“ஆமாம் மாப்ளை, ஒருவழியா வருணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. ஒரு வாரம் முன்னாடியே கட்டாயம் வந்துடு. ஆங், சொல்றேன். வெச்சிடறேன்.”

அப்பா முகமலர்ச்சியோடு போனை வைத்தார்.

வருண் மும்முரமாகத் தனக்கு வரப்போகும் மனைவிக்குப் பிடித்த ரெசிப்பிகளை யூடியூபில் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது வருங்கால மாமனார்தான் தன் மகள் நிலாவுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கிறாரே!

“யாருப்பா போன்ல?”

“உங்க மாமாடா. உன் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வீட்டுக்கு வந்துடறதா சொல்லி இருக்கான்.” சிரித்துக் கொண்டே அகன்று விட்டார்.

வருணின் முகம் இருண்டது. அப்பாவுக்கு எல்லாமே மறந்து விட்டதா? எப்படி இப்படிச் சிரித்துப் பேசுகிறார்?

மாமாவை நினைத்ததும் உடலெல்லாம் தேளும் பூரானும் ஊர்வது போல் ஓர் அருவருப்பு கலந்த பயம் ஏற்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்னும் தன்னை அந்தக் கொடுமையான நினைவுகள் பீடித்திருப்பதை உணர்ந்து கலவரமடைந்தான்.

சிறுவயதில் வருணுக்கு மாமா என்றால் உயிர். எப்போது வந்தாலும் வருணை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தங்களையும் கைகளில் விலையுயர்ந்த சாக்லெட்டுகளையும் குவிப்பார். வருண் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்; சினிமா, பீச் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவதும் மாமாதான்.

மாமாவின் மீது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. வருணின் குடும்பத்துக்கு அவ்வப்போது பணவுதவியும் செய்திருக்கிறார்.

அப்போது வருணுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். அம்மாவும் அப்பாவும் வெளியில் சென்றிருக்க, ஊரிலிருந்து வந்த மாமா குளித்துக்கொண்டிருந்தார்.

”வருண்! வருண்! டவல் கொண்டு வர மறந்துட்டேன். எடுத்துட்டு வரியாப்பா?”

குரல் கேட்டு, “தோ வரேன் மாமா!” என்று எழுந்து ஓடினான் வருண்.

ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்று வெடித்த சப்தம் அந்தத் தெருவையே அதிர வைத்தது. வருணின் வீட்டினுள் மயான அமைதி நிலவியது.

****

“என்னாச்சு காய்ச்சல் விடவே மாட்டேங்குது?” நூற்றி நான்கு டிகிரி காய்ச்சலில் பிதற்றிக்கொண்டிருந்த வருணைச் சுற்றிக் கவலையுடன் அமர்ந்திருந்தனர் அம்மாவும் அப்பாவும். “மாமா, வேண்டாம்…” அவன் குழறிக் குழறிப் பேசிய பேச்சுகள் எதுவும் யாருக்கும் புரியவில்லை.

எதையோ பார்த்துப் பயந்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.

நான்கு நாள் காய்ச்சலில் விழுந்து வருண் எழுந்தபோது, அப்பாவும் அம்மாவும் மாமா புகழைப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்தான் வருண். மாமாதான் நள்ளிரவில்கூட அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டதாக அவர்கள் சொன்னதைக் கேட்ட வருணுக்குச் செத்தே போயிருக்கலாம் என்று தோன்றியது. எதுவுமே நடக்காதது போல் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த மாமாவைப் பார்க்க ஆத்திரமும் அழுகையுமாக வந்தது.

ஒருவழியாக அவர் விடைபெற்று ஊருக்குச் சென்றபிறகே லேசாகத் துணிவு வந்தது. “யாரிடமாவது சொன்னால் உன்னை நிம்மதியாக வாழவே விடமாட்டேன் என்று மாமா எச்சரித்திருந்தும் மன உளைச்சல் பொறுக்க முடியாமல் ஒருநாள் அப்பாவிடம் தனிமையில் கொட்டிவிட்டான்.

மாமாவை அடித்துக் கொலை செய்யப் போய்விடுவாரோ என்று அஞ்சிய அப்பாவோ அமைதியாக இருந்தார். அவர் கண்களிலிருந்து தாரைத் தாரையாகக் கண்ணீர் கொட்டியது. பின்பு சொன்னார்:

“வருண் தங்கம், தயவு செஞ்சு இதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு. யார் கிட்டயும் இதைச் சொல்லிடாதே. உங்க மாமாவைப் பத்தி நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்டி என் மகனையே…” தலையில் அடித்துக்கொண்டு அப்பா அழுததைப் பார்க்க வருணால் பொறுக்க முடியவில்லை.

“என்ன பண்றது? உங்கம்மாவுக்குத் துப்பில்ல. இவ்ளோ செல்வாக்கு இருக்குற தம்பி உங்கம்மாவுக்கு இருக்குறதாலதான் நாம இவ்ளோ வசதியா இருக்கோம். தயவுசெஞ்சு இதை யார் கிட்டயும் சொல்லிடாதப்பா. குடும்ப மானம் மட்டுமில்ல நம்ம வாழ்க்கையே போயிடும்” என்று அப்பா சொன்னதில் இருந்த அருவருப்பான கசப்பை ஏற்க முடியாமல் விழுங்கினான் வருண்.

திடீரென்று வீடும் பெற்றவர்களும் மட்டுமல்ல தானே தனக்கு அந்நியமாகிப் போன உணர்வு. பதின்பருவத்தில் உடல் மனம் ரீதியாக ஏற்படும் குழப்பங்களை இயல்பாகக் கடந்து தெளிய

வாய்ப்பில்லாமல் குரூரமும் வக்கிரமும் அவனைச் சிதைத்துவிட்டன.

அதன்பின் மாமாவை அவன் பார்க்கவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், வீட்டுக்கு வருவது குறைந்துவிட்டது. விசேஷங்களில் அவரைப் பார்க்க நேரிடும் என்பதற்காகவே படிப்பைக் காரணம் காட்டி எங்கும் வருவதைத் தவிர்த்துவிடுவான் வருண்.

இப்போது என் திருமணத்துக்கே வருகிறாரா? என்னால் நிச்சயம் இதனை அனுமதிக்க முடியாது. நிலாவை அழைத்தான்.

“நிலா இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

‘டீ பேலஸ’ கஃபேயில் ஆளுக்கோர் இஞ்சி டீயும் சாண்ட்விச்சும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தார்கள் நிலாவும் வருணும்.

வருணைச் சந்திக்கும் உற்சாகத்தில் செம்ம அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்தாள் நிலா. வருண் அவளைக் கண்கொட்டாமல் ரசித்தபடி தன் மனக்கலக்கத்தைச் சற்றே மறந்திருந்தான்.

“என்ன, அப்படிப் பாக்குற? ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னியே?” அலைபாயும் தன் சுருள் முடியை ஸ்டைலாகக் கோதியபடி கேட்டாள் நிலா.

ஒரு பெருமூச்சுடன் மாமாவைப் பற்றி எல்லாம் சொல்லி முடித்தான் வருண். ஒரு சில மாதப் பழக்கத்திலேயே நிலா மீது பெரும் மதிப்பும் அவள் உடனிருந்தால் தனக்கு வாழ்வில் எந்தக் குறையும் இல்லை என்ற நம்பிக்கையும் வருணுக்குப் பிறந்திருந்தது.

நிலா வருண் பேசுவதைப் பொறுமையுடன் கேட்டாள். அவள் முகத்தில் கோபம், துயரம், வருண் மீதான பரிவு எல்லாம் ஒரு சேர வெளிப்பட்டது.

“அப்போ உனக்கு என்ன வயசு குட்டி?” மென்குரலில் கேட்டாள்.

“பதிமூணு நிலா.”

மேஜையின் மீதிருந்த வருணின் கையை நிலா இறுகப் பற்றிக்கொண்டாள்.

“அப்ப நீ இதை யார் கிட்டயாச்சும் சொன்னியா?”

“ம்ம்… உடனே சொல்லல. ரொம்ப பயமார்ந்துச்சு. அவங்க ஊருக்குப் போய் ரொம்ப நாள் கழிச்சு அப்பா கிட்ட சொன்னேன்.”

தொடர்ந்து அப்பாவும் தன்னை அச்சமூட்டி அமைதிப்படுத்தியதைப் பகிர்ந்தான் வருண்.

“ஒண்ணும் கவலைப்படாதே! எத்தனை வருசம் ஆனா என்ன? உன் மாமா பண்ண அக்கிரமத்துக்கு அவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும். வரட்டும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன் உன்கூட. ஆனா, முதல்ல உனக்கு கவுன்சிலிங் தேவைப்படுது வருண். அறியாத வயசுல நடந்தது உன் தப்புன்னு நினைச்சு நீ வருத்தப்பட்டிருக்கே. நம்பிக்கையோட பெத்தவங்க கிட்ட ஷேர் பண்ணியும் நீதி கிடைக்காத கோபமும் வருத்தமும் உனக்குள்ள பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். You are strong. Let’s make you stronger.” அவனது கரங்களைப் பற்றிக் குலுக்கினாள்.

வருணுக்குத்தான் பலகாலமாக அடைந்து கிடந்த இருண்ட அறையின் ஜன்னல்கள் திறந்தது போல் இருந்தது. அப்பாவிடமும் மாமாவிடமும் காணாத மனவலிமையையும் பேரன்பையும் ஒரு சேரக் கண்டுகொண்ட பரவசத்தில் நிலாவிடம் மொத்தமாகச் சரணடைந்தான் வருண்.

எழுந்து நின்று அவளை அணைத்துக்கொண்ட வருணின் கண்ணீர் நிலாவின் தோள்களை நனைத்தவாறிருந்தது.

References:

போக்சோ சட்டம்

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இரண்டாவது நூல், ‘குத்தமா சொல்லல குணமா சொல்றோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.