நட்பு, தோழமை, சினேகிதம் என்பதெல்லாம் பால் வேறுபாடின்றி இரு மனிதர்களுக்குள் அல்லது பலரோடு தோன்றும் ஒரு அற்புதமான உணர்வாகும். உலகில் மனித இனம் தோன்றியபோதே இந்த நட்பும் கட்டாயம் உருவாகியிருக்கும். வயது, சாதி, மத, இன வேறுபாடுகள், மொழி பேதம் எதுவுமின்றி உருவாகும் இந்த நட்பு இரண்டு வேறுபட்ட எண்ணம் உள்ளவர்கள் அல்லது மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் என்று பாகுபாடின்றி யாவரையும் இணைக்கும் ஒரு அற்புதமான பாலமே ஆகும்.
பார்க்கும் எல்லோருடனும் நட்பு பாராட்டலாம். ஆனால் ஆத்மார்த்தமான, இதயப்பூர்வமான நட்பு ஒரு சிலருடன்தான் ஏற்படும். நமது தனிப்பட்ட சிக்கல்களைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் உன்னதமான உறவு நட்புதான். இந்த உலகத்தில் எந்த இரத்த உறவும் இல்லாதவர்கள்கூட, நட்பில்லாமல் இருந்ததில்லை. ஒரு மனிதனின் சிறந்த சொத்து அவர் சேர்க்கும் நட்பேயாகும்.
நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் நட்பு குறித்து வள்ளுவர் அருமையாக விளக்குகிறார். வெறும் வாய்ப்பேச்சாக ஒப்புக்கு பழகுபவர்களை விட மனதுக்கு நெருக்கமாகப் பழகுவதே உண்மையான நட்பு. ஆனால் நட்பென்பது அதேபாலினருடன் தான் ஏற்பட வேண்டும் என்று இன்னமும் இந்தப் பத்தாம்பசலித்தனமான சமூகம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
சங்ககாலத்தில் கூட ஆண்-பெண் நட்பு அழகாக இருந்திருக்கிறது. அவ்வையாரும்,அதியமானும் கொண்ட நட்பு இருவரும் கள்ளுண்டு, கவிபாடும் அளவு பால் வேறுபாடின்றி சிறந்ததாக இருந்தது. கிடைத்தற்கரிய அருநெல்லிக் கனியை அவ்வை உண்பதற்குக் கொடுத்தான் அதியமான். நட்புக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் உயரிய பண்பு இங்கே வெளிப்படுகிறது.
உயர்ந்த நட்பு எப்படி இருக்க வேண்டுமென்று அவ்வை அழகு தமிழில் விளக்குகிறார்.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
‘ஒரு அழகிய நீர் நிறைந்த குளம். அங்கு பலவகைப் பூக்களும் அழகாக மலர்ந்திருக்கின்றன. அங்கு நீரருந்த நிறையப் பறவைகளும் வந்து போகின்றன. ஒருநாள் குளம் வற்றி விட்டது. தண்ணீர் குடிக்க வரும் பறவைகள் வரவில்லை. ஆனால் அந்தக் குளத்திலேயே பூத்திருந்த தாமரையும், அல்லியும், இன்ன பிற நீர்க்கொடிளும் குளத்துடனே வாடின. அதுபோல ஒருவர் செல்வம் நிறைந்திருக்கும் போது பலரும் நட்பு கொண்டாடுவர். அந்த செல்வம் அழிந்து அவர் வறுமையுறும் போது உண்மையாகப் பழகிய சிலரே அவருடன் இருப்பார்கள். மற்றவரெல்லாம் அந்தப் பறவைகள் போல வேறு நீர்க்குளத்தைத் தேடிப் பறந்திருப்பார்கள்’. எனவே நண்பர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்ள வேண்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு தாத்தா வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பாட்டி உள்ளே வேலையாக இருந்தார். அப்போது இன்னொரு பெரியவர் வெளியேயிருந்து பாட்டியை அழைத்தார். தாத்தா அவரிடம் என்ன விஷயமென்று வினவ, அவரோ பாட்டியிடம் தான் சொல்ல வேண்டும் என்றார். பாட்டி வெளியே வந்தார். இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தாத்தா என்னிடம், “அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்டுக…” என்றார் சிரிப்போடு. உள்ளே வந்த பாட்டியிடம் என்ன பேசினார்கள் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. “நம்ம கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியுமா?… கேக்குறதுக்கு ஒரு ஆளு வேண்டாமா?…” என்றார் இயல்பாக. அவர்களுடைய புரிதல் கண்டு வியப்பாக இருந்தது.
ஆணோடு நட்பு கொள்வதை விடுங்கள். பெண்ணும் பெண்ணும் பழகும் நட்பே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கரைந்து விடுகிறது. பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரைதான் நட்புகளெல்லாம். அதன்பின் கணவன், குழந்தைகள், குடும்பம் மட்டுமே அவளுடைய உலகமாகி விடுகிறது. தோழிகளுடன் இயல்பாக வெளியில்கூட செல்ல முடிவதில்லை. தோழமை உணர்வே அற்றுப் போய் விடுகிறது. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவியின் நட்பு வட்டாரம் பிடிப்பதில்லை. “உனக்கெதுக்கு ஃப்ரெண்ட்ஸ்?.. என்னை யாரு கவனிப்பாங்க?… வீட்டை யாரு பாத்துக்குவாங்க?… குழந்தையை யார் பாத்துக்கிறது?…” என்று பெண்ணின் வெளியுலகத் தொடர்பை துண்டித்து விடுகிறார்கள்.
நிறையப் பெண்களின் குழந்தைகளுக்கு தன் தாய்க்கு நண்பர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. தந்தையின் பெண் நட்புகளைக் கூட ஏற்றுக் கொள்பவர்கள், தாயின் தோழிகளைக்கூட விரும்புவதில்லை என்பது கசப்பான செய்தி. குழந்தைகளுக்கு நட்பைக் குறித்த தெளிவை ஏற்படுத்தாதது அவர்கள் பெற்றோரின் தவறு. பாலின வேறுபாடுகள் இன்றி எல்லோருடனும் இயல்பான நட்பைப் பேண குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே சமயம் நல்ல நட்பு எதுவென்று தேர்ந்தெடுத்துப் பழகவும் கற்றுத் தர வேண்டும்.
“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்..”
என்கிறது வள்ளுவம். ஆராயாமல் ஒருவரை நட்பாக ஏற்றுக் கொள்வதும், நம்பிய நட்பை சந்தேகக் கண் கொண்டு ஆராய்ந்து கொண்டே இருப்பதும் நமக்கு தீராத வேதனையைத்தான் தரும் என்பதை குழந்தைகளின் இளமனதில் பதித்து விட வேண்டும்.
பெரியவர்கள் நட்பைப் போல, குழந்தைகளின் நட்பையும் நாம் மதிக்க வேண்டும். அது அவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்துவதோடு, தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலையும் நிச்சயம் தரும். அவர்களுடைய வாழ்க்கை மகிழ்வாகவும், நிம்மதியாகவும் அமையும்.
நட்பின் முக்கிய தேவையே துன்பத்தில்உதவுவதுதான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும்போது இதை அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டும்.
கஸாலி என்ற மாமேதை நட்பினை மூன்று வகையாகப் பிரிக்கிறார். முதலாவது வகை நட்பு உணவைப் போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. இரண்டாவது வகை நட்பு மருந்தினைப் போன்றது. இந்த வகை நட்பு எப்போதாவது தேவை. மூன்றாவது வகை நட்பு நோயைப் போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவையில்லை என்பார். இதுபோல் வகை பிரித்து நட்பு கொண்டோர் எப்போதும் வாழ்வில் தோற்பதில்லை.
‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’. ஒருவனின் இடுப்பிலிருந்து நழுவும் ஆடையை எப்படி விரைந்து கைகள் பற்றிக் கொண்டு மானம் காக்கின்றனவோ அதுபோல, நண்பர் துன்பத்தில் இருக்கும்போது விரைந்து சென்று அthதுன்பம் களைபவரே உண்மையான நண்பர் என்பதை நாம் உணர்ந்து தெளிதல் வேண்டும்.
ஒன்றாக சுற்றித் திரிந்து இன்ப, துன்பங்களைப் பகிர்ந்த நண்பர்கள் காலத்தின் வினையால் பிரிய நேரிட்டால், ஒருவரைப் பற்றி இன்னொருவர் அறிந்த இரகசியங்களை வெளியிடுதல் என்பது பச்சைத் துரோகம் ஆகும். அத்தகைய செயல்களை ஒருபோதும் செய்யக் கூடாது. இதைக் குழந்தைகளுக்கு நன்றாக மனதில் பதித்து விடவேண்டும்.
நம் நண்பர்கள் யாரென்று சொன்னால் நம்மீது மதிப்பு வர வேண்டும். அதுபோன்ற நட்புகளைத் தெரிவு செய்ய வேண்டும். தவறு செய்தால் இடித்துரைத்து நல்வழி காட்டும் நண்பரே சிறந்தவர். சொல்லும், செயலும் ஒன்றுபோல் அமைந்த தலை நட்பைக் கொள்ளுதல் வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இடை நட்பைத் தள்ளுதல் வேண்டும். நட்புக்கு தீமை செய்யத் துணியும் கடை நட்பை அடியோடு விலக்குதல் வேண்டும். பெண்களும் மற்றவரிடம் நட்பாகப் பழக வேண்டும். அதன்மூலம் கிணற்றுத் தவளைபோல் இல்லாமல் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள இயலும். அப்போதுதான் எந்த ஒரு விஷயத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காமல், வெவ்வேறு கண்ணோட்டத்திலும் பார்த்துக் கணிக்க முடியும். பெண்கள் நண்பர்களுடன் அளவளாவுவது, மனம் விட்டுப் பேசுவது, அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும். மனம் சோர்வாக உணரும் தருணங்களில் ஒரு ஆத்மார்த்தமான நட்புடனான சிறு உரையாடல் நம்மை எளிதாக மீட்டெடுக்கும்.
நட்பு உற்சாகமளிக்கக் கூடியது; உத்வேகம் தரக் கூடியது. வாழ்வில் முன்னேற ஊக்குவிக்கக் கூடியது. அத்தகைய நட்பைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
“பார்வை அரும்பு கட்டி
வாக்கிய இதழ் விரித்து
மலரும் பூ நட்பூ..”
என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் நேசத்தால், பாசத்தால், நட்பால் நிரம்பியது. உலகத்தை எந்தப் பிரதிபலனுமின்றி நேசிக்கத் தொடங்கி விட்டால், வாழ்வில் எல்லாக் காலங்களும் வசந்த காலமாகவே பூத்துக் குலுங்கும்.
நட்புக்காக உயிரையும் கொடுக்கலாம். ஆனால் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு உண்மையான நட்பு கிடைப்பதுதான் அரிது.
படைப்பாரின் மற்ற படைப்பை வாசிக்க:
படைப்பு:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.
இன்னும் பெண்ணின் நட்பை ஏற்றுக்கொள்ள யாருக்கும் மனம் பக்குவப்படவில்லை கனலிக்கு ஒரு சபாஷ் 👏👏👏👏👏👏