வடக்கு தாய்லாந்தின் மலைப்பகுதிகளில், மியான்மரின் எல்லையில், கயான் லாஹ்வி என்று அழைக்கப்படும் படவுங் இன மக்கள் வாழ்கின்றனர். படவுங் இன பெண்கள் கழுத்தில் பித்தளையாலான வளையங்களை அணிந்துகொண்டு, கழுத்து நீட்டப்பட்டதைப் போல, தங்க பீடத்தின் மேல் தலை அமர்ந்திருப்பது போல தோற்றமளிக்கிறார்கள். கழுத்து நீளமாக இருக்கும் காரணத்தினால் ‘ஒட்டகச்சிவிங்கி பெண்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு பழமையான பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இதனை அணிகிறார்கள்.

இந்த வளையங்கள் பெரும்பாலும் கழுத்தைக் குறிவைத்து தாக்கும் புலிகளிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் இது அவர்களின் அழகைக் குறைப்பதன் மூலம் அவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் என்று ஊகிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வடக்கு தாய்லாந்தில் உள்ள கிராமங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி பெண்களின் கண்கவர் அழகியலைக் காண வருகிறார்கள். எனவே, பாரம்பரியம் உள்ளூர் அரசாங்கங்களுக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாக உள்ளது. ஆண்டுக்கு நாற்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இந்த மலைவாழ் பழங்குடியினரைப் பார்க்கவும் படங்களை எடுக்கவும் எட்டிலிருந்து பதினாறு டாலர் வரை நுழைவுக் கட்டணம் செலுத்துகிறார்கள். நுழைவுக் கட்டணம் கிராம மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுவது அரிது. பெண்கள் அணிகலன்கள், கைவினைப்பொருட்களை விற்கின்றனர். அதனாலேயே வருமானம் ஈட்டுகிறார்கள். பெண்கள் தங்கள் அவல நிலையைச் சுற்றுலாப் பயணிகளிடம் விவாதித்தால் கிராமத்தின் தலைவர்கள் அவர்களின் கூலியைக் குறைத்துவிடுகின்றனர். தாய்லாந்து அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட கிராமங்களில் கயான் மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

படவுங் (கயான் லாவி) கயான் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு வயதிலிருந்தே கழுத்து வளையச் சுருள்களை அணியத் தொடங்குகிறார்கள். சுருளின் நீளம் படிப்படியாக இருபது திருப்பங்களாக அதிகரிக்கப்படுகிறது. வளையங்களின் மொத்த எடை ஐந்து கிலோ இருக்கும். சுருள்களின் எடை இறுதியில் கழுத்துப்பட்டை எலும்பின் மீது போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் அவை நீண்ட கழுத்து போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

நாளுக்கு நாள் வளையங்களை அணிவதால் கடுமையான உடல்நலப் பிரச்னைகளும் பெண்களுக்கு ஏற்படுகின்றன. இதனுடைய எடை தோள்பட்டை எலும்பைக் கீழே தள்ளுகிறது, இதனால் முதுகுத்தண்டில் உள்ள முதுகெலும்புகளைச் செயலிழக்க செய்கிறது. மருத்துவக் காப்பீடு இல்லாததால் பலர் வெற்றிலை மற்றும் இலைகளை மென்று சிறிது வலி நிவாரணம் பெறுகிறார்கள்.

இந்த வளையச் சுருள்கள் நீண்ட காலம் பெண்களின் கழுத்தில் இருப்பதால், இது கழுத்து தசைகளை வலுவிழக்கச் செய்து, கழுத்து தன்னைத்தானே தாங்கிக்கொள்ள முடியாமல் போகிறது. கழுத்து தசைகள் விரைவாகச் சோர்வடைந்து தலையின் எடையைச் சுமக்க முடியாது, கழுத்து அதன் செயல்பாட்டை நிறைவேற்ற முடியாமல் போகும்போது அது சரிந்துவிடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரே போய்விடும் அபாயம் உள்ளது. இந்த வளையச் சுருள்கள் தவறாக அகற்றப்பட்டால், அது உடனடி மரணத்தை விளைவிக்கும்.

பெண்களின் கைகளுக்கு, கால்களுக்கு,வாய்கு, மூளைக்கு போட்டிருப்பது போய் இங்கு கழுத்திற்கும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்டுள்ளது.

இந்த விலங்குகள் பொடி பொடி ஆகட்டும்!

பொறுத்தது போதும் பொங்கி எழு!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.