சாபம்

மகிழ்ச்சி எங்கோ தொலைவில்
விண்மீனாகிவிட்டது

கொதிக்கும் தண்டவாளத்தை
முத்தமிடத் துடிக்கின்றன உதடுகள்

புழு வண்ணத்துப் பூச்சியாவதைப் பார்த்தேன்
பிறகு வண்ணத்துப் பூச்சி என்னவானது

மரணம் தேய்கிறது வளர்கிறது
முற்றிலும் இல்லாதொழிந்தது போல்
மறைந்திருந்து விட்டு
முழுதாய் பிரகாசிக்கிறது

பெரும் இரைச்சல்
சட்டென மௌனித்ததில்
செவிடானது மனது
குருடானது வாழ்வு

கடும் இருளில்
காணமுடியாத பாதைகளில்
பயணம் நின்றுவிட

சுற்றிலும் வளர்கிறது காடு
நகராத பாறை நான்


தன் மரணக் குறிப்பு 1

வலையில் அகப்பட்ட மீன் இந்த மனம்
சிலப்போது கடல் திரும்ப முடிவதில்லை

சிலசமயம்
கடல் தாண்டும் பறவை அது
எங்கும் மரமே இல்லாத
நீர்ப்பாலை

உன் அன்பு
அது எப்போதும் இருக்கிறது
அதுதான் என்னைக் கொண்டு செலுத்துகிறது
பலவேளைகளில் எனக்குதான்
அன்பின் முகவரி மறந்துவிடுகிறது

pexels.com

தன் மரணக் குறிப்பு 2

தற்கொலைக்கு முன்
கடிதமெழுதுவது
அவ்வளவு முக்கியமானது

இந்த உலகிற்கு காரணங்கள் முக்கியம்
தரவுகள் முக்கியம்
சம்பந்தப்பட்டவர்கள் தவிர
மற்றவர்கள் காரணமில்லை என்பது அதிமுக்கியம்
எழுதப்படும் காரணம் மிக முக்கியம்
‘இதெற்கல்லாமா சாவாங்க’ என்று
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
அற்பக் காரணங்களுக்கு
வாழப்போய்விடும் உலகம்

ஒரு தற்கொலைக்குக் குறிப்பில்லை
உலகே காரணமாகிறது
உலகத்துள் நானுமிருக்கிறேன்
வாழ்வதே குற்றமாகிறது

கவிஞர்:

சே.பிருந்தா

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். நர்ஸரி ஸ்கூல் டீச்சராக, டெலிஃபோன் ஆபரேட்டராக, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக… பிறகு கொஞ்ச காலம் சென்னையில் எழுத்தாளர் அம்பையின் ப்ராஜக்ட் உதவியாளராக வேலை. சிறிது காலம் சொந்தமாக டி.டி.பி வொர்க்ஸ். தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களிடம் உதவியாளராக இருக்கிறேன். பயணிப்பதில் தீராக் காதல். புத்தகங்களுக்கு இணையாக சினிமா பார்ப்பதில், விமர்சிப்பதில் ஆர்வம் உண்டு. குழந்தைகளுக்கான கனவுலத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம். குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவது கூடவே, ‘சைல்ட் அப்யூஸ்’ குறித்த விழிப்புணர்வை (பெரியவர்கள் & குழந்தைகள்) ஏற்படுத்துவது, குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நடத்துவது போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

1995-ல் கணையாழியில் முதல் கவிதை.
1999-ல் முதல் கவிதைத் தொகுப்பு ‘மழை பற்றிய பகிர்தல்கள்’ (பூங்குயில் பதிப்பகம்), 2000-ல் ‘தேவமகள் இலக்கிய விருது’ பெற்றுத் தந்தது.
2009-ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வீடு முழுக்க வானம்’ (காலச்சுவடு பதிப்பகம்).
2014-ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘மகளுக்குச் சொன்ன கதை’ (காலச்சுவடு பதிப்பகம்). SRV School, Trichy வழங்கிய ‘படைப்பூக்க விருது 2014’.
‘கதவு திறந்ததும் கடல்’ (தன் அனுபவக் கட்டுரைகள் தொகுப்பு, தமிழினி’ வெளியீடு 2020). ‘அருவி முதல் அசுரன் வரை’ (சினிமா விமர்சனக் கட்டுரைகள், கிண்டில்). ‘கடல்’ குறுநாவல் (கிண்டில்).
‘அடிசில்’ தமிழ் இலக்கிய காலண்டர் – ஆய்வு மற்றும் உருவாக்கம்.