பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.

(குறள் 978: அதிகாரம் – 98 – பெருமை. மு.வரதராசனார் விளக்கம் :-

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்)

இந்தக் குறளிலிருந்து இந்த அத்தியாயத்தைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும்.

நம்முடைய பெருமை, நாம் இந்தச் சமூகத்துக்கு என்ன விதமான நன்மை செய்திருக்கிறோம் என்பதாகவே இருத்தல் வேண்டுமே ஒழிய, மற்றதெல்லாம் வீணே!

  • நான் இந்த ஜாதியில் பிறந்ததால் பெருமை கொள்கிறேன். அந்த ஒரே காரணத்தினாலேயே நான் போற்றுதலுக்கு உரியவனாகிறேன். இந்த குறிப்பிட்ட ஜாதியில் பிறந்துவிட்டதாலேயே, நான் அறிவும் ஞானமும் நிரம்பியவனாகிவிடுவேன்!
  • நான் வழிபடும் கடவுள்தான் மேலானவன்.
  • நான்தான் உலகிலேயே தூய்மையானவன். நான் அணியும் உடையால் நான் பெருமை கொள்கிறேன்.
  • நான் உண்ணும் உணவுதான் சிறந்தது.

அடிப்படையே இல்லாத இப்படிப்பட்ட பற்பல பெருமைகள்தானே  நம் மூளை முழுவதையும் நிரப்பியிருக்கிறது? உண்மையில், நாமெல்லாம்  இத்தகைய பெருமைகளுக்கு உரியவர்கள்தானா?

  • பிறப்பால் மட்டுமே  உண்டாகிவிடுமா, பெருமை?

பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் போன்ற ஆதாரமற்ற கற்பிதங்களைப் புறந்தள்ளிவிட்டு, மனித இன பரிணாம வளர்ச்சியை அறிவியல் பார்வையில் அணுகுவோம். சுமார் 3.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆஸ்ட்ராலோபிதேகஸ் தொடங்கி ஹோமோ சேப்பியன் சேப்பியன்களாக இருக்கும் நமது இன்றைய மனித இனம் வரை, கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமித்து வந்திருக்கிறோமே ஒழிய, ஒவ்வொருவர் பிறப்பிலும் வேறு எந்த ஒரு வித்தியாசமும் இல்லைதானே!?

இப்படி இருக்க ஒருவர் உயர்ந்தவராகவும், மற்றவர் தாழ்ந்தவராகவும் எப்படி இருக்க முடியும்? அன்புக்கும் சமதர்மத்துக்கும் இடமே இல்லாத, நம்மை உயர்த்திக் காண்பித்து, மற்றவரைத் தாழ்த்தி, அவர்களது உழைப்பைச் சுரண்ட மட்டுமே ஏற்படுத்தப்பட்ட ஜாதிப் பெருமை நமக்குத் தேவைதானா? 

பார்ப்பனீயம், தங்கள் குலத்தில் பிறந்த பெண்களையே சமமாக மதிப்பதில்லை, அவர்களை அறிவும்  ஞானமும் பெற்றவர்களாக ஒப்புக்கொள்வதும் இல்லை எனும்போது, இந்தக் கருத்தைப் பெண்களே திரும்பத் திரும்பப் பேசுவதை என்னவென்று சொல்ல?

அப்படியே எடுத்து கொண்டலும், காலங்காலமாக எல்லோரும் பெருமையாக சொல்லிக்கொள்வதைப் போல, பார்ப்பன குலத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திலேயே ஒருவர் அறிவும் ஞானமும் பெற்றுவிட இயலுமா? அப்படிமட்டும் இருந்திருந்தால், ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோருமே வேத விற்பன்னர்களாகவும், கூடவே பற்பல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், பன்மொழிப் புலமை பெற்றவர்களாகவும், ஏனைய நுண்கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களாகவும் திகழ மாட்டார்களா? 

பிறகு ஏன், வருமானத்துக்காகப் புரோகிதம் செய்துகொண்டும், பிராம்மனார்த்தம் சாப்பிட்டுக்கொண்டும், சவுண்டிகளாகவும் வாழ்ந்துகொண்டு அல்லலுறவேண்டும்?

நான்காம் வர்ணம் என்றும், பஞ்சமர் என்றும் ஒதுக்கி, பெண்களையும் ஒடுக்கி, கல்வி கற்க இயலாமல் தடுத்து,  செத்த பிறகு மந்திரம் சொல்லவும், சடங்குகள் செய்யவும் ஆள்கள் தேவை என்பதால் மட்டுமே தன் சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த விளிம்புநிலை மனிதர்களை மேம்படுத்தக் கூட முன்வராத ஒருவரது சுய சாதிப்பெருமை, வீணிலும் வீணே.

***  

  • கடவுளில் கூட பேதம் பார்க்கலாமா?

எளிய மனிதர்களின் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் கடவுள் நம்பிக்கைதான். அவரவர் வழிபடும் கடவுள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், சோதனையான காலகட்டங்களைக் கடக்க அவர்களுக்குத் துணை புரிகிறது. மனிதர்களின் இந்த அடிப்படை நம்பிக்கையை மற்றவர் மதித்துத்தான் ஆகவேண்டும். இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

ஆனால், கடவுள் சார்ந்த நம்பிக்கை என்பது கடவுளுக்கும் ஒரு தனி மனிதனுக்கும் இடையே மட்டும் தொடர்புள்ளதாகவும்,  எளிமையானதாகவும், பொதுச் சமூகத்துக்கு நன்மையை மட்டுமே கொடுப்பதாகவும் இருக்கிறதா? 

கலகங்கள் ஏற்படுத்த, எளிதாக மக்களை அடிமைப்படுத்திவைக்க, ஒரு பெரிய கூட்டத்தையே சுலபமாக ஏமாற்றிப் பிழைக்க, பெண்களின் மீதான உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு என ஆதிக்க சக்திகளால் கடவுள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்தானே?

இல்லையென்றால் ஒவ்வொரு கடவுளும் ஏன் ஏதோ ஒரு ஜாதி / மதத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்? பக்தியையும், மத நம்பிக்கைகளையும் பிரித்துப் பார்க்க இயலுமா?

இங்கே நாம் கொண்டாடும் பல பண்டிகைகளும், அதன் அங்கமாக விளங்கும் சடங்கு சம்பிரதாயங்களும் ஏன் ஏதோ ஒரு கடவுளைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன?

ஜோசியம், ஜாதகம், தோஷம், பரிகாரம், பூஜைகள், ஹோமங்கள், சடங்குகள் போன்றவை எல்லாமே வணிகரீதியானதாகவே இருக்கின்றனவே, ஏன்?

இங்கே கடவுளைத் தரிசனம் செய்யக் கோயிலுக்குப் போனாலும்கூட, பணம் இருந்தால் இறையருள் கொஞ்சம் சீக்கிரமே கிட்டிவிடும். கடவுளுக்கு மலர் தூவி அர்ச்சனை செய்யக் கூட பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்.

போதாத குறைக்கு, தினம் தினம் புதிது புதிதாகச் சாமியார்கள் உருவாகி, நவீனக் கடவுள்களையும், நூதனமான பூஜை முறைகளையும் ஏற்படுத்துகின்றனர். இவர்களெல்லாம் குறுகிய காலத்துக்குள்ளேயே கோடிகளில் புரள்கின்றனரே, குறிப்பாகப் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சூறையாடுபவர்களாகவே இருக்கின்றனரே, அது எப்படி? 

இதுபோன்ற வியாபாரிகளுக்கு, கடவுளின் இருப்பு பற்றி எந்தச் சந்தேகமும் இருபதில்லை. உண்மையில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள், துணிந்து ஏமாற்று வியாபாரம் செய்ய மாட்டார்கள் அல்லவா?

இதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், மனிதர்கள் கடவுள் பக்தியுடனும் மத மதநம்பிக்கைகளுடனும் இருக்க காரணம் இருக்கிறது.

2012 இல் மேற்கொள்ளப்பட்ட  ஒரு நரம்பியல் அடிப்படையிலான ஆய்வு ஆன்மீக அனுபவங்கள் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் யாவும் மூளையின் வெவ்வேறு பகுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று முடிவு செய்தது.

2021இல் முடிவுற்ற ஒரு புதிய ஆராய்ச்சி மூளையின், கடவுள் பகுதி’ (God Spot) மூளைத்தண்டின் (periaqueductal gray area of the brainstem) பெரியாக்டக்டல் சாம்பல் பகுதியுடன் இணைக்கப்பட்ட நரம்பியல் சுற்றுகளில் வேரூன்றி இருக்கலாம் என்று கூறுகிறது.

ஆன்மிகத்திற்கான இந்த மூளை சுற்று ( Brain Circuit) மூளையில், மிகவும் பரிணாம ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்றுக்குள் மையமாக அமைந்திருக்கிறது என்பதே வியப்பான உண்மை.

இதுபற்றி அதிகம் தெரிந்துகொள்ள, இந்தக் கட்டுரை இணைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

https://www.psychologytoday.com/intl/blog/the-athletes-way/202107/is-the-god-spot-rooted-far-below-our-brain-s-thinking-cap

மதங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டுபோய் சேர்க்க ஏற்படுத்தப்பட்ட கற்பிதம்தான் கடவுள் எனும்போது, நம் ஆதி மனிதனின் மூளைக்குள்ளே போய்ப் பார்க்க மட்டும் இயலுமானால், நிச்சயம் இப்படி ஒரு பகுதி அதனுள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. 

இந்த அறிவியலை ஒப்புக்கொள்ள இயலாமல், இது இறை-மறுப்பாளர்களின் கூற்று என இறை நம்பிக்கை உரியவர்கள் மறுக்கலாம்.

ஆனால் ஏன் இறை நம்பிக்கை ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது? ஏன் எல்லாக் கடவுளரையும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை? அதன்பின் இயங்கும் ஆபத்தான கட்டமைப்பை நாம் ஏன் கண்டுகொள்ளாதது போலவே நடிக்கிறோம்?

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எல்லோருமே எல்லாக் கடவுளரையும் ஏற்றுக்கொண்டு மதித்து நடக்கின்றனர் என்பது மறுக்க இயலாத விஷயம்.

வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போகும் இந்துக்கள் உண்டு. குழந்தைகளுக்கு ஏதும் உடல்நலம் சரியில்லை என்றால், மாலை மசூதி வாசலில் போய் நின்று, குரான் ஓதிவிட்டு வெளியில் வரும் இஸ்லாமியச் சகோதரர்களிடம் மந்திரிக்கும் வழக்கம் பார்ப்பனர் உள்பட இந்துக்களிடம் பரவலாக  உண்டு.

ஸ்ரீமுஷ்ணம் கோயிலில் மாசி பவுர்ணமியில் வருடந்தோறும் நடைபெறும் உற்சவத்தில் கிள்ளை இஸ்லாமியத் தர்காவில் பெருமாளுக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகிறது.

அது பற்றிய ஒரு வீடியோ லிங்க் 

ஆனால் மக்களின் இந்த நல்லிணக்க உணர்வைக் குலைக்கும் சதியைத்தான் ஜாதி வெறியர்கள் அரங்கேற்ற முயன்றுகொண்டே இருக்கிறார்கள். அதற்கு பலியாகாமல் நாம்தான் புரிதலுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அவரவர் ஜாதிய அடையாளங்களையும் இறை நம்பிக்கைகளையும் அவரவர் வீட்டோடு வைத்துக்கொள்ளவேண்டும், பொதுவில் வரும்போது எல்லோருமே சமம் என ஒரு பொதுக் கருத்து உண்டு.

என்னைப் பொறுத்தவரை அதுவும் கூட தவறு என்பேன். அவரவர் இறை நம்பிக்கை அவரவருடன். குடும்பத்துக்குள்கூட அதைப் பிறர்மேல் திணிப்பது கொடுஞ்செயல்.

இறை மறுப்பாளராக இருப்பதோ, தனக்குப் பிடித்த கடவுளை வணங்குவதோ ஒரு தனிநபர் சார்ந்த விருப்பமாக மட்டுமே இருக்க முடியும். 

பெருமை சிறுமை எல்லாமே மனிதப் புத்திக்குள் மட்டுமே மண்டிக்கிடக்கிறதே தவிர, எந்த ஒரு கடவுளரின் வடிவத்திலும் இல்லை என்பதை உணர்வோம். 

***

  • ஒருவரை தனித்து அடையாளப்படுத்தும் உடையும், மடியும் தீட்டும் தீண்டாமையும் சாபமே.

நாங்கள்தான் அதீத சுத்தமானவர்கள் என்று பெருமை கொள்வதிலேயே அடுத்தவரை தீண்டத் தகாதவர் ஆக்குகிறோம் என்கிற குற்றவுணர்ச்சியே கொள்ளாத அளவுக்கு பார்ப்பன பிள்ளைகள் வர்க்கப் படுகிறார்கள் என்றால் அது மிகையில்லை. 

காலை எழுந்து, சுத்தபத்தமாகக் குளித்து, தூய உடை அணிந்துகொண்டால் மட்டுமே பலனில்லை. உடல் உழைப்பு அதிகம் தேவையில்லாத ஒரு வேலை செய்தால் மட்டுமே, அந்தச் சுத்தம் மாலை வரை நீடித்து இருக்கும் என்பது புரியவேண்டும். 

அல்லது ஒரு நாளுக்கு நான்கு ஐந்து முறையாவது குளிக்க வேண்டும். அதற்கு நிறைய நேரம் செலவிடவேண்டும். இல்லாமல் போனால் நம் ஊர் போன்ற வெப்பமான பகுதிகளில் வியர்த்து வடிந்து நாற்றத்துடன் நடமாட வேண்டியதுதான்.

திரை விளம்பரங்களில் காண்பிப்பது போல எல்லோருக்குமே 24 x 7 சுத்தமாக, நறுமணம் கமழ இருக்கத்தானே பிடிக்கும்?

நாள் ஒன்றுக்குப் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம், இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக  உழைக்கும் வர்க்கத்து எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இதெல்லாம் சாத்தியமா?  ஏன் இதை யாரும் உணருவதே இல்லை?

சக மனிதர்களை, அவர்களது வாழ்வியல் சூழல்களை உணர்ந்து புரிந்துகொண்டால், அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் தானாக வந்துவிடும். அதை உணரவிடாமல் தடுப்பதே இந்த மடியும் தீட்டும் என்பதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சமாவது முயலலாமே.

அதேபோல ஒருவரைத் தனித்து அடையாளம் காண்பிக்கும் உடையும் கூட அவரை பொதுச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

உடை விஷயத்தில்கூட ஆண்களைக் காட்டிலும் இங்கே பெண்களிடம்தான்  தெளிவான வர்க்க பேதங்கள் வெளிப்படுகின்றன.

பார்ப்பன ஆண்கள் அணியும் பஞ்சகச்சம் ஒரே போலத்தான் இருக்கும். ஆனால் பெண்கள் அணியும் மடிசாரில்தான், ஐயருக்கு ஐயங்காருக்குத் தெலுங்கு பார்ப்பனருக்கு, கன்னட / மராத்திய பார்ப்பனருக்கு என வெளிப்படையான வித்தியாசங்கள் உள்ளன.

அதுமட்டும் இல்லாமல், இந்த மடிசார் அணிவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால் இதைத் தினமும் உடுத்தச் சொன்னால், பலரும் அதற்கு உடன்பட மாட்டார்கள். காரணம் மடிசார் அணிந்து வேலை செய்வது, அவ்வளவு சௌகரியமான விஷயம் கிடையது. இன்று வரையிலும்கூட  பல பெண்கள், குடும்ப நிர்ப்பந்தத்துக்காக தினமும் மடிசார் அணிகின்றனர். தினமும் இல்லாமல் போனாலும்கூட திவசம், திங்கள் நாள் கிழமைகளில் மடிசார் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போகிறது. வசதியாக இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் மற்றொருபக்கம், இதைப் பாரம்பரிய உடை என்று மட்டும் கொள்ளாமல், பல வகையான உடையலங்காரங்களில் இதுவும் ஒன்று என்று பார்த்தால், பார்ப்பனப் பெண்களுக்கு மட்டுமில்லை, பலருக்குமே மடிசார் அணிவதில் ஓர் ஆசை இருக்கிறது. 

மடிசார் மட்டுமல்ல, நம் கிராமப்புற பின் கொசுவக் கட்டு,  கேரளா பாணி முண்டு, வடமாநில லெஹங்கா, இஸ்லாமியர் அணியும் பர்தா போலப் பல பாணி உடைகளையும் முயன்று பார்க்கப் பல  பெண்களுக்கு ஆசை உண்டு.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்களே அதுபோலத்தான் இவை எல்லாமே!

80 / 90களில் திருமண வரவேற்புகளில் பார்த்திருந்தால்  தெரியும், வடக்கத்திய பாணியில் வலது பக்கமாக முந்தானை வைத்துப் புடவை அணிவதே பெரும்பான்மையான பெண்களின் விருப்பத் தேர்வாக இருந்தது. நல்லவேளை, ‘லாபத்தா லேடிஸ்’ படத்தில் வருவது போலத் தலையில் முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொள்ளவில்லை; அவ்வளவுதான். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தலையில் முக்காடு போடுவது  கைம்பெண்களுக்கானது, எனவே அது தகாத செயலும் கூட. அதனால்தான் அதை விட்டு வைத்திருந்தனர் போலும்.

அவரவர் ஆசைப் பட்ட உடையை வசதிக்கேற்ப அணிந்துவிட்டுப் போகாமல், இதில் பெருமை தேவையற்றதே.

பொதுச் சமூகத்தில் மக்களுடன் கலந்து வாழத் தனிப்பட்ட அடையாளங்கள் உண்மையில் பெருத்தத் தடையே!

*** 

  • உணர்வோடு விளையாடும் உணவுப் பெருமை

காலை எழுந்ததும் முதலில் பருகும் பில்ட்டர் காபியில் தொடங்குகிறது பார்ப்பனர்களின் உணவுப் பெருமை.

ஆங்கிலேயர்களின் பழக்கம் என்பதால் காபி அருந்துவதே ஆச்சாரக் கேடு என்று அதை ஒதுக்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். தவிர்த்துப் பார்த்தால், காபி இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்பவர்களும் இங்கே உண்டு.

பழைய காலத்தில் எல்லாம்  பச்சையான காபிக் கொட்டைகளை வாங்கிவந்து அதை வீட்டிலேயே வறுத்து, அதற்கென வைத்திருக்கும் பிரத்தியேக இயந்திரம் மூலம் பொடி செய்து, பில்டரில் போட்டு டிகாக்ஷன் இறக்கி, கறந்த பாலில் காபி தயாரிப்பார்கள். பின் நாட்களில் காபிப் பொடியைக் கடைகளில் வாங்குவது என்று தொடர்ந்தது.

இப்படியாகத் தொடங்கியதுதான் காபி பெருமை. ஆனால் இதன்பின்னும் ஏற்றத் தாழ்வுகள் இங்கே நிறையவே இருந்திருக்கின்றன.

நான் மேலே சொன்னது போல, காபிக் கொட்டையை வறுத்து, அரைத்து, பொடி செய்து, பக்குவமாக டிகாக்ஷன் இறக்கி, காபியாகக் கலந்து… இதையெல்லாம் யார் செய்தார்கள்? வீட்டுப் பெண்கள்தானே?

ஆனால், இந்த டிகாக்ஷனிலும் முதல் டிகாக்ஷன், இரண்டாம் டிகாக்ஷன், பிறகு மொத்தமாக நீர்த்துப் போன மூன்றாம் டிகாக்ஷன் என்றெல்லாம் உண்டு.

முதல் டிகாக்ஷன், வீட்டுத் தலைவனான ஆணுக்கும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் போய்விடும். மீதம் இருப்பதுதான் பெண்களுக்கு. வீட்டின் கடைநிலையில் இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர் காபிதான்.

எல்லாவற்றிலும் இருப்பது போல, காபியிலும் கூட வசதி படைத்தவர்களுக்கு பில்ட்டர் காபி, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கென (வில்லை) பில்லை காபி என்று இருந்தது.

அது என்ன பில்லை காப்பி? 

அது ஏழைகளின் காபி. பைவ் ஸ்டார் சாக்லேட் போன்று  தட்டையாக, ரப்பர் போன்ற காபி வில்லைகள்தான் அவை. அதைப் பிய்த்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, துணியில் வடிகட்டி டிகாக்ஷன் தயாரித்து காபி கலக்கலாம். ஆனால் அது பில்ட்டர் காபி அளவுக்குச் சுவையாக இருக்காது. தினமும் டிகிரி காபி குடிப்பவர்களுக்கு அதைக் கொடுத்தால், நிச்சயம் முகம் சுளிப்பர்.

விதவிதமான பில்ட்டர் காபி பொடிகளும், இன்ஸ்டன்ட் காப்பிப்பொடி வகைகளும் சுலபமாகக் கிடைக்கப்பெறும் வணிகமயமாக்கப்பட்ட இன்றைய நவீனக் காலத்தில்,  இதுபோலெல்லாம் இருந்தது என்றுகூட யாரும் அறிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை.

பணம் இருந்தால் தங்கத்தைக்கூட பஸ்பமாக்கி அதைச் சாப்பிட்டுச் செரிக்க முடியும். ஆனால், ஏழை எளிய மக்களும் வாங்கி ருசிக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் காபி பொடிகள் கிடைக்கும் இன்றைய நாளில்கூட இந்த டிகிரி காபி பெருமை பேசுவது அர்த்தமற்றது.

கிணற்று நீரைத்தான் பயன்படுத்துவோம் என்பது அடுத்த பெருமை. தனியாக வீடு, நீருடன் கிணறு என்று எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை. அப்படி ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றாலும் கூட கையில் பணம் புரள வேண்டும்.

நதிக்கரைகளில் வசித்த காலம் போய் கிணற்று நீரைப் பயன்படுத்துபவரையே ‘கூப ஸ்நான பேர்வழி’ எனக் கிண்டல் செய்த காலமெல்லாம் இருந்திருக்கிறது.

நகர வாழ்கையில், தண்ணீருக்காக ஒரு நாளின் பெரும்பகுதியைக் கழித்த மக்கள் இங்கே அதிகம். பிளாஸ்டிக் குடங்களை வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்று, ஒரு குடும்பத்துக்கு இவ்வளவுதான் எனக் கணக்காகத் தண்ணீர் பிடித்து, சமைக்க, குடிக்க, குளிக்க மற்ற அனைத்து உபயோகத்திற்கும் அதையே சிக்கனமாகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்களுக்கு, ஜாதி, மதம், தீட்டு, மடி அனைத்துமே மறந்துபோயிருந்தது.

இன்று அதிகக் காசு கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் காலத்துக்குத் தள்ளப்பட்ட பிறகும்கூட மனித மனங்களின் கர்வம் ஒழிந்தபாடில்லை என்றால் எப்பொழுதுதான் ஒழியும்?

பருப்பு குழம்பு, வத்தக் குழம்பு, மிளகு ரசம், கூட்டு, பச்சடி, அவியல், பொரியல், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, கேசரி, வடை, கை முறுக்கு, சீடை, தட்டை, அப்பளம், வத்தல், வடாம் என பார்ப்பனர்களின் அடையாளமாகச் சொல்லப்படும் பல உணவு வகைகள் எல்லாமே, இருப்பவர்க்குச் சுலபமாகவும், வறியவர்களுக்குப் போராடியும்தான் கிடைக்குமே ஒழிய, இதிலும் பேதமில்லாமல் இல்லை.

கோயில் பிரசாதம்கூட, ருசி பார்க்கும் அளவுக்குக் கையளவு கிடைக்குமே ஒழிய, வயிறார சாப்பிடக் கிட்டிவிடாது. மற்றொருபக்கம் பார்த்தால், கோயில் பணியில் ஈடுபடுபவர் வீட்டில் வீணாவதுபோல உணவு வேறெங்கும் வீணாகாது. 

கை நிறையப் பணம் இருந்தால் வெள்ளிப் பாத்திரம், செம்பு, பித்தளை வெண்கலம் எல்லாம். இல்லாமல் போனால், எவர்சில்வர் பாத்திரம்தான். வெள்ளி என்றில்லை,  ஒருவேளை சோற்றுக்குப் பித்தளை, வெண்கலப் பாத்திரங்களைக் கூட அடமானம் வைத்துப் பிழைத்த பார்ப்பனக் குடும்பங்கள் இங்கே உண்டு.

வாங்கி வந்த ரேஷன் அரிசியும் மாதத்தின் பாதி நாள்களிலேயே தீர்ந்துபோய் அரை வயிறுக் கஞ்சியும் கூழும் கொடுத்து பிள்ளைகளை வளர்த்தவர்கள் உண்டு. இதில் இங்கே சுய சாதிப் பெருமை மட்டும் மங்காமல் மண்டிக் கிடக்கிறது.

‘ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாத பெண்ணும் கரி சமைக்கும்!’ (பெண்ணுமாம்!) என்று ஒரு பழமொழி உண்டு. சமையல் செய்யத் தேவையான பொருள்கள் அனைத்தும் ஒரு சேர அமையுமாயின், யார் வேண்டுமானாலும் சுவையாகச் சமைத்துவிட முடியுமாம்… ஆனாலும் அதற்கு, அந்த உணவை ஒருமுறையாவது ருசித்துப் பார்த்திருக்க வேண்டும். அதில் அடங்கியுள்ள உட்பொருள்களின் தன்மை அறிந்திருக்க வேண்டும். 

நெய்யும், முந்திரியும், ஏலக்காயும் எப்படி இருக்கும் என்றுகூட அறியாத ஓர் ஒடுக்கப்பட்ட கூட்டம் வாழும் இதே மண்ணில்தான், தின்று கொழுத்த கூட்டமும், உபவாசம் என்கிற பெயரில் பட்டினியையும்கூடப் பெருமை பேசும் கூட்டமும் இருக்கிறது.பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாட,  நியாய விலைக் கடைகள் மூலம் முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை விலையில்லாமல் கொடுக்கும்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இன்று எல்லாமே எல்லா மக்களுக்கும் கிடைக்கிறது என்பதே இங்கே பலரால் சகித்துக்கொள்ள இயலவில்லை!

சத்தம் போடாமல் பூண்டையும் வெங்காயத்தையும், அசைவத்தையும்கூட (பொதுவாக எல்லோரையும் குறிப்பிடவில்லை, சிலர் என்று கொள்ளலாம்) விட்டுவிடாமல் சாப்பிட்டுக்கொண்டே இவை அனைத்தையும் மட்டம்தட்டுவது, இவற்றையெல்லாம் முக்கிய உணவாக உண்பவர்களையும் அவமதிப்பது என எதற்கு இந்தப் போலி முகமூடி?

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு உரியது. இதில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை! பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை! ஒரு குறுகிய வட்டத்துக்குள் தனித்து நின்று, மற்றவரை ஒதுக்கி, பொதுச் சமூகத்துடன் ஒட்டாத ஒரு வாழ்கை வாழ்ந்து, யார் ஒருவருக்கும் பயனில்லை.

ஜாதி, மத, வர்க்க, இன, மொழி, பொருளாதாரப் பாகுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையாக ஒன்று கூடி, சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒன்றுபட்ட சமூகமாக வாழ்வதே நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யப்போகும் ஒரே நன்மையாகும்.

வாழ்வோம் சமூக நீதியுடன்!

நன்றி,

அன்புடன், 

வசுந்தரா ராமன்.