சொல்லி வைத்ததுபோல் எல்லாருக்கும் பிடித்த ஒரு பறவை பெங்குயின். அதன் நடை, நிறம், உடல் அமைப்பு எல்லாமே மனிதர்களுக்கு அணுக்கமாகத் தோன்றுவதால் இருக்கலாம். பார்ப்பதற்கு “க்யூட்” என்று சொல்லவைக்கும் அழகுப்பறவைகளாக இருந்தாலும் அதீதங்கள் நிறைந்த வாழிடங்களில் முரட்டுத்தனமான சூழலிலும் பிழைப்பதற்கு இவை எல்லா தகவமைப்புகளையும் கொண்டிருக்கின்றன.  பென்குயின்களில் 17 முதல் 20 இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் மிகப்பெரிய இனமான சக்கரவர்த்தி பெங்குயினின் (Emperor Penguin, பேரரசப் பெங்குயின்) புகைப்படங்களைத் தான் நாம் அதிகம் பார்த்திருப்போம். Happy feet திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதும் இந்த இனம்தான்.

சக்கரவரத்தி பெங்குயின்கள் வாழும் அண்டார்டிகாவில் தப்பிப் பிழைக்கவேண்டுமானால் கோடை காலத்தில் உருகும் பனியோடும் குளிர்காலத்தில் பனிப்புயலோடும் போராடியாகவேண்டும். காலச்சுழற்சியோடு வாழ்க்கை சுழற்சிகளையும் சரியாகப் பொருத்திக்கொண்டால் மட்டுமே அங்கு வாழ முடியும். இந்த பெங்குயின்கள் அங்கு உள்ள பருவகாலத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றன.

அண்டார்டிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்திருக்கும் நேரம். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இவை கடலோரத்திலிருந்து பனிப்பாறைகள் உள்ள நடுப்பகுதிக்குப் பயணிக்கத் தொடங்குகின்றன. இதற்கே சுமார் 50 முதல் 120 கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டியிருக்கும்.  பனித்தகடுகள் இருக்கும் இடத்துக்கு வந்த பிறகு இணைசேர்வதற்கான தகுதியான பெங்குயினைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு தொடங்கிவிடும்.  லட்சக்கணக்கான பெங்குயின்கள் பனித்தகட்டின் மத்தியில் கூச்சலும் குழப்பமுமாக தன்னுடன் இணையப்போவது யார் என்று தேடுகின்றன. அழகான இனப்பெருக்க நடனங்கள் முடிந்தவுடன் இவை இணைசேருகின்றன.

இனப்பெருக்க நடனம்

மே அல்லது ஜுன் மாதத்தில் பெண்பறவை ஒரே ஒரு முட்டையை இடும். அடுத்த நொடி முட்டையை ஆணிடம் தந்துவிட்டு தாய்ப்பறவை வேட்டைக்குச் சென்றுவிடும்!

அடுத்த இரண்டு மாதங்கள் முட்டையைக் காப்பாற்றுவது தந்தையின் வேலை. பனிக்காலம் தனது உச்சத்தில் இருக்கும் நேரம் என்பதால் சராசரி வெப்பநிலை மைனஸ் நாற்பது டிகிரி செல்சியஸ் வரை கீழே இறங்கும். பனிப்புயலின்போது காற்றின் வேகம் மணிக்கு 200 கிலோமீட்டர் வரை இருக்கும். அப்பாக்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பனிக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகின்றன.

சினைப்பை

ஆண் பறவையின் காலடிக்கு மேலே இறகுகள் இல்லாத ஒரு சினைப்பை (Brood pouch) இருக்கும். தன் காலின்மேல் முட்டைகளை வைத்து ஆடாமல் நின்று, அந்த சினைப்பையின் மேல் தோலால் முட்டையை மூடி ஆண்பறவைகள் அடைகாக்கத் தொடங்குகின்றன. எதுவும் சாப்பிடாமல், பெரிதாக அசையாமல் இவை முட்டைகளை அடைகாக்கின்றன. பனிப்புயல் வரும்போது எல்லா ஆண்பறவைகளும் கூட்டமாக ஒட்டி நின்றுகொண்டு காற்றின் ஊசிக்குளிரிலிருந்து தப்பிக்கப் பார்க்கின்றன. ஒவ்வொரு முறையும் இந்தக் கூட்டத்தின் வெளி அடுக்கில் யார் நிற்பது என்பது சுழற்சி முறையில் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சில பறவைகளே பனியை எதிர்கொண்டு சிரமப்படக் கூடாது, இல்லையா?

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (75 நாட்கள்) வரை இவை முட்டைகளை இவ்வாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் உணவு உண்ண முடியாது என்பதால் ஆண் பறவைகளின் எடை சராசரியாக 20 கிலோ குறையுமாம்!

சினைப்பையில் இருக்கும் குஞ்சு

தாய்ப்பறவை திரும்பி வருவதற்கு சில நாட்களுக்கு முன்னால் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியில் வந்துவிடும். கடுங்குளிரில் வெளிவரும் குஞ்சு, பாதுகாப்புக்கும் உணவுக்கும் தந்தையையே நம்பியிருக்கும். குஞ்சுகள் தந்தையின் காலடிக்குள் சென்று கதகதப்பாக அமர்ந்துகொள்கின்றன. தன் உடலில் சுரக்கும் ஒரு பால்போன்ற திரவத்தால் குஞ்சுகளுக்குத் தந்தை உணவூட்டும்! இதில் 50%க்கும் மேல் புரதச்சத்து இருப்பதால் ஏழு நாட்கள் வரை குஞ்சுகளின் பசியைத் தணிக்க அதுவே போதுமானதாக இருக்கும். இந்த திரவம் Crop milk என்று அழைக்கப்படுகிறது.

இணைந்த குடும்பம்

ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் தாய்ப்பறவை திரும்பி வரும். லட்சக்கணக்கான பெங்குயின்கள் இருக்கும் கூட்டத்தில் “குடும்பப் பாட்டு” ஒன்றைப் பாடித் தன் இணையைப் பெண்பறவை கண்டுபிடிக்கும். தாய்ப்பறவை வந்தவுடன் ஆண்பறவை உடனே குழந்தை வளர்க்கும் பொறுப்பை விட்டுக்கொடுத்துவிடாது, கொஞ்சம் தயங்கும். பிறகு மெதுவாக தாய்ப்பறவையிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு கிட்டத்தட்ட 120 நாட்களுக்குப் பிறகு முதல் கவள உணவை சாப்பிடுவதற்காகக் கடற்கரையை நோக்கி வேட்டைக்கு கிளம்பும்.

தாய்ப்பறவை தன் வயிற்றில் சேமித்து வைத்திருக்கும் மீன், இறால், கணவாய்களைக் குஞ்சுக்கு ஊட்டிவிடும். 4 வாரங்களில் வேட்டை முடிந்து ஆண்பறவை வந்தபிறகு பெண்பறவைகள் உணவு தேடக் கிளம்பும். இப்படியே ஆணும் பெண்ணும் மாறி மாறிக் குஞ்சுகளைப் பாதுகாக்கும்.

முட்டையிலிருந்து வெளிவந்து 45 நாட்கள் ஆனபிறகு, குஞ்சுகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு க்றீச்சை (Creche) உருவாக்கும். வேலைக்குப் போகும் பெற்றோர்கள் குழந்தைகளை டே கேர் சென்டரில் விட்டுவிடுவதில்லையா, அதைப் போலத்தான் இதுவும். என்ன ஒரே வித்தியாசம், இங்கு குழந்தைகளாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்! பாதுகாப்புக்காகவும் வெப்பத்துக்காகவும் இவை அருகருகே அணைத்தபடி நின்றுகொள்ளும். இந்த நிலை வந்தபிறகு, ஆண், பெண் இரு பறவைகளும் வேட்டைக்குப் போய்விட்டு மீன்பிடித்து வரும். க்றீச்சில் தன் குழந்தையை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உணவூட்டும்.

ஜூலை மாதம் வெளிவரும் குஞ்சுகள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில்தான் தனியாக உணவு தேடும் ஆற்றலைப் பெறுகின்றன. இந்த ஆறு மாத காலகட்டம் முடியும்வரை, ஒவ்வொரு முறையும் 50 முதல் 120 கிலோமீட்டர் தூரம் நடந்து கடலுக்குப் போய் மீன்பிடித்து வந்து பெற்றோர்கள் இவற்றுக்கு உணவூட்டவேண்டும், பாதுகாப்பும் தரவேண்டும்!

“இது வீடு இல்ல, விக்ரமன் சார் படம்” என்ற டயலாக்கையும் உங்களுக்குப் பிடித்த சென்டிமெண்ட்டான அப்பா அல்லது அம்மா பாடல்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.

இதே சென்டிமெண்ட்டில் உச்சத்துக்குப் போகும் பெண் பறவைகள் உண்டு. ஒருவேளை தான் இட்ட முட்டையிலிருந்து குஞ்சு வெளிவராவிட்டாலோ குஞ்சுகள் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டாலோ, பெண் பறவைகள் பெற்றோர்கள் இல்லாத குஞ்சுகளை எடுத்து தன் சொந்தக் குழந்தையாகவே பாவித்து வளர்க்கின்றன!

கடத்தல் சம்பவம்!

வளர்ப்பதற்குக் குஞ்சுகளே கிடைக்காவிட்டால் வேறு இணைகளின் குஞ்சுகளைக் கடத்தவும் திருடவும் கூடப் பெண்பறவைகள் தயங்குவதில்லை! பெங்குயின்களை அழகான பறவைகளாகக் கருதுபவர்கள் இந்த சண்டையைப் பார்க்கவேண்டும், அத்தனை மூர்க்கமாக இருக்கும்.

பெற்றோர் இல்லாத குஞ்சுகளின்மீது இரக்கப்பட்டு எடுத்து வளர்ப்பதெல்லாம் சரிதான், அதற்காக வேறு ஒரு இணையின் குழந்தைகளைத் திருட முடியுமா? அநியாயமாக இருக்கிறதே!

“இரக்கமும் இல்லை அநியாயமும் இல்லை, அவை எல்லாம் மனிதப் பண்புகள். பெங்குயின்கள் இப்படி நடந்துகொள்வதற்கு அறிவியல் காரணம் இருக்கிறது. எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை. சாதாரணமாகப் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய ப்ரோலாக்டின் (Prolactin) என்ற ஹார்மோன், பெங்குயின்களின் உடலில் நீண்ட காலம் இருக்கும், அதுதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

2 மாதங்கள் வரை இணையையும் முட்டையையும் பிரிந்து தனியாகப் பெண்பறவைகள் கடலில் வேட்டையாடுகின்றன. இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து, அவை உடனடியாகக் குஞ்சுகளைப் பார்க்கும் பொறுப்பை ஏற்கவேண்டும், கொண்டுவந்த உணவைக் குஞ்சுகளுக்கு ஊட்டவேண்டும். அதற்காக இயற்கை செய்த ஏற்பாடு இது. குஞ்சுகளைப் பார்த்துக்கொள்ளும் காலம் முடியும் வரை இவற்றின் உடலில் அதிக அளவில் ப்ரோலாக்டின் இருக்கும் என்பதால், குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க வேண்டும் என்ற உந்துதல் இவற்றுக்கு இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இவை கைவிடப்பட்ட குஞ்சுகளை எடுத்து வளர்க்கின்றன, எதுவும் கிடைக்காவிட்டால் திருடவும் செய்கின்றன. பசி/உறக்கம் என்பதைப் போல இது உள்ளுக்குள்ளிருந்து வரும் ஒரு இயற்கையான் உந்துதலாக இருக்கும்படி அவை தகவமைக்கப்பட்டிருக்கின்றன.

இதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள், சில பெங்குயின்களுக்குப் ப்ரோலாக்டினைக் குறைக்கும் வேதிப்பொருளை செலுத்தினார்கள். ப்ரோலாக்டின் குறைந்த பெங்குயின்கள் குழந்தை வளர்க்கும் பொறுப்பு கிடைக்காவிட்டாலும் அமைதியாகவே இருந்தன. கடத்தலில் ஈடுபடவில்லை!

பெங்குயின் வாழ்க்கை

பசி தாங்கும் சக்தி, நெடுந்தூரம் நடக்கும் ஆற்றல், குழந்தைகளுக்கு உணவு தருவது, தாயும் தந்தையும் சரிசமமாகப் பங்களித்துக் குஞ்சுகளை வளர்ப்பது என்று எத்தனையோ தகவமைப்புகள் சக்கரவர்த்திப் பெங்குயின்களிடன் உண்டு. இத்தனை முன்னேற்பாடுகளோடு குஞ்சுகள் காக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. கிடைக்கும் உணவிலும் பாதுகாப்பிலும் சுணக்கம் ஏற்பட்டால் குஞ்சுகளின் வளர்ச்சி தாமதமாகும். மெதுவாக வளரும் குஞ்சுகள், கோடை காலத்தில் பனி உருகும்போது தனியாகப் பிழைக்கத் தெரியாமல் மாட்டிக்கொள்ளும்! ஆகவே காலத்தோடு ஓடவேண்டிய ஓட்டப்பந்தயம் இது. பின்தங்கிவிட்டால் அடுத்த தலைமுறைக்குத்தான் ஆபத்து.

குழந்தைகளை அயராது கவனித்துக்கொள்ளும் பெற்றோர் இருக்கிற அதே விலங்கு உலகத்தில், குழந்தைகளை சுத்தமாகக் கண்டுகொள்ளாத விலங்குகளும் உண்டு, அவை என்ன விலங்குகள்?

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.