காதல் என்பது சுயத்தை இழக்கச்செய்வது, தன்னுடைய இணையருக்காக உருகி, அவருக்காக என்னவென்றாலும் செய்வது என்று சொல்லப்படுகிறது. காதலின் பைத்தியக்காரத்தனங்கள் அழகுதான் என்றாலும், தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் காதலிப்பதில் ஒரு கண்ணியம் இருக்கிறது. இன்றைய சூழலில் இணைகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இது மிகவும் அவசியமாகிறது. சுயமரியாதை இழக்காத காதலுக்கான 4 வழிகள்.

1. உங்களைச் சிறுமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். பல நேரத்தில் ஆண் தன்னைவிட அதிகமாகப் படித்திருக்க வேண்டும், அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் போன்ற சமூக எதிர்பார்ப்புகளுக்காகப் பெண்கள் தங்கள் உயர் கல்விக்கான திட்டத்தை, வேறு வேலை மாறுவது பற்றிய எண்ணங்களைக் கைவிட்டுவிடுவார்கள். தங்களுக்கு முக்கியமாகக் கருதக்கூடிய தங்கள் மதிப்பீடுகளையும் காதலரின் ஆசைக்காகவும் அவரது குடும்பத்தின் நிர்பந்தத்திற்காகவும் கைவிடும் பல பெண்களை நாம் காண்கிறோம். காதல் ஒருவரை இன்னொருவர் கைகொடுத்து மேலே தூக்கி விடுவதாக அமைய வேண்டும். பால் காரணமாக ஒருவரை சிறுமைப்படுத்தவும் அவரது குறிக்கோள்களில் குறுக்கே நிற்கவும் கூடாது.

2. இணையைத் திருத்துவது உங்கள் வேலை அல்ல, உங்கள் இணை சரியான பழக்கவழக்கங்கள் அன்றி இருந்தால் அவற்றை மாற்றி, அவரைத் திருத்துவது உங்கள் தலைவலி அல்ல. இது குடி, புகைப் பிடித்தல் போன்ற வாழ்வியல் பழக்கங்களுக்கு மட்டும் அல்லாமல், அதீத கோபம், கத்துதல், பொருள்களைத் தூக்கி வீசுதல் போன்ற பழக்கங்களுக்கும் பொருந்தும். ‘ஒரு கால்கட்டு போட்டா எல்லாம் சரியா போயிடும்’ என்ற காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், இன்றும் திருமணங்களில் சரியாக நடந்துகொள்ளாத, சண்டைக்கார, பொறாமைப்படும் இணைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதனால் உங்கள் முயற்சிகள் மட்டுமல்லாமல் சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும், உங்கள் நற்பெயரும்கூடப் பாதிக்கப்படலாம்.

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

3. தொடர்ந்து இணையைத் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே வாழ்தல். உறவு முழுவதும் தன் வாழ்வைத் தன் விருப்பத்திற்கு வாழாமல், ‘இந்த உடை அணிந்தால்தான் என் இணைக்கு பிடிக்கும்’, ‘இப்படி நான் பேசினால்தான் என் இணைக்குப் பிடிக்கும்’ என்று வாழ்ந்துகொண்டிருந்தால் அது உங்கள் சுயத்தை மெல்ல மெல்ல அழித்துவிடும். நிறைய உறவுகள் அடுத்தவரைப் பார்த்து தன் இணையோடு ஒப்பிடும் பழக்கத்தில் இருக்கின்றன. நீண்ட கால நட்புகள் இணைக்குப் பிடிக்காததாலயே கைவிடப்படுகின்றன. ‘காதலும் காதலரும் தன் உலகத்தில் ஒரு பகுதி, அவரே தன் மொத்த உலகம் அல்ல’ என்ற புரிதல் மிகவும் இன்றியமையாதது.

4. தனிப்பட்ட நேரம் மற்றும் இடைவெளி இல்லாமல் இருப்பது. என்ன தான் இணை பிரியாத உறவென்றாலும் ஒவ்வொருவருக்கும் அவருக்கான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், பொழுதுபோக்குகள், நட்பு வட்டம், நேரம் ஆகியவை மிகவும் அவசியம். உங்களுக்கென நேரமும் இடைவெளியும் இல்லாத உறவுகள் ஆரோக்கியமானவையாக இருக்க முடியாது. இது காதலில் மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகும் அவசியம். குழந்தைகள் இருப்பின், அவர்களைப் பராமரிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை பெண்கள் செலவிடுகின்றனர். அவ்வப்போது தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளகூட வழியின்றி, அதைப் பற்றிச் சிந்திக்காமலும் வாழ்கின்றனர். ஒரு பயணமோ புத்தகமோ உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைச் செய்ய வாய்ப்புகள் இருக்க வேண்டும். அதைத் தடுக்கும்படியாக உங்கள் காதலோ திருமணமோ அமையக் கூடாது.

காதலர் தினத்தை ஒட்டிய இந்த வாரத்தில் தன் சுயத்தை இழக்காத, ஆரோக்கியமான உறவில் மலர்ந்திருக்கும் காதல்களைக் கொண்டாடுவோம்!

(தொடரும்)

படைப்பாளர்:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.