கிராமத்து வாழ்க்கை கீதாவுக்கு இயற்கையின் அழகைக் கற்றுக் கொடுத்தது. பள்ளிக்கு அருகில் பூத்துக் குலுங்கிய சர்க்கரைப்பூ மரங்கள் பார்க்க அழகு. பார்த்துக் கொண்டே இருக்க, அவை கீதாவின் சிந்தனை முழுக்க சிவப்பு, பச்சை வண்ணங்களாய்ப் பூத்துச் சொரிந்தன. அவள் படித்த மஞ்சநாயக்கனூர்ப் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியின் அருகில் ஓடியது பாலாறு. வகுப்பு நேரத்தில் ஆற்றில் விளையாடிப் பிரம்படி வாங்கினாலும், ஆற்றின் மீதான ஆவல் கீதாவுக்குக் குறையவே இல்லை.
சனிக்கிழமைகளில் கூட மதிய உணவுக்காக பள்ளி செல்வதாகச் சொல்லி விட்டு பகல் முழுக்க பாலாற்றில் குளித்து விளையாடுவார்கள். ஆற்றில் துணியைப் போட்டு மீன் பிடிப்பார்கள். பிடித்த மீன்கள் மீண்டும் ஆற்றுக்குள் தான் விடப்படும். ஆற்றங்கரை முழுக்க பச்சை மெத்தை போல படர்ந்திருக்கும் புல் மெத்தை…படுத்தும், குதித்தும், ஓடியும் பலவிதமான விளையாட்டுகளுக்கு மடி தந்தது.
அந்த ஊரின் தென்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அரண் அமைத்திருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அங்கு வரையாடுகளும், மாடுகளும் மேய்வது தெரியும். கரட்டில் விறகுக்காகவும், சூரிக்காய் பறிக்கவும், அரப்பு இலைகளை ஒடித்து வரவும் கிராமத்துப் பெண்கள் செல்வார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் பலவிதமான பூக்களையும், வாசனைகளையும், பயங்களையும் கீதாவின் அந்த சிறு வயது மனதை நிறைத்தன. அவளுக்கு தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்து மலை பார்ப்பது, வானத்து மேகங்களின் நகர்வுடன் பயணிப்பது வழக்கமானது.
அந்த கிராமத்துப் பாட்டி ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அத்யாவசியச் செலவுகள் தவிர வெளி இடங்களுக்குப் பயணித்தல், தேவைக்கு அதிகமாய் உடைகள் எடுப்பது எல்லாமே அந்த வீட்டின் ஆடம்பரச் செலவுகள். பக்கத்து டவுனுக்கு தான் சினிமாப் பார்க்க செல்ல வேண்டும். அப்படிப் பார்த்ததும் ஒன்றிரண்டு படங்களே. படக் கதைகள் பற்றிப் பேசுவதும், கதைப் புத்தகங்கள் படிப்பதும் குழந்தைகளை திசை மாற்றும் என்பது பாட்டி தாத்தாவின் நம்பிக்கையாக இருந்தது.
வீட்டின் திண்ணைச் சட்டத்தில் இரண்டு சாட்டைகள் எப்போதும் இருக்கும். பாட்டி கொடுக்கும் உணவை முழுமையாகச் சாப்பிடாவிட்டால் தொடை பாட்டியின் கிள்ளலில் வீங்கிவிடும். சொன்ன பேச்சைக் கேட்காமல் போனால் சாட்டை அடை உடலில் தடித்துவிடும். அதனால் சொன்னதை மீறி எதுவும் செய்ய முடியாது.
அந்த கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமைகள் அழகானவை. ஆற்றங்கரையோரமாக இருந்த மாரியம்மன், ஈஸ்வரன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருவார்கள். ஆறு தாண்டி, வயல் வரப்பில் நடந்து சென்று மாரியம்மன் கோவிலில் உச்சிக்கால பூசைகள் செய்வார்கள். அம்மன்கோயிலுக்குப் பின்புறமாக நாவல் மரம் இருக்கும். கோயிலைச் சுற்றி வருகையில் அள்ளிச் சுவைக்கும் உதிர்ந்த நாவல் பழங்கள் தித்திக்கும். ‘விநாயகர் சந்நிதியை ஒட்டி இருக்கும் கருப்பராயன் தான் நம் குல தெய்வம் நன்றாக வேண்டிக்கொள்’, எனப் பாட்டி சொல்லுவாள்.
மாரியம்மன் கோவில் மரத்தடியில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட தலைகள், குதிரைகள் என மண் பொம்மைகள் கோவில் பூசை நேரத்தில் இவளுக்குள் உருவகங்களாக மாறி கதைகள் நிகழ்த்தும். ஏதாவது ஒரு கற்பனையில் தொடங்கினால் அவளுக்குள் அது கதையாக நீள்வதாக உணர்வாள். அடுத்ததாக ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வழியில் பிரண்டைக் கொடிகளைப் பிடுங்கிச் சேமிப்பார்கள்.
நடக்கும் வழியெங்கும் மணலும், விதம் விதமான கற்களும் நிறைந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒரு நூறு கதைகளை தன்னுள் சுமந்து நிற்பதாக கீதாவுக்குத் தோன்றும். அந்த வழியில் மஞ்சள் கொழித்து நிற்கும் பொன்னரளிப் பூக்கள், ஆவாரம் பூக்கள் என பூக்களையும் பைகளில் சேகரித்துக் கொண்டு ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்து, நந்தியின் காதில் ரகசியம் சொல்லி, வில்வ இலைகளைப் பிடுங்கி, நவகிரகங்கள் ஏன் ஒன்றை ஒன்று பார்க்காமல் உள்ளன என்று யோசித்தபடியே ஒன்பது சுற்றுச் சுற்றி, திரும்ப வருவது எப்போதும் இவளுக்குப் பேரானந்தம்.
வீட்டின் புழக்கடையில் இருந்த கருவேப்பிலை மரம் பார்த்துக் கொண்டே வானத்து தேவதைகளுடன் பேசிக் கொண்டிருப்பாள். அந்த தேவதை தன் கண் முன் தோன்றி பிடித்ததை எல்லாம் அருளினால் எப்படி இருக்கும்… அப்படி அருளப்பட்டதெல்லாம் தனக்கு கிடைத்தது போல கற்பனை செய்து மகிழ்வில் மிதப்பாள். வானம் பார்த்துக் கொண்டிருக்கையில் அப்படியே தனக்கும் றெக்கை முளைத்துப் பறந்து போய்விட்டால் தான் என்ன எனத் தோன்றும்.
மார்கழி மாதக் குளிரில் யார் சீக்கிரம் எழுந்து வாசல் பூக்கோலத்தில் பிள்ளையார் வைப்பது என்பது போட்டியாக இருக்கும். காலை ஐந்தரை மணிக்கு ஜில்லிடும் தண்ணீரில் மாட்டுச் சாணம் கரைத்து வாசல் தெளித்து கோலமிட்டு கோயிலுக்குக் கிளம்ப வேண்டும். விடியும் முன்பாக ஆற்றில் தண்ணீர் எடுத்து வந்து அரசமரப் பிள்ளையாருக்கு ஊற்றிப் பூசை செய்து வீட்டுக்கு வந்த பின்னர் தான் பிள்ளையார் வைக்க வேண்டும். இதெல்லாம் சூரியன் வருவதற்குள்ளாக முடிக்க வேண்டும். முப்பது நாளும் நாலரை மணிக்கே எழுந்து வேகமாக வேலைகள் முடித்து, நான் முதலில் முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதே செம கெத்து தான்.
இப்படிச் சிறு வயதில் இருந்து பாட்டியின் அம்மாவில் தொடங்கி, அந்த ஊர் பெண்களின் உரையாடலில் கிடைத்த சொலவடைகளும் மொழியாடலும், வார்த்தைகளற்று இயற்கையில் நிரம்பி வழிந்த மொழியும் இணைந்து கீதாவை என்னவோ செய்தது. தானாக ஏதாவது எழுதியே ஆகவேண்டும் எனத் தூண்டியது. காத்திருக்கும் வேளைகளில் எல்லாம் இவளது கற்பனையும் அது சார்ந்த உரையாடலும் காட்டாற்று வெள்ளம் போல ஓடும். ரேடியோப் பாடல்கள், வாரமலர், கல்கண்டு, குமுதம், விகடன், காமிக்ஸ் எனக் கதைகளும் அவளது சொல்லாடலைச் செதுக்கச் செதுக்க, அந்தப் பொங்கல் பண்டிகைக்கு போஸ்ட் கார்டு வாங்கி தன் தோழிகளுக்கு எல்லாம் ஒரு பக்கம் படம் வரைந்து மறு பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளை இவள் சுயமாக எழுதினாள். ஆம், இப்படித்தான் அவளுக்குள் இருந்த கவிதைப் பறவை சிறகடித்துப் பறந்தது.
தொடரும்…
அவள் கதைகளின் முந்தைய பகுதிகள்:
படைப்பாளர்
யாழ் ஸ்ரீதேவி
20 ஆண்டுகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஸ்ரீதேவி யாழினி, பெண்களுக்கான தொடர்கள், கட்டுரைகள், நேர்காணல்களை தொடர்ந்து எழுதி வருபவர். தினகரன், காலைக்கதிர், விகடன் போன்ற நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். தேர்ந்த பேச்சாளர், கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர். ‘செல்லமே’ என்ற குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நூலையும், பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ நூலையும் எழுதியுள்ளார்.