பதின் பருவத்தின் ஹார்மோர்ன் குளறுபடிகளைச் சமாளித்து நிதானிப்பதற்குள், திருமணம் குழந்தைப்பேறு என அடுத்தடுத்து பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மீண்டும் ஹார்மோர்ன்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு தனது அடுத்த ஆட்டத்தைத் துவங்கிவிடும். திருமணத்திற்குப் பின்னான ஹார்மோன்கள் மாற்றம் பெண்களுக்குதான் அதிகம். அந்த மாற்றத்தைத் தெரிந்து கொள்ளும் முன் இந்தச் சமூகம் திருமணம் என்ற ஒன்றைப் பெண்ணுக்கு எவ்வளவு சிக்கலாக்கி வைத்திருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
திருமணம் என்பது நமது சமூக அமைப்பில் இன்னும் ஆண், பெண் இருவர் சம்மந்தப்பட்டதாக மாறவில்லை. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் பெண்ணுக்கும் பையனுக்கும் பெற்றோர்தான் இணை தேடி தருகின்றனர். எவ்வளவு தவறான ஒன்றை நாம் காலம்காலமாக ஒழுக்கம், குடும்ப கவுரவம் என்று கட்டுப்படுத்தி வைத்து இருக்கிறோம். தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க தெரியாத குழந்தைகளை, ‘என் பொண்ணு/பையன் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள், நான் கட்டிக்கக் சொன்னா யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிப்பாங்க’ என்று பெருமை பிடிபட பேசுகிறோம்.
இது சரியா?
ஒரு குழந்தைக்கு அறிவைக் கொடுக்க வேண்டியதுதானே பெற்றோர் கடமை. நல்லது கெட்டதைப் பகுத்தறியும் அறிவைக் கொடுத்துவிட்டால் அவர்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள மாட்டார்களா? எதை வைத்து இந்தப் பெண் நம் பையனுக்கு நல்ல மனைவியாக இருப்பாள், இல்லை இந்தப் பையன் நம் மகளுக்கு நல்ல கணவனாக இருப்பான் என்று முடிவு செய்கிறோம்.
ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.
இப்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் பயம், தயக்கம் இவற்றைக் குறித்த புரிதல் இல்லாமல், ‘ஏது பொண்ணு சம்பாத்தியத்தில் நல்ல ருசி கண்டாச்சு, கல்யாணம் ஆனா வருமானம் போயிடும் என்று பயமா?’ என நா கூசாமல் கேட்கின்றனர்.
பெண்ணுக்குத் திருமணம் குறித்துப் பயம் இருக்கலாம். தனது சுதந்திரம் பறிபோய்விடுமோ, திருமணத்திற்குப் பின் வேலைக்கு அனுப்புவார்களா? என் அம்மா அப்பாவிற்கு இப்போது போல என்னால் உதவ முடியுமா? என் கெரியர் திருமண வாழ்க்கையால் முடங்கிவிடுமா என்று ஏகப்பட்ட மன உளைச்சல்கள் இருக்கும்.
அதே போல ஆண்களுக்கும் திருமணம் குறித்து ஏகப்பட்ட மனத்தடைகள் இருக்கலாம், பயம் இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் லட்சியமோ குறிக்கோளோ திட்டமிடலோ மனதில் இருக்கலாம். அதனை முடித்துவிட்டுத் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கலாம்.
திருமணம் வேண்டாம் என்று கூறும் பெண்களிடம் ஆகட்டும் ஆண்களிடம் ஆகட்டும், வேண்டாம் எனக் கூறுவதற்கான நியாயமான காரணத்தைக் கேட்க பெற்றோர் தயாராக இல்லை. வயதாகி வருகிறது, அப்புறம் பொண்ணு/பையன் கிடைக்காது, ஊர் என்ன சொல்லும் என்பது மட்டுமே பல பெற்றோர்களின் வற்புறுத்தலுக்குக் காரணமாக இருக்கிறது.
இன்றும் பெரும்பாலான வீடுகளில் ஆண் பிள்ளைகளின் திருமணத் தகுதி என்பது நல்ல படிப்பு, நல்ல சம்பளம், ஓரளவு சொத்து என்ற அளவில்தான் பெண் வீட்டினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெண் என்றால் அவள் படித்திருக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சமைக்க வேண்டும், தன் மகனை, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகத்தான் இருந்து வருகிறது.
அதுவரை பெண் குழந்தையைச் செல்லமாக வளர்க்கும் பெற்றோர்கூட மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிட்டாலே, பெண்ணிடம் ‘சமைக்கக் கத்துக்கோ, காலை அதிக நேரம் தூங்காதே, இப்படி உட்காராதே’ என ஆரம்பித்து பெண்ணுக்குத் திருமணம் குறித்த பயத்தை விதைத்து விடுவார்கள். இன்றும் பெரும்பாலான வீடுகளில் அவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆணுக்கு நிகராகப் பெண் படித்தாலும், வேலைக்குச் சென்றாலும், அவனுக்கு நிகரான சம்பளம் வாங்கினாலும் ஏன் பெண்கள் திருமணத்தின் பொருட்டு பலவற்றைக் கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறாள். அதே வீட்டில் ஆண் குழந்தை இருந்தால், உனக்குத் திருமணம் நடக்கப் போகிறது சமைக்கக் கற்றுக்கொள், மாமனார் மாமியாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்துகொள், பெரியவர்கள் முன் இப்படி அமராதே என்று ஏதாவது ஒன்றைச் சொல்கிறோமா? அதெல்லாம்கூட வேண்டாம், அவனின் வேலைகளை முழுமையாக அவன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறோமா?
ஒரு பெண்ணைத் திருமண வாழ்க்கைக்குத் தயார் படுத்துவது போல ஆணைத் திருமண வாழ்க்கைக்கு எந்தப் பெற்றோரும் தயார்படுத்துவதில்லை. ஆணைப் போலதானே தானும் சம்பாதிக்கிறோம், வெளியே சென்று வருகிறோம். ஆனால், கூடுதல் வேலைகள் தனக்கு மட்டும் ஏன் என்பதுதான் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.
பெண்ணின் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும் முன்னரே, அதனை அவள் துணைவருடன் பேசி சரி செய்துகொள்ளும் முன்னரே இரு குடும்பமும் சமூகமும் குழந்தை எப்போது என நெருக்கத் தொடங்கிவிடுகிறது. அந்த அழுத்தம் காரணமாக வேறு எதையும் யோசிக்காமல் குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டிய நிர்பந்தத்திற்குள் பெண் வலுகட்டாயமாகத் தள்ளப்படுகிறாள். இன்றளவும் குழந்தை பெற்றுக்கொள்வதைச் சுய விருப்பமாக முடிவு செய்ய முடியாத இடத்தில்தான் பெண் இருக்கிறாள்.
முதன்முறை கருவுற்ற எனக்குத் தெரிந்த ஒரு பெண், ‘அம்மா, குழந்தை வயிற்றில் வந்தவுடனேயே பயங்கர சந்தோஷம் வருமாம், குழந்தையோட ஒரு பிணைப்பு வந்துடும், மனம் குழந்தையைத்தான் சுத்தி வருமாம். ஆனால், எனக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை, ஒரு மாதிரி எரிச்சல் மனநிலைதான் இருக்கு. நான் சரியில்லையா?’ எனக் கேட்டாள்.
தாய்மையை எப்படி ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறோம்! ஒரு பெண்ணுக்குக் கரு உண்டானவுடனே அவள் தாய், அதனைக் கொண்டாடியே ஆக வேண்டும். பெண் கரு உண்டானது தெரிந்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாள், ஒவ்வொரு நொடியும் வயிற்றில் கை வைத்துப் பூரிப்பாள், வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் அப்போதே பிணைப்பு உண்டாகிவிடும் என ஏகப்பட்ட கற்பிதங்களை சினிமாவும் குடும்பமும் திணித்து வைத்துள்ளன. அப்படி இல்லை என்றால்தான் தவறோ என்று குற்ற உணர்வில் உழல ஆரம்பித்துவிடுகிறாள்.
அந்தப்பெண்ணிடம், ‘கருத்தரித்தவுடன் அனைவருக்கும் உடனே சந்தோஷம் பொங்கிப் பிணைப்பு உண்டாகிவிடும் என்று எல்லாம் சொல்ல முடியாதும்மா. இன்னும் சொல்லப் போனால் குழந்தையே வேண்டாம் என்றுகூடத் தோன்றும். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல மனநிலை மாறிவிடும். குழந்தை பிறந்தவுடன் தானாக அந்தப் பிணைப்பு வந்துவிடும். அதையெல்லாம் நினைச்சு குழப்பிக்காதே’ என்றேன்.
நீண்ட நாள் குழந்தைக்காகக் காத்திருப்பவர்கள் தவிர, பெரும்பாலும் பெண்கள் முதன் முதலில் கருவுற்றவுடன் சந்தோஷம் அடைவதைவிட மிகுந்த குழப்பத்திற்கும் பயத்திற்கும்தான் ஆட்படுவார்கள்.
ஹார்மோர்ன்கள் ஓவர் டியூட்டியை ஆரம்பித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் அவள் மிகுந்த சோர்வும் மன உளைச்சலுமாகதான் இருப்பாள்.
ஆனால், அது புரியாமல், ‘என்ன நீ கரு உண்டாகி இருக்கும் சந்தோஷமே இல்லாமல் இப்படி முகத்தை உம்மென வைத்துக்கொண்டு இருக்கிறாய்’ எனக் கேட்கும் கணவர், உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் மென்று முழுங்க வேண்டி வரும்.
ஏனென்றால் எது கூறினாலும், அவளது தாய்மையின் புனிதம்தான் முதல் கேள்விக்குள்ளாகும்.
ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் பெண், எனக்கு எந்த உணர்வும் இல்லை பயம்தான் இருக்கிறது என்று சொல்லக்கூட முடியாது மெளனமாக வெளியே சிரித்து உள்ளே ஒருவித எரிச்சலுடன் வலம் வருவாள்.
எப்படிப் பூப்பெய்தும் பெண்களின் வலி நபருக்கு நபர் மாறுபடுகிறதோ, அதேபோல கருவுறும் பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி உபாதைகளோ வலிகளோ பிரச்னைகளோ இருப்பதில்லை. அதுவும் பெண்களுக்குப் பெண் மாறுபடுகிறது. இதில் சில குடும்பங்களில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சொன்னால் கண்பட்டுவிடும், நான்கு மாதம் முடியும் வரை வெளியே இதைப் பற்றிச் சொல்லக் கூடாது, மருத்துவமனை செல்லக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வேறு. நாள் தள்ளி சென்றவுடன் மருத்துவ ஆலோசனை கண்டிப்பாகப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன மாதிரி விபரீதங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை பற்றி அடுத்து பார்ப்போம்
(தொடரும்)
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.