உடையணி மரபு
பொருளாதார சுதந்திரமடைந்த பெண்கள்கூட சுய பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள முடியாதபடி தொடர்ந்து ஆண்களின் பாதுகாப்பு வளையத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ்க்கை நடத்தும் வகையில், பெண்களை உணவு, உடை, இருப்பிட மரபுகள் ஒடுக்கி வருகின்றன. உணவு மரபு குறித்து முதல் கட்டுரையில் பார்த்திருந்தோம். இக்கட்டுரையில் உடை மரபு குறித்தும், அதிலுள்ள பாலின பாகுபாடு குறித்தும் பார்க்க இருக்கிறோம்.
ஊட்டச்சத்து பற்றாக்குறையோடு பெண் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறோம். அவர்களுக்கு பாக்கெட் வசதிகளற்ற ஆடைகளை வடிவமைத்துக்கொடுத்து, பணம் அல்லது பணப் பரிவர்த்தனை கார்டுகளைத் தனியாக எடுத்துச்செல்ல பர்ஸ்களையும் விலையுயர்ந்த ஸ்லிங் பேக்குகளையும் உற்பத்தி செய்து கொடுக்கிறோம். எல்லா நாளிலும் காதுகளிலும் கழுத்திலும் தங்கத்தைச் சுமக்கச் செய்து, மென்மையின் உருவகமாகப் பெண்களை வெளியுலகத்தில் பயணிக்க விடுகிறோம். இத்தகைய தமிழ்க் குடும்பங்கள், ஊட்டச் சத்து நிறை உணவுகளை ஊட்டுவித்து, வீரத்துடனும் உடல் பலத்துடனும் ஆண்களை வளர்த்தெடுத்து ஆபத்து என்றால் வேகமாக ஓடுவதற்கு ஏதுவான ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுக்கிறோம்.
கூடுதலாக பெண் ஆணின் நுகர்வுப் பண்டம் என்ற உணர்வையும் மறைமுகமாக சொல்லிக் கொடுத்து பொது வெளிகளில் நேரம் காலமின்றி உலா வர ஆண்களுக்கு வழிவகை செய்து கொடுக்கின்றோம். இவற்றையெல்லாம் புரிந்து கொண்ட திருடர்கள், சுலபமாகப் பெண்களின் நகைகளைப் பறித்துச் செல்கின்றனர்.
துரத்திப் பிடிப்பதற்கான தெம்பற்ற உடலில், தடுக்கி விழச்செய்யும் ஆடைகளைச் சுமந்து ஓடி திருடர்களைப் பிடிக்கும் துணிவற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களது கண்ணீரை கண்டும் காணாதது போல, குற்றப்பின்னணிகளை ஆராயாமல் நகரும் சமூகம் நாம்.
கலையிலக்கிய வடிவங்களில் ஒரு வேளை பாதிக்கப்படுகின்ற பெண்கள் சேலையை வாரி முட்டிக்குமேல் கட்டிக்கொண்டு துறத்துவது போலோ, துப்பட்டாவை தூற எரிந்துவிட்டு ஓடுவது போலோ காட்சியமைக்கப்படுகின்ற போது, பெண்களின் தொடைப்பகுதிகள் அதிர்வதையும், மார்பகங்கள் குலுங்குவதையும் மிகைப்படுத்தி வருகின்ற காட்சிகளை வாய்வடித்து வரவேற்கும் சமூகம் இது.
சில பணிகளை செய்வதற்கோ, ஓடுவதற்கோ, ‘சும்மா’ அமர்வதற்கோ கூட ஆண்கள் வேட்டியை உள்ளாடை தெரியும் அளவு முட்டிக்கு மேலே கூட மடித்துக் கட்டிக்கொள்ள சமூகம் அனுமதிக்கிறது. ஆபத்து என்று ஓடுகையில் தவறி விழுந்து விடாமல் இருக்க சேலைத்துணியை முழங்காலுக்கு கீழளவு வாரிக் கட்டிக்கொள்வதுகூட, மென்மையின் வடிவமாக ஒடுக்கி வளர்த்தெடுக்கப்படுகின்ற பெண்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக அமைவதில்லை.
புடவையை வாரிச் சொருகி வேலை செய்யும் கட்டுமஸ்த்தான பெண்களையெல்லாம் சினிமாவிலே வரும் வில்லி பாத்திரமான சொர்ணாக்காவாக பார்ப்பது சமூகத்தின் இயல்பாக மாறியுள்ளது. பாரம்பரிய உடையென்று போற்றப்படுகின்ற ஆண்களுக்கான வேட்டி தொடைப்பகுதி வரை மடக்கிக்கட்டுவது இயல்பாகப் பார்க்கப்படுவதிலும், பெண்களுக்கான புடவை தரை வரை நீண்டிருந்தாலும் போகப் பொருளாகப் பார்க்கப்படுதிலும் இருந்தே நம்மால் பாகுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
இது போன்ற சிக்கல்களைப் பெண் மேல் திணித்ததோடு நில்லாமல், திருப்பியடிக்க அவளைப் பழக்கப்படுத்தாமல் வீடும், சமூகமும் ஒடுக்கவும் செய்கிறது. பெண்கள் வெளியில் தனியாக செல்லக்கூடாது, இடுப்பளவுள்ள தம்பியையேனும் துணைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று குடும்ப அமைப்புகள் பெண்களின் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு வைத்தியம் சொல்வதையும் நாம் பார்த்து வருகிறோம்.
பெண்களின் ஆடை வடிவமைப்பு வசதியானதாகவோ, எளிதில் உடுத்திக்கொள்ளக்கூடியதாகவோ துவைத்துக்கொள்ளக்கூடியதாகவோ இருப்பதில்லை. சிக்கல் நிறைந்த ஒன்றாகவும், சுமையானதாகவுமே பெரும்பாலும் ஆடைகள் அமைகின்றன. பெண்களுடைய உடைகள் ஆண்களுடைய பார்வையை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது. ஆண்களுடைய காம வக்கிர எண்ணங்கள் தூண்டப்படாமல் ‘கட்டுப்பாட்டுடன் வைக்கவே’ பெண்கள் தங்களது உடலை உடைகளால் மூடிக்கொள்கின்றனர் என்று பெண்களின் உடை நோக்கத்தை சமூகம் நிறுவியுள்ளது. அதன் அடிப்படையிலேயே பாலியல் வன்கொடுமை நிகழ பெண்களின் உடைத்தேர்வுகளே காரணமென்று கூறி, குற்றமிழைக்கும் ஆண்களின் வக்கிரமான காம எண்ணங்களை நெறிப்படுத்த மறுத்துவிடுகின்றது.
பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி விவாதிக்கப்படுகின்ற போதெல்லாம், “பூனையை விரட்டுவதை விட மீனை மூடி வைப்பதே நல்லது” “மூடிய மிட்டாயை எறும்புகள் மொய்ப்பதில்லை” “புதையலைப் பொத்திப் பொத்தி மறைத்துதான் பாதுகாக்க வேண்டும்” போன்ற டைனோசர் கால முதுமொழிகளை சமூகம் இன்றும் முன்வைத்து வருகின்றது. மிட்டாய், கறிமீன், புதையல் இவையனைத்தும் உயிரற்ற பொருட்கள். பெண் உடல் என்பது உயிருள்ள; தொட்டால் உணரக்கூடிய; அடித்தால் திருப்பி அடித்து மிதிக்கக் கூடிய ஆற்றலுள்ள ஆண்களின் உடலை ஒத்த, மற்றும் ஆண்களின் உடலையும் உருவாக்கிக் கொடுக்கின்ற உடலாகும். அந்த உடலை எப்போதும் மூடி வைத்துக்கொள், ஓடி ஒளிந்துகொள் என்று கூறுவதற்கு பதிலாக, ஆண்களின் அத்துமீறும் நடத்தைகளை அடக்கி வைக்க சமூகம் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதே கிடையாது.
ஏனென்றால் சமூகம், ” ஆம்பளைன்னா அப்படிதான்… பொம்பளைதான் அடங்கி இருக்கணும்”, என்ற அறமற்றப் போக்கோடே காலத்தை ஓட்ட நினைக்கின்றது. எதற்கெடுத்தாலும் மரபு, கலாச்சாரம், ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாளில்லை’, என்பதைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத, அறிவை விசாலப்படுத்திக்கொள்ளாத குறையுடைய சமூகமாகவே தன்னை நிறுத்திக் கொள்கின்றது.
‘ சேலை மீது முள் பட்டாலும், முள் மீது சேலை பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தான்’, என்று பெண் ஆடை சார்ந்தே குற்றங்களை நோக்கும் பொது சமூகம், வேட்டி முள் மீது பட்டாலும் முள் வேட்டி மீது பட்டாலும் சேதாரம் வேட்டிக்குத்தான் என்று ஆண்களின் குற்றப்பின்னணிகளை நியாயப்படுத்தாமல் கண்டித்து திருத்த முற்பட வேண்டும்.
ப்ரா அணிந்து, அதன் மேல் ஒரு சிம்மீஸ், அதன் மேல் சுடிதார், அதன் மேலே துப்பட்டாவைச் சுற்றி பெண்கள் உடலை முழுமையாக மூடி நடக்கையிலும், ‘ ஆடையால் மூடப்பட்டிருக்கும் காம்புகளின் நிறம் செம்பழுப்பாக இருக்குமா? அடர்பழுப்பாக இருக்குமா?’, என்று சிந்திக்கக் கூடியவர்களாகவே 100-ல் 90 ஆண்களை சமூகம் உருவாக்கி வைத்துள்ளது.
சேலையை ‘ட்ரெஸ் கோடாக’ வைத்துள்ள கல்லூரி அல்லது அலுவலகங்களுக்கு பேருந்துகளில் செல்லும் இளம்பெண்கள், லெகின்ஸ் போன்ற பேண்டு வகைகளை அணிந்து அதன் மேல் உள் பாவடை போட்டு சேலை அணிந்திருப்பதை பார்க்க நேர்கின்றது. பேருந்து படிகளில் ஏறுகின்ற பொழுதும் அல்லது பிற சமயங்களிலும் கால்ப்பகுதி வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே இப்படிச் செய்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்ட பொழுது பெண்ணுடலின் புழுக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
உள்பாவடையில்லாமல் லெகின்ஸின் மேல் சேலையணியும் முறையை யூரினேஷன் கப் பயன்படுத்தும் பெண்கள் தோதுவானதென்று உணர்ந்தாலும், புழுக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. சேலை என்பது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயம் மிக்க பாரம்பரிய உடையாக இருந்தாலும், உழைக்கும் பெண்களின் யூனிபார்மாக இருப்பது பெண்களின் நேரத்தை உறிஞ்சக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அன்றாடம் ஆடைகள் என்பவை எடுத்த மாத்திரத்தில் அணிந்து கொள்ளக் கூடியவைகளாக இருப்பது அவசியமானதாகும்.
நீளமான ஒரு துணியைப் பெண்களின் மேல் திணித்துவிட்டு, நீண்ட நெடியக் கூந்தலைக் குடும்பப் பெண்களின் அடையாளமென ஆக்கிவிட்டு, ‘ பெண்கள் வெளியில் செல்லத் தயாராவதற்கு ஒரு யுகத்தையே செலவிடுகின்றனர்’, என்று ஓயாமல் நையாண்டி செய்யும் சமூகத்தின் அறைவேக்காட்டுத்தன்மையை காரி உமிழத் தோன்றுகிறது.
மேலும் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அதிகளவு செலவு செய்கின்றனர்; மேக்கப் இல்லாமல் பெண்களின் முகத்தைப் பார்க்க சகிக்காது… சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகன் மற்றும் நடிகையின் சமீபத்திய புகைப்படங்களில் மேக்கப் இல்லாமல் பதிவேற்றிய நடிகையின் புகைப்படத்தோடு, ஒப்பனையோடு இருக்கும் நடிகனின் புகைப்படத்தை ஒப்பிட்டு, ” ஆண்களின் அழகு இயற்கையானது, நிலையானது, மேக்கப்பைக் கழுவினால் பெண்கள் எல்லோரும் ஆன்டிகளே”, போன்ற கருத்துக்களை சமூக வளைதளங்கள், நகைச்சுவைக் காட்சிகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றில் அதிகமாகக் காண முடிகின்றது. இக்கருத்துகள் பொது புத்தியாக சமூகத்தோடு ஒன்றி இருக்கின்றன.
தாடியைப் பராமரிக்க மாதம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் வரை செலவிடுகின்ற ஆண்களைப் பற்றியும், திரையில் நடிக்கும் ஆண் நடிகனின் சிகை அலங்காரத்திற்கு ஆகும் செலவு பற்றியும், திரை நாயகன்களின் மேக்கப் இல்லாத புகைப்படங்களின் தன்மை பற்றியும் இந்த சமூகம் எதாவது தெரிந்து வைத்திருக்கின்றதா?
அல்லது கோவிட் காலத்தில் மக்களடையும் துன்பத்தில் பங்கெடுப்பதாக காட்டிக்கொள்ள தாடியை வெட்டிக்கொள்ளாமல் நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமரை நம்பும் மடமையில் இருக்கின்றதா என்றும் புரியவில்லை. பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதும் அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.
விரும்பாத பெண்களை பொட்டு வைத்துக்கொள், மூக்கைக் குத்திக் கொள், காது முழுக்கத் துளையிட்டு காதணிகளைத் தொங்க விட்டுக்கொள், கணவனின் உயிர் உன் கழுத்தில் நீ சுமக்கும் தாலியில்தான் இருக்கிறது என்று கதைகட்டப்படுகிறது. அதே போல, கணவனை இழந்தவள் பூச்சூடக்கூடாது; பொட்டு வைக்கக்கூடாது; தாலி அணியக்கூடாது என்றெல்லாம் வற்புறுத்துவதும் மனிதத் தன்மையற்ற செயல் வடிவங்களாகும் என்பதை சமூகம் உணர வேண்டும்.
பெண்கள் உடையணிந்து கொள்வது ஆண்களின் பார்வையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அல்ல என்பதை சமூகம் உணர வேண்டும். ஆண் பார்வையின் வன்புணர்வைத் தடுக்கவே பெண் உடை உடுத்துகிறாள் என்று சமூகம் தொடர்ந்து பயணிக்குமானால், சமூகத்தின் ஒட்டு மொத்த ஆண்களும் அத்து மீறும் நடத்தையுடையவர்கள், வன்புணர்வாளர்கள், பெண்களை போகப்பொருளாக மட்டுமே கருதக் கூடியவர்கள் என்றே வரும்காலம் பொருள் கொள்ளும்.
தொடர்ந்து பேசுவோம்…
கட்டுரையாளரின் மற்ற படைப்பு:
படைப்பு:
கல்பனா
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.