தகவல் / உணர்வு எதை மற்றவருக்குச் சொல்ல நினைத்தாலும் அதற்கென சில வழிமுறைகள் உண்டு. இது நான் சொல்ல வேண்டிய விஷயம் எனக்கு முக்கியமானது என மற்றவரைப் பற்றிக் கவலைப் படாமல் கொட்டிவிட முடியாது.

உங்களுக்கு அது எத்தனை முக்கியம் என்றாலும் கேட்பவரின் சூழ்நிலை, மனநிலை அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

உரையாடல் எப்போதும் நேருக்கு நேர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொலைபேசி, காணொளி, குறுஞ்செய்தி வழி என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

எதுவாயினும், நாம் எவ்வளவு பேசுகிறோம் என்பதைவிட எவ்வளவு கேட்கிறோம் / புரிந்துகொள்கிறோம் என்பது முக்கியம். அவ்வாறு கேட்கும் போதும் முன் முடிவு ஏதுமின்றி திறந்த மனதுடன் இருப்பது அவசியம். கேட்பது புரிந்து கொள்வதற்கே அன்றி பதிலளிக்க அல்ல.

ஏன் ?

ஏன் இதைப் பற்றிப் பேசுகிறோம், இது நன்மைக்கானதா, இது தவிர்க்க முடியாததா, பேசியே ஆக வேண்டியதா என்று நாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்படி ?

பேசும் செய்தி எதுவாகினும் அதை எப்படிச் சொல்கிறோம் என்பது அதி முக்கியம். நம் உடல் மொழி, குரல் தொனி, நேரான பார்வை, கண் வழியான தொடர்பு அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டோ, முதுகில் தட்டியோ நம் ஆதரவைத் தெரிவிக்கலாம். இது தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய அபாயமும் இருப்பதால் கவனம் தேவை.

அதிகாரமான (Aggressive) தகவல் பரிமாற்றமோ, அடி பணிந்த வழியோ (Submissive) வேண்டிய நல் விளைவுகளைத் தராது. எதுவாகினும் உறுதியான (Assertive) முறை மட்டுமே பயனைத் தரும்.

எப்போது ?

எவ்வளவு முக்கியமான விஷயம் என்றாலும் நாம் சொல்லும் போது கேட்பவரின் மனநிலை, சூழ்நிலைகளும் முக்கியம்.

இதை முடிவு செய்ய நீங்கள் காதுடன் மனதையும் திறந்து வைத்துப் பேசத் தயாராக வேண்டும். ஆங்கிலத்தில் ‘reading between lines’ என்கிற சொற்றொடர் உண்டு. சொல்வதைக் கேட்பது போல, சொல்லாததையும் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு முக்கியம்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  1. நாம் பேசும் போதும் இன்ன பிற வழிகளில் தகவல் பரிமாற்றத்தின் போதும் நமது அறிவையோ, மொழி புலமையையோ பறைசாற்றுதல் நமது நோக்கமல்ல. நமது எதிரில் இருப்பவருக்கு நாம் சொல்ல வேண்டியதைத் தெளிவாகப் புரியும்படி சொல்வதே நோக்கம்.
  2. நாம் சொல்லப் போகும் விஷயத்தில் நமக்குத் தெளிவு வேண்டும்.
  3. சொல்வதைவிட நுண்ணறிவோடு கேட்பது முக்கியம்.
  4. எதைச் சொல்கிறோம் என்பதைவிட, எதைச் சொல்லாமல் விடுகிறோம் என்பதில்தான் தகவல் தொடர்பின் சிறப்பே உள்ளது.

இதை எல்லாம் படித்து இத்தனை விதிகளா, நமக்கு இதெல்லாம் வராது என எண்ண வேண்டாம். பழகப் பழகத் தானாகக் கைகூடிவரும்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, மற்றவரோடு பேசிப் பழகுதலும் மனதின் பழக்கம்தான். ஒவ்வொரு முறையும் நம்மை நாமே உற்று நோக்கி தவறைச் சரிசெய்துகொள்ளும் போது நம்மை அறியாமலேயே நாம் இதில் நிபுணத்துவம் பெற்று விடுவோம்.

வாங்கசிறப்பாகப்பழகலாம், வாழ்வைவெற்றிகொள்ளலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.