கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்குக்கூடப் பிடித்த கிரிக்கெட் பிரபலம் தோனி. அவரின் ஆட்டத் திறமை, தலைமைப் பண்பைத் தாண்டி அனைவரையும் கவர்ந்தது எதற்கும் நிதானமிழக்காத அவரின் பண்பு, உணர்வு சார் நுண்ணறிவு (EQ).

முன்பெல்லாம் நுண்ணறிவு அதிகமுள்ள ஒருவரை உலகமே மேதை எனக் கொண்டாடும், வேலைக்கான தேர்வில்கூட நுண்ணறிவு தேர்வே முக்கியப் பங்காற்றும். இப்போது, நுண்ணறிவைவிட உணர்வுசார் நுண்ணறிவையே (Emotional Quotient) முக்கியமான தகுதியாகக் கருதுகிறார்கள். வேலைக்கான தேர்வு, பதவி உயர்வு அனைத்திற்கும் இந்த EQ தேவைபடுகிறது.

உலகில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் பொதுவாக உள்ள சவால், உணர்வைக் கையாளுதல், குறிப்பாக பெண்களுக்கு.

நம் மகிழ்ச்சி, துன்பம், வளர்ச்சி, வாழ்க்கை தரம் அனைத்தையும் முடிவு செய்வது நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல, அதை ஒட்டிய நமது உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான நமது செயல்களும்தாம். நிகழ்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கில்லை, அதனை ஒட்டிய உணர்வைக் கையாளும் ஆற்றல் நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது.

உணர்வைக் கட்டுப்படுத்துதல் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும், கையாளுதலே நேர்மறையான விளைவுகளைத் தரும். தேவையான நேரத்தில், தேவையான இடத்தில், சரியான உணர்வை வெளிபடுத்துபவரே உணர்வு மேலாண்மையில் ஜெயிக்கிறார். உணர்வு மேலாண்மை கைவரப் பெற்ற ஒருவர் அகிலத்தை எளிதில் கவர்கிறார்.

அன்னை தெரசா ஒருமுறை ஆசிரமத்தில் குழந்தைகளின் உணவுக்காக நன்கொடை கேட்க ஒரு கடைக்குச் சென்றார். அந்தக் கடைகாரருக்கு எதுவும் தர விருப்பமில்லை. அதை அமைதியாகச் சொல்லாமல் நீட்டிய அன்னையின் கையில் எச்சில் துப்பிவிட்டார். அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் பொது காரியத்தில் ஈடுபடும் என்னை அவமானப்படுத்தி விட்டார் எனக் கொதித்திருப்போம். பெருங்குரலில் அழாவிட்டாலும் நீர் நிறைந்த கண்களுடனோ கனத்த மனதுடனோ திரும்பியிருப்போம். எதைச் செய்திருந்தாலும் எடுத்த காரியம் தோல்வி அடைந்திருக்கும். அன்னையோ புன்னகையோடு எச்சிலைத் துடைத்துக் கொண்டு எனக்களித்த பரிசுக்கு நன்றி, இப்போது என் குழந்தைகளுக்குத் தாருங்கள் எனக் கை நீட்டினாராம். தன் செயலுக்கு வெட்கப்பட்ட கடைக்காரர் பின்னர் நன்கொடை தந்தது வரலாறு.

அவர் பொறுமைக்கு இலக்கணம் கோபமே வராது, எனக்கப்படி இல்லை என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

அவரும் நம்மைப் போன்ற மனித உயிர்தான். நமக்குண்டான அத்தனை உணர்வுகளும் வாய்க்கப் பெற்றவர். ஒரே ஒரு வித்தியாசம் அதைக் கையாளும் திறன் பெற்றவர். அதுதான் அவரை அவரின் இலக்கான மனித சேவையில் உச்சத்திற்கு உயர்த்தியது.

சுருங்கச் சொன்னால் உணர்வு மேலாண்மையைச் சரியாகச் செய்யும் நபர் சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் சார்ந்த இடங்களிலும், உறவு மேலாண்மையிலும் வெற்றிகரமாக வலம்வருகிறார். சிலருக்குப் பிறவியிலேயே இந்தத் திறன் வாய்க்கும் என்றாலும் பழகிக்கொள்ளுதல் அனைவருக்கும் சாத்தியமே.

முதல் படி, இது வாழ்வு முழுவதுமான பயிற்சி சறுக்கல்களும் தவறும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுதல் நலம். இல்லாவிடில் தவறு நேரும்போதெல்லாம் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வதும் எனக்கு இதல்லாம் வராது என முடிவும் செய்துவிடுவோம்.

அடுத்து இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகக் கையாண்டிருக்கலாம் எனத் தோன்றும் நிகழ்வுகளை அமைதியாக மூன்றாம் மனிதரைப் போன்ற பார்வையுடன் உற்று நோக்குங்கள். உங்களின் உணர்வு கொந்தளிப்பால் நீங்கள் செய்த தவறுகள் உங்களுக்கே புரியும். அதற்காக வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக இதனால் நீங்கள் கற்றுக்கொண்ட பாடத்தை மனதில் நிறுத்துங்கள்.

அதே சூழ்நிலையை மறுபடியும் எதிர்கொள்ளும்போது இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

உங்களையே நீங்கள் உற்று நோக்க நோக்க எந்தச் சூழலில் உணர்வின் ஆதிக்கத்தில் இருப்பீர்கள் என்று புரியும். அந்தச் சூழல் மறுபடியும் வரும்போது எப்படி எதிர்கொள்ள வேண்டுமென மனதில் ஒரு வரைபடம் வைத்துக் கொள்ளுங்கள்.

சாதாரண சூழ்நிலையிலும் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பிடித்த உணவு, சினிமா, நண்பர்களுடன் சந்திப்பு என எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பழக்கம் சவாலான நேரத்தில் உங்களை ஆசுவாசப்படுத்த உதவும்.

ஒருவேளை நீங்கள் தனிமை விரும்பி என்றால் தனியாகப் பயணம் மேற்கொள்ளுதல், பிடித்த உணவை உங்களுக்காக மட்டும் என்றாலும் தயாரித்தல், பிடித்த பொழுது போக்கு என்று பழகிக்கொள்ளுங்கள். இசை, வாசிப்பு, ஓவியம் மற்ற ஏதோ ஒரு கலையில் உங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடுங்கள்.

இப்படி உங்களை நீங்களே உற்சாகமாக வைத்திருங்கள். ஒரு சவாலான சந்தர்ப்பத்தில் இதையெல்லாம் புதிதாகச் செய்வது கடினம். இதுவே வாழ்க்கைமுறையாக மாற்றிக் கொள்ளல் நலம்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக அமைவதில்லை. அந்த நேரத்தில் உங்களை நீங்களே சிறிது தளர்த்திக்கொள்ள மேற்கூறிய வழிகள் உதவும்.

ஆரோக்கியமான வாழ்க்கை, தினசரி உடல் பயிற்சி, சரிவிகித உணவு, சரியான தூக்கம், வேலை நேரம் போக விருப்பமான பொழுதுபோக்கு, நண்பர்களுக்கான நேரம், தினசரி வாசிப்பு என உங்கள் நாளை வடிவமையுங்கள். அதீத ஓய்வு மனதிற்கும் உடலுக்கும் கேடு.

புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். தினமும் ஒரு சிறிய விஷயம் கற்றுக் கொண்டாலும் அது தரும் உற்சாகமே தனி.

உங்களுக்கென ஒரு தனிப்பட்ட குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். அது எந்த நேரத்திலும் உணர்ச்சி விதத்தில் எந்தத் தவறான முடிவும் எடுக்க விடாது. வாழ்வதற்கான காரணம் வலுவாக இருக்கும்போது அதைச் சிறப்பாக வாழ்ந்திட வழி தேடுவோம்.

பொதுவாக நம் எதிர்மறை உணர்வுகள் எல்லை மீறும் போது, அதில் இன்னொருவரும் சம்மந்தபட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை அது அடுத்தவரின் தவறாகவே இருந்தாலும் அதை அவரின் நிலையில் இருந்து யோசிக்க முயற்சிக்கும் போது நம் மனம் அமைதி அடையும். அடுத்தவரின் நன்மை மட்டுமல்ல இந்தப் பரிவு (empathy) உங்களின் மன அமைதிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

வாங்க உணர்வு மேலாண்மையைப் பயிற்சி செய்யலாம், உலகத்தை வெல்லலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.