அங்கோர்வாட் – 2

 பயமும் திகைப்பும் கலந்த அந்தத் திக்… திக்… நிமிடங்கள், அறியா நாட்டில் அகதிகளாக நுழையும்   வழியற்ற மனிதர்களின் மனநிலையை  ஒரு கணம் உணரவைத்தது. ஆனால்  அதிகம் அச்சப்பட வைக்காமல்,    மூன்றாவது நிமிடத்தில் ’டுக் டுக்’ என அழைக்கப்படும் அந்த வாகனம் எங்கள் அருகில் வந்து நின்றது. புன்னகையோடு அருகில் வந்தார் அந்த  ஓட்டுநர் தம்பி. முதல்நாள் பேருந்து நடத்துநர் ஏற்பாடு செய்திருந்த வண்டியின் உரிமையாளர் போலும். இதற்கும் சேர்த்தேதான்  பணம் கட்டியிருந்தாலும், உண்மையில் அந்த அர்த்தராத்திரியில் இப்படியொரு நேர்மையை இந்தியாவிலிருந்து(!) சென்ற நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரே மற்றொரு வண்டியை வரச்செய்ய, இரண்டு வண்டிகளில் நாங்களும் எங்கள் பொதிகளுமாக அடைந்து கொள்ள,   பதிவு செய்திருந்த அறையை அடைந்தோம். நேர்த்தியான கட்டிடம், அவ்வளவு சுத்தம், நீச்சல் குளத்துடன்கூடிய அறைகளின் வாடகையோ மிக மிக மலிவு. டுக் டுக் ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டும் விதமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு நாங்கள் அங்கு இருக்கும்வரை தினமும் வந்து எங்களைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு, அவரவர் அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தவர்கள் காலை 8 மணிக்குத்தான் எழுந்தோம். ஆனால் கனவுதேசத்திற்கே சென்றுவிட்டாலும்கூட, கனவு மட்டும் விடாதுகருப்புவாக இரவெல்லாம் துரத்திக்கொண்டிருந்தது.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, லாவோஸ் (Laos),  வியட்நாம் என மூன்று நாடுகளும் சுற்றிலும் அரவணைத்திருக்க   நடுவில் ‘பொத்துனாப்புல’ அமைந்துள்ள மிகச்சிறிய நாடுதான் கம்போடியா. ஒருபுறம் மட்டும் தாய்லாந்து வளைகுடா (சியாம் வளைகுடா) கண்ணாடி போன்ற தெளிந்த தண்ணீரால் தாலாட்டிக் கொண்டிருக்கிறது.  நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீதம் காடுகளும் மலைகளுமாகத்தான் இருக்கின்றனவாம். வானிலிருந்து  பார்த்தால் அடர்ந்த காடுகள் மட்டுமே   தெரிகிறது. பரப்பளவில் நம் கேரள மாநிலத்தின் அளவில் இருக்கிறது. ஆனால், மக்கள்தொகையோ   1.4 கோடிதான். (கேரளா மக்கள்தொகை 3.5 கோடி).   கம்போடியாவின்  தலைநகர் புனோம் பென் நகரத்தில் இருந்துதான் நாங்கள் பேருந்து மாறி வந்திருந்தோம். 

கம்போடியாவில்  வசிக்கும் மக்களில் 95.6% கெமர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், மீதியுள்ள சிறுபான்மை  சதவீதத்தில் 2.4% சாம், 1.5 % சீனர் 0.2 % வியட்நாமியர் எனக் கலந்து இருக்கின்றனர். கம்போடியா ஒரு பௌத்த நாடு என்பதால் புத்த மதமே  ஆதிக்கம் செலுத்தும் மதமாகவும் இருக்கிறது. ஸ்ரீலங்கா, தாய்லாந்து லாவோஸ், மயான்மரில் பின்பற்றப்படும் தேரவாத புத்தமதமே இங்கும் கோலோச்சுகிறது. 97 சதவீத மக்கள் தேசிய மதத்தைச் சார்ந்தவர்களாகவும்,  இஸ்லாமியர்கள் 2 சதவீதமும்,  0.3 சதவீதம் கத்தோலிக்கர்களும் இருக்கின்றனர்.

கெமர் என்பதே இவர்களது அதிகாரப்பூர்வ தேசிய மொழி. பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாக இருக்கிறது. மிகக் குறைந்த அளவில் பிரெஞ்சு வழிக்கல்வி பள்ளிகளும் உள்ளன. உலகெங்கிலுமிருந்து வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் காரணமாக ஆங்கிலம் பயில்வதிலும் தற்கால இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகக் கருத்தரங்கிற்கு வந்திருந்த கம்போடிய ஆசிரியர் கூறத் தெரிந்து கொண்டேன். ஆனால் நாங்கள் சந்தித்த தெருவோரக் கடை மனிதர்கள் எவருக்கும் ஒரு வார்த்தைகூட  ஆங்கிலம் தெரியவில்லை. ‘ஆங்கிலம் தெரியாது போடா’ என்கிற ரீதியில் கெத்தாக கெமர் மொழியிலேயே எங்களுடன் கதைத்தனர்(!). அடடா… அவங்களுக்கு   இங்கிலீஷ் புரியலியே என   உணர்ச்சிவசப்பட்டு  நாங்க தமிழ் பேச, அவங்க மீண்டும் கெமர் பேச, நாங்க பேச, அவங்க பேச, அவங்க பேச, நாங்க பேச…. பிறகென்ன   ஓர் இளநீர் வாங்குவதற்குக்கூட அஷ்டகோண அபிநயங்களுடன்  கூகுளின் கெமர் ட்ரான்ஸ்லேட்டரே கைகொடுத்தது. தாய்மொழி போலவே ஆங்கிலத்தைப் பேசும்  எங்கள் நிலை இப்படி என்றால்,  மேலைநாட்டவர் (English Native speaker) நிலையை  நானும் சரிதாவும் உளவுபார்த்து, ஒட்டுக்கேட்டு வயிறு வலிக்க சிரித்தது தனிக்கதை.   

தென்கிழக்காசியாவின் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது கம்போடியா. இந்த நவீன காலத்தில்கூட கம்போடிய நாட்டில் 70 சதவீத மக்களுக்கு மின் இணைப்பு இல்லை, 30 சதவீத மக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை, அதிக அளவில் மருத்துவமனைகள் இல்லாததால் 70 சதவீத மக்களுக்குப் போதுமான சுகாதாரம் கிடைப்பதில்லை என்கிற செய்திகளையெல்லாம் அறிந்த போது ‘பாரத் மாதா கி ஜெய்ய்ய்ய்ய்ய்’ என நரம்பு புடைக்கக் கத்தாமல் ’தாய் மண்ணே வணக்கம்’ என  மனதிற்குள் அமைதியாக நன்றி சொல்லிக் கொண்டேன். கொரோனா காலகட்டத்தில் கம்போடியா மிக மோசமான பொருளாதார நிலைக்குச் சென்றுவிட்டபடியால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியைப் பாரதப் பிரதமர் இலவசமாக  அனுப்பி வைத்ததாக கம்போடிய ஆசிரிய நண்பர் நன்றியுடன் பகிர்ந்துகொண்ட போது கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது. (வேண்டாத மருமகள் கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்னு சொல்ற ஆளுங்க  நாங்க இல்ல…. எதிரி வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டுன்னு ஏத்துக்கறவங்கதான்!)

கம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். இன்றைக்கு நடுத்தர வயதில் இருக்கும் பெரும்பாலானோர் பள்ளிக்குச் சென்றதில்லை என்பதுதான் உண்மை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இன்றைய இளைஞர்களிடத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால் நினைத்தவுடன் பௌத்த துறவியாகிவிட முடியாது. அதற்கெனத் தனியாகப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கச் செல்பவர்கள், வருமானமின்றி தங்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைச் சகிக்க முடியாமல், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேறுவழியின்றி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.  டுக் டுக் ஓட்டுகின்ற இளைஞர்கள் பலரும் ஆங்கிலம் பேசாவிட்டாலும், அரைகுறையாகப் புரிந்து கொள்கின்றனர் என்பது ஆச்சரியமாக இருந்தது. எங்கள் ‘ஃபேமிலி டுக்டுக்காரர்’ ஆகிவிட்ட க்ளோட் தம்பியிடம் இது குறித்து விசாரிக்க,  அவர்களெல்லாம் இப்படி ஏழ்மையின் காரணமாகத்  துறவைத் துறந்து டுக் டுக் ஓட்டுநர் ஆகியிருக்கின்றனர்  என்பதையறிந்தபோது  கஷ்டமாக இருந்தது.            

உலகில் இன்னும் மிச்சமிருக்கும் ஒரு சில முடியாட்சி நாடுகளில் கம்போடியாவும் ஒன்று. நாட்டின் தற்போதைய மன்னர் நோரோடோம் சிஹாமொனி (Norodom Sihamoni) தன் தந்தை நோரோடோம் சிஹானோக் (Norodom Sihanouk) 2004இல் ஆட்சியைத் துறந்தபின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.  மன்னர் மீது மக்களுக்கு அசாத்திய மரியாதை இருக்கிறது. தற்போதைய அரசர் மட்டுமல்ல, பண்டைய அரசர்கள் மீதான மரியாதையும் இன்றும் தொடர்கிறது. சூர்யவர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டும் வழக்கமிருக்கிறதா என டுக்டுக் தம்பியிடம் கேட்டால் “அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக் கொள்வது?, அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார்.

தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் அத்தனை கோயில் வாயில்களிலும் சிறுவர், சிறுமியர் பலவித நினைவுப் பொருள்களையும் இன்னபிற பொருள்களையும் கைகளில் வைத்துக் கொண்டு, ‘ஒன் டாலர் ஒன் டாலர்’ எனக் கூவிக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது ‘இவர்களெல்லாம் பள்ளிக்குச் செல்வார்களா, அல்லது குழந்தைத் தொழிலாளர்களா’ என என் ஆசிரிய மனம் விழித்துக்கொண்டு கேள்வி கேட்டது. அவர்களுடன் பேச முயற்சித்த போது சிரித்தபடி விலகிப்போனார்கள். சில பல நினைவுப் பொருள்களை அந்தக்  குழந்தைகளுக்காக வாங்கிக்கொண்டபோது அவர்கள் முகமெங்கும் புன்னகை.  ஆனால் அமெரிக்க டாலர்தான்  அவர்கள் விரும்பும் செலவாணி. நாங்கள் கொடுத்த ரியெல் பணத்தை    ஏளனமாகப் பார்த்து, பாக்கெட்டில் போட்டுவிட்டு,  டாலர் வைத்திருக்கும் வெள்ளைக் காரர்களைப் பார்த்து ஓடினார்கள்.  

 நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை சுற்றுலாவுக்கான அருமையான சீசன் என்றாலும் நாங்கள் சென்றிருந்த அக்டோபர் மாதமும் (2022) வெளிநாட்டவர்களால் நிரம்பிக்கிடந்தது. அவ்வப்போது மழையும் சாரலுமாக இதமாக இருந்தது. ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெயில் காலத்தில் சூரிய பகவானின் அன்பு கொஞ்சம் அதிகமாகவே கிடைக்குமாம்.

அழகான கடற்கரைகள், அடர்ந்த காடுகள், அசத்தலான மீகாங் நதி, கிறங்க வைக்கும் டோன்லே சாப் ஏரி என இயற்கை அழகிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது கம்போடியா. காண்போர் மயங்கும் அக்ஷரா நடனம், கேட்போரை மயக்கும் பாரம்பரிய இசை, ஆழமான வரலாறு,  வளமான கலாச்சாரம் என தென்கிழக்கு ஆசியாவில் தனித்துவமிக்க நாடாகத் திகழ்கிறது. சில தசாப்தங்களுக்கு முன்னர் தாங்கள் அனுபவித்த கொடூரமான வரலாற்று நிகழ்வுகளைப் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சி ததும்ப எளிமையாக வாழ்வை நகர்த்தப் பழகியுள்ள அருமையான   மக்கள் பல்வேறு பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.  

 உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களின் பட்டியலை எந்த இணையதளத்தில் தேடினாலும், கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் இந்துக் கோயில் இடம்பெறாமல் இருப்பதில்லை. அதனால்தான் நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகளும், அவர்களின் மூலம் வரும் வருவாயுமாக கம்போடியா எனும் நாடே இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆம், நாட்டின் முக்கிய வருவாய் இங்கு வரும் சுற்றுலாபயணிகளை நம்பித்தான் இருக்கிறது. 500 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் அங்கோர்வாட் எனும் கலைப் பொக்கிஷத்தின் வாயிலாக  அரசுக்கான வருமானமும் சமூகத்துக்குமான வருமானமுமாக வருடத்திற்கு  நாற்பத்து நான்காயிரம் கோடி ரூபாய் கொட்டுகிறது. அங்கோர் கோயில்களைப் பார்க்க கொரோனாவுக்குப் பின் ஆண்டுக்கு 26 லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர் என்றாலும் அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிற தரவுகள், அதற்கான காரணத்தை உளவியல்ரீதியாகச் சிந்திக்க வைக்கிறது. கோவிட்டுக்கு முன்  66 லட்சம் பார்வையாளர்கள் வருடந்தோறும் சராசரியாக வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும்,  உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.

ஆம், அங்கோர்வாட் மர்மங்கள் சூழ்ந்ததுதான்!

இத்தனை பெரிய கட்டிட அமைப்பு யாரால் ஏன் கட்டப்பட்டது என்கிற மர்மம்…

தொழில் நுட்பங்கள் ஏதுமற்ற அந்த நாளில் எப்படி இவ்வளவு பிரமாண்டமாகக் கட்ட முடிந்தது என்கிற மர்மம்…

அதன் வடிவமைப்பு கூறுகளில் மறைந்துள்ள மர்மம்…

காலவோட்டத்தில் அந்த அற்புதம் புறக்கணிக்கப்பட்டதன் மர்மம்…

போன்ற கேள்விகளுக்கான ரகசியங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு வரலாற்றாளர்களுக்குச் சவால் விட்டு நிற்கிறது அந்த அதிசயம்…..

உலகத்தில் இருக்கும் கலைச் செல்வங்களையெல்லம் ஒட்டு மொத்தமாகக் கொண்டு வந்து குவித்தது போல பிரமாண்டமாக, பூடகமாகs சிரித்தபடி நிற்கிறது அந்தப் பேரதிசயம்!

(தொடரும்)

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘கவின்மிகு கம்போடியா- தொல்நகரில் ஓர் உலா’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.