வீட்டு வேலை செய்துகொண்டிருந்த ரமணி அம்மாவின் முகத்தில் இருந்த களைப்பைக் கவனித்தப்படி மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கவிதா. அவளுக்கு அது ஐந்தாம் மாதம். மருத்துவமனைக்கு கிளம்பியவள், வழக்கத்திற்கு மாறாகச் சோர்வாக இருக்கும் ரமணி அம்மாவிடம் காரணத்தைக் கேட்டாள். அவள் திருமணமாகி வந்ததிலிருந்தே ரமணிதான் அவள் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக்கொள்கிறார். எவ்வளவு வேலை இருந்தாலும் சிரித்த முகத்துடன் வேலை செய்பவர், கொஞ்ச நாட்களாகக் கடுகடுப்பான முகத்துடன் களைப்பாகவே காணப்பட்டார்.

“அம்மா உடம்புக்கு எதுவும் முடியலயா? இல்ல கொஞ்ச நாளாவே பார்க்குறேன் ரொம்ப சோர்வாவே இருக்கீங்க. ஏதும் பிரச்னையா?” என்ற கவிதாவின் கேள்விக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவர், கைகளை பிசைந்தப்படி, “அதெல்லாம் ஒன்னுமில்ல. கொஞ்ச நாளாவே முன்னாடி மாதிரி நெறைய வேல செய்ய முடியல. கொஞ்ச நேரம் வேல செஞ்சாலே சோர்வா இருக்கு. உடம்பு முன்னாடி மாதிரி ஒத்துழைக்க மாட்டேங்குது. எல்லாம் அந்த ஆபரேஷனுக்கு அப்பறம்தான்” என்று தன் நிலையை விளக்கினார்.

“என்ன ஆபரேஷன்?” என்ற கேள்வியில் அவர் உடல்நிலையில் இருந்த ஆர்வத்தையும் அக்கறையையும் கவிதா வெளிப்படுத்தினாள். ”அதான் மா ஏழு மாசத்துக்கு முன்னாடி உதிரப் போக்கு அதிகமா இருக்குன்னு சொன்னேன்ல. நீகூட டாக்டர்கிட்ட காட்டச் சொன்னியே. டாக்டர் கிட்ட காமிச்சதும் கருப்பையில கட்டி இருக்கு. இது நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல எல்லாப் பொண்ணுங்களுக்கும் வற்றதுதான். கட்டி கொஞ்சம் பெருசா இருக்கு. அதனால கர்ப்ப பைய எடுக்கணும்னு சொன்னாங்க. நானும் சரி நமக்குதான் புள்ள பொறந்து அதுக்கே கல்யாணம் ஆயிருச்சே, இனி இது எதுக்குன்னு எடுக்கச் சொல்லிட்டேன். நீகூட என்ன வந்து வீட்டுல பார்த்தியே.”

“ஆமா, அந்த ஆபரேஷனுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”.

“அந்த ஆபரேஷனுக்கு அப்பறம்தான் எதாச்சும் ஒடம்புக்கு வந்துட்டே இருக்கு. முன்னாடி மாதிரிலாம் வெயிட்டு தூக்க முடில. உடம்பே மாறிருச்சு” என்று விவரித்தவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல், “சரி, பார்த்துக்கோங்க, நா ஹாஸ்ப்பிட்டலுக்கு செக்கப் போயிட்டு வறேன்” என்றாள் கவிதா.

மருத்துவமனைக்குப் போகும் வழியெல்லாம் ரமணி அம்மா சொன்னதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். யூட்ரஸ் ரிமூவல் ஆபரேஷனைப் பற்றி அவர் ஏன் அவ்வளவு மிகைப்படுத்திச் சொல்கிறார்? நவீன மருத்துவ சிகிச்சை முறை மீது ரமணி வைத்த குற்றச்சாட்டை அவள் மனம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

கவிதாவைப் பார்த்ததும், “வா கவி, உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எப்படி இருக்க?” என்றார் டாக்டர் கீதா. கீதாவும் கவிதாவும் நெருங்கிய தோழிகள்.

“நல்லா இருக்கேன் கீதா. ஆனா, இப்போ அடிக்கடி தல சுத்துது.”

“ஃபை மன்த்ஸ் ஆச்சுல அதான். பேபி இஸ் டூயிங் வெல், நத்திங் டூ வொரி” என்ற கீதாவைக் கண்டுகொள்ளாமல், கவிதாவின் எண்ணமெல்லாம் ரமணி அம்மாவையே சுற்றி வந்தது. அதைக் கவனித்த கீதா, “என்னாச்சு கவி? வாட் ஆர் யூ திங்கிங் சோ டீப்லி?” என்று கேட்க, காலையில் ரமணி அம்மாவுடன் நடந்த உரையாடலைப் பற்றி கவிதா தெரிவித்தாள்.

“யூட்ரஸ்னு இல்ல கவி, உடலுக்குள்ள இருக்கிற எந்த உறுப்பை ரிமூவ் பண்ணாலும் அதுக்குண்டான பாதிப்பிருக்கும். அதைத்தான் சைட் எஃபெக்ட்ஸ்னு சொல்றோம். உனக்கு இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, இயற்கையைப் பத்தின புரிதல் கொஞ்சம் வேணும். இயற்கையோட சமநிலை குலையுதோ அப்போல்லாம் அது தன்னைத்தானே சரி பண்ணிக்க வழி தேடும். உதாரணத்துக்கு, இயற்கைல இருக்க எல்லா உயிரினத்துக்கும் அவ்வளவு ஏன் பூக்களுக்குக்கூட ஒரு சிமெட்ரி (symmetry) இருக்கு. அதுதான் சமநிலை. ஆப்ரேஷன் பண்ணி யூட்ரஸ் ரிமூவ் பண்றது மூலமா, நம்ம இயற்கையோட சமநிலைய உடைக்கிறோம். அதுதான் இந்த காம்பிளிகேஷன்ஸ் எல்லாத்துக்கும் காரணம்.”

“அப்போ ரமணி அம்மா சொன்னதுலாம் உண்மைனு சொல்றியா?”.

“நிச்சயமா உண்மைதான். 2005 ஜனவரில இருந்து 2020 டிசம்பர் வரைக்கும் நடந்த ஒரு ஆய்வுல, யூட்ரஸ் ரிமூவ் பண்ணினதால ஏற்பட்ட காம்பிளிகேஷன்ஸ் பத்தி விரிவா சொல்லிருக்காங்க. அத 2021இல் ரிசர்ச் ஆர்டிக்கலாவும் பப்ளிஷ் பண்ணிருக்காங்க. அதுல, யூட்ரஸ் ரிமூவ் பண்ணதுனால நெறைய பேருக்கு இதய நோய் ஏற்பட்டுருக்குன்னும், ஹைப்பர்டென்ஷன், ஒபிசிட்டி, அவ்வளவு ஏன் பல வகையான கேன்சர்கூட ஏற்பட்டிருக்குன்னும் குறிப்பிட்டிருக்கங்க.

”நா சொன்னது பாதிதான் கவி, இன்னும் நெறையா இருக்கு. கருப்பை அகற்றம்னு சொல்ல கூடிய ஹிஸ்டரக்டமிக்கு (hysterectomy) அப்பறம் பெண்கள் உடல் ரீதியாவும் மனரீதியவும் நெறைய மாற்றங்களுக்கு ஆளாறாங்க. இதுக்குலாம் ஒரு வகையான முக்கியக் காரணம் ஹார்மொனல் இம்பேலன்ஸ். இப்போ நான் சொன்னதோட சேர்த்து ஹெர்னியானு சொல்லக்கூடிய குடலிறக்கமும் வர வாய்ப்பிருக்கு. வெற்றிடத்த நோக்கி ஓடுற நீர் மாதிரிதான் நம்ம உடல் உறுப்புகளும். அது அது சமநிலைல இருக்கிற வரைக்கும்தான் ஆரோக்கியம். ஒன்னு சமநிலைல இல்லன்னாலும் பிரச்னைதான்.”

“அப்போ உயிர் போகுற கண்டிஷன்லயும் சர்ஜரி பண்ண கூடாதுன்னு சொல்றியா? ஒரு டாக்டரா எப்படி உன்னால இப்படிச் சொல்ல முடியுது” என்று ஆவேசப்பட்ட கவிதாவை அமைதிப்படுத்தினாள்.

“யூ ஹெவ் மிஸ்டேக்கன். நான் அப்படிச் சொல்ல வரல. சர்ஜரி இல்லாம குணப்படுத்துற பிரச்னைய சர்ஜரி பண்ணாம சரி பண்ணிக்கலாம்னு சொல்றேன். சரி சொல்லு, ரமணி அம்மாக்கு ஹிஸ்டரக்டமி பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த காம்பிளிகேஷன்ஸ் பத்திலாம் தெரிஞ்சிருந்தா ஆபரேஷன் பண்ணிருப்பாரா? இங்க பிரச்னையே பிரச்சனை என்னன்னு தெரியாம இருக்குறதுதான். இந்த ஒடம்புல தேவை இல்லாத உறுப்புன்னு எதுமே இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. வேற வழியே இல்லாம ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் பிரச்னை தீர்ந்தா போதும், அதான் குழந்த பொறந்திருச்சுல இதை ரீமூவ் பண்றதுனால என்ன ஆக போகுதுங்ற அறியாமைனால ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு கவி” என்று கீதா தன் உரையை முடித்ததும் கவிதாவிடம் கேட்பதற்குக் கேள்விகள் தீர்ந்திருந்தன.

“ஓகே கீதா தாங்க் யூ. சீ யூ லேட்டர்” என்றபடி ஒரு புதிய தெளிவோடு கீதாவின் அறையை விட்டுக் கவிதா நடந்தாள்.

இரண்டு நாட்களாக ரமணி அம்மாள் வேலைக்கு வரவில்லை. காரணம் வாந்தியும் வயிற்றுவலியும். இரண்டு நாட்கள் கழித்து ரமணி அம்மாவின் மகன் பேசினான், “மேடம் அம்மாவுக்கு ஹெர்னியா. ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு” என்றான். ‘வெற்றிடத்த நோக்கி ஓடுற நீர் மாதிரி’ என்ற கீதாவின் வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தது.


(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.