பெரும்பான்மையான பெண்களுக்குத் தோழமை வட்டம் ஏன் இல்லாமல் போகிறது? சின்ன வயதில் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் விளையாடுவதும் சேர்ந்து படிப்பதுமாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, வயதுக்கு வந்தவுடன், சக தோழர்களுடன் இயல்பாகப் பழகுவதற்கும் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. “ஆம்பளப் புள்ளையோட அப்படி என்ன பேச்சு? அவனுகளோட இனி விளையாடாதே. இன்னும் நீ சின்னக் குழந்தை கிடையாது. ஒரு பொண்ணா பொறுப்பா நடந்துக்கோ” என்றெல்லாம் குடும்பமும் சுற்றியிருப்பவர்களும் அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். பல பள்ளிகளில், சில கல்லூரிகளிலும்கூடப் பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் தனித்தனியே உட்கார வைத்து, ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது என்றும், பேசினால் ’ஃபைன்’ கட்டச் சொல்லியும் நிர்பந்திக்கிறார்கள். பேசினால் எங்கே இருவரும் காதலித்து விடுவார்களோ என்ற பயமின்றி வேறென்ன காரணம் இதற்கு இருக்க முடியும்? இதற்குப் பலிகடாவாவது பெண்ணுக்கும் ஆணுக்குமான இயல்பான நட்பு.

அட, ஆண்களைக்கூட விடுங்கள், கல்லூரிப் பருவம், வேலை பார்க்கும் பருவம் வரை தன்னுடைய தோழிகளுடன் நட்பைக் கொண்டாடும் பெண்களால் கல்யாணத்திற்குப் பிறகு நட்பைத் தொடர முடிவதில்லையே, ஏன்? பெண்ணானவள், தோழிகளான தன் சகப் பெண்களுடன் நட்பைத் தொடர முடியாத அளவிற்குக் குடும்ப அமைப்பும் ஆணாதிக்கச் சமுதாயமும் அவர்களை இறுக்கி வைத்திருக்கின்றன. “கல்யாணமாகிவிட்டதா, இனி கணவனும் குடும்பமும் தான் முக்கியம், அதற்குப் பிறகுதான் எல்லாம்” என்பது பொதுப்புத்தியின் எழுதப்படாத விதியாக இருக்கிறது. இந்த ’அதற்குப் பிறகு’ என்பது மிகப் பெரிய பொறி (trap). எப்போது இந்த ’அதற்குப் பிறகு’ முடியும் என்று யாருக்கும் தெரியாது. கல்யாணத்திற்குப் பிறகு கர்ப்பம், பிரசவம், குழந்தைகள், அவர்களை வளர்ப்பது, கணவன், மாமனார், மாமியார் மற்றும் சுற்றத்தாரைக் கவனிப்பது, அவர்களுக்கான வேலைகள்… வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால் தன்னுடைய அலுவலகப் பணிச்சுமை… என்று சுழன்று கொண்டே இருக்கும் பெண்ணால் தன் நட்பை நினைப்பதற்குக்கூட நேரம் இருக்காது. நேரத்தைவிட, “தன் நட்புக்கு நேரம் ஒதுக்குவது, குடும்பத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகும்” என்ற தவறான கற்பிதத்தையும், அதனால் பெண்களுக்கு ஒரு குற்றவுணர்வையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்த ஆணாதிக்கச் சமுதாயம். இதற்கு ஆட்பட்டு, பெண்கள் தமது தோழமை வட்டத்தை சுருக்கிக்கொண்டே போகிறார்கள். ஒரு கட்டத்தில் அது இல்லாமலே போய்விடுகிறது. “என் தோழிகளை எங்கே தொலைத்தேன்?” என்று புரியாமல் திண்டாடுகிறார்கள். தன் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ள நம்பிக்கைக்குரிய ஆட்கள் இல்லாமல் தவிக்கிறார்கள்.

பெண்களுக்குத் தோழிகள் வட்டம் மிகவும் தேவை. ஆணாதிக்கச் சமுதாயம், ஒரு பெண்ணாக அவளிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மிக மிக மிக அதிகம். இதை யதார்த்தத்தில் அவளால் செய்து முடிக்க முடியாது என்பதுதான் உண்மை. இதனால், குடும்பத்திலும் சுற்றுவட்டாரத்திலும் பொதுவெளியிலும் அவள் எதிர்கொள்ளும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் சீண்டல்களும், அவளைச் சோர்ந்து போகச் செய்கின்றன. தன்னுடைய மனக்குமுறல்களை, உணர்வுகளை, பிரச்னைகளை யாரிடமாவது சொல்லி ஆற்றிக்கொள்ள பெண்ணுக்கு ஒரு வடிகால் தேவை.

“என்னுடைய பிரச்னைகளைச் சொன்னால் அது வெளியே போகாது” என்ற நம்பகத்தன்மை நெருங்கிய தோழிகள் வட்டத்தில்தான் கிடைக்கும். என்னதான் புரிந்துகொள்ளும் இணையரும் குடும்பமும் இருந்தாலும், சில விஷயங்களைத் தோழிகளிடம்தான் பகிர்ந்துகொள்ள முடியும். பெண்ணுக்கு அது தரும் ஆசுவாசம் அளப்பரியது. மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும். “எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை, எனக்கு மட்டும்தான் இந்தக் கஷ்டம்” என்று வருந்தும் மனம், “அட, எனக்கும்தாம்பா இருக்கு” என்று சகதோழி பகிர்ந்து கொள்ளும்போது, “ஓ, நான் தனியா இல்ல. இவங்களுக்கும்தான் இருக்கு. அப்போ, இது ரொம்பப் பெரிய பிரச்னை ஒன்னும் இல்ல” என்று ஆறுதலடையும்.

மன உணர்வுகளையும் பிரச்னைகளையும் பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும் பெண்ணுக்குத் தோழிகள் வட்டம் வேண்டும். வீட்டில் மருமகளாக, மனைவியாக, அம்மாவாக, அக்காவாக, மகளாக, அண்ணியாக, தங்கையாக இருக்கும் பெண் தன் தோழிகளுடன் இருக்கும் போது மட்டும்தான் சகமனுஷியாக இருக்கிறாள். எந்த ரோலையும் (role) எடுத்துக் கொள்ளாமல், எந்த முகமூடியையும் அணிந்துகொள்ளாமல் அவள் அவளாக இருக்கிறாள். தோழமைவெளியில் அவள் சுதந்திரமாக இருக்கிறாள். மனதில்படுவதைப் பேசி, சிரித்து, கலாய்த்து, விளையாடி, இயல்பாக இருக்கிறாள். இந்தத் தருணங்கள் அற்புதமானவை. ஒவ்வொரு பெண்ணும் அதனை அனுபவித்துப் பார்க்க வேண்டும். `நீங்கள் நீங்களாக இருக்கும்’ கொண்டாட்டமான தருணங்கள் அவை!

பெரும்பாலான ஆண்கள் – முற்போக்கானவர்கள், புரிதல் உள்ள இணையர் உட்பட – தன் மனைவி, தான் அருகில் இருக்கும்போது சந்தோஷமாக இருப்பார், தான் அருகில் இல்லாத நேரங்களில் வருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறார்கள்; அதாவது தன் மனைவியின் சந்தோஷம் தன் அருகாமைதான் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல. தான் அருகில் இல்லாத தருணங்களிலும், அதாவது தன் மனைவி, தோழிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதும், அவர்களுடன் பயணம் போகும் போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள் என்ற யதார்த்தத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்புத் தோழர்களே, நீங்கள் அன்பானவர்கள்தான், உங்களுடன் இருக்கும்போது உங்கள் இணையர் சந்தோஷமாகத்தான் இருக்கிறார். ஆனால், உங்கள் இணையருக்கு அவர்களின் நட்பு வட்டத்துடன் இருக்கும் நேரமும் தேவைப்படுகிறது. அது தோழமைகள் தரும் மகிழ்ச்சி. அதுவும் பெண்ணுக்குத் தேவை. அதனால் உங்கள் மீது அன்பு குறைகிறது என்று பொருளல்ல. இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இப்போது தோழிகளுக்கு வருவோம். தோழியரே, உங்கள் தோழிகள் வட்டத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்களா, அவர்களுடன் தொலைபேசியிலாவது உரையாடுகிறீர்களா, சந்திக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பெரிய சந்திப்புக்கூட்டம் என்றெல்லாம் இல்லாவிட்டாலும், உள்ளூர் தோழிகள் என்றால், மாலையில் டீ சாப்பிட சந்திப்பது, சேர்ந்து ஷாப்பிங் போவது, படத்துக்குப் போவது என்று சின்னச் சின்னதாகத் திட்டமிடலாம். வெளியூர் தோழிகள் என்றால் இரண்டு மாதங்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ஒரு நாள் சந்திப்பாகத் திட்டமிடலாம். தோழிகள் அனைவரும் சேர்ந்து இரண்டு, மூன்று நாள் பயணம் போகலாம். “இதுவரை இல்லாம இப்ப என்ன புதுசா?” என்ற கேள்விகள் குடும்பத்தினரிடமிருந்து வரத்தான் செய்யும். முடிந்தால் புரிய வையுங்கள். இல்லாவிட்டால் கடந்து போங்கள்.

Image of two best friends standing together and posing with book on white background . High quality photo

“இதுவரை தோழிகளே எனக்கு இல்லையே, நா என்ன செய்யுறது?” என்ற, பல தோழிகளின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. உங்கள் தோழமை வட்டத்தை உருவாக்குங்கள். இதற்கு உழைக்க வேண்டும். ஆம், இது மிகப் பெரிய வேலைதான். ஆனால், முடியாதது இல்லை. அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள், பணியிடத்தில், பயணத்தில் அறிமுகமாவோர், முகநூல் தோழிகள் என்று சுற்றிலும் உற்றுக் கவனித்து உங்களுக்கு ஏற்றவர்கள், உங்கள் மீது அன்பு செலுத்துவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். ஒத்த சிந்தனையுடையவர்களுடன் நட்பாக இருப்பது மகிழ்ச்சியானது. ஆனால், எல்லா நேரமும் அப்படி அமையுமாவென்று சொல்ல முடியாது. ரொம்ப ஆராய்ந்துகொண்டிருக்காமல், நம் மீது அன்பு செலுத்துகிறார்களா, நம்பிக்கையானவர்களா என்று பார்த்து உரையாடத் துவங்கலாம். காலப்போக்கில், அந்த நட்பு எப்படியானது என்று நீங்களே உணர்வீர்கள்; தேவைப்பட்டால் தவிர்ப்பீர்கள் அல்லது தொடர்வீர்கள். நட்பைப் பொருத்தவரை, அன்பு செலுத்துவதும் விட்டுக் கொடுப்பதும் புரிந்து கொள்வதும் முக்கியமானது. “உங்கள் துணையிடம் இருக்கும் குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள், யார் கண்டது, அந்தக் குறைகள் இல்லாவிட்டால் அவருக்கு உங்களைவிடச் சிறந்த துணை கிடைத்திருக்கலாம்” என்ற கூற்று, இணையருக்கு மட்டுமல்ல, தோழமைகளுக்கும் பொருந்தக்கூடியது. நட்பில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள் தானே. இவர்கள் இப்படித்தான் என்று சட்டகத்துக்குள் யாரையும் அடைக்காமல், முன்முடிவுகள் (judging) இல்லாமல் அதே நேரத்தில், நமக்கான எல்லைகளையும் (boundaries) வரையறுத்து, அன்பு செய்தால், ஏகப்பட்ட தோழிகள் கிடைப்பார்கள்.

வாழ்தல் இனிது. நட்பு வட்டத்துடன் வாழ்தல் இன்னும் இனிது தோழிகளே!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.