பண்டித ரமாபாய் (1858-1922) அவர்கள் எழுதி 1888 ஆண்டில் வெளிவந்த High Caste Hindu Woman எனும் நூல், ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) பதிப்பகத்தாரால் 2024 ஜுன் மாதம் ‘உயர் ஜாதி இந்துப் பெண்’ எனும் தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தமிழ்நாடு இறையியல் கல்லூரி பேராசிரியர் திருமிகு. முனைவர். ஜா. கிறிஸ்டி பெமிலா அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். இவர் தமிழ், ஆங்கிலம், கிரேக்கம், எபிரேயம் மற்றும் பெர்சிய மொழிகள் அறிந்தவர்; பெர்சிய மொழிக் கவிதைகளை மொழியாக்கம் செய்துள்ளார். சமயத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவர் இந்நூலின் மொழியாக்கப் பணியை எடுத்துக்கொண்டது சிறப்பு. சுமார் 130 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த நூலை இன்றைய சூழல் அறிந்து, மொழிபெயர்க்கத் தெரிவு செய்தமைக்கு அவரைப் பாராட்டவேண்டும்.
இந்திய மண்ணில் ஒடுக்கப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிராகக் கடந்த காலத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பது போலவும், எல்லாமே நன்றாக நடந்தது என்றும் கூறுவதுடன் இன்று பெண்கள் அனைத்துத் தளங்களிலும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்தான் மோசமானவை எனும் கருத்தையும் அடிப்படைவாதிகள் மற்றும் சனாதனவாதிகள் பரப்பிவருகின்றனர். இந்தச் சூழலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்கூட உயர் ஜாதி இந்துப் பெண்கள் எனப்பட்டோருக்கே இச்சமூகம் எத்தகைய அநீதிகள், கொடுமைகளை இழைத்துள்ளது என்பதை இந்நூல் நினைவூட்டுகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் பெண்கள் வாழ்வில் வியப்பூட்டும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது ஒரு பக்கம் ஆறுதலை அளித்தாலும் மறுபக்கம் பல விசயங்கள் மாறாமலிருப்பதும், பழமைகள் மீண்டும் புகுத்தப்படுவதும், அதற்குப் பெண்களையே தலைமை ஏற்கச் செய்வதும் நடைபெற்று வருகிறது.
இந்நூலை மொழியாக்கம் செய்துள்ள ஆசிரியரின் அறிமுகம் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது; நூலுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. இப்பகுதியில் வாசகருக்குப் பல அரிய தகவல்களை அவர் அளித்துள்ளார்.
அடுக்கடுக்காக இழப்புகளையும் துயரங்களையும் கொண்ட பண்டித ரமாபாய் அவர்களின் இளமைப் பருவம், அவற்றை அவர் எதிர்கொண்டு பெண்களின் விடுதலைக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்தது மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த சீர்திருத்தவாதிகள் பற்றியத் தகவல்கள் நூல் அறிமுகத்தில் சொல்லப்பட்டுள்ளன.
அதே சமயம் பெண் கல்வியில் அக்கறை காட்டிய காலனிய அரசு, கிறிஸ்தவ அருள்பணியர்கள், மகாத்மா ஜோதிபா புலே பற்றிய தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. பண்டித ரமாபாய் எழுதிய உயர் ஜாதி இந்துப் பெண் எனும் நூல் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு உயர் ஜாதி இந்துப் பெண்ணின் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் என்னென்ன நடக்கிறது, அவர்கள் அடையும் துன்பங்கள், வேதனை முதலியவற்றையும் அதற்கான அடிப்படைக் காரணத்தையும் விரிவாகக் கூறியுள்ளார். அவற்றைக் குழந்தைப்பருவம், திருமண வாழ்க்கை, சமயத்திலும் சமுதாயத்திலும் பெண்களின் இடம், கைம்மை, மற்றும் சமுதாயத்தில் பெண்களின் நிலை ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் எனும் தலைப்புகளில் விவரித்துள்ளார்.
இன்று பார்ப்பனியம் சனாதனம் முதலிய பிற்போக்குச் சிந்தனைகளை உயர்த்திப்பிடிப்பவர் உள்ளனர். கெடுவாய்ப்பாக பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைத் தாங்கிப் பிடிக்கவும் பரப்பவும் பெண்கள் வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள். இதுதான் பார்ப்பனியத்தின் வெற்றி என்பது. இப்படிப்பட்டவர்கள் உண்மையில் இந்தியப் பெண்களின் வாழ்க்கையை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறார்களா?
உயர்சாதி இந்துப் பெண் இந்தியப் பெண்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், ஏன் 75 ஆண்டுகளுக்கு முன் கூட எவ்வாறு இருந்தனர் என்பதை இந்நூல் நம் கண்முன் நிறுத்துகிறது. ஒட்டு மொத்த சமுகத்தின் மீதும் ஆதிக்கம் செய்து வந்த பார்ப்பனியம் மற்றும் சனாதனம், பெண்களின் எழுச்சி, பலருடைய முயற்சி, தியாகம், மீறல்கள், மற்றும் பங்களிப்பினால் பலவீனமடைந்து இருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் பார்ப்பனியம் சனாதனம் இன்னும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பார்ப்பனியம் மற்றும் சனாதனத்தை மூர்க்கத்துடன் எதிர்ப்பவரிடத்திலேயே அவற்றின் ஒரு சில வடிவங்கள் பாதுகாப்புடன் கடைபிடிக்கப்படுவதுதான்.
மொத்ததிதில் இந்த உயர் ஜாதி இந்துப் பெண் நூல் மூலம் பண்டித ரமாபாய், நாம் கண்களைத் திறந்து நம் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கவும், அந்த அனுபவத்துடன் நிகழ்காலத்தை மதிப்பிடவும், எதிர்காலத்தை நோக்கித் திட்டமிடவும் செயல்படவும் அழைக்கிறார்.
உயர் ஜாதி இந்துப்பெண், பண்டித ரமாபாய் (தமிழில் : ஜா. கிறிஸ்டி பெமிலா), சென்னை : ஹெர் ஸ்டோரிஸ், பக் 118, விலை ரூ 160/-
முனைவர். ஜெயகரன்
சமூக ஆய்வாளர்,
பேராசிரியர், சமூக ஆய்வு ( ஓய்வு)
தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை. இவர் மதுரை தலித் ஆதார மய்யத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார். தலித் ஆன்மிகம் பண்பாடு, தூய்மை – தீட்டு தலித் மற்றும் பெண்கள் தொடர்பாக (ஆங்கிலம்) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இந்தியப் பொருளாதார அரசியல் சிந்தனை பரப்புதல் மற்றும் நூலகம் உருவாக்குதல் ஆகிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.