முன் கதைச் சுருக்கம்:

மதிக்கு அஃதரின்பால் ஒருவித ஈர்ப்பு தோன்றி மறைகிறது. தன்னை மதி நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் அந்நேரத்தில் அஃதரின் மனதை அஃதரே சொல்லக் கேட்போம் இப்பொழுது.

அன்று என் நாள் திட்டமிட்டது போலவே நடந்தது. துறையில் செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்தாகிவிட்டது. பலருக்கும் அது பலவித உணர்வு அளித்திருக்கும். சிலருக்கு மகிழ்ச்சி; சிலருக்கு ஏமாற்றம்; சிலருக்கு குழப்பம்; சிலர் எவ்வித சலனமும் அற்று. ஆனால், தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டியது மிக அவசியமானதும்கூட. மறுநாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து திட்டமிட்டுவிட்டு உறங்கச் சென்றேன். அதுவரை எப்பொழுதும் போல் இயங்கிய மனம் இப்பொழுது என்னை ஏதோ ஒரு புது உலகில் சஞ்சரிக்க வைத்தது. திட்டமிட்டது போல் நடந்ததை எண்ணி சந்தோஷப்பட்ட மனம், திட்டமிடாமல் நடந்ததை எண்ணி எண்ணி என்னைத் தூங்க விடாமல் படுத்தி எடுத்தது. அவள் தனியே நிற்பதைப் பார்த்தவுடன் ஒரு மரியாதை நிமித்தமாகத் தான் காரணம் கேட்டேன். அவள் சங்கருடன்தான் செல்கிறாள் என்று ஏற்கெனவே அறிந்திருந்த போதும் தனியாக நின்றதால் மறுமுறை உறுதி செய்யவே கேட்டேன். உண்மையில் அவள் கூறிய பதிலைக் காட்டிலும் அவள் முகத்தில் தெரிந்த பதட்டம் புதிதாக இருந்தது. எனக்கோ ஒன்றும் விளங்காததால் ஏதோ பிரச்னையாக இருக்குமோ என்றுகூடத் தோன்றியது. பிறகு தானே தெரிந்தது அது பொய் சொன்னதால் வந்த பதட்டம் என்று. அவள் வாடகை காரை ரத்து செய்ததைப் பார்த்ததும் சங்கருக்கும் இவளுக்கும் ஏதாவது பிரச்னையா, என்ன நடந்திருக்கும் என்று மனம் சிந்திக்கலானது. கேட்கலாம் என்றால், ராகுலும் மணியும் இருந்தார்கள். சில விஷயங்களைத் தனியே கேட்பது சிறந்தது என்று எண்ணி விட்டுவிட்டேன். ஆனால், அந்த நேரத்தில் பெரும் பாரம் ஒன்று குறைந்ததை உணர்ந்தேன். அது என்னவென்று ஆராயும் இடைவெளியில் இவர்கள் மூவரின் பேச்சில் கரைந்தேன்.

மணியும் ராகுலும் இறங்கிய பிறகு காரணம் தேடலானேன். உண்மையில் அவள் நண்பனுடன் செல்கிறேன் என்றதனால் வந்த ஏமாற்றம் என்பது எளிதில் புரிந்துவிட்டது. ஆனாலும் புரியாதது போலவே வேறு விடை தேடும் பாவனையில் இருந்தேன்.

ஆனால், ஏதோ ஒரு மெல்லிய உணர்வு ஒரு பாடலைப் போல் என்னுடன் பரவியது மதி என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் உண்மை தானோ அறிகிலேன். அந்த மௌனமான பயணம் உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது. அவளது இருப்பிடம் விரைவில் வரக் கூடாது என்று உள்ளம் கருதியது.

பிறகு சங்கருடன் ஏன் செல்லவில்லை என்று கேட்டதும் தானே பொங்கிவிட்டாள். சரிதான் ஆனால், அந்தக் குரல் அதிலிருந்த கோபம், அதிலிருந்த வாதம், அதன் தீர்க்கம் உண்மையில் என்னை ஒன்றும் பேச இயலாததாக்கிவிட்டது. அது ஒரு வெட்டிப் பேச்சோ இல்லை மேடைப்பேச்சோ நிச்சயமாக இல்லை. அது ஒரு பெண்ணின் உரிமையும் உணர்வும் கலந்த நிதர்சனம். கண்ணில் ஒரு முறை பாத்திமா வந்து போனாள். என்னால் முடியவில்லை. கண்களில் துளிர்த்த நீரை அவள் அறியா வண்ணம் துடைத்து எறிந்தபடி அவளை அமைதிப்படுத்தலானேன். அவளிடம் விடை பெறுகையில் ஏதோ அவளிடம் சொல்ல வேண்டும் போலவே இருந்தது. என்னவென்று தெரியாததால் குட் நைட் என்று மட்டும் கூறி விடை கொடுத்தேன். யார் இவள்? முதலில் என்னை என் கண் முன் நிறுத்தினாள். இன்று பாத்திமாவைக் கண்முன் நிறுத்துகிறாள். இதெல்லாம் பிரம்மையா? நானே கற்பனை செய்கிறேனா? ஒன்றும் புரியவில்லை. வரும் வழி எங்கும் பாத்திமாவும் மதியும் மாறி மாறி கண் முன் வந்து போனார்கள். வீட்டிற்கு வந்ததும் பாத்திமாவிடம் போனில் அந்நேரத்திலும் தொந்தரவு செய்து அவளிடம் உரையாடிய பின்புதான் மனம் சற்று ஒரு நிலைக்கு வந்தது. உண்மையில் எனக்கு வந்த சலனம் காதல் இல்லை என்ற பகுத்தறியும் பக்குவம் எனக்கு அன்று இருந்தது. ஆனால், அவளிடம் ஏதோ ஒரு சினேகம் நிச்சயமாக உருவாகியது. சினேகம் தந்த புன்னகையில் உறங்கலானேன்.

அடுத்தநாள் அலுவலகம் செல்கையில் மதியிடம் ஏனோ ஒரு விலகல் தெரிந்தது. என் கண்களைக்கூட அவள் பார்க்கவில்லை. ஒரு மூன்று நாள்கள் ஏதோ கண்ணாமூச்சி போல் எனக்குத் தோன்றியது. ஒரு வணக்கம்கூட இல்லை. அந்த மூன்று நாள்களும் அவள் முகத்தில் சிரிப்பையும் நான் காணவில்லை. வேறு யாரிடமும் சிரித்துப் பேசியும் பார்க்கவில்லை. என்ன ஆயிற்று அவளுக்கு? என்னைத் தவிர்க்கிறாளோ இல்லை, வேறு ஏதாவதோ ஒன்றும் விளங்கவில்லை. என்னிடம் தோன்றிய சினேகம் அவளிடம் தோன்றாது போனதோ என்றவாறு எண்ணம் புரண்டது. ஆனாலும் அவளைத் தொந்தரவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லாமையால் நான் எதுவும் பேச முயலவில்லை.

பிறகு வந்த நாள்களில் அவள் முற்றிலும் தெளிந்தாள். அலுவலக விஷயங்களில் அவள் அணுகுமுறையில் ஒரு சக அலுவலர் என்ற முறையில் அவள் மீதான மரியாதை வளரத் தொடங்கியது. நிச்சயம் இவளிடம் சில சவாலான வேலைகளைத் தரும் தைரியம் என்னுள் வளர்ந்தது.

சிநேகம் காதலில் முதற்படிதானே? இனி என்ன? தொடர்ந்து அவர்களுடன் பேசுவோம்.

படைப்பாளர்:

மோகனப் பிரியா கெளரி

நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம்.  சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’