியாணியும் குவார்ட்டரும் வாங்கித்தர வசதியில்லாத அரசியல் கட்சிக் கூட்டம் போல , ஆங்காங்கே நிறைய காலி நாற்காலிகளுடன் களையிழந்து காணப் பட்டது.

ஏர்ஹோஸ்டஸ் தேவதைகள் மட்டும் ரோபோட்டிக் புன்னகையுடன் மிதந்து கொண்டிருந்தனர். நண்டும் சிண்டுமாய் நான்கைந்து குட்டீஸ் , “ஏண்டா உன்னை பெத்தேன், பெத்தேன்”னு பெத்தவய்ங்க அலறும் அளவுக்கு அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தன. கடைசி மூன்று சீட் காலியாகக் கிடக்க, தூங்குவதற்கு வசதியாக மொத ஆளா துண்டைப் போட்டு எடத்தைப் பிடிச்சிக்கிட்டேன். கனவு போல இருக்கு அமெரிக்கா வந்ததும், ஐ நா வில் கலந்து கொண்டதும். ஒருவழியா நல்லபடியா முடிச்சி பெட்டி சட்டியோட கிளம்பியாச்சு.

பொழுது போகாமல் வெட்டியாக உட்கார்ந்திருக்க, கடந்த ஐந்து நாட்களில் அமெரிக்க வாழ்க்கை பற்றி நான் ‘கற்றதும் பெற்றதும்’ மைண்டுக்குள்ள ரீப்ளே ஆகத் தொடங்கிடிச்சி. இந்தியர்களுக்கு அமெரிக்கா எப்பவும் ஒரு ஜில் ஜில் கனவுப் பிரதேசம் தான். அதுவும் நடுத்தர வர்க்கத்தின் அல்டிமேட் கனவு. பிள்ளைகளை, குறிப்பா பையனை என்ஜீனியராக்கனும், கம்ப்யூட்டர்ல டொக் டொக்னு தட்டற வேலை வாங்கனும், அமெரிக்காவுக்கு அனுப்பிடணும் , அப்போதான் பிறவிப் பெருங்கடலை கப்பலேறிக் கடந்த சந்தோசம், திருப்தி கெடைக்கும். “எம் மவன் அம்மேஏரிக்கால வேலை பாக்கான்”னு ஆசிரியர்கள் பலரும் சொல்லும் போது சந்திரமுகி போல கண்களில் பல்ப் எரியறதைப் பார்த்திருக்கேன். இப்படித் தான் நடுத்தர வர்க்கம் H1B விசாவுக்கும், டாலருக்கும் ஆசைப்பட்டு விமானமேற, மேல்தட்டு வர்க்கமோ, ஆடு மேய்ச்சா மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தா மாதிரியும் ஆச்சு னு F1 விசாவுல, அப்பா காசுல அமெரிக்காவை சுத்திப் பார்த்துட்டு, போனாப் போகுது னு கூடவே ஒரு MS ஓ, M.Tech ஓ முடிச்சிட்டு வரலாம்னு படையெடுக்க…விளைவு இன்னிக்கு அமெரிக்காவில் 2.3 மில்லியன் இந்தியர்கள் இருக்காங்க.

மெக்ஸிகோ, பிலிப்பைன்சுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட இனமாக நம்மாளுங்க தான் இருக்காங்க. மன்ஹட்டன்ல டைம் ஸ்கொயர் கிட்ட நின்னு காதுல கைய வெச்சு, “ஏல்ல்ல்லேய்ய்ய்ய் சின்ராஆஆஆஆசு”…..னு கூப்பிட்டா நாலா பக்கமுமிருந்தும் நாப்பது பேர் வந்துருவாய்ங்க போல… ஏன்னா, நியூயார்க்கில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் இந்தியர் தானாம். ஆனால் நம்ம கற்பனையில் இருக்குற அமெரிக்காவும், யதார்த்தத்தில இருக்கிற அமெரிக்காவும் எக்ஸ்பெக்டேஷன் – ரியாலிட்டி மீம்ஸ் போலத்தான் .

“அமெரிக்கால பிச்சைக்காரனே கிடையாது, அமெரிக்கால தேனும், பாலும் ஓடுது, அமெரிக்கால கெழவி கூட இங்கிலீஷ் தான் பேசுவா”ன்னு நான் பச்சப் புள்ளயா இருக்கும் போது, ஊர்நாட்டுல மோவாயில கை வைச்சுக்கிட்டு பேசிய அன்றைய சூரியன் எஃப் எம்கள் ( அப்பத்தாக்கள் ) காலத்து ஆச்சர்யங்கள் போயேபோச். அமெரிக்கா போனா, பணக்காரனாகி, அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளையாகி, தொழிலதிபர் மருமகனாகலாம், இல்ல அமெரிக்கப் புள்ளைக்கு மாப்பிள்ளையாகி பணக்காரனாகிவிடலாம்ங்கறதெல்லாம் ராதாரவி காலத்து சினிமாவோட காலாவதியாகிடிச்சு. அமெரிக்கா போற எல்லாருக்கும், “வாசக் கதவை ராசலச்சுமி அவ்வளவு சீக்கிரத்தில தட்டுறதில்லை “ ங்கறது தான் நெசம்.

உலகின் அம்பானியான ( பணக்கார நாடான) அமெரிக்காவில் தான் ஏழைகளும் அதிகமாம். வீடற்றவர்கள் 5.5 லட்சம், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் 3.8 கோடி , அமெரிக்க வாழ் இந்தியர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 6.5 சதவீதம் அப்படி னு, OECD ( Organisation of Economic co operation and Development ) சொல்லுது. பிச்சை எடுப்பது, வறுமையால் இடம் பெயர்வதுனு அத்தனை பிரச்சினைகளும் அங்கும் உண்டு. ஏன், வீடற்றவர்கள்( Homeless people) னு ஒரு வர்க்கமே உண்டு. ‘சொர்க்கம் மதுவிலே’ னு இல்லாத சொர்க்கத்தை போதையில தேடி தெருவில் யாசகம் கேட்கும் பெருங்கூட்டமும் உண்டு. 16,17 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி ஊதாரியாய் செலவழிக்கப் பழக, காசெல்லாம் ஈஎம்ஐக்கு போக, அரசாங்கம் வரியைப் பிடுங்க…பிறகு, வாழ்க்கை நரகம் தான்.

மன்ஹட்டன்லேயே கொஞ்சம் ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் நடந்து போயிட்டு இருக்கும் போது, ஆப்ரிக்க அமெரிக்க பீம்பாய் ஆள்கள் சிலர் “வன்டோலர் ( one dollar ) ப்ளீஸ் னு” ப்ளீஸ்க்கு சம்பந்தமில்லாத முரட்டுக்குரலில் அதட்டும் தொனியில் கைநீட்ட, பயந்துபோய் பேக்கில் கிடந்த சென்ட்டும், டாலருமாய் சில்லறையை தெறிக்க விட்டு படபடப்பாய் நகர்ந்தது நினைவிற்கு வந்திச்சு.

goodreads.com

சுஜாதா தன் ‘ 60 அமெரிக்க நாட்கள்’ங்கற நூலில், அமெரிக்கா சென்ற பின் இந்தியர்களுக்கு, சொந்த நாட்டின் மீது ஏற்படும் ஏளனம், இந்தியாவின் சுய அடையாளங்களை அழிக்க செய்யும் முயற்சிகள், இந்தியா திரும்ப விரும்பாத மனமாற்றம், திரும்ப விரும்பும் இந்தியர்களின் கழுத்தைச் சுற்றி வளைத்திருக்கும் கிரெடிட் கார்டு சுமைகள்னு எப்படி தன்னை நோக்கி வரும் இந்தியர்களை அமெரிக்கா ஒரு ஆக்டோபஸ் போல தனக்குள் இழுத்துக் கொள்கிறதுன்னு ரொம்ப அழகா சொல்லியிருப்பார். இந்தத் தளைகளை அறுத்துக்கிட்டு அமெரிக்காவை விட்டு விலகுவது லேசுப்பட்ட காரியமல்ல. அப்படியே ‘இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு’ன்னு காலங்கடந்து கிடைத்த கலாச்சாரம், பண்பாடு குறித்த ஞானோதயத்துடன் ரிட்டர்னாகும் என் ஆர் ஐ க்கள் இங்கு வந்தும், “அமெரிக்கால பார்த்தீங்கன்னா”னு ஒவ்வொன்றுக்கும் அமெரிக்கப் புராணம் பாடி அமெரிக்கக் கருத்தியலோடு தான் காலங்கடத்தறாங்க.

ஆனால் அமெரிக்காவிடம் கத்துக்கிட நல்ல பல விஷயங்களும் இருக்கு. பச்சப் புள்ளங்க பேசத் தொடங்கின உடனே, ஸாரி, ப்ளீஸ், தேங்க் யூங்கற மூணு மேஜிக் வார்த்தைகளை கத்துக்கொடுத்திடறாங்க. சுத்தம் குறித்த புரிதல் மிக அதிகம். குப்பைகளைக் கையாளும் திறன் சிறப்பு. நாம் செல்லுமிடங்களிலெல்லாம் இரண்டு நிமிட நடைக்கொரு முறை மிகச் சுத்தமான பொதுக் கழிப்பறை வசதிகளைப் பார்க்க முடியுது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை மனதில் கொண்டே பேருந்துகள், மால்கள், கட்டிடங்கள் அத்தனையும் வடிவமைக்கப் பட்டிருக்கு. நேர மேலாண்மை, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொக்கிஷமா பாதுகாப்பது, தன் காலில் நிற்கணூம்ங்கற தன்னம்பிக்கை, என் நிலப்பரப்பின் அடையாளத்தை உலகுக்கு காட்டணும்ங்கற அக்கறை இதிலெல்லாம் கோல்டு மெடலிஸ்ட் தான்.

ஆனா, அமெரிக்காவின் மிதமிஞ்சிய தனிமனித சுதந்திரம் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாததாய் இருக்கு. மகனுக்கு அம்பது வயசானாலும், “அவனுக்கு ஒண்ணும் தெரியாது”ன்னு எல்லா விஷயத்திலும் தலையிட்டு , தன்னோட கன்ட்ரோல்லயே வைச்சிக்கிட நெனைக்கிற நம்ம தாய்க்குலங்கள் எங்கே, 18 வயசானவுடனே கழட்டி விட்டுட்டு, ‘உன் வழியை நீ பார்த்துக்கோ’ன்னு சொல்ற அமெரிக்க மதர் எங்கே?

அதுபோல் ஆறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் பேராவலில், நம்மோட வாழ்க்கையை வாழாம தவறவிடும் நமக்கு, வருங்காலத்துக்கு மட்டுமே சேர்த்து வைக்காமல் வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நினைக்கிற அமெரிக்கர்களின் கலாச்சாரம் அதிசயமாகத்தான் இருக்கு .

Photo by Aaron Burden on Unsplash

நல்லதும், கெட்டதுமாய் கலந்து கெடக்குறது அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் தான். நரகமாய் நினைச்சிக்கிடறதும், சொர்க்கமாய் சந்தோசப் படறதும் அவங்கவங்க மனசப் பொறுத்தது தான?’ன்னு ரெண்டு பக்கமும் பாதகமில்லாம சாலமன் பாப்பையா போல எனக்கு நானே தீர்ப்புச் சொல்லிட்டு மூணு சீட்லயும் சேர்ந்து நீட்டி நிமிர்ந்து படுத்தாச்சு. “மேம் ஹேவ் யுவர் மீல்ஸ் ப்ளீஸ்” – சொர்க்கத்தில மேகக் கூட்டங்கள்…பொங்கி வழியும் புகைகள்…

“இனிப்புகளும் , பழங்களும், தின்பண்டங்களும் அண்டா அண்டாவாய் நிறைந்து வழிய , ஐஸ்க்ரீம் குளத்தில் பெண்கள் நீந்திக் கொண்டிருக்க…அழகழகான உடைகளில் நடனமாடிக் கொண்டே ஆண்கள் சாப்பாடு பரிமாற ( காலம் காலமா பெண்களே பரிமாறணுமா என்ன?) நடுவே “ கல்யாண சமையல் சாதம் பிரியாணி வகைகள் பிரமாதம், அந்த மட்டன் வறுவல், கோழி சுக்கா இதுவே எனக்குப் போதும் அஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ னு” நான் அள்ளி அப்பிக் கொண்டிருக்க,” மேம் ஹேவ் யுவர் மீல்ஸ் ப்ளீஸ்” மீண்டும் அதே குரல்…திடுக்கிட்டு விழிக்க ஹன்சிகாவா இது? இல்லயில்ல ஏர்ஹோஸ்டஸ், கையில் மீலஸ் ட்ரேயோடு சிரிச்சிக்கிட்டே…அடச்சே கனவா? ராமராஜன் பாட்டக் கேட்டுட்டு சொர்க்கத்துக்கே விசிட் அடிச்சாச்சோ?

ஆசையாய் மீல்ஸ் ட்ரேயை வாங்கினேன். விமானமேறிய மூன்றாவது முறையாக கடிக்க முடியாத ப்ரெட், வேகாத அரிசி, உப்பில்லாத பருப்பு, காரமில்லாத உருளைக் கிழங்கு. அய்யோ வேணாம் மக்களே நான் அழுதிடுவேன். எனக்கு சாப்பாடே வேணாம்..என்னை தூங்க விட்டா போதும்னு தூக்கமும் மயக்கமுமாக, பொழுதைக் கடத்தி, ‘தாய் மண்ணே வணக்கம்’னு தில்லி வந்து இறங்கியதும், “நமக்கு சோறு முக்கியம் அமைச்சரே”ன்னு முதலில் தேடி ஓடியது ஜந்தர்மந்தர் சரவணபவனைத் தான்.

தில்லி அலுவல் வேலைகளை முடிச்சிட்டு வெற்றிகரமாக ஐ நா பயணத்தை நிறைவு செய்து, மதுரையில் கால்பதிக்க , தம்பி ஏர்போர்ட்டில் காத்திருந்தான். சொந்த பந்தங்களுக்குள் ஒரே பரபரப்பு. “ரமா ஐ நா சபை போனாளாம், ரமா ஒபாமா முன்னால பேசுனாளாம், ஒபாமாவே இவ பேச்சைக் கேட்டு அசந்து போய் பாராட்டினாராம்”…( அடியாத்தீ….இது எப்ப நடந்துச்சு எனக்கே தெரியாம?) இப்படியாக புரளி. “ ஆம்ப்பே…ஒரு கோடிப்பே” ரேஞ்சுக்கு ஊர் சுற்றி சுற்றி என் காதுக்கே வந்தது. நல்லவேளை, தமிழ் தெரியாததால இந்தச் செய்தியெல்லாம் ஒபாமா காதுக்குப் போகல…..

இன்னும் சில ஆசிரியப் பெருமக்கள் டீச்சர் டூர் நல்லா இருந்துச்சா என குசல விசாரிப்புகள் வேற…அவ்வ்வ்வ்வ்….டூரா ? நான் எதுக்குப் போனேனு கூட தெரியாம முருகன் ட்ராவல்ஸ்ல பணங்கட்டி டூர் போனா மாதிரி கேட்கறீங்களே…..என்னம்மா படிச்சவுகளே இப்படி பண்றீங்களே மா??? வந்து சில நாட்கள் ஜெட்லாக்கைக் கடந்து, நடந்த நிகழ்வுகளை அறிக்கையாக தயார் செய்து தில்லியிலிருக்கும் எங்கள் அகில இந்திய ஆசிரியர் அமைப்பிற்கும், மத்திய அரசுக்கும் அனுப்பும் வேலை நெருக்கியது. கிட்டத்தட்ட ஒன்பது நாள்கள் சம்பளமில்லா விடுப்பு போட்டதில துண்டு இல்ல பெரிய சமுக்காளமே விழும்… இந்த மாச பட்ஜெட்டை எப்படி சமாளிக்கறது னு ஒரே கன்பூசிங்!

இந்தியா சார்பாக ஐ நாவுக்கே போய் பேசப் போனாலும், இந்திய எல்லையைத் தாண்டுனா லாஸ் ஆப் பேல தான் போகணும். இதுதான் நீதி தவறா தமிழ்நாட்ல, அரசு ஊழியர்களுக்கான நேர்மையான சட்டம். என்னங்கய்யா உங்க நாயம்?? போயிட்டு வந்த சில நாட்களிலேயே, உங்க பங்களிப்பு ரொம்ப சிறப்பா இருந்துச்சுன்னு வழக்கம் போல மானே, தேனே போட்டு உலகக் கல்வி அமைப்பின் ஆசியா பசிபிக் பிரிவு அலுவலகத்திலிருந்து மெயில். அடுத்த சில நாள்களில் இதே போல பெல்ஜியம் தலைமை அலுவலகத்திலிருந்து மெயில். எல்லாம் வழக்கமான ‘போங்கு’ தான்னு நினைச்சி மறந்துட்டேன். இப்படியே மூணு மாசம் ஓடிப் போச்சு.

2015 தைப் பொங்கல் விடுமுறை. தேனியில் உறவுப் பெருங்கூட்டத்தோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் ஊர்சுற்றிக்கொண்டிருந்த ஒரு சுபயோக சுபதினத்தில் தில்லியிலிருந்து போன். “2015 மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ நா பெண்கள் அவையிலும், ஐ நா பொதுச்செயலாளர் பான் கி மூன் தலைமையில் நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்”. நம்ப முடியாத பதட்டத்தில் போன் கீழே விழுந்தது. ஒரு வேளை ப்ராங்க் கால் ஆக இருக்குமோ??? இது ஏப்ரல் மாசம் கூட இல்லியே…. நம்புறதா வேணாமா…ஙங்ஙங்ங்ஙஙே…..னு காதல் பரத் போல சிலநாட்கள் சுத்திட்டு இருக்கும் போது ஐ நா விலிருந்து வந்தது ஒரு மெயில்…

சுத்துவோம்...

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!