இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தழிழ் மொழி ஆண்மொழியாகவே திகழ்ந்து வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கலை இலக்கிய வெளியில் ஆண்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், அவர்களுக்குக் கிளர்ச்சிதரக்கூடிய மொழிப் பயன்பாட்டை இலக்கிய நய அளவுகோல்களாகக் கொண்டு ஆண்மொழியாக இலக்கணப்படுத்தியுள்ளனர். பெண்கள் கலை இலக்கிய வெளியில் கால் பதிக்கத் தொடங்கி இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் ஆண்மொழி உயிர்ப்புடன் இருக்கிறது. உயிர்ப்புடன் இருப்பதற்குப் பெண் படைப்பாளர்கள்கூட ஆண்மொழியைப் பயன்படுத்தி வருவது ஒரு காரணமாக இருந்தாலும்கூட, கலை இலக்கிய பரப்பைத் தாண்டிய சமூகத்தின் அனைத்து வெளிகளிலும் ஆண்மொழி நிலைபெற்று இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘ர்’ விகுதி என்பது பலர்பாலைக் குறிப்பிடுவதற்கும் ஒருவரின் உயர்வைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுகின்ற விகுதி என்று தொடர்ந்து பல அறிஞர்கள் வலியுறுத்தினாலும் ஆண்கள் கூட்டத்தைக் குறிப்பிடுகையில் ‘ர்’ விகுதி வைத்தும் பெண்கள் கூட்டத்தைக் குறிப்பிடுகையில் ‘ர்’ விகுதியை விடுத்து பெண்பால் விகுதியுடன் ‘கள்’ விகுதி சேர்த்தும் விளிக்கும் வழக்கு ஒழிவதாகவே இல்லை.

ஆண் உயர்ந்தவன் என்கிற கருத்தில் பன்னெடுங்காலமாகப் புழங்கப்பட்டு வந்த ஆண்மொழியை மாற்றிக்கொள்வது என்பது மிகச் சிறிய திருத்தம்தான்; ஆனால் அந்த மிகச் சிறிய திருத்தத்திற்கே உடன்படாத சமூகத்திலிருந்து ஆண்மொழியினூடாகப் புறையோடியிருக்கும் கருத்தாக்கங்களைக் கொண்ட கலை இலக்கிய வெளியில் பெண்மொழியையும் பால் பொதுமை மொழியையும் உள்ளீடாக்குவதற்கு நாம் பெரிய உழைப்பையும் இலக்கிய/இலக்கண மறுகட்டமைப்புகளையும் நிகழ்த்த வேண்டியுள்ளது. மொழியை அறிவியல் படுத்தவும் பால் பொதுமைப் படுத்தவும் நாம் போராட வேண்டியிருக்கிறது.

பாலினம் போன்ற பாகுபாடுகளை வலியுறுத்தியும் மிகைப்படுத்தியும் அழகியல் படுத்தியும் காட்டுகின்ற அல்லது முயற்சித்து இருக்கின்ற கலை இலக்கியப் படைப்புகளை நாம் சமரசமின்றி விமர்சிக்கவும் சமத்துவச் சிந்தனைகளுடன் மீளாக்கம் செய்யவும் வேண்டும்.

பெண்கள் பரவலாக எழுத வருவதை ஏற்றுக்கொள்ளாமல், “பெண்கள் குப்பை போல எழுதிக் கொட்டி வருகின்றனர்; பெண்களின் மொழிக் கையாளுகையில் அழகியல் இருப்பதே இல்லை; பெண்கள் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை என்று எப்பொழுதும் எழுத்தில் ஒப்பாரி வைத்துக்கொண்டே இருக்கின்றனர்; பெண்கள் எதை எழுதினாலும் லைக் கிடைத்துவிடுகின்றது” போன்ற வன்மங்களைத் தொடர்ந்து பலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் மொழியில் கிடைக்கின்ற தொன்மையான இலக்கியங்களான சங்க இலக்கியங்களின் காலத்தில் முப்பத்தி இரண்டுக்கும் மேலான பெண்புலவர்கள் என்னும் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கிய பெண் எழுத்தின் பயணம் பெயர் சொல்லும் அளவில் நீதி இலக்கியக் கால ஒளவையார், பக்தி இலக்கிய வகைமையில் காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என்று எண்ணிக்கை அளவில் பெண்ணெழுத்தின் இருப்பு தொய்ந்து வந்த இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியை இன்றைய பெண்கள் நிரப்புவதற்கு இன்றிருக்கும் பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கைகூடப் போதாது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் பொன்னாகவும் வைரமாகவும் விளைந்து காய்த்தனவோ என்று பார்த்தால் ஆண்மொழி என்கிற குப்பையை அழகியலுடனும் பெண் வெறுப்புடனும் கொட்டியதைத் தவிர வேறெதையும் ஆண்களின் எழுத்து செய்திடவில்லை என்பது கண்கூடாகத் தெரிகின்றது. அக்குப்பைகளைக் கூடுதலாகக் கிளறிப் பார்த்தால் கூறியது கூறல் மட்டுமே நிகழ்ந்து வந்திருக்கின்றது தெரியவரும்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள”

(திருக்குறள்1101)

என்று அன்றிலிருந்து பெண்ணுடலில்தான் அனைத்து இன்பங்களும் இருக்கின்றன என்பதைச் சொல்லி, பெண்ணை போகப் பொருளாகக் கடத்தும் வேலையைத்தான் இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் ஆண்மொழி செய்து வருகின்றது. கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றறிந்தும் மகிழச் செய்யும் நிலை காமத்தில் உண்டு என்று வழிநடத்த ‘அறிவு நிறை மொழி வளமும்’ பெண்ணின் தேவையோடும் விருப்பத்தோடும் நிகழ்கின்ற காம உறவில் மட்டுமே முழுமையான இன்பங்கள் வெளிப்படும் என்று கூற ‘பெண் மொழியும்’ இடம்பெறாமல் போனதால் ஆண்மொழி ஜனநாயகத்திற்கு எதிரான பாலினப் பாகுபாட்டு மொழியாக்கங்களை அழிக்க முடியாத அளவில் படைத்துக் குவித்து வைத்திருக்கின்றது.

சங்க இலக்கியத்தில் அல்குல் (பெண்ணுறுப்பு) பற்றிய பாடல்களுக்கும் ஒப்புமை வியப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. உதாரணமாக,

பைவிரி அல்குல் கொய்தழை தைஇப்

பல்வேறு உருவின் வனப்புஅமை கோதை”

(குறிஞ்சிப்பாட்டு:102-103)

என்கிற செய்யுளில் படமெடுத்த பாம்பின் தலைப் பகுதியையும் அல்குலையும் ஒப்புமைப் படுத்தியிருப்பார் கபிலர். ஆனால், இன்றைக்குப் பெண்ணுறுப்பான அல்குலைக் குறிக்கும் சொற்கள் கெட்ட வார்த்தைகளாகவும் அருவருப்புக்குரியனவாகவும் மாறியிருக்கின்றன. சங்க இலக்கியத்தில் ஆண்களின் புணர்குறி குறித்த செய்திகளும் ஒப்புமைகளும் காம நிமித்தமாகப் பெண்மொழியில் இடம் பெறவே இல்லை; அதன் விளைவை நாம் எங்கு பார்க்க முடியுமென்றால் காம உறவைத் தவறானதாக அவதூறு செய்திருக்கும் ஆக்கங்களில் பெண்ணுறுப்பை மட்டும் இழிவுபடுத்தி அருவருக்கத்தக்கனவாகப் புனைந்துள்ள படைப்புகளில் பார்க்கலாம். உதாரணமாக,

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை

கண்ணால் வெருட்டி முலையால் மயக்கி கடிதடத்து

புண்ணாங் குழியிடைத் தள்ளி என் போத பொருள் பறிக்க

எண்ணாதுனை மறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே” (திருஏகம்ப மாலை23)

என்கிற பட்டினத்தார் பாடலையும்,

சட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை

மாமேரு என்றுவமை வைத்து கூறுவர்

கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்

கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே” (பாம்பாட்டி சித்தர் பாடல்52)

என்கிற பாம்பாட்டி சித்தரின் பாடலையும் எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற எண்ணற்ற பாடல்கள் பெண் வெறுப்பையும் பெண்ணுறுப்புகளை இழிவுபடுத்தியும் வந்திருக்கின்றன. அக்காலகட்டங்களில் ஆண்கள் முறையற்ற வழிகளில் பல பெண்களுடன் உறவு கொண்டதை இடித்துரைத்துத் திருத்துவதற்கும் புணர்குறியின் தூய்மையின்மையைப் பழித்துரைத்துப் பதிவு செய்வதற்கும் பெண்களுக்கு இடமே கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக அறிவுக்கும் இயற்கைக்கும் புறம்பான கருத்துகளை இலக்கியமாக்கி வந்த நிலையில், இன்றுதான் எழுத்தின் வசம் வந்திருக்கும் பெண் படைப்பாளர்களையும் படைப்புகளையும் விமர்சிக்க வருபவர்கள் இரண்டாயிரமாண்டு கால ஆண் எழுத்தின், ஆண்மொழியின் அவலங்களைக் கொண்டாடிப் பிழைக்காமல் இருக்கவும் முயல வேண்டும்.

பெண் எழுத்தின் மீது இத்தனை வன்மங்கள் வீசப்படுவதைப் போலவே பெண்ணியத்தை அணுகுவதிலும் இங்கு மிகப் பெரிய சிக்கலைக் சமூகம் கட்டமைத்திருக்கிறது. “பெண்ணியம் அல்லது பெண் சுததந்திரம் என்பது சமூகத்தின் பண்பாட்டை, மரபைப் பாதிக்காத எல்லைக் கோடுகளுக்கு உட்பட்ட சுதந்திரத்தைக் கொண்டது” போன்ற வரைமுறைகளைப் பழமை பாராட்டும் மரபில் செயல்படுகின்ற கல்விப் புலங்களும் விழுமியக் காவலர்களும் வகுத்து வருகின்றனர்.

விழுமியக் காவலர்களைப் பொருத்தவரையில் பெண்கள் கல்வி கற்பதையும் பணிக்குச் செல்வதையும் பெண்ணிய அளவுகோளுக்குப் போதுமானதாக வைத்துக் கொள்கின்றனர். அதற்கு மேலான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பெண்ணாதிக்கமாகக் கட்டமைக்க முயன்று வருகின்றனர். எனவே, பெண்ணியச் சிந்தனையாளர்கள் தங்களின் பெண்ணியக் கருத்தாக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல என்று ஒவ்வொரு முறையும் சத்தியம் செய்து விளக்க நேர்கின்றது. பெண்களின் உரிமைகளை உறுதி செய்வது/உறுதி செய்யப் போராடுவது, பாலினச் சமத்துவத்தை நிறுவுவது/நிறுவ முயற்சிப்பது, ஆணாதிக்க வாழ்வியலையும் கருத்தாக்கங்களையும் தீவிரமாக எதிர்ப்பது போன்ற ஜனநாயக சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட நீதியுணர்வு பெண்ணியம்.

ஆணாதிக்கச் சிந்தனைகளை எவர் கொண்டிருந்தாலும் பின்பற்றினாலும் அதை எதிர்ப்பதும் அடையாளப்படுத்துவதும் பெண்ணியத்தின்பால் வரும். பாலினப் பாகுபாட்டை வலியுறுத்தும் பாதுகாக்கும் வடிவங்கள் எதுவாகினும் அதை எதிர்ப்பதும் பெண்ணியம்தான். அது சாதியாக, மதமாக, கடவுளாக, கட்சியாக, குடும்பமாக, குல வழக்கமாக, கல்வியாக, பண்பாடாக, வாழ்வியலாக என எந்த வடிவத்தில் இயங்கினாலும் அவற்றைக் கட்டுடைப்பதும் ஒழிப்பதும் பெண்ணியம். யாரரையும் புண்படுத்துவது பெண்ணியத்தின் நோக்கமல்ல; இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிரான வாழ்வியல் சிந்தனை கொண்டவர்கள் புண்பட்டுத் திருந்தினால்தான் இந்தச் சமூகம் பண்படுமெனில் பாலினப் பாகுபாட்டு விரும்பிகளைப் பெண்ணியம் கேள்வி கேட்கும்; வேண்டுமானால் குற்றம் சுட்டி சாடவும் செய்யும்.

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்ணியத்திற்கு எதிரான இத்தகு எதிர்வினைகள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் வெள்ளந்தியான தாய்மார்களைப் பெற்ற கடைசி தலைமுறையினர் நாம்தான் என்று கண்ணீர் விட்டுக்கொண்டு அறிவும் திறமையும் நிறைந்த பெண்களையும் அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள தயாராகி வருகின்ற பெண்களையும் எதிர்கொள்ள விரும்பாமல் பழைமை பாடுகின்றனர்.

பாலினச் சமத்துவத்தை ஏற்றுக் கொள்வதிலேயே இங்கு பலருக்குப் பிரச்னை இருப்பதால் பாலினச் சமத்துவத்தை நோக்கிய மாற்றங்களையும் விளைவுகளையும் கையாளுவதிலும் எண்ணற்ற சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இத்தகு சிக்கல்களால் பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அன்றாடப் பணிகளில் ஆண்கள் தங்களின் சரிபாதி பங்களிப்பை முழுமையாகக் கொடுக்க மறுப்பதாலும் பழக்கமாக்கிக் கொள்ள முயலாததாலும் பெண்கள் தொழில் சார்ந்த பணிகளுக்கிடையில் அன்றாட வீட்டுப் பராமரிப்புப் பணிகளையும் கவனித்து வருவதால், பெண்களின் ஓய்வு நேரம் முற்றிலும் சுரண்டலுக்கு உள்ளாகி, பெண்களின் உளவியல் மற்றும் உடல் நலம் கேள்விக்குறியாவதும் தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளில் சோர்ந்து போவதுமான நிலை ஏற்படுகின்றது.

“சாதித்த பெண்கள் எல்லாம் வீட்டையும் பார்த்து வேலையையும் பார்த்துதான் வென்று வந்திருக்கின்றனர்” என்று முந்தைய தலைமுறைப் பெண்களின் வரலாறுகளைக் காட்டி இதுதான் பெண்ணியம் என்று இன்றைய தலைமுறைப் பெண்களுக்குப் பாடம் நடத்தி அன்றாடப் பராமரிப்புப் பணிகளில் இருந்து, ஆண்கள் விலகி நிற்க வழிவகை செய்கின்றனர். பெண்களின் வெற்றி என்பதற்கும் பாலினச் சமத்துவச் சமூகம் என்பதற்கும் மிக நீண்ட இடைவெளி இருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தில், பெண்கள் முதலமைச்சராவதாலும் குடியரசுத் தலைவராவதாலும் அச்சமூகம் பாலினச் சமத்துவத்தை அடைந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்பு மற்றும் அரசியல் பங்கேற்பில் பாலின ரீதியில் சம பிரதிநிதித்துவம் நிலவும் நாளிலேயே ஒரு சமூகத்தில் பாலினச் சமத்துவம் ஏற்பட்டுவிட்டதாகக் கருத முடியும்.

இன்றைக் காட்டிலும் கூடுதலான பாலின இடைவெளி நிலவிய முந்தைய நூற்றாண்டுகளில் பெண்கள் வெளிவந்து சாதனைகள் நிகழ்த்திய வரலாறும் இன்று நிலவும் பாலின இடைவெளியோடு போராடி சாதனைகள் புரிந்துவரும் பெண்களின் வாழ்க்கையும் வளர்ந்து வரும் பெண்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வழிகாட்டிகள்; ஆணாதிக்கச் சமூகத்தின் கடுமையான பாலினப் பாகுபாட்டு நம்பிக்கைகளின் போக்குகளை முற்றிலுமாக மாற்றியதில் சாதித்த பெண்களின் பங்களிப்பு அளப்பறியது. அப்பெண்களின் வாழ்க்கையை நினைவில் கொள்ளவும் போற்றவும் தவறக் கூடாது. இருப்பினும் பாலினச் சமத்துவத்தை நடைமுறைப்படுத்த விருப்பமின்றி அப்பெண்களின் வாழ்க்கையைக் காட்டி “வீட்டையும் பார்த்து, தொழிலையும் பார்த்து சாதிப்பதுதான் சாமர்த்தியமான பெண்ணுக்கு அழகு” என்று நாடகமாடி வரும் கூட்டத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். பெண்களின் முன்னேற்றத்தோடு நின்றுவிடுவதல்ல பெண்ணியம்; பெண்ணியத்தின் நோக்கம் என்பது பாலினச் சமத்துவத்தை நிறுவுவதில் இருக்கின்றது.

பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களே! “குடும்பத்துக்காக நாயாக/மாடாக உழக்கிறோம்” என்று உங்களைப் புலம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஆண்களை (உங்களை) மையமாகக் கொண்ட ஆணாதிக்க வாழ்வியலில் எத்தனை காலம்தான் உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்; உங்களையும் ஆட்டுவித்து வருகின்ற ஆணாதிக்கத்திலிருந்து விடுவிக்கும் சிந்தனைதான் பெண்ணியம்; வாருங்கள் ஆண்களே, பாலினச் சமத்துவத்தோடு பெண்களும் ஆண்களும் இணைந்து பணியாற்றி, குடும்பத்தின் பொருள் தேவைகளைப் பகிர்ந்து பூர்த்தி செய்யலாம். வாருங்கள் ஆண்களே, பேரல் போல இடுப்பையும் குனிந்து தரையைத் தொடச் சிரமப்படும் அளவு தொப்பையையும் கொண்டு எத்தனை காலம்தான் நீங்களும் சிரமப்படுவீர்கள், ஜிம்முக்கெல்லாம் சென்று காசை வீணடிக்காதீர்கள், வாருங்கள் பெண்களோடு சேர்ந்து சமைப்பது, துவைப்பது என்று ஜாலியாக உடற்பயிற்சி செய்து கொண்டே அன்றாடப் பராமரிப்புப் பணிகளில் சரிசமப் பங்களிப்பைக் கொடுத்து மகிழலாம்.

ஆண்களே, சுவை மிகுந்த உணவுகளை விரும்பும் உங்கள் நாக்குகள், அம்மி அரவை உணவுகளையும் செய்து கொடுத்த முந்தைய தலைமுறைப் பெண்களையும் விதந்தோதியும் இருக்கின்றது; மனைவி சமையல் ஜோக்குகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை எல்லாம் நினைவில் கொண்டு, அம்மியையும் ஆட்டுக்கல்லையும் வீட்டின் முற்றத்திலோ மூலையிலோ வைத்து அரைத்து சுவை கூட்டிச் சமைத்தும் உண்டும் மகிழுங்கள்; அதற்கான வாய்ப்பையும் வெளியையும் பாலினச் சமத்துவம் நிலையாக அமைத்துக் கொடுக்கும்.

உடன் பிறந்த பெண்களுக்குச் சீர் செய்தே சீரழிந்து போவதாகப் புலம்பும் ஆண்களே, பாலினச் சமத்துவச் சமூகத்தில் சீர் என்று வரதட்சணை தரும்/பெறும் குற்றங்களில் ஈடுபடுவதற்கான மற்றும் ஈடுபடுத்துவதற்கான அழுத்தங்கள் இன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில் இருப்பது போல் இருக்காது; சொத்திருந்தால் பெண்களும் ஆண்களும் சரி பாதியாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்; சொத்து இல்லை என்றாலும் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பாலினப் இடைவெளி இன்றி கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பையும் சுதந்திரத்தையும் பாலினச் சமத்துவ சமூகத்தில் உள்ள குடும்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் ஆணாதிக்க வாழ்வியலில் இருந்து வெளியேறி வாருங்கள் ஆண்களே, இணைந்து பாலினச் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கலாம்.

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.