உலகில் அநேக கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் மனிதர்கள். இன்னும் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படியான எல்லா கண்டுபிடிப்புகளிலும் ஒன்றுதான் இந்த நெகிழி.

இதனையே ‘பிளாஸ்டிக்’கென பொதுவாக அழைக்கின்றனர். இது முழுவதுமாக சுற்றுச் சூழல் மாசடைய முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க, அரசினர் பல திட்டங்களை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதே நேரம் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதற்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டு வருகின்றது. நெகிழி மனிதனுக்கு பயன்பாடு நிறைந்த பொருளாகவும் உள்ளது.

பொது வெளியில் குப்பை

 ‘பொது வெளி’ (காமன்ஸ்) பொதுச் சொத்துக்கள் என்று சொல்லலாம். கடற்கரை ஓரம், தண்ணீர்த் தொட்டி, சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் – இவை அனைத்தும் ‘பொது வெளி’ என்று அழைக்கப்படும். இப்படிபட்ட இடங்களில் அதிகமாக மக்கள் போக்குவரத்து காணப்படும். மக்கள் கூடும் இடங்களில் நெகிழியும் குவிந்து கிடக்கிறது. மேலும் பொது வெளியில் சேருக் குப்பையில் நெகிழியின் அளவும் அதிகமாக இருக்கும். யாரும் பயன்படுத்தாமல், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இடத்திலும்கூட நெகிழி தனது வேலையைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு சிறிய கிராமம்தான் இந்த தண்ணீர் ஊற்று. அதைப்பற்றி ஒரு சிறிய தொகுப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடம் பஞ்சாயத்துப் பகுதியான தண்ணீர் ஊற்றின் தெற்குப் பகுதியைச் சேர்ந்தது வேர்க்காடு. அங்கு புனித சந்தியாகப்பர் ஆலயத்துக்குச் செல்லும் சாலைக்கு அருகில், ரயில்வே தாண்டவாளத்திற்கு தெற்குப் பகுதி, நெகிழி குப்பைக் கிடங்காக மாறிக்கொண்டிருக்கும் அவலம் நடக்கிறது.

இந்த நிலை இப்போதும் இருந்து வருகிறது. முன்பெல்லாம் அதாவது 1970 – 1975 வாக்கில் புறம்போக்கு நிலமாக இருந்தபோதிலும், இந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களெல்லாம் ஈச்சமரங்களும் பனைமரங்களும் சூழ்ந்திருந்தன. மக்கள் தொகைப் பெருக்கத்தால் அனைவரும் அந்த நிலத்தையும் வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் வீடுகளையும் கடைகளையும் கட்டத்தொடங்கிவிட்டனர் என்பதினால், ரயில்வே தண்டவாளத்தை சீர்ப்படுத்தும் நோக்கில், புறம்போக்கு நிலத்தை மாநில அரசு, பட்டா நிலமாக மாற்றியது.

அதை அரசு ஆக்கிரமிப்பு நிலமாக கொண்டு, 2018ஆம் ஆண்டு தொடங்கி அங்கு ஒரு நுழைவாயில் போட்டு இருந்தனர். 2022ஆம் ஆண்டில் கொரோனா பொது முடக்க காலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தி விட்டதினால், மக்கள் அங்கு குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தனர். 2022 டிசம்பர் மாதத்திலிருந்து பாம்பன் பாலம் கட்டுவதினால், இங்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அன்று முதல் இன்று வரை வேர்க்காடு பகுதி அதிகமாக நெகிழியால் பாதிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) குப்பைகளை எடுத்துச்செல்வர்.

தங்கச்சிமடம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 18 கிராமங்கள் உள்ளன. 16 தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள், 8 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 3 சிறிய வண்டிகள், 1 பெரிய வண்டியை  வைத்து  ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால்,  வாரம் ஒரு முறை மட்டுமே குப்பைகளை இந்தப் பகுதியில் முறைவைத்து அகற்றும் பணி நடைபெறுகிறது.

மற்ற நாள்களில் மக்கள் குப்பையைக் கொட்டி குவிக்கிறார்கள். காற்று அதிகமாக இருக்கும் காலத்தில், குப்பைகள் ரயில்வே தண்டவாளம் இருக்கும் இடத்தில் தஞ்சம் அடைகின்றன. மேலும் நெகிழிப் பைகள் சில பறவையாய்க்கூட வானில் பறந்து செல்கின்றன. நெகிழியினால் பாதிக்கப்படுவது இந்த கிராமம் மட்டுமல்ல, துப்புரவுப் பணியாளர்களும்கூட. அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகவும், பணி செய்வது கடினமானதாகவும் உள்ளது. துப்புரவுப் பணியாளர் பெண் ஒருவரைச் சந்தித்து, அவரின் வாழ்வியலையும் அவர் கூறும் கஷ்டங்களையும் அவற்றின் பின்னணியில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்திருக்கிறேன்.

பூங்கனி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டம் தங்கச்சிமடம் பஞ்சாயத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான யாகப்பா நகர் பின்புறம் அந்தோணியார்புரம் என்ற இடத்தில் வசிக்கும் இவர் பெயர் பூங்கனி. 54 வயதுடைய பெண்மணி.

கணவனை இழந்த நிலையில் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக கொரோனா காலத்தில் இந்தத் தொழிலுக்கு வந்தார். பொது ஊரடங்கு நடந்தபொழுது, இவர் இந்தத் துப்புரவு பணியாளர் வேலைக்குத் தற்காலிக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் மகன்; அவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. இரண்டாவது மகளுக்கும் திருமணமாகி குழந்தை உண்டு.

மகன் கூலித் தொழில் செய்து தன் குடும்பத்தை நடத்துகிறார். தன் மகனின் அரவணைப்பில் வாழாமல், தன் சுயசம்பாத்தியத்தில் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியத்துடனும், தன் கணவரை இழந்த நிலையில் தன் கை கால்கள் முடமாகும்வரை நான் உழைத்துத்தான் சாப்பிடுவேன் என்றும் இந்த துப்புரவு பணியாளர் பூங்கனி வேலை செய்ய முன் வந்தார். இவருக்கு சம்பளம் ரூபாய் 4,000. இதை வைத்துத்தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இவர்களின் வேலை விறுவிறுப்பாக நடைபெறும். 54 வயதுடைய பெண்மணி என்று எண்ணி, குறைவாக எடை போட வேண்டாம்! இவர்களின் வேலை மிகவும் நுணுக்கமாகவும் சுத்தமாகவும் இருப்பதால், அனைவருக்கும் இவரை பிடித்துப் போகும். அந்த அளவிற்கு பூங்கனி ஒரு வீரப் பெண்மணி என்றுதான் கூறுவேன்.

தங்கச்சிமடம் பஞ்சாயத்திலிருந்து ஒரு வண்டிக்கு இரண்டு நபர்கள் மட்டும் வாகன ஓட்டுநர் ஒருவரோடு ஒரு பகுதிக்குச் சென்று, குப்பைகளை வாங்கி அதைப் பிரித்தெடுத்து, குப்பைக் கிடங்கு  இருக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம். அவர்களின் வேலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஆனாலும்கூட அவர்கள் இந்தத் தொழிலை நமக்காகச் செய்கின்றனர். ‘நமது பாரதம்’ என்ற திட்டத்தில் சேர்ந்து எங்கள் கிராமத்திற்காக உழைத்து வரும் ஒரு பெண்மணிதான் பூங்கனி. குப்பைகளைக் கொண்டு செல்லும் கிடங்கு இவர்கள் வீட்டிற்குப் பின்புறம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

காலையில் 6 மணிக்கு தனது வேலைக்காகப்  புறப்படுவார் பூங்கனி. காலை உணவு மட்டும் சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு வரும் பூங்கனியால் மதிய உணவை சாப்பிட முடியாது. கண்கள் கலங்கி அவர் இதைக் கூறும்பொழுது அவர்களது வேதனையை நான் உணர்கிறேன்.

ஏனென்றால் குப்பைகளின் நடுவில், நாற்றத்தில், கைகளை வைத்து அவர்கள் சுத்தம் செய்யும்பொழுது அவர்களுக்குப் பசி என்பதே இருக்காது. சாப்பிட்டாலும் சாப்பாடு அவர்களுக்கு எடுக்காது என்று வேதனையோடு தெரிவிக்கிறார். தேநீர் மற்றும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட பண்டம்; அதை மட்டும்தான் பணி செய்யும்போது சாப்பிடுகிறார். அதுவே அவருக்கு வயிறு நிரம்பிவிடும் என்றும் அவர் கூறுகின்றார்.

நெகிழி குப்பையை அவர்கள் பிரித்தெடுத்து, recycle செய்யக்கூடிய குப்பைகளை மட்டும், அதாவது மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை மட்டும் அந்த இடத்தில் வைத்துவிட்டு, மற்ற குப்பைகளை மொத்தமாக எடைக்குப் போட்டுவிடுவார்கள். எடைக்குப் போடும் கடை தங்கச்சிமடம் பஞ்சாயத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. அங்கு ஒரு குடிசை வீட்டிற்கு முன்னால் அநேகக் குப்பைகளைக் குவித்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை, கண்ணாடி துண்டுகள், டயர் போன்ற குப்பைகளை எடைக்கு ரூபாய் வீதம் கொடுத்து விடுவார்கள்.

மீதம் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக ONGC குப்பைக்கிடங்கு இருக்கும் இடத்திற்குக் கொண்டு செல்வர். குப்பைகளைப் பிரித்தெடுத்து தரம்பிரித்து, அந்தக் குப்பைகளை உலர வைத்து மண், சேறு, நீர் ஆகியவற்றை அகற்றிவிட்டு, அந்த குப்பைகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரத்தினுள் போடுவார்கள்.

அந்த இயந்திரம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெளியே தள்ளவிடும். வெட்டிய துண்டுகளை அரைத்து, தார்ச்சாலை போடுவதற்கு பயனுள்ளதாக அதை மாற்றுகின்றனர். ஆனால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி தங்கச்சிமடத்தில் நெகிழி அரவை இயந்திரம் இல்லாத காரணத்தினால், உச்சப்புளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு குப்பை அனுப்பப்படுகிறது. அங்கு அரவை இயந்திரம் உள்ளதால், அரைத்து அதனை எந்தெந்த கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைக்க உரிமை அளிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அங்கு வேலை செய்யும் நபர்களால் கொண்டு செல்லப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

மறுசுழற்சி செய்யும் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்புறமாக  அழுகிய பழங்கள், காய்கறிகளை அரைத்து மறுசுழற்சி செய்யும் இடம் அமைந்துள்ளது. இந்தத் தொழிலை சீர்பட அரசாங்கத்திற்கு செய்து கொடுக்க வேண்டும் என்று தன்னார்வமாய் முன்வந்து தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இரண்டு மூதாட்டிகள்.

எஸ்தர், ராணி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டம் தங்கச்சிமட பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான அக்காள்மடம் கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டிகள் இவர்கள். பெயர் எஸ்தர், வயது 60 , ராணி, வயது 61. கணவரை இழந்த நிலையில் குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் திக்கற்ற தாய்மாராக தவித்து நிற்கும் இவர்களுக்கு இந்த ONGC நிறுவனத்தின் பழங்கள், காய்கறிகள் மறுசுழற்சித் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பழங்கள் காய்கறிகளை அரைத்து அதை ஒரு தொட்டியினுள் மூன்று நாட்கள் உலர வைப்பார்கள். உலர வைக்கும் காய வைக்கும் தொட்டியில் அழுகிய மிகவும் கொடூரமாக நாற்றம் அடிக்கும் இடத்தில் இவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு பழகிப்போன காரணத்தினால் மட்டுமே, அவர்களின் தொழில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தொட்டிக்குள்  புழுக்கள் அநேகம் இருக்கும். அதை தினமும் காலையும் மாலையும் வேலைக்கு வரும் நபர்கள் தந்தள் கைகளினால் கிண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் வேலை. காய்ந்த பிறகு அதை ஒரு கூடையில் அள்ளி, அதை மர உலக்கை போன்ற கம்பால் இடித்துப் பொடியாக்கவேண்டும்.

ஒரு கிலோவிற்கு ரூபாய் 50 முதல் ரூபாய் 100 வரை இந்தப் பொடி விற்பனை செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் நடுவதற்கு நல்ல உரமாக, இது பயனுள்ளதாக இருக்கிறது. வெளியூரில் இருந்து வரும் நபர்களுக்கும் இதை ஒரு கிலோ இரண்டு கிலோ வீதம் விற்பனை செய்கின்றனர்.

கஷ்டமான சூழ்நிலையில், மோசமான நிலைமையில் இவர்களின் வாழ்வாதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. காய்கறிகள், பழங்களை வைத்து உரம் தயாரித்து அந்த கிராமத்தை வழிநடத்தி வரும் கிராம மக்களின் பெரிய சாதனையாக அதுவும் அந்த கிராமத்துப் பெண்களின் சாதனையாக இது உள்ளது.

நமது கிராமத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் ஒரு சிலர் கவனக்குறைவினால், நெகிழி குப்பைகளை வீதியிலும் பொது இடங்களிலும் வீசுவதையும் கூடியமட்டிலும் நெகிழியை உபயோகப்படுத்துவதையும் தவிர்ப்போம். உயிர் காப்போம், வரும் தலைமுறையினருக்குப் பெருமை சேர்ப்போம், அவர்களின் உயிரைக் காப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

பூங்கனி, எஸ்தர், ராணி போன்ற நபர்களைப் போல நாமும் நம் கிராம நலனில் அக்கறை கொள்வோம். ‘பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம். உயிர் வளம் காப்போம். பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என உறுதி அளிப்போம்.

புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை அறவே ஒழிக்கவேண்டும் என்றால், கண்டிப்பாக இந்த நெகிழிக் குப்பையை அழிக்கவேண்டும். அதற்கான என் முயற்சியின் சான்றாக, தன்னார்வமாய் நான் உங்கள் முன் இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.

படைப்பாளர்

அ. இனிதா பிரகாசி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் தோழர் அ. இனிதா பிரகாசி. BA (Economics), DCA, (MBA) பயின்றுள்ளார். ஹெர் ஸ்டோரிஸ் மூலம் எழுதத் தொடங்கியிருக்கிறார்.