2. இந்தக் குறிப்பிட்ட உறவிலிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டியது என்ன?

உறவுகளிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்விக்கு விடை தேடும்போது எவ்விதக் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால், மனிதன் உருவாக்கிய இந்த உறவுமுறைகள் அனைத்தும், தேவைகளின் பொருட்டே உருவாக்கப்பட்டன. தேவைகளைப் பொறுத்துதான் இந்த உலகில் உறவுகள் தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த உலகில், தேவைகளின் பொருட்டுதான், உறவுகளாக வாழ்ந்துவருகிறோம். அந்தத் தேவைகளின் ‘மூலம்’ மகிழ்ச்சி என்பதுதான் நிதர்சனம்.

அந்த மகிழ்ச்சி என்பது குறைந்தபட்சமாக அடுத்த நபர் தருகின்ற சிறு புன்னகையாகவோ ஊக்கமளிக்கும் வார்த்தைகளாகக்கூட இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.

இங்கு, உறவுகள் என்பது தியாகங்கள் நிறைந்ததாகக் கட்டமைக்கப்படுகிறது. அதில் கட்டுப்பாடுகளையும் கோத்து விட்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, திருமணம் நடந்துவிட்டால் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு இறுதிவரை தியாகியாக வாழ வேண்டும். ஒருவரைக் காதலித்துவிட்டால், தன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், அவருடனே தொடர வேண்டும் போன்றவை.

உண்மையில் இந்தச் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்து, தியாகங்கள் செய்து அடுத்தவரைப் பாராட்டும்போது, தற்காலிகமாக மகிழ்ச்சி கிடைக்கத்தான் செய்யும்.

ஆனால், உண்மையில் உங்கள் நிரந்தரமான மகிழ்ச்சிக்காக இந்த உறவிடம் இருந்து என்ன வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டறியுங்கள். ஏனென்றால், உண்மையில் மனிதன் செய்கின்ற எல்லாச் செயல்களுமே தன்னுடைய மகிழ்ச்சிக்காகத்தான்.

இந்தக் கேள்வியின் பதில் எழுதும்போது, பட்டியல் நீண்டுகொண்டு போனால், முக்கியமான முதல் இரண்டு அல்லது மூன்று விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு வேண்டியது என்ன என்பதற்கு பதில் கிடைத்த போதே, அது அந்த உறவிடம் இருந்து கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தெரிந்துவிடும். இப்போது அதைப் பொறுத்து உங்கள் தீர்மானங்களை எடுக்க முடியும்.

3. உறவைத் தொடரவோ, விட்டுச் செல்லவோ, அல்லது நீங்கள் எடுக்கப்போகிற முடிவினால், ஏற்படுகின்ற நன்மைகளையும் சவால்களையும் எழுதுங்கள்.

இந்த உறவைத் தொடர்வதானால், உங்களுக்குக் கிடைக்கப் போகும் நன்மைகள், உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்கள் போன்றவற்றைப் பட்டியல் இடுங்கள். தொடர்வதானால் நீங்கள் சந்திக்கப்போகும் சவால்களையும் பட்டியல் இடுங்கள்.

நீங்கள் இந்த உறவில் இருந்து விலகுவதானால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியல் இடுங்கள். நீங்கள் சந்திக்கப் போகும் சவால்கள், அது உணர்வு ரீதியான, உடல் ரீதியான, சமூகம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த வேறு எந்தச் சவால்கள் ஆனாலும் அதைப் பட்டியலிடுங்கள்.

மொத்தத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் வேண்டும். இந்தப் பயிற்சி உண்மையில் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான, விருப்பு வெறுப்புகள் குறித்துச் சிந்திக்க வைக்கும்.

சவால்கள் குறித்துச் சிந்திக்க வைத்து விழிப்புணர்வைத் தரும். உங்களுக்கான வாழ்க்கையை, மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான சிறந்த முடிவை எடுக்க அது உதவி செய்யும்.

4. நீங்கள் எடுத்த முடிவுக்கான (ஏன் வெளியே வரவேண்டும் அல்லது ஏன் தொடர வேண்டும்) என்பதற்கான ஒரு பலமான காரணத்தை உருவாக்குங்கள்.

நீங்கள் எடுக்கப்போகிற முடிவிற்கான, பலமான ஒற்றைக் காரணம் இதுதான் என்பதைக் கண்டறிந்து, எப்போதும் அதை நினைவில் நிறுத்துங்கள்.

உதாரணமாக, விமலின் முடிவிற்கான காரணம் இதுதான்.

தான் இந்த வாழ்க்கையை வாழ, தன் மனைவி எந்த இடைஞ்சலும் செய்யவில்லை; முடிந்தவரை உதவியே செய்துவருகிறார். அப்படியானால் வாழ்க்கையை அழகாக்க வேண்டியது தன் பொறுப்பு. அதனால் தன்னை மாற்றிக்கொண்டு உறவைத் தொடர்வது என்பது அவரின் முடிவாக இருந்தது.

நிர்மலாவைப் பொறுத்தவரை அவருக்கு வேண்டியது. திருமண உறவினால் வரும் பந்தம் (commitment). அது கிடைக்காத பட்சத்தில் அந்த உறவைக் கைவிடவும் அவர் தயாராகவே இருந்தார்.

ஆனந்தியைப் பொறுத்தவரை அவரின் முடிவுக்கான காரணம்,

தன் மகளும் தானும் நல்ல சூழலில் நல்ல வார்த்தைகளைக் கேட்டு குடும்பமாக வாழ முற்றிலும் தகுதியானவர்கள் என்பதுதான். வார்த்தை துஷ்பிரயோகத்திற்கு அல்ல. அந்தக் குடும்பத்தைத் தானும் மகளும் மட்டுமே சேர்ந்து அமைக்க முடியும்.

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

நம் வாழ்க்கையை, நமக்குப் பிடித்தபடி, நாம் நாமாக இருந்து வாழ முற்படும்போது நமக்கு வேண்டியதை, தைரியமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

நமக்குத் தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லவும் வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில், அதை விட்டு வெளியே வரவும் தயாராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் வாழ்கின்ற இந்த ஒரு வாழ்க்கையை அப்போதுதான் நமக்கு உண்மையான, நம் மனதுக்கு நேர்மையான வாழ்க்கையாக வாழ முடியும்.

இந்தப் பயிற்சிகள் அனைத்தும் உறவுகளைக் குறித்துத் தெளிவான முடிவுகள் எடுப்பதற்குத் தயார் செய்யும். பொதுவாகக் கோபத்திலோ அல்லது கவலையிலோ எடுக்கும் முடிவுகள் அவ்வளவு சரியாக அமைவதில்லை.

இதில் சொல்லப்பட்ட முதல் பயிற்சியைச் செய்யும்போது உங்கள் மனம் சமநிலை அடையும். அதன்பிறகு, அடுத்த பயிற்சிகளைச் செய்யும்போது, எளிதாக உங்கள் முடிவுகளையும் சமநிலையோடு எடுக்கமுடியும்.

இந்த வாழ்க்கையை உறவுகளுடன் கொண்டாட்டமாக வாழ உதவி புரியும். ஓர் உறவில் இருந்து வெளியே வந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் அதை இன்னோர் உறவாகத் தொடர்வதற்கு உதவி செய்யும். இந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் உறவுகளை உங்களை நோக்கி ஈர்த்து வரும்.

நான் மேற்சொன்ன இந்தப் பயிற்சிகள் அனைத்தையும், இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் செய்து பார்க்கலாம்

கண்டிப்பாக, நீங்கள் இருக்கும் உறவில், வாழ்ந்து வரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான உணர்வு (spark) கிடைக்கும்.

நீங்கள் ஒரு முடிவை எடுக்க உதவும். மேலும் நீங்கள் எடுத்த முடிவில், உறுதியாக இருந்து செயல்படுத்தவும் உதவும்.

நீங்கள் எடுத்த முடிவில், இருக்கின்ற நிலையில் மகிழ்ச்சியோடு உங்களை வைத்திருக்கவும் பெரிய அளவில் துணை நிற்கும்.

என்ன மாற்றங்கள் செய்தால் உறவில் மகிழ்ச்சியை உருவாக்கலாம் என்பதறிந்து, அந்த மாற்றத்தை நீங்களே துவங்குவீர்கள்.

எனவே எந்தச் சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் நாம் உறவில் இருப்பதற்கான காரணத்தை அல்லது உறவில் இருந்து வெளிவருவதற்கான காரணத்தை நினைவில் நிறுத்தி மன அமைதியோடும் மகிழ்ச்சியோடும் உறவுகளைக் கொண்டாடி, வாழ்வைக் கொண்டாடலாம்.

பயிற்சிகளை செய்துவிட்டு அனுபவங்களைப் பகிரவும்.

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.