இனிமையான மணம் வீசி அவள் புலன்களை ஒருவித புத்துணர்ச்சியில் நிறைத்தது. அந்தச் சுகந்தம் வந்த திசை எது என்று தேடித் திரும்பியவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எங்கும் பூக்காடாக இருந்தது.
அவள் இதுவரை அறிந்த அறிந்திராத எல்லா வகை பூக்களும் அங்கே கலவையான வாசத்தை பரப்பிக் கொண்டிருந்தன.
தான் இருப்பது எந்த இடம் என்று யோசிக்கவோ, அதைக் கண்டுபிடிக்கும் ஆவலோ அவளுக்குத் துளி கூட இல்லாத நிலையில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்.
அந்தத் தனிமை அவளுக்குப் பயத்தையோ தற்காப்பு உணர்வையோ தராதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. மாறாக இந்த ரம்மியமான சூழலோடு இசைந்து மனம் ஒருவித லயத்தில் இயங்கியது.
திடீரென்று மெல்லிய சாரல் தூவத் தொடங்கியது.
சற்றுத் தொலைவில் யாரோ வருவது தெரிந்தது.
சிறு புன்னகையுடன் அவள் எதிரில் வந்து நின்றான் அன்புச் செழியன்! அவள் சொல்லாமலே அவள் மனதில் நினைத்ததை உணர்ந்தவனாய் அவளை நோக்கி அவன் கரங்களை நீட்டினான். ஆச்சிரியத்தில் விழிகளை விரித்தவள் உறக்கம் கலைந்து கண் விழித்தாள்.
எதிரே உள்ள இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் அவள் இதயத்துடிப்பு மேலும் அதிகரித்தது.
முன்பின் அறியாதவனைக் குறித்து இப்படி ஒரு கனவு ஏன் வந்தது? அவனைக் குறித்து ஒரு நல்ல பிம்பம் மனதில் உருவாகியிருந்ததை மறுப்பதற்கில்லை.
அதிகாலை ஐந்தரை மணி. அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று எப்போதோ யாரோ சொன்ன வார்த்தைகள் கேட்காமலே அவள் மனதை நிரப்பியது. நடந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணமும் கூடவே வந்தது.
அந்த எண்ணங்கள் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு வாரத்தில் வெளிநாட்டுப் பயணத்தை வைத்துக் கொண்டு அவள் எண்ணம் சென்ற திசையை அவளால் கிரகிக்க முடியாமல் திணறினாள்.
அவள் தலைக்கு மேல் ஒளிர்ந்த வெளிச்சத்தின் நீட்சியாக இரு பக்கங்களிலும் விரிந்த ஒளியில் அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை உணர்ந்ததாலோ என்னவோ உறங்கிக் கொண்டிருந்தவன் விழிகள் திடீரென திறந்து அவள் கண்களைப் பார்த்த!
விழிகளை வேறு பக்கமாக திரும்ப முயற்சித்தாள். ஆனால் மனமோ அந்த இடத்திலே விடாப்பிடியாக சொல் பேச்சு கேட்காமல் நிலை குத்தி நின்றது.
யுகங்களா நொடிகளாக என்று அளவிட முடியாத நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் விழிகள் மீண்டும் உறக்கத்திற்கு சென்றன. அவளும் உறங்கிப் போனாள்.
அருகில் ஏதோ ஒரு சத்தம் கேட்டு மீண்டும் எழுந்தபோது நேரம் காலை ஏழு ஆகியிருந்தது. கண் விழித்ததும் எதிரிலிருந்த அவன் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருந்தது.
அதிகாலை கண்ட கனவு நன்றாக நினைவில் இருந்தது. கனவா நினைவா என்று அப்போது அவளுக்கு குழப்பமாக இருந்தது.
தான் சொல்ல வந்ததைப் புரிய வைக்க முடியாமல் ஆயிஷாவும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவள் மாமியும் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“அம்மாடி, ஏதோ எழுதிக்கீறா. இன்னான்னு எனக்கு ஒண்ணும் விளங்கல. என்னனு கொஞ்சம் பார்த்து சொல்லேன்” என்றார். தனக்கு பீரியட்ஸ் என்றும் கைவசம் வைத்திருந்த பேட் முடிந்து விட்டது. இப்போது என்ன செய்ய என்று புரியவில்லை என்று எழுதியிருந்தாள். கவலை ரேகைகள் படர்ந்திருந்த அவளுக்கு அபியைக் கண்டதும் சிறு நம்பிக்கை தோன்றியது.
“எழுப்பியிருக்கலாம்ல?” என்றதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலிளித்துவிட்டு, எதற்கும் இருக்கட்டுமே என்று எப்போதும் தன் கைப்பையில் வைத்திருக்கும் சானிட்டரி நாப்கினை வாங்கிச் சென்றவளை யோசனையாக பார்த்தாள்.
ஆயிஷாவின் மனநிலையும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. எதிர்பாராத சூழலில் சிக்கிக்கொண்டு இதுபோல இன்னும் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ என்று யோசித்தவள் மனம் வேதனை அடைந்தது. எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்று உறக்கத்தில் மறந்திருந்த கேள்வி மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
அப்போது தான் சுற்றும் முற்றும் பார்த்தவள் அந்த இடத்தில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்க மீதி உள்ளவர்கள் எங்கே என்று தேடினாள் .
“ஆண்ட்டி , இங்க இருந்த இசக்கி பாப்பா மத்தவங்க எல்லாம் எங்க?”
“நைட்டு புள்ளிக்குச் சாப்பாடு வாங்கினு போச்சே, அந்த அம்மாவும் அது கூட வந்த பொண்ணும் காலிலயே எந்திரிச்சு பக்கத்தால எதுனா ஊருக்கீதான்னு பாக்க போனாங்க.
குழந்தைங்க எல்லாம் பசியில் அழ ஆரம்பிச்சுதுங்க. முதல்ல இறங்கிப் போனவங்க நேரமாயும் வராததால இன்னான்னு பாக்க மேல சனம் எறங்கிப் போச்சு. எம்மா நேரந்தான் பொட்டிக்குள்ளயே அடஞ்சிக்கீறது ? காலுல நோவு இல்லாங்காட்டி நானும் இந்நேரம் இறங்கீருப்பேன் ” என்றவாறு கால்களை நீட்டி முட்டியை தேய்த்தவாறு அமர்ந்திருந்தார் . கம்பார்ட்மெண்ட்டே கிட்டத்தட்ட காலியாக இருந்தது. அத்தனை பேர் இறங்கிச் சென்ற ஓசைகூட கேட்காத அளவுக்கு உறங்கியிருக்கிறோமே என்று ஒரு நொடி தன்னை கடிந்து கொண்டாள்.
அவர்கள் குழுவை சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோசித்தவாறு கீழே இறங்கி வந்தவள் பார்வை இரு பக்கங்களையும் இணைக்கும் பாலத்தின் மேல் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மேல் சென்றது.
ஸ்டேஷன் மாஸ்டர் இறுதியாக அவள் பார்த்த அதே இடத்தில் இன்னும் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தது கண்டு இரக்கம் தோன்றியது. இன்னும் எதுவும் தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிந்தாலும் விடியல் புது நம்பிக்கையைத் தந்தது.
அவள் வருவதைக் கண்ட அன்புச் செழியன் பாலத்திலிருந்து இறங்கி வந்தான். அவனைக் கண்டதும் முகத்தில் லேசாக வெப்பம் படர்ந்தது. அவளால் விவரிக்க முடியாத பல உணர்வுகளின் குவியல் ஆனாள்.
இது எதுவும் அறியாமல் இயல்பாக இறங்கி வந்தவன் அவளைப் பார்த்த விதத்தில் அதிகாலையில் நிகழ்ந்த பார்வைப் பரிமாற்றம் கண்டிப்பாக கனவு என்ற முடிவுக்கு வந்தாள்.
“டவர் அங்க கிடைக்குதா?” என்று கேள்வியாக பார்த்தவளுக்கு, “ஆமாங்க. மேல ஒரு இடத்துல மட்டும் கிடைக்குது. ஆனா என்ன லோக்கல்ல நெட்வொர்க் இருக்குது போல. வெளியூர்ல் உள்ளவங்களுக்கு மட்டும் பேச முடியுது” என்றதும் அவள் மூளைக்குள் பளிச்சென்று மின்னல் வெட்டியது. அவள் கண்களில் நிகழ்ந்த மாற்றத்தைக் கண்டவன் அவளுக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியது என்று புரிந்து கொண்டு சிறு புன்னகையுடன் கடந்து சென்றான்.
மேலே உள்ள பாலத்தின் படிகளில் ஏறிச் சென்றவள் ஏதோ தோன்றியவளாய் திரும்பிப் பார்க்க, அதே நேரத்தில் அவனும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் இதயத் துடிப்பு மேலும் அதிகரித்தது.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.