UNLEASH THE UNTOLD

உன்னை அறிந்தால்…

மாற்றி யோசி

மனித இனம் உருவாகிய நாளில் இருந்து இன்று வரை நாம் அடைந்த அத்தனை முன்னேற்றமும் வசதிகளும் யாரோ ஒருவர் ஆழமாகச் சிந்தித்து மாற்றி யோசித்ததால்தான் கிடைத்தது. அப்படி இருக்கும் போது நீங்கள் புதிது புதிதாக யோசிக்கா விடில் வாழ்வில் முன்னேற்றம் ஏது? ஆனால், நாம்தான் அதற்குப் பழகவே இல்லையே. நமது மூளையும் மனமும் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாமல் சமூகம் நம்மைப் பதப்படுத்தி (Conditioning) இருக்கிறது. இது போல out of box thinking சிலருக்குப் பிறவியிலேயே அமையும் என்றாலும் முயன்றால் தேர்ச்சி நிச்சயம்.

உறவை ஆரோக்கியமாக அணுகுவது எப்படி?

நானும் நீயும் சமமானவர்கள், இருவரும் இந்த உறவில், வேலையில், வியாபாரத்தில் முக்கியம் என்கிற எண்ணத்தோடு உங்களின் நிலைபாட்டில் உறுதியாகவும், அடுத்தவரின் கருத்தையும் அதே மரியாதையோடு கணக்கில் கொள்ளும் உறுதியான நிலைபாடு (Assertive). இந்த அணுகுமுறையில் இருவரும் சமமாக மதிக்கபடும்போது, அங்கே ஆரோக்கியமான கருத்து மோதல் வரலாம், ஆனால் வெறுப்போ சலிப்போ பகைமையோ வருவதில்லை.

எது ஆரோக்கியமான உறவு?

ஒவ்வோர் உறவும் வாழ்வின் பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்து வருகிறது. சில உறவுகள் கடைசி வரை, சில பாதி தூரம் வரை, எப்படியாயினும் நமக்கு அது சுமுகமான உறவாக இருக்கும் போது, அது தொடராத போதிலும், மனதில் அந்த இனிமை மட்டுமே இருக்கும்.

பரிவோடு இருப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் உதவி!

நியாயமற்ற மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எந்த நிர்பந்தத்திற்கும் நீங்கள் அடிபணியப் போவதில்லை எனும்போது அதைப் பற்றிக் கவலைப் பட என்ன இருக்கப் போகிறது? அவர்களையும் பரிவோடு அணுகும்போது நம்மிடம் கசப்புக்கு இடமே இல்லை.

சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறீர்களா?

பேசும் செய்தி எதுவாகினும் அதை எப்படிச் சொல்கிறோம் என்பது அதி முக்கியம். நம் உடல் மொழி, குரல் தொனி, நேரான பார்வை, கண் வழியான தொடர்பு அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டோ, முதுகில் தட்டியோ நம் ஆதரவைத் தெரிவிக்கலாம். இது தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் இருப்பதால் கவனம் தேவை.

வாங்க பழகலாம்!

மொழி வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரும் பல மொழி கற்ற பிறகும் நாம் மற்றவருடன் தகவல்களை, உணர்வுகளைச் சிறப்பாகப் பரிமாறிக்கொள்கிறோமா என்றால் இல்லை. எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, நாம் பேசும் போது கேட்பவர் ஆர்வமாக கேட்கிறாரா அல்லது காயப்படுகிறாரா, மற்றவர் பேசும் போது எப்படிக் கேட்பது என்பதைப் பலர் கற்றுக் கொள்வதே இல்லை. இதனால்தான் பலர் அழகான உறவுகளை இழக்கிறோம்.

பயத்தை வெல்லலாம் வாங்க!

இயற்கையான பய உணர்வு உங்களை எச்சரிக்கும், முடக்காது, எதிரே ஒற்றை யானையைப் பார்த்தால், 150 கி.மீ. வேகத்தில் மகிழுந்து ஓட்டினால், ஆள் அரவமற்ற இடத்தில் தனி வீடு கட்டிக் குடியேறினால், இரவில் நிறைய நகைகளோடு நடமாடினால் நம் மூளை அதில் உள்ள ஆபத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கும். இது போன்ற பயங்கள் நமக்குத் தேவை. இது இப்போது செய்யும் காரியம் ஆபத்தை விளைவிக்கும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என மனித மூளை நமக்கு அளிக்கும் சமிக்ஞைகள். இதை வீண் பயம் என்று ஒதுக்காமல் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

நீங்க ரொம்ப பிஸியா?

எப்போதும் நேரமே இல்லை என்று புலம்புபவர்கள் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் மனம் செய்கிற வேலையில் இல்லாமல், அடுத்து என்ன என்பதிலேயே முனைப்போடு இருக்கும். மனம் எப்போதும் ஒரு பரபரப்பில், பதற்றத்தில் இருக்கும். எந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள பொதுவான அம்சம் சிறப்பான நேர மேலாண்மை.

எதையும் தள்ளிப் போடுபவரா நீங்கள் ?

எதையுமே செய்யப் பிடிக்காதவர்கள்தாம் சோம்பேறிகள். ஆனால், இன்னொரு வகை மக்கள் பிடித்த வேலையை விரைவாகச் செய்வார்கள், பிடிக்காததை, ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஒவ்வாததை அல்லது தனக்குத் தெரியாததைத் தள்ளிப் போடுவார்கள். அந்த நேரத்தின் மன நிலையும் வேலையைத் தள்ளிப்போட காரணமாகும். இதைத் தவிர தன் திறமையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார்கள். இது நமது மனநிலை சம்பந்தபட்ட ஒரு சவால்.

தொடு வானம் அது தொடும் தூரம்

ஒரு லட்சியத்திற்காக நாம் வேலை செய்ய ஆரம்பிக்கும் போது அது நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். அந்த நேர்மறை மாற்றங்களே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் பல மடங்கு அதிகப்படுத்துகிறது. எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது, வாழ்வில் எது போனாலும் லட்சியப் பிடிமானம் இருந்துவிட்டால் வாழ்வு அழகாகிறது.