இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பும் போதே, உடனே பதிப்பிக்கவும் இல்லையென்றால் கட்டுரையில் உள்ள செய்திகள் பழையதாகிவிடும் என்று எச்சரிக்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் அறிமுகம் ஆனபோது ஒரு கோடிப் பயனர்களைப் பெற வருடங்களோ அல்லது மாதங்களோ ஆனது. ஒரு வாரத்தில் இந்த இலக்கை எட்டிய சாட்ஜிபிடியைப் பார்த்து வாய்பிளந்தோம். அடுத்து வந்த த்ரெட்ஸ், ஏழு மணி நேரத்தில் ஒரு கோடிப் பயனர்களை எட்டியதைப் பெட்டிச் செய்தியாகக் கவனிப்பார் இன்றிக் கடந்துவிட்டோம்.

குறிப்பாக ஏஐ துறையின் சமீபத்திய வளர்ச்சி தக்காளி விலையேற்ற வேகத்தை விஞ்சுகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஒரு பிரிவான ஜெனரேட்டிவ் ஏஐ, தொழில்நுட்பப் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சதாரண மனிதர்களின் வாழ்வில் மாற்றம் உண்டாக்க வல்லது எனப்படும் தொழில்நுட்பம் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

பெயரிலேயே இருப்பது போல புதிய உள்ளடக்கத்தை உற்பத்தி செய்வதுதான் ஜெனரேட்டிவ் ஏஐ. புதிய கட்டெண்ட் என்பது எழுத்து, படம், ஓ(இ)சை, காணொளி, 3டி மாடல்கள் எனப் பலவாக விரிகிறது. எழுத்து உள்ளடக்கத்தை உற்பத்தி செய்யும் ஏஐ மாடலில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முந்திக் கொண்டு பாராட்டுகளைப் பெற்றது. பல மொழிகளில் உரையாடும் திறன் பெற்றது இது. வழக்கமாக ஒரு சில வார்த்தைகள் அல்லது ஒரு வரியில் நாம் கூகுள், பிங் போன்ற தேடுபொறிகளிடம் கேட்கும் கேள்விகளைச் சற்று விரிவாக உரையாடல் போலக் கேட்கலாம். வெறுமனே தகவல் இருக்கும் பக்கங்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்காமல் மனிதருடன் உரையாடுவது போலவே பதில் கொடுக்கும்.

சாட்ஜிபிடி என்பது முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மாடல். ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயினிங் ட்ராஸ்பார்மர் என்பதுதான் ஜிபிடி. இதன் வெற்றியின் காரணமாக மைக்ரோசாப்டின் பிங் தேடுபொறித் தளத்தில் சாட்ஜிபிடி இணைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பார்ட் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் உரையாடுகிறது. பார்ட் நேச்சுரல் லேங்குவேஜ் மாடல் என்பதால் உரையாடலில் மொழியின் தரம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது என்பது மிகப் பொருத்தம். இரண்டுமே இன்னும் வளர்ச்சி நிலையில்தான் இருக்கிறது என்பதால் தப்பும் தவறுமாக இருக்கலாம்.

தனிநபர், குறைவான புகழ்வீச்சு உடையவர்கள் பற்றிக் கேட்காமல் அறிவியல், தொழில்நுட்பம் பற்றிய விளங்கங்கள், கணிதச் சமன்பாடு பற்றி எல்லாம் கேட்டால் கொஞ்சம் நல்ல பதில்கள் கிடைக்கும். ஐம்பது பக்கங்கள் படித்துப் புரிந்து கொள்வதைவிட இயந்திரம் அதைப் படித்துச் சுருக்கிச் சொல்வதைப் புரிந்துகொள்வது எளிது. இதில் இயந்திரத்தின் மொழி வளம் தேறியிருப்பதே மாபெரும் வெற்றிதான். ஏஐ என்பதே பயன்பாட்டில் இருந்து தினமும் கற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும் தொழில்நுட்பம் என்பதால் விரைவில் இன்னும் சிறப்பாகக் கற்றுக்கொள்ளும் என நம்பலாம்.

எப்படிச் செயல்படுகிறது என்பதை நீங்களே முயன்று பார்க்கலாம். https://www.bing.com/chat தளத்துக்குச் சென்று ஏதேனும் கேள்வி கேளுங்கள். மோடி அடுத்த தேர்தலில் வென்று பிரதமர் ஆவாரா? பூஜா ஹெக்டே அழகியா? வரும் திங்கள்கிழமை சென்னையில் மழை பொழியுமா? சாட்ஜிபிடியா, கூகுள் பார்ட்டா எது சிறந்தது போன்ற கேள்விகள். அப்படியே https://bard.google.com/ கூகுள் பார்ட் இதே கேள்விக்கு என்ன பதில் சொல்கிறது என்றும் பாருங்கள். இதன் விடைகள் மூலமே நாம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிந்துகொள்ள முடியும்.

இந்த ஜெனரேட்டிவ் ஏஐ தளங்கள் உருவாக்குபவை அனைத்தும் புதியது. பல லட்சம் ஒளிப்படங்கள், ஆடியோ, வீடியாேக்கள் மூலம் இந்த மாடல்களுக்கு காக்கா எப்படி இருக்கும்? பெண் எப்படி இருப்பாள்? அமெரிக்க ஆண் எப்படி இருப்பான் எனத் தரவுகளைக் கொடுத்து சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என எடுத்துப் போட்டு, புதியதை உருவாக்கிவிட முடியும். படங்களை உருவாக்க https://www.bing.com/create என்ற தளத்துக்குச் செல்லுங்கள். ‘துள்ளித் திரியும் வெள்ளை மான் நகருக்குள் ஓடுகிறது’ என்பது போல கைக்கு வந்த எதையாவது தட்டச்சு செய்யுங்கள். அதையும் ஒரு கட்டளையாக மதித்து உங்களுக்கு ஓர் அழகான படத்தைக் கொடுத்துவிடும் இந்தத் தளம். உங்கள் கதைக்கோ கவிதைக்கோ பொருத்தமான படம் வரைவதில் இருந்து ஒரு முழு நீள காமிக்ஸ்கூட உருவாக்க முடியும். https://firefly.adobe.com/generate/images தளத்தில்கூட முயன்று பார்க்கலாம். மிட்ஜெர்னி, ட்ரீம் ஸ்டுடியோ போல இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்கும் தளங்களும் இருக்கின்றன. ‘முதலில் யார் ஃபர்ஸ்ட் வர்ராங்கன்றது முக்கியமில்ல, லாஸ்ட்ல யார் ஃபர்ஸ்ட் வர்ராங்கன்றதுதான முக்கியம்’ என கூகுள் இன்னும் (கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம் வரை) இதில் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது.

https://huggingface.co/spaces/facebook/MusicGen தளத்தில் வார்தைகளைக் கொண்டு இசையை உருவாக்கலாம். வார்த்தைகளை வைத்தே வீடியோ உருவாக்கும் தளங்களும்கூட இருக்கிறது. பெற்ற பிள்ளைகளே நம் சாெல் பேச்சு கேட்காத போது இந்தத் தளங்கள் நம் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுப்பதைப் பார்த்து கண்கள் வேர்க்கின்றன.

எனக்கு விளக்கமாகச் சொல்லிப் புரிய வைக்க வராதே என்று யோசித்தால் க்ராவிட்டிரைட் போல ப்ராம்ட் உருவாக்கும் தளங்களும் இருக்கின்றன. சில வார்த்தைகளை வைத்து விளக்கமான ப்ராம்ட் சிலதை இது கொடுக்கும். அதைக் கொண்டுபோய் ஜெனரேட்டிவ் ஏஐ தளங்களில் கொடுத்து கவிதை, படம் என்று உருவாக்கி திருவிளையாடல் தருமி போல பரிசில் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் தளங்களில் சிலது மட்டும் உள்நுழைய இமெயில் ஐடி கேட்கும்.

இதை வைத்து நாம் என்ன செய்வது என்று பெரியவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர்கள் பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்கள், கட்டுரைகள் எழுத, கணினி நிரல் எழுத, காதல் கவிதை எழுத எனப் பல விதங்களில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கொஞ்சம் நிரல் மொழி தெரிந்தால் சாட்ஜிபிடி பயன்படுத்தி வணிக நிறுவனங்களுக்கான சாட் பாட் எனப்படும் உரையாடல் செயலியை உருவாக்கி பணம் சம்பாதிக்கலாம்.

ஒரு பல் மருத்துமனையில் உள்ள வரவேற்பாளர், நோயாளியிடம் பெரும்பாலும் ஒரே மாதிரி கேள்விகளைத்தான் கேட்பார். பெயர்? வயது? முதல் முறை வருகிறீர்களா? என்ன சிக்கல்? மருத்துவரைச் சந்திக்க இந்த நேரத்தில் அப்பாயின்மெண்ட் கொடுக்கலாமா? இதைத் திரும்பத் திரும்ப கேட்காமல் ஓர் உரையாடல் செயலி மூலம் அப்பாயின்மெண்ட் கொடுக்க வைக்கலாம். அதிக அறிவு தேவைப்படாத ஒரே மாதிரி உரையாடல் தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஒரு சாட் பாட் நிறுவலாம். இப்படியான செயலிகளுக்கு என்றே ஒரு சந்தையைக் கொண்டுவர இருக்கிறது ஓப்பன் ஏஐ.

அசாம் தாெலைக்காட்சி நிறுவனம் லிசா என்கிற செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்டு உண்டாக்கப்பட்ட இந்தப் பெண், நாம் எழுதித்தரும் செய்திகளை தொலைக்காட்சியில் வாசிப்பார். கூகுளேகூட இன்னும் ஒடியா மொழியில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையில் அவர்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது. ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்து, வடிவமைப்பில் ஏற்கெனவே ஏஐ நுழைந்துவிட்டது. இதை எதிர்த்து பணிநிறுத்தமும் நடக்கிறது. நடிகர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தங்கள் பணியைப் பறிக்கும் என்று நடிகர்களும் நம்பும் நிலையில்தான் ஏஐ வளர்ச்சி இருக்கிறது.

மனிதர் செய்ய மிச்சம் என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை. இன்னும் அதிக அறிவு தேவைப்படும் வேலைகளை மனிதர்கள் செய்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள். செல்லிடப்பேசிகள் வந்து எஸ்டிடி பூத்களை ஒழித்தது போல சில வேலைகள் வழக்கொழியும். அலார்ம் க்ளாக் கண்டுபிடிக்கும் முன்பு காலையில் எழுப்பிவிடுவதுகூட ஒரு வேலையாக இருந்ததாம். வேலை இழப்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ப்ராம்ட் என்ஜினியர், ஏஐ ட்ரெயினர், பிக் டேட்டா என்ஜினியர், எம்எல் என்ஜினியர், டேட்டா சயின்டிஸ்ட் என உருவாகப்போகும் ஏகப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த நம்மைத் தயார் செய்துகொள்ளலாம்.

வேலை வாய்ப்பு நோக்கில் இல்லையென்றாலும் இத்தொழில்நுட்பம் வருங்காலத்தில் கோலோச்சும் வாய்ப்பிருப்பதால் அடிப்படைகளை மட்டுமாவது தெரிந்து கொள்ளலாம். துறையின் ஜாம்பவான்களான இருவருமே இலவச கோர்ஸ் அறிமுகம் செய்திருக்கிறார்கள். கூகுள் ஜெனரேட்டிவ் ஏஐ ஒரு அறிமுகம் என்றும் மைக்ரோசாப்ட் கரியர் எஸென்ஷியல்ஸ் இன் ஜெனரேட்டிவ் ஏஐ பை மைக்ரோசாப்ட் அண்ட் லிங்க்ட்இன் என்றும் அடிப்படை பயிற்சி கோர்ஸ் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாட்டில் உள்ள அடிப்படை அறம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. கூகுள் தனியாக இதற்கென்றே கணினி நிரலாளர்கள் பங்கேற்கும் அன்லேர்னிங் சேலஞ் என்கிற முயற்சியைத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவர்களின் தவறை தொழில்நுட்பத்தின் தவறாகக் கொள்ள இயலாது. அதற்குச் சொல்லிக் கொடுக்கும் மனிதர்கள் பலவிதமான சார்புள்ளவர்கள். தவறாகச் சொல்லிக் கொடுத்தால் இயந்திரங்கள் தவறாகத்தான் செயல்படும். நாடு, நிறம், பாலினம், உடல் குறைபாடு என்று வெவ்வேறு விதமான தரவுகளைப் பாகுபாடு இல்லாமல் புரிதலுடன் கையாள இயந்திரங்கள் பழக்கப்படுத்தப்படுவது அவசியம். துறை முன்னோடிகள் அது குறித்து விவாதிக்கவும் விதிகளை வகுக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றை மேம்படுத்தவாவது புதுத் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்