UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

     விவாதமாகும் விவாகங்கள்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

பெண்கள் ஏன் அரசியல் பழக வேண்டும்?

பெண்கள் எத்தகைய உயர்பதவி வகித்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது இன்னொரு கசப்பான உண்மை. ஆணின் உடைமையாகப் பெண் கருதப்படும் வரையில் இந்தப் பிரச்னை ஓயாது. பெண்களுக்குப் பாலியல்ரீதியான பிரச்னைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அதைக் காரணம் காட்டி தடைகள் போடுதல் தவறு. நான் சந்தித்த நிறைய பெண்கள் அரசியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இதில் படிக்காதவர்களைவிடப் படித்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

பள்ளிகளில் பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது?      

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

மாதவிடாய் உதிர ஓவியத்தில் விழிப்புணர்வு

மாதவிடாய் காலங்களில் வரும் ரத்தத்தை  ஏதாவது கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைப்பேன். வீட்டில்  இருக்கும் பெயிண்ட் பிரஷ் கொண்டு போஸ்ட் கார்டில் அல்லது கடினமான தாளில் ஓவியம் வரைவேன். வரைந்த ஓவியங்களை வெயிலில் காயவைத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பேன். இது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டுமென்று  மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நான்  விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்துப் புரிதல் குறைவாக இருந்தது. ஆண்களையும் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களில் உள்ளடக்கும் நோக்கத்தில் சமூக வலைதளம் மூலமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு  மாதவிடாய் உதிர ஓவியங்கள் வேண்டுமா  என்று கேட்டு  வரைந்து தருவேன். பெரும்பாலானோர் வாங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே பயந்து ஓடினர்.

சபிண்ட உறவுகள் பாவமா?

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எது அழகு?

இன்றைய குழந்தைகளிடம் அழகு குறித்த புரிதலையும், வியாபார நோக்கத்தில் அழகு குறித்த தவறான வதந்திகளை உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சமூகத்தையும்  குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

நகர்தல் என்றும் நன்று

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?

இன்று பில்கிஸ், நாளை நீங்களோ நானோ?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இதை இறுதித் தீர்ப்பாக எண்ண இயலவில்லை. ஏனெனில் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றே இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்ப்பில் இப்படி ஒரு முடிவு பிற்காலத்தில் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் தேர்தலில் சிறைக்குச் சென்றிருக்கும் குற்றவாளிகளின் படத்தைக் காட்டி ஓட்டு கேட்டு அனுதாப அலையில் பிஜேபி ஓட்டுகளை அள்ளினாலும் வியப்பதற்கில்லை. குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர்கள், “இன்று பில்கிஸ் பனோவுக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது தெரிவித்ததை எண்ணிப் பார்க்கவேண்டும்.

உங்களுக்கு ஒரு கடிதம்…

இளமையில் சம்பாதித்து சேர்த்த பணத்தை, முதுமையில் மருத்துவச் செலவிற்குப் பயன்படுத்துவதற்காகவா இத்தனை ஓட்டம்? ஓடும் ஓட்டத்தை நிறுத்தி, சற்று உங்களை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். “உண்மையிலேயே நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் உலகிலேயே மிகப் பெரிய மில்லியனர்”    

பங்குனி முயக்கம்…

காதல் என்பது தன்னலம் கருதாது. தன் இணைக்காகவே உருகும். என்றாலும் காதல் என்கிற ஒன்றுதான் இன்றும் உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. பண்டைய தமிழருக்கு வீரமும், காதலும் இரு கண்களாக இருந்தன. மாசி மாத சித்திரை நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திரம் வரையிலான இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் சாமானியர் வரை எல்லாருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இலக்கியங்களில் இந்திர விழா காவிரி பூம்பட்டினத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சிம்மனூர் செப்பேட்டில் மதுரையிலும் இந்திர விழா கொண்டாடியதாக ஒரு குறிப்பு இருந்திருக்கிறது. அன்று இந்த விழா பின் பனிக் காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றும் நாம் பின்பனிக் காலமான பிப்ரவரியில்தான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.