அறை எண் ஏதுமற்ற ஆண்ட்ரூஸ் விடுதி!

ஒரு முறை எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லியிருந்தார், “கிராமங்களில் இருந்து நகரம் வருபவர்கள் தங்கள் கிராமத்து நினைவுகளை சட்டைப் பைகளில் அடைத்துக் கொண்டே வருகிறார்கள்” என்று. அது உண்மைதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். வாழ்க்கை ஒன்றென்றாலும் அனுபவங்கள் வேறு வேறுதான். சுகமான, சோகமான, குதூகலிக்கிற, கோபம் கொள்கிற அனுபவங்களை நினைவுகளில் அசைபோட்டபடியே அழைத்துச் செல்கிறது வாழ்க்கை.

தமிழின் முக்கியமான கவிஞர் ஒருவர் சொன்னார், எப்போதெல்லாம் கஷ்டத்தைச் சந்திக்கிறேனோ, அப்போது என்னை மீட்பது சுகமான பழைய நினைவுகள்தான் என்று. அப்படித்தான் ஒவ்வொருவருக்கும்.

நினைவுகளுக்குப் பலம் பொருந்திய சக்தி இருக்கிறது. அது ஆக்கவும் அழிக்கவும் செய்கிற மாய யுக்தியைக் கொண்டிருக்கிறது. பல எழுத்தாளர்கள் நினைவுகளை மீட்டே கதைகளும் நாவலும் எழுதி வருகிறார்கள் என்பதே இதற்கு சாட்சி.

‘ஆண்ட்ரூஸ் விடுதி-அறை எண் ஏதுமில்லை’ என்ற நாவலும் அப்படித்தான். கால ஓட்டத்தில் மறந்தும் மறைந்தும் போகாமல் இருக்கிற நினைவுகளை நாவலாக்கி தன்னை மீட்டெடுத்திருக்கிறார், இந்த நாவலை எழுதியுள்ள எஸ்.சுஜாதா.

இதற்கு உலகைக் கொடூரமாக மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா ஊரடங்கும் உதவியிருக்கிறது அவருக்கு.

பள்ளி மாணவிகளின் விடுதி வாழ்க்கையை யாராவது இவ்வளவு விரிவாக எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

விடுதி என்பது கட்டடங்களுக்குள் அடைபட்டிருக்கிற வாழ்க்கைதான் என்றாலும், அதில் அடைபட்டுவிடாத பறக்க நினைக்கிற ஆசைகளும் ஏக்கங்களும் கேலிகளும் இயலாமையும் கண்ணீரும் இந்த நாவலில் இயல்பாக வெளிப்படுகின்றன.

வாழ்ந்து பழக்கமில்லாத ஹாஸ்டலில், வந்தது முதல் தூங்குவது வரையிலான வேண்டா வெறுப்பை, ஆச்சரியத்தை, சகிப்பின்மையை, அறுவறுப்பை பிறகு ஹாஸ்டல் இட்லி போல பழகிவிட்ட அனைத்தையும் அழகாக விவரிக்கிறார் சுஜாதா.

சிலுவைச் செல்வி, தேன்மொழி, அமுதா, வார்டன், ஸ்டெல்லா, ஆக்னஸ், சித்திபேகம் என வருகிற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை பாதிக்கிறார்கள்.

சில இடங்கள் நம்மை அறியமாலேயே கண்ணீரை வரவழைத்து விடுகிறது. எஸ்.சுஜாதாவின் ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தும் கதை சொல்லும் வெளிப்படை உத்தியும் அதற்கு காரணம்.

இந்நாவலை வாசிக்கிற எவருக்கும் தங்கள் பள்ளி, கல்லூரி நினைவுகள் இயல்பாக அருகில் வந்து அமர்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. எஸ்.சுஜாதாவிடம் இருந்து இதுபோன்ற இன்னும் சிறந்த நாவல்கள் வெளிவரும் என நம்பலாம்.

  • ழகு

திரும்பிப் பார்க்க வைக்கும் அழகான வாழ்க்கை!

நாவலைப் படிக்க ஆரம்பித்த பிறகு, எப்போது கதைக்குள் தொலைந்தேன் என்று தெரியவில்லை. காரணம், எல்லோருக்குமே நெருக்கமான கதைக்கரு.

ஓர் இயல்பான வாழ்க்கையோட்டத்தில் வரும் சராசரியான மனிதர்கள், ஆர்ப்பாட்டமில்லாத நிகழ்வுகள், அதைக் கற்பனை கலக்காமல் உள்ளதை உள்ளபடியே தந்த போதும் எப்படி இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது! வாழ்க்கை எத்தனை ஆச்சரியங்களைக் கொண்டது என்பதை வாழும்போது நாம் உணருவதைவிட, வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது நன்றாகப் புரியும் என்பதை அவ்வளவு அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.

நெகட்டிவ்வான விஷயங்களை அலசி ஆராயாமல், பாசிட்டிவ்வான, அந்த வயதுக்கே உரிய ரொம்பவும் வெளியுகத்தால் மாற்றப்படாத ஒரிஜினல் முகங்களுடன் எல்லோருக்கும் தங்களைக் கதையுடன் இயல்பாகக் கலந்து பொருத்திப் பார்த்துக்கொள்ள வசதியாக இருந்தது.

  • பிருந்தா, கனடா

நீங்கா நினைவுகள்…

பள்ளி நாட்களைவிடக் கல்லூரி நாட்கள் நீங்கா நினைவுகளாக இருக்கும். அதிலும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய அனுபவத்தையும் புரிதலையும் தரும். நான் 3 வருடங்கள் தங்கிப் படித்த விடுதியும் எனக்கு அந்த அனுபவங்களைத் தந்தது. ஆனால், பெண்களின் விடுதி அனுபவங்கள் எனக்குப் புதிதாக இருந்தன. என்னை சுஜாவாக நினைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினேன்.

ஆக்னஸின் குறும்புகள், குறிப்பாகக் கர்த்தர் காட்சி அளிக்கிறார் பகுதி என்னை ரொம்பவே ரசிக்க வைத்தது. தேன்மொழியின் அன்பும் அவரின் இயலாமையும் நெகிழ்ச்சியாக இருந்தது. வசந்தியின் பிம்பம் உடையும்போது சுஜாவுடன் நானும் அழுதேன். ஸ்டெல்லா எவ்வளவு அற்புதமான கேரக்டர்! அந்த வயதிலேயே அவருக்கு இருக்கும் தெளிவு, துணிவு, நகைச்சுவையைக் கண்டு வியந்தேன். அவரின் கதையைப் படிக்கும்போது கண் கலங்கிவிட்டேன். ஸ்டெல்லாவின் பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.

இலங்கைப் பெண் ரோசி, ”நீங்க யுத்தத்தை டிவியில் பார்த்திருப்பீங்க. ஆனா, நான் கண் முன்னாடி பார்த்திருக்கேன். அந்தக் கொடுமைகளை நேரடியாக அனுபவிச்சு இருக்கேன்” என்றவுடன் என் துபாய் நண்பன் நினைவுக்கு வந்துவிட்டான். அவனும் இலங்கை யுத்தத்தில் அகதியாக கனடாவுக்குத் தப்பி ஓடி, படித்து, துபாயில் பணி புரிந்தான். அவன் சொல்லும் கொடுமைகள் நினைத்துப் பல நாட்கள் அழுதிருக்கிறேன்.

இப்படி சுஜாவின் அனுபவத்தில் சந்தித்த அனைத்து நண்பர்களும் மனத்தைத் தொட்டு விடுகின்றனர். புத்தகத்தைப் படித்துவிட்டு என் விடுதி வாழ்க்கையை அசை போடத் தொடங்கினேன். நாம் முதுமை அடைந்தவுடன் நம்முடன் நீங்காமல் நிற்பது இந்த மாதிரி நினைவுகாள்தாம்!

  • டி. பிரகாஷ், தஞ்சாவூர்