பாஷா படத்தின் ‘ஸ்டைலு ஸ்டைலுதான்’ பாடல் வரிகள் பட்டித்தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய ஹிட் கொடுத்து எல்லாரையும், குறிப்பாக ரஜினி ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. வரியோட அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பாட்ட முழுசா மனப்பாடம் பண்ணிய (vibe) தலைமுறை நாங்கள்.

28 வருஷத்துக்கு முன்ன வந்த படம்னாலும், படத்தின் பாடல்கள் நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் இன்னும் என் ப்ளே லிஸ்டில் ரிப்பீட் மோடில்தான் இருக்கும். காலமும் கல்வியும் கொடுத்த படிப்பினை பாடல் வரிகளின் பக்கம் நம் கவனத்தை ஈர்த்தது.

அதில், “ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி” என்கிற வரியைக் கேட்கும் போதெல்லாம் நினைவுக்கு வருவது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் வாசுகியின் பேச்சுதான், ‘பொண்ணுக்கு ஏழு மணிக்கு மேல வெளிய வேலையே இருக்காதா?’

புருசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதைவிட அவங்களுக்கு வேற என்ன வேலை இருக்கப் போகிறது? இருக்காது, இருக்கவும் கூடாது என்பதுதானே சமூகத்தின் எழுதப்படாத விதி. ‘நல்ல மனைவி’ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல புராண இதிகாசங்கள் புரட்டியது போதாது என்று புலவர்கள் முதற்கொண்டு தற்போது கவிஞர்கள் வரை தங்களது பணியைச் செவ்வனே செய்துகொண்டு வருகிறார்கள்.

மனைவிக்கு மட்டும் இல்ல, ‘நல்ல’ அம்மா, மகள், மருமகள், காதலின்னு பெண்களின் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களுக்கு அன்பின் பெயரால், அக்கறையின் பெயரால், காதலின் பெயரால், கருமாந்திரம் கவிதைங்கிற பெயரால் இவர்கள் செய்கிற மூளைச்சலவை இருக்கிறதே… அது இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

அத்தகைய வார்த்தைகள் ஆண்களுக்கும் ஆண்மைய சிந்தனை ஊறிப்போன காட்டுமிராண்டு சமூகத்திற்கும் உறுத்தலாவே இருக்கிறது இல்லை. இருக்காது என்பதுதானே நிதர்சனம்.

இவற்றையெல்லாம் வெறும் பாட்டாகவோ படமாகவோ இல்லை கவிதையாகவோ மட்டும் கடந்து போய்விட முடியாது. இது சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது பல ஆண்டுகளாக இருந்துகொண்டே வருகிறது. இத்தகைய எண்ணங்கள் பொதுச் சமூகத்தின் புத்தியில் ஒரு பரவலை உருவாக்குகிறது. அதுதான் உண்மை என்றும் பண்பாடு, கலாச்சார கடப்பாறை என்றும் நம்மை நம்பவைக்கும் வேலையை விவரமாகச் செய்துவருகிறது.

குடும்பங்களில், கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில், பொது வெளிகளில் என அதன் நடவடிக்கைத் தொடர்கிறது.

‘பொழுது சாய்ஞ்சிருச்சி வெளிய உனக்கு என்ன வேல?, மக்ரீப்ல (மாலை வேலை) வாசல்ல எதுக்கு நிக்குற?, ராத்திரி 8மணிக்கு மேல மொட்ட மாடில உனக்கு என்ன இருக்கு? 10மணி வரைக்கும் எவன் உனக்கு காலேஜ் தெரந்து வெச்சிருக்கா?’ இத்தகைய கேள்விகள் என்னை மட்டும் இல்லை, படிக்கிற, வேலைக்குப் போகிற, இன்னும் பல காரணங்களுக்காக வெளியே செல்லும் பெண்களின் காதுகளைக் குடைந்தெடுக்கும் கேள்விகள் இவை.

இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் 5.4.23 அன்று நடந்த மாணவர்களின் போராட்டமானது மிகவும் முக்கியமானது. தாய் பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, மாணவியர் விடுதி, நூலக நேரத்தை அதிகரித்தல் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி நடந்த போராட்டம் அது. அவர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று விடுதிக்குச் செல்லும் நேரத்தை 8 மணியிலிருந்து 10 மணியாக உயர்த்த வேண்டும் என்பதே. நேர நிர்ணயமே கூடாது என்பதுதான் இலக்கு என்றாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்னும் பட்சத்தில் நேரத்தையாவது உயர்த்திக் கேட்கலாம் என்பதுதான். இதற்குப் பல எதிர்ப்புகள் அனைத்து மட்டங்களிலிருந்தும் எழுந்தன. இருப்பினும் தற்போது 10மணி வரை நேரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. விடுதி வளாகத்திற்குள் பெண்கள் நடமாடவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

போராட்டத்திற்கு முன்னதாக விடுதி காப்பாளரிடமோ நிர்வாகத்திடமோ எவ்வளவு முறையிட்டும் விடுதிக்குள் செல்லும் நேரத்தைத் தள்ளிப் போடும் நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அப்பொழுதெல்லாம் அவர்கள் கேட்டது, ‘எதுக்கு 10மணி வரைக்கும்? பொம்பள பசங்களுக்கு வெளியே என்ன வேல இருக்கு? உங்க பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?’ ஆண்கள் விடுதி 24×7 திறந்திருப்பது குறித்தெல்லம் இவர்களுக்கு இத்தகைய கேள்விகள் வந்ததே கிடையாது. ஏன் ஆண்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா? அவர்கள் குறித்து பெற்றோருக்கு அக்கறை இருக்காதா?

பெண்கள் விடுதிக்கு எது வேண்டுமென்றாலும் ஆண்கள் விடுதி காப்பாளரிடம் முறையிட வேண்டிய சூழல் இருந்தது. பெண் விடுதிக்கு காப்பாளார் இருக்கிறார். பெண்கள் விடுதி காப்பாளர் ஒரே ஒருமுறை மட்டுமே மாணவிகளைச் சந்திக்க வந்தார். அவரிடம் பகுதிநேர வேலைக்குச் செல்லும் மாணவிகளும் இருக்கிறார்கள், அவர்கள் தாமதமாக வந்தால் கதவைத் திறந்துவிடுவதில் பிரச்னை இருக்கிறது என்று முறையிட்டதற்கு, ‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக ஒன்றும் இந்த விடுதி கட்டித் தரப்படவில்லை. அப்படிச் செல்வதாக இருந்தால் டி.சி. வாங்கிவிட்டுச் செல்லுங்கள்’ என்று ஒரே போடாகப் போட்டார். அதன் பிறகும் வந்த காப்பாளரும் ஆண் விடுதி காப்பளர் என்ன சொல்வாரோ அதை மட்டும் செய்தால் போதும் என்பதுபோல் இருப்பார்.

இதே கோரிக்கையை ஆண்கள் விடுதி காப்பாளரிடம் வைத்ததற்கு, “பகுதி நேர வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கிறார்களா என்ன? அப்படிச் செல்வதாக இருந்தால் அவர்கள் துறைத் தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கி வர வேண்டும்” என்றார்.

ஆண்கள் எல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வந்திருப்பது போலவும், பெண்கள் சும்மா படிக்க வீட்டில் இருப்பவர்கள் அனுப்பி வைத்ததுபோலவுமான நடை அது. வேறு ஒரு தருவாயில், “பெண்கள் விடுதியைச் சுற்றி இரும்பு வேலியை அமைத்து தருகிறேன். அதற்குள் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சுற்றுங்கள். சிறையில் இருப்பது போன்று இருக்கும். அது உங்களுக்கு ஒகே வா” என்று மிரட்டல் விடுத்தார்.

விடுதி காப்பாளர்கள் பெரும்பாலும் ஒரு துறையின் தலைவராகத்தான் இருக்கிறார்கள். இதனால் தாமதமாக வரும் மாணவி தனது துறையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது துறை மூலமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாணவிகள் ஆளாகின்றனர். ஒரு பெரிய கல்வி நிறுவனத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் நடவடிக்கைகளே இப்படியாக இருக்கும் பட்சத்தில், ஒரு சாமானிய மக்களின் மனநிலையை எவ்வறு அளவிடுவது? ஆண், பெண் சமத்துவத்தைக் கற்றுத் தருவதும், அதைப் பழக்கப்படுத்தக்கூடிய இடமல்லவா கல்வி நிலையங்கள். கல்விநிலையங்களே இத்தகைய பாகுபாடுகளை நிகழ்த்துவது எத்தகைய சமூகத்தை உருவாக்கும்?

இது ஒரு பல்கலைக்கழக விடுதிக்கு மட்டும் உள்ள விதிமுறைகள் அல்ல, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கி இருக்கும் போதும் இதே நேரக் கட்டுபாட்டுகள் இருந்தன. சென்னை சுற்றி இருக்கக்கூடிய மகளிர் கல்லூரி விடுதிகள், தனியார் பெண்கள் தங்கும் விடுதிகள் அனைத்திலும் இதே கட்டுப்பாடுகள் இருந்துவருகின்றன. சில விதிவிலக்குகளும் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நேரக்கட்டுப்பாடு என்பது இருந்துவருகிறது. அப்படி நேரம் தாழ்ந்து வரும் மாணவிகள் மீது ஒழுக்கம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நிறுவனப்படுத்தப்பட்ட சமூக ரீதியான ஒடுக்குதல்கள் பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.

ஐ.டி. துறைகள் போன்ற இன்னும் சில துறைகளில் பெண்கள் இரவு நேரத்தில் வேலைக்குச் செல்கின்றனர். அப்படி இருக்கையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் மிகப் பெரிய பங்கு இருப்பதை அனைவரும் உணர வேண்டும். ஆண்கள் தனக்குச் சாதகமாகப் பெண்கள் மீது திணித்தவந்த நேரக்கட்டுபாடுகள் முதல் சமூக, பண்பாட்டு ரீதியான கட்டுபாடுகளையெல்லாம் உடைத்து பெண்கள் வெளிவரத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கான நேரத்தை நீங்கள் வகுக்காதீர்கள். அதற்கு உங்களுக்கு எத்தகைய தார்மீக உரிமைகளும் கிடையாது. எங்கு, எப்போது, எதைச் செய்ய வேண்டும் என்பதை அவர்களே முடிவெடுத்துக்கொள்வார்கள். பெண்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து, கட்டுப்பாடுகளை விதிக்காதீர்கள்.

படைப்பாளர்:

மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.