அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாம் விடுதலை அடைந்து முக்கால் நூற்றாண்டு ஆகியும் இன்னும் முழு விடுதலை பெற்றோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு, விளையாட்டுத் துறையில் வளர்ச்சி… இதெல்லாம் இன்னும் நமக்கு எட்டாக் கனியே.

வெளிநாடுகளைப் பார்த்து கணினிமயமாக்கினால் மட்டும் போதாது. இந்த டிஜிட்டல் இந்தியாவில்தான் இன்னும் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் வசிக்கும் மக்கள் இருக்கிறார்கள். வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. வீடில்லாதவர் நிலையை அவர்கள் ஒரு கணமேனும் நினைத்திருப்பார்களா என்பது கேள்விக்குரியது.

ஊழல் இல்லாத இந்தியா இன்னும் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படுகிறது. படித்த படிப்பிற்கு இங்கே வேலை கிடைப்பதில்லை. படிக்கிற படிப்பே இங்கு பயனற்றுத் தானே இருக்கிறது! வாழ்க்கைக்குத் தேவையான கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. கல்விமுறையில் இன்னும் மெக்காலேவையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறோம். நமக்கென்று கல்விமுறையை உருவாக்கச் சிறந்த கல்வியாளர்கள் யாரும் இங்கில்லையா?

விடுதலைக்கு முன்பிருந்த நிலையில் இருந்து சில படிகள் மட்டுமே பெண்களின் நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது. இப்போது நிறையப் பெண்கள் படிப்பறிவு பெற்றாலும் அதனைப் பயன்படுத்தி வாழ்வில் எத்தகைய முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் எடுத்துச் சொல்ல முடிவதில்லை. குழந்தைகளுக்கு வீட்டில் ட்யூஷன் எடுக்க மட்டுமே அவர்களின் கல்வியறிவு உபயோகப்படுத்தப்படுகிறது. முன்பு பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து வைத்தார்கள். இப்போது படித்து முடித்த உடனே அல்லது படிக்கும் போதே கல்யாணம் செய்து வைத்து விட்டு, பொறுப்பு கழிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

ஆணும் பெண்ணும் சமமென்ற நிலையை எட்ட இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான பல அடிகளை இப்போது நாம் எடுத்து வைத்திருக்கிறோம். நிச்சயமாக மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

குற்றம் குறைகள் பல இருந்தாலும் சுதந்திர தினத்தன்று சட்டையில் கொடி குத்திக்கொண்டு, ஆரஞ்சு மிட்டாயைச் சுவைத்துக் கொண்டே சொல்வோம், “ஜெய்ஹிந்த்”!

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.