வட அமெரிக்காவில் இருக்கும் பழங்குடி மக்கள் ஐரோப்பிய குடியேறிகளின் காலனி ஆதிக்கத்தால் எண்ணற்ற வகைகளில் ஓடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஐரோப்பியர்கள் வருகைக்கு முன் பழங்குடி மக்களின் வாழ்வியல் மற்றும் சமூக அமைப்பு எவ்வகையில் சமத்துவம் நிறைந்ததாக இருந்தது என்பது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அந்தப் பழங்குடி மக்களுக்கு காலனி ஆதிக்கத்தால் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு குறித்தும் அவை எந்தெந்த வகையில் அவர்களின் வாழ்வியலைப் பாதித்தது குறித்து மானுடவியல் பார்வை கொண்டு பார்ப்பதோடு, அதே காலனி ஆதிக்கம் செய்த பண்பாட்டுப் படையெடுப்பால் இந்தியாவில் உள்ள பூர்வகுடிகளாகிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எவ்வாறு உயர்த்தியது என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

வட அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்களின் சமூக அமைப்பு ஐரோப்பிய குடியேறிகளின் வருகைக்கு முன் சமத்துவம் நிறைந்த சமூகமாக இருந்தது. சிறு இனக்குழுக்களாகப் பொதுவுடைமை தன்மையோடு அந்தச் சமூகங்கள் இருந்ததே இந்தச் சமத்துவ தன்மைக்குக் காரணம் என்று சென்ற கட்டுரையில் கூறினேன். ஆனால், இந்தச் சமநிலை தவறி இப்பொழுது எல்லா வகையான பாகுபாடுகள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிகள். மிஷனரிகள் பெரும்பாலும் பழங்குடி மக்களின் பண்பாட்டை மதித்ததே இல்லை. தங்கள் மத புத்தகத்திற்கு எதிராக இருக்கும் ஒரே காரணத்திற்காக மிஷனரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைக்கு உகந்த பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தனர்.

உதாரணத்திற்கு, கனடாவின் வடக்கு பகுதியில் உள்ள இனுயிட் பழங்குடி மக்கள் மத்தியில் பலதார மனம் நடைமுறையில் இருந்தது. பொதுவான பார்வையில் பலதார மனம் மிகப் பிற்போக்கான வழக்கமாகக் கருதப்படலாம். ஆனால், அவர்களின் வாழ்வியலுக்கு இந்தப் பழக்கம் தேவைப்பட்டது. ஒரு காலகட்டத்தில், இனுயிட் மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை சராசரிக்குக் குறைவாக இருந்தது. எனவே, ஓர் ஆண் ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் பழக்கம் அந்தச் சமூகத்தில் அவசியமானதாகிப் போனது. இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளாத மிஷினரிகள், அவர்கள் மதப் புத்தகம் சொல்வது போல் பலதார மணம் தவறு என்ற நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருந்தனர். எனவே, அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பலதார மணம் செய்த ஆண்களின் முதல் மனைவியைத் தவிர மற்ற மனைவிகளையும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அந்த ஆண் உடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவித்துவிட்டனர். இதன் காரணமாகப் பல இனுயிட் பூர்வகுடி குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கணவனைப் பிரிந்த மனைவிகளும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த குழந்தைகளும் அந்தச் சமூகத்தில் சுமூகமாக வாழ்வது மிக கடினமானதாகிவிட்டது.

இதேபோல், பழங்குடியைச் சேர்ந்த பால் புதுமையினர்களுக்கும் மதத்தின் பெயரால் எண்ணற்ற கொடுமைகள் நடந்தன. மிஷினரிகள் வருகைக்கு முன் இனுயிட் மக்களின் பண்பாட்டில் பால் புதுமையினரை மதிப்புடன் சகமனிதராக நடத்தியுள்ளனர். இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுட் மொழியில் லெஸ்பியன் மற்றும் கே என்ற பால் புதுமையினரைக் குறிக்கும் இரு சொற்களுக்கும் சமமான அர்த்தம் தரும் வார்த்தைகள் இருந்திருக்கின்றன.

எல்லாச் சமூகத்தில் இருந்தது போலவே இனுயிட் சமூகத்திலும் ஓர் இனசேர்க்கை என்பது இயற்கைக்கு எதிரான செயலாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், சிறிய அளவில் எளிமையான தன்மையில் இருந்த அந்தச் சமூகம் பால் புதுமையினரை ஒதுக்கி வைக்காமல் அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்துப் பார்த்துள்ளனர். அப்போது தான் சமூகத்தில் ஓர் இணைசேர்க்கை நடப்பதின் இயற்கையான காரணமும் அதன் அவசியமும் ஆவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

இனுயிட் சமூகத்தில் வேட்டையாடுவது முதன்மையான தொழில். அதுவும் அடர்ந்த பனி சூழ்ந்த பிரதேசத்தில்தான் வேட்டையாட செல்வார்கள். அவர்கள் சுமூகத்தில் gender roles என்று சொல்லப்படும் வெவ்வேறு பாலினதிற்கான வேலைகள் பிரிக்கப்பட்டு இருந்தன. எனவே, ஆண்கள்தாம் பிரதானமாக வேட்டையாடச் செல்வார்கள். அப்படிச் சென்றால் பல நாட்களுக்கு பிறகுதான் வீடு திரும்புவார்கள். பல நாட்கள் அடர்ந்த குளிரில் வாடுவதால், ஆண்களுக்குத் தங்கள் உடல் சூடாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது. எனவே, இரு ஆண்கள் சேர்ந்து வேட்டைக்குச் செல்லும் போது தங்களைக் குளிர் மேலும் வாட்டாமல் இருக்க உடல் உறவில் ஈடுபட்டனர். அதே நேரம், அவர்கள் வேட்டை முடிந்து வீடு திரும்பிய பிறகு அவர்கள் மனைவிகளுடனும் கூடி வாழ்ந்தனர்.

இதன் மூலம் ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

பழங்குடிகள் என்றாலே பல பிற்போக்குத் தனங்களைப் பின்பற்றும் காட்டுமிராண்டிகள் என்ற பொது புத்தி மானுடவியல் பார்வைகொண்டு அணுகும் போது உடைகிறது. நவநாகரிக சமூகத்தில் பலதார மனம் என்பதை இன்றைய காலகட்டத்தில் பிற்போக்குத்தனமான வழக்கமாக இருக்கலாம். ஆனால், ஒரு பண்பாட்டில் பிற்போக்குதனமான தவறான வழக்கமாகக் கருதப்படும் ஒன்று, வேறு ஒரு பண்பாட்டில் வாழ்வியலுக்கு உதவும் சரியான வழக்கமாகக் கருதப்படலாம். இந்தப் புரிதல் அறவே அற்ற ஐரோப்பிய மிஷினரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வட அமெரிக்கப் பூர்வகுடி மக்களின் பல பண்பாட்டு பழக்கவழக்கங்களை அழித்து, தங்கள் மதம் சரி என்று நம்பும் பழக்கவழக்கங்களுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தினர். வட அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் ஏறத்தாழ 500 ஆண்டுகளாக இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பால் தங்கள் அடையாளங்களை இழந்து தங்களின் சொந்த நிலத்திலேயே உரிமைகள் அற்ற மக்களாக மாற்றப்பட்டனர்.

வட அமெரிக்காவில் பூர்வகுடி மக்கள் மிஷினரிகளின் தாக்கத்தால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிந்த அதே காலகட்டத்தில் உலகின் மறு மூலையில் இருக்கும் தென் இந்திய நிலப்பரப்பில் அதே மிஷினரிகளால் அந்நிலத்தின் பூர்வகுடி மக்கள் மீது நடத்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பு அந்த மக்களை பல ஒடுக்குமுறைகளில் இருந்து காப்பாற்ற உதவியது.

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிஷினரிகளால் அந்நிலத்தின் பூர்வகுடிகளுக்கு மட்டுமின்றி சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்பட்டது. மிஷினரிகள் தமிழகம் முழுவதும் பள்ளிகளை அமைத்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கல்வியை எடுத்துச் சென்றதோடு, பல தமிழ் இலக்கியப் புத்தகங்களை முதன் முதலில் அச்சடித்து தமிழ் மொழிக்குப் பங்களித்தனர்.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமாகப் பெண்களுக்குக் கல்வி கற்க அதிகாரம் அளித்தனர். இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மிகப் பழைமையான கல்வி நிறுவனங்கள் மிஷினரிகள் ஆதிக்கம் செய்த காலத்தில் நிறுவப்பட்டது.

கல்வி நிறுவனங்கள் நிறுவுவது, தமிழ் மொழி புத்தகங்கள் அச்சிட்டு மொழிபெயர்த்தது எல்லாம் எப்படிப் பண்பாட்டுப் படையெடுப்பாகும் என்று தோன்றலாம். கல்வி பண்பாட்டை மாற்றும் தன்மை உடையது. நாம் கற்கும் கல்வி முறையின் தன்மையைப் பொறுத்து நாம் இந்தச் சமூகத்தைப் பார்க்கும் பார்வை மாறும். முற்போக்கான கல்வி முறை பயின்றால் நம் சமூகத்தில் நிலவும் பிற்போற்கான பழக்கங்களை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக பழைய பண்பாட்டுக் கூறுகள் விட்டுச் சமகால வாழ்க்கைக்குத் தேவையான பண்பாட்டுக் கூறுகளை மட்டும் மக்கள் பின்பற்றுவர். இதேபோல், மிஷினரிகள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கில வழி அறிவியல் சார்ந்த கல்வி முறையால் நம் மக்களை நிகழ் காலத்திற்குத் தேவையில்லாத நம்பிக்கைகளைக் களைந்து வாழ்வியலுக்குத் தேவையான பழக்கங்களை மட்டும் பின்பற்ற கற்றுக்கொண்டனர்.

மிஷினரிகள் வருகைக்குப் பின் இந்நிலத்தில் கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்றால், அவர்கள் வருவதற்கு முன் இங்கு யார் யாருக்கு மட்டும் கல்வி கிடைத்தது? ஐரோப்பிய மிஷினரிகளால் உண்டான பண்பாட்டுப் படையெடுப்பால் உலகின் மற்ற பகுதிகளில் ஏதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திய போது, தமிழ் நாட்டில் அதே பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த என்ன காரணம்? பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறையான விளைவுகளையும் விளைவிக்குமா? தமிழ்நாட்டில் பண்பாட்டுப் படையெடுப்பால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படவே இல்லையா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ