பேய்களை வகைப்படுத்தி, அவற்றில் ஒரு கட்டிடத்தில் வாழும் பேய்களை முதன்மைப் பாத்திரங்களாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அரண்மனை’ வரிசைப் படங்களின் நான்காவது பாகத்தில் இரண்டு குழந்தைகளின் தாயான தமன்னா இறந்த பின்னும்கூடப் பேயாக வந்து சமையல் செய்வது, துணி துவைப்பது, பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவது எனச் செத்தும் தன் கடமைகளைச் செய்து கொண்டிருப்பார். இப்படித்தான் நம் பெண்கள், “நான் இல்லைன்னா இந்த வீடே ஸ்தம்பிச்சிரும்” என்று பெருமை பேசிக்கொண்டு தன் சேவையே பெரும் பாக்கியம் என்று எண்ணிக் கொண்டு வாழ்கின்றனர் நாம்தான் வீட்டையே தாங்கிப் பிடிக்கிறோம் என்கிற மாயையில் இருக்கும் கூரைப்பல்லிபோல். அந்த மாயை உடைபடும்போது ஏற்படும் மன மாற்றங்களையும் தன் முன்னேற்றங்களையும் விரிவாகப் பேசியிருக்கும் படம் ’கூரைப்பல்லியும் கவிதாவும்’.
எழுத்தாளர் கமலி பன்னீர்செல்வத்துடன் தான் இணைந்து கூட்டு முயற்சியில் எழுதிய கதையை மைக்ரோ சீரிஸாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கீதா இளங்கோவன். ’துப்பட்டா போடுங்க தோழி’ என்கிற நகைச்சுவை மீம் வசனத்தையே தன் புத்தகத்தின் தலைப்பாக வைத்துக் கலகம் செய்தவர். ஓர் இணக்கமான, இறுக்கமான கூட்டுக்குடும்பத்தின் கதைக்களத்தின் உள்ளிருந்து பெண்ணியம் பேசியிருக்கிறார்.
வழக்கமான நாயகப் பாத்திரம், வில்லன் பாத்திரம் என மனிதர்களைச் சரி/தவறு என்று பகுக்காமல் நாம் வாழும் சூழலும் கற்பிதங்களும் நெகிழ்தன்மை இல்லாத பிடிவாதங்களும் சேர்ந்தே ஒவ்வொருவர் மனநிலையைத் தீர்மானிக்கின்றன என்கிற உண்மையை அழுத்தமாகச் சொல்கிறது படம். தனக்கு வேண்டியதைக் கேட்டுப்பெறும், “நீதான் அழகு, ரொம்ப அடக்கம்” எனப் புகழ்ந்து காரியம் சாதித்துக் கொள்ளும் குடும்பத்தின் தேவைகளுக்காகத் தன்னை மறந்து சமையலறையில் தவம் கிடக்கும் பெண்களுக்கு எந்த வரமும் கிடைக்கப் போவதில்லை என்று புரிய வைத்திருக்கிறது.
கவிதாவாக மோனா பேத்ரே வீடே சொர்க்கம் என்று இருக்கும் குடும்பத் தலைவியாக முதன்மைப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவர் கணவர் குமரனாக பிர்லா போஸ் பொறுப்புகளைக் கவிதாவிடம் விட்டுவிட்டு பிள்ளைகள் பெருமை சேர்க்கும் நேரத்தில் பூரிப்பதும் சமநிலை குறையும் போது மனைவியைக் குற்றம் சாட்டுவதும் எனப் பெற்றோராக இருப்பதில் உள்ள மகிழ்ச்சியான பக்கத்தை அனுபவித்துவிட்டு, அதன் பொறுப்புகளை மனைவி பக்கம் திருப்பிவிடும் நம் வீடுகளின் குடும்பத் தலைவர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார். இருந்த இடத்திலேயே குடும்பத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் புறணி பேசிக்கொண்டும் மற்றவரை வேலை வாங்கிக் கொண்டும் இருக்கும் மாமியாராக வசந்தி, வயது மூப்பால் விளைந்த இயலாமைக்குத் தன்னை நொந்து கொண்டு ஏதாவது ஒருவிதத்தில் உபயோகமாக இருக்க முயலும் மாமனாராக நம்பி இருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
விடலைப் பருவத்திற்கே உரித்தான வேகத்துடன் சோதனை முயற்சிகள் செய்து பிரச்னையில் மாட்டிக்கொண்டு தந்தைக்குத் தெரியாமல் தன்னைக் காப்பாற்றச் சொல்லி தாயிடம் கெஞ்சும் மகனாக, இக்கட்டான சூழலில் ‘நான் அக்கறையா இருக்கேன். உனக்குத்தான் பாசமில்லை பொறுப்பில்லை’ எனத் தங்கையைத் திட்டும் அண்ணனாக பவன் ரீங்காரக் குழவி. அம்மாவிடம், “அது வேண்டும், இத செஞ்சு தா” என நச்சரிக்கும் மகளாகக் குடும்பத்தினரைச் செல்லப் பெயரிட்டு அழைத்து வம்பு வளர்த்துக்கொண்டு ஆண் பெண் நட்பின் இயல்பைத் தெளிவாக அணுகும் இன்றைய தலைமுறை வளரிளம் பெண்ணாக ஷிவானி துறுதுறு பட்டாம்பூச்சி. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் செவிலியர், இடையறா இடையூரால் இன்னலுக்குள்ளாகும் இசை ஆசிரியர், பெண்ணுக்குப் புத்தி சொல்லப் ‘பறந்து’ வரும் கவிதாவின் தாய், கல்லூரிக் கால ‘க்ரஷ்’ஷைத் தேடி வந்து தெளிந்த நட்பு பாராட்டும் நண்பர் கதிர் எனப் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் அழகான இயங்கியலோடும் குணச் செறிவோடும் எழுதப்பட்டுள்ளன.
நேர்கோட்டுச் சிந்தனையோடும் கம்பீரமான செயல்பாடுகளோடும் தோழிக்காகத் தன் குடும்பம், நேரம், பொருளாதாரம் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஓடிவந்து நிற்கும் ஜெனி கவிதை. ஜெனி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஜனனி தன் தேர்ந்த நடிப்பால் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படியொரு தோழி அவசியம் என்று உணர்த்தியிருக்கிறார்.
யூடியூப் பார்த்து வாஷிங் மெஷினில் துணி துவைக்க அல்லாட்டம், தண்ணீர் கேன் போடுபவரின் நம்பரைத் தேடித் திண்டாட்டம், குக்கரில் ஊற்ற வேண்டிய தண்ணீர் பற்றிய ஆர்ப்பாட்டம் எனத் தலையாயப் பிரச்னைகளால் தவித்தாலும் தேறிவந்து குடும்ப வண்டி ஓடும். வியர்வை வழிய அழுக்கு நைட்டியில் தோசை மாவுக் கறையுடன் நடமாடுவதற்கு யாரும் சாதனையாளார் விருது வழங்கப் போவதில்லை. நீ உன்னைப் பார் என்று பெண்களுக்குப் பாடமெடுக்காமல் படிப்பினைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கீதா. இல்லத்தரசிகளுக்கான ஊதியம் பற்றிய உரையாடலும் மண்டைக்குள் சமையலறையை வைத்துக்கொண்டு 24/7 இயங்கும் எமோஷனல் லேபர் எனப்படும் உணர்வழுத்தத்தைப் பற்றிய சித்தரிப்பும் பேசியே தீர வேண்டிய பக்கங்கள்.

கவிஞர் உமா தேவி வரிகளில் இசையமைப்பாளர் அணிவீ இசையில் பாடல்கள் அற்புதம். ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதையைக் கொஞ்சமும் சலிப்புத்தட்டாமல் கொண்டு செல்வதில் இசையமைப்பாளர் மெல்வினின் பின்னணி இசைக்குப் பெரும் பங்குண்டு. முரளி, அருண் இருவரின் ஒளிப்பதிவைப் படத்தொகுப்பு செய்துள்ள ஜனனி எங்குமே தொய்வடையாமல் படம் நகர்வதற்குப் பெரிதும் துணை நிற்கிறார். ஏனைய தொழில்நுட்பப் பங்களிப்புகளும் அருமை. துணை இணை இயக்குநர்கள் பாலு போஸ், அஜய், கவி பாரதி உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள்.
ஜெனி, கவிதா, அகல்யா, ஷிவானி, அங்கயற்கண்ணி எனப் பெயரிடப் பட்ட வலுவான பெண் பாத்திரங்கள். பெரும்பாலும் கணவர்/குடும்பம் சார்ந்தே பேச்சுகள் இருந்தாலும் கல்லூரிக் காலம், நண்பர்கள், பயணம், ஆசைகள், சுய முன்னேற்றம் என ஆண் சாராத உரையாடல்களுக்கும் பஞ்சமில்லை. பெண்ணியப் பார்வையில் நாம் செய்யும் பெக்டெல் மதிப்பீட்டில் இந்தப் படம் 7/10 பெறுகிறது. மைக்ரோ சீரிஸாக ’கூரைப்பல்லியும் கவிதாவும்’ 8/10 பெறுகிறது.
வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பாலினப் பேதமின்றி அனைவருக்கும் உணர்த்தி, சிறகு விரித்தலே முதல் வெற்றி என்கிற உண்மையைப் பேசும் கூரைப்பல்லியும் கவிதாவும் அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய மைக்ரோ சீரிஸ். தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் திறன்பேசித் திரையே வெள்ளித் திரையாக நம் வசதிக்கும் நேரத்திற்கும் பார்க்க ஏதுவாக Kadhaishorts app செயலியில் காணக் கிடைக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 41 குறும் அத்தியாயங்களாக வெளிவந்திருக்கிறது, அவசியம் பாருங்கள்.
படைப்பாளர்
பச்சக்கிளி

மென்பொறியாளர், வாசிப்பிலும் எழுத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர். ஹெர் ஸ்டோரிஸ் பெண்ணெழுத்துப் பத்திரிகையில் பொருளாதாரம், சினிமா சார்ந்த விஷயங்களை எழுதிவருகிறார்.





