நாடு சுதந்திரம் பெற்று 75ஆவது விடுதலை நாள் விழாவை மிகச் சிறப்பாக தேசம் முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்க கூடிய வேளை இது. மக்கள் மனத்தளவில் சுதந்திர நாளை வேறு வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர். ஆனால், நிஜ சுதந்திரம் இங்கே இருக்கிறதா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தருணம்.
தற்போது பொருளாதார விடுதலை அடைந்துள்ளோமா? ஆம், பெருமளவு அடைந்துள்ளோம். நாடு அப்போது இருந்ததற்கு இப்போது மிக அதிகமான அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு திகழ்கிறது. அதேபோல கல்வி வளர்ச்சியில், தொழில் துறையில் என எல்லா நிலைகளிலும் அதற்கே உரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், மிகவும் குறிப்பாகப் பெண்களுடைய விடுதலை எவ்வாறு பார்க்கப்படுகிறது என்று பார்த்தால்…
பெண்களுக்கான இடம் இந்தச் சுதந்திர இந்தியாவில் எங்கு இருக்கிறது என்று பார்த்தால், நாம் இன்னும் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத இடத்தில் உள்ளோம். இன்று சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் வேண்டுமானால் பெண்கள் சுதந்திரம் பெற்று வளர்ச்சி அடைந்து விட்டதைப் போல ஒரு பாவனை தோன்றும். ஆனால், நமது மக்கள் தொகையில் ஆண்-பெண் பிறப்பு விகிதம் குறித்துப் பார்க்கும் போது பெண்களுடைய வளர்ச்சி எங்கு உள்ளது?
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கான உழைப்புச் சுரண்டல் நிகழ்கிறது. அங்கு அவர்களுக்கான சுதந்திரம் கிடையாது. பெண்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டி புதைக்கும் இடமாகவே பெரும்பாலான குடும்பங்கள் திகழ்கின்றன. கல்வியிலும் பெண்களுக்கான இடம் எங்கு உள்ளது? வேலை பார்க்கும் இடங்களில் அடிமை மனோபாவம்தான் தழைத்தோங்கி நிற்கிறது.
பொருளாதாரச் சுதந்திரம் அடைந்த பெண்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களே நிர்வகிக்கிறார்களா என்று கேள்வி கேட்டால், நூற்றுக்கு 90 குடும்பங்களில் இல்லை என்ற பதிலே வரும்.
எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிற பெண்கள் ஒருபுறம், ஆனால் அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் எடுத்துக்கொள்ள முடியாமல் அல்லது அவர்களுக்குத் தராமல் பிடுங்கி வைத்துக்கொண்டு வேடிக்கை காண்பிக்கிறது இந்தச் சமூகம். இதனை வேறு வேறு விதங்களில், அவரவர் பார்வையில் வெளிப்படுத்தும் வார்த்தைகள்தாம் வேறு.
பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும், குடும்பப் பண்புடையவர்களாக இருக்க வேண்டும், பெண்களுக்கான இயல்பில் அமைதியாக இருக்க வேண்டும், சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதமான நடைமுறை கற்பிதங்கள். ஆனால், இது போன்ற சொற்களால் பெண்களை, குழந்தைகளிலிருந்தே ஒடுக்கி வாழக்கூடிய சூழல்தான் இன்றும் நிலவுகிறது. உடை நாகரிகம் இவற்றில் பெண்கள் அவரவர் அளவில் மாறி வளர்ந்து போல ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்பது அது மட்டுமல்ல.
எங்கே அவர்களுடைய சுயமரியாதைக் காக்கப்படுகிறது?அவர்களுடைய கருத்துக்கு வீடுகளிலும் பணிபுரியும் இடங்களிலும் எத்தகைய வரவேற்பும் ஏற்றுக்கொள்தலும் இருக்கின்றன என்பதனை நாம் ஆழ்ந்து பார்த்தால் தெரியும். பெண்கள் எத்தகைய அடிமைமுறை வாழ்க்கையை இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று… ஏனென்றால் பெண்கள் குடும்பங்களில் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
ஒரு பெண் தான் நினைப்பதை, சிந்திப்பதை, விரும்புவதை இந்தச் சமூகத்தில் பேச, எழுத, செயல்பட கட்டுப்பாடு நிறைந்த சூழல்தான் நிதர்சனம். இங்கு சமத்துவம் பேசும் கூட்டங்களின் மேடைகளில்கூடப் பெண்களுக்கான இடம் என்பது காலியாகவே இருக்கும். இந்தச் சமூகம் ஆண் சுபாவத்தாலும் ஆண்களின் கற்பனையாலும் ஆண்களின் அதிகாரத்தாலும் பெண்களுக்கான சுதந்திரத்தை, தனது கைகளில் கடிவாளம் போட்டு இயக்கி வரும் இயல்பிலிருந்து இன்னும் மாறவில்லை. இன்னும் சொன்னால் மாலை ஆறு மணிக்கு மேல் ஆண்களுக்கு மட்டுமே வெளியில் நடமாட அனுமதியுள்ள ஊர்கள், அடிமை இருளில் வசதியாக உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வல்லுறவுகள் ஏன்? வேலைக்கான கூலியில் பெண்களுக்கு சம ஊதியம் கிடைக்கிறதா? சமமான உழைப்பின் அங்கீகாரத்தைச் சமமாக அல்லவா சுதந்திரம் அளித்திருக்க வேண்டும். இல்லையே… போராட்டம் தானே நடக்கிறது.
பெண் சுதந்திரமாக நடந்தால் சம்பாதிக்கும் திமிர் என்ற வசவைத்தானே இன்னும் வழங்குகின்றனர்? எனில் சுதந்திர நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் என்பது வெறும் வாயளவில் மட்டுமே.
மொத்தமாகவே மக்களின் மனோபாவம் அடிமைத் தனத்திற்கு எடுத்துக்காட்டாக வாழப் பழகிவிட்டது. அதே மனோபாவத்தைப் பெண்களை நோக்கிக் காட்டி, சமூகம் பெண்களைச் சுதந்திர மனப்பான்மையற்றவர்களாக வாழ நிர்ப்பந்திக்கிறது. பெண் சுதந்திரம் உண்மையில் பயிற்சி தரவும் பயிற்சி எடுக்கப்படவும் வேண்டிய பொருள் பொதிந்த முக்கிய சொல்லாடல்.
படைப்பாளர்:
சு உமாமகேஸ்வரி
உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.
நன்று.
பெண்கள் மட்டும் அடிமையல்ல. ஆண்களும்தான்.
ஏன் பிரதமரும் ஜனாதிபதியும் அடிமைகள்.
அடிமை எப்படி ஆனார்கள் என்பதை மனித குல வரலாற்றிலிருந்து அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும்…
dpy-b